யாஷாஸ்வினி தேஸ்வால்
யாஷாஸ்வினி சிங் தேஸ்வால் (23) டெல்லியைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு வீராங்கனை. 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் இவர் போட்டியிடுகிறார். 2019-ல் ஐ.எஸ்.எஸ்.எஃப். உலக கோப்பை போட்டியில் இவர் தங்கப் பதக்கம் வென்றார். அதனால் டோக்யோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இவருக்கு வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது.
2017-ல் ஐ.எஸ்.எஸ்.எப். ஜூனியல் உலக சாம்பியன் போட்டியில் இவர் தங்கம் வென்றார். ஜூனியர் பிரிவில் அப்போது அவர் உலக சாதனை நிகழ்த்தினார்.
வி.கே. விஸ்மாயா
வெல்லுவ கொரோத் விஸ்மாயா (23) கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை. 400 மீட்டர் ஓட்டத்தில் சிறப்பு பயிற்சி பெற்றவர். தொடர் ஓட்டத்துக்கான தேசிய அணியில் இடம் பெற்றுள்ளார்.
2019ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன் போட்டியில், இறுதிச் சுற்றில் பங்கேற்று டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்ற கலப்பு வீரர்கள் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார். 2019 ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் வெள்ளி பதக்கங்களும், 2018 ஆசிய விளையாட்டில் தங்கமும் வென்றுள்ளார்.
வினேஷ் போகாட்
வினேஷ் போகாட் (26) ஹரியாணா மாநிலம் பிவானி மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை. இப்போது அவர் 51 கிலோ பிரிவில் பங்கேற்கிறார். 2018-ல் ஆசிய விளையாட்டுகளில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையாக சாதனை படைத்தார்.
அதே ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் அவர் தங்கம் வென்றார். அதன்பிறகு, 2019ஆம் ஆண்டிற்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்திய அரசு இவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருது வழங்கி கௌரவித்துள்ளது.
ஸ்வப்னா பர்மன்
ஸ்வப்னா பர்மன் (24) மேற்குவங்க மாநிலம் ஜல்பாய்குரி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஹெப்டத்லான் வீராங்கனை. 2018 ஆசிய விளையாட்டுகளில் ஹெப்டத்லானில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பட்டத்தைப் பெற்றார். 2017 ஆசிய அதலெடிக் சாம்பியன் போட்டியிலும் பர்மன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இரண்டு கால்களிலும் தலா ஆறு விரல்களுடன் பிறந்தவர் இவர். விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஷூ வாங்கித் தர வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளாக வலியுடனே அவர் போட்டிகளில் பங்கேற்றார். 2019-ல் அவருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
சுஷ்ரீ திவ்யதர்ஷினி
சுஷ்ரீ திவ்யதர்ஷினி பிரதான் (23) ஒடிசா மாநிலம் தேன்கனலை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை. ஒடிசாவின் 23 வயதுக்கு உள்பட்ட அணியின் கேப்டனாக உள்ளார்.
2019-ல் புதிதாக எழுச்சி பெறும் மகளிர் அணிகளுக்கான ஏ.சி.சி. ஆசிய கோப்பைக்கான போட்டியில் இவர் அதிகபட்ச எண்ணிக்கையில் விக்கெட்டுகள் எடுத்தார். அப்போது அவர் இந்திய மகளிர் அணியில் இடம் பெற்றிருந்தார். 2019-ல் 23 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான சாலஞ்சர் டிராபி போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்தியா க்ரீன் அணியை அழைத்துச் சென்றவர். அந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போனது என்றாலும், இறுதிச் சுற்று வரை அழைத்துச் சென்றார்.
சுமித்ரா நாயக்
சுமித்ரா நாயக் (20) ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ரக்பி வீராங்கனை. இந்திய சீனியர் அணியில் அவர் பங்கேற்று ஆசிய ரக்பி மகளிர் சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கமும், 2019-ல் ஆசிய ரக்பி செவன்ஸ் டிராபி போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.
18 வயதுக்கு உள்பட்டோருக்கான அணிக்கு 2019-ல் இவர் கேப்டனாக இருந்துள்ளார். 2019-ல் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான அணியின் கேப்டனாக இருந்தார். 2016-ல் ஆசிய மகளிர் ரக்பி செவன்ஸ் போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்ற அணியில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
சோனம் மாலிக்
சோனம் மாலிக் (18) ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். 56 கிலோ பிரிவில் போட்டியிட்டு தன் பங்கேற்பைத் தொடங்கினார். இப்போது 65 கிலோ பிரிவில் பங்கேற்கிறார்.
2017-ல் கேடட் உலக மல்யுத்த சாம்பியன் மற்றும் உலக ஸ்கூல் விளையாட்டுகளில் தங்கப் பதக்கங்கள் வென்ற மாலிக்கிற்கு, ஒரு போட்டியின் போது காயம் ஏற்பட்டது. மீண்டு வருவதற்கு ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது.
2019-ல் கேடட் உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் இவர் மீண்டும் தங்கப் பதக்கம் வென்றார்.
சோனாலி ஷிங்கேட்
சோனாலி விஷ்ணு ஷிங்கேட் (25) மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழில்முறை கபடி வீராங்கனை. 2019 தெற்காசிய விளையாட்டுகளில் தங்கமும், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளியும் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
2014-15-ல் தனது மாநில அணிக்கு ஷிங்கேட் கேப்டனாக இருந்து, ஜூனியர் தேசிய கபடி சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2020-ல் மகாராஷ்டிராவில் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான சிவ் சத்ரபதி விருது ஷிங்கேட்டுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிம்ரஞ்சித் கௌர்
சிம்ரஞ்சித் கௌர் பாத் (25) அமெச்சூர் குத்துச்சண்டை வீராங்கனை, பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். 60 கிலோ மற்றும் 64 கிலோ பிரிவுகளில் அவர் பங்கேற்கிறார்.
2019-ல் நடந்த 23வது பிரசிடென்ட் கோப்பைக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கௌர் தங்கப் பதக்கமும், 2018-ல் AIBA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
2016-ல் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற இவர், டோக்கிய ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
ஷிவானி கட்டாரியா
ஷிவானி கட்டாரியா (23) ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த அமெச்சூர் ப்ரீஸ்டைல் நீச்சல் வீராங்கனை
2019-ல் தேசிய அக்குவாட்டிக் சாம்பியன் போட்டியில் இவர் தங்கப் பதக்கம் வென்றார். 2016 ஒலிம்பிக் போட்டியில் இவர் பங்கேற்றார். 2004 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தப் போட்டியில் பங்கேற்ற முதலாவது இந்திய வீராங்கனையாக இவர் இருந்தார்.
அதே ஆண்டில் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இவர் தங்கப் பதக்கம் வென்றார். ஹரியானாவில் விளையாட்டு வீரர்களின் திறமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் பீம் விருது 2017-ல் இவருக்கு வழங்கப்பட்டது.
ஷாய்லி சிங்
ஷாய்லி சிங் (17) உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்த தடகள வீராங்கனை. நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்கிறார். ஜூனியர் தேசிய நீளம் தாண்டுதல் சாம்பியனாக இருந்து வருகிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் உள்ள இவர் 2018-ல் 16 வயதுக்கு உள்பட்ட ஜூனியர் தேசிய அதலெடிக் சாம்பியன் போட்டியிலும், 2019-ல் 18 வயதுக்கு உள்பட்ட பிரிவிலும் தங்கப் பதக்கங்கள் வென்று புதிய தேசிய சாதனைகள் நிகழ்த்தியுள்ளார்.
20 வயதுக்கு உள்பட்டோருக்கான அடுத்த உலக அதலெடிக் போட்டியில் பங்கேற்க சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஷபாலி வர்மா
ஷபாலி வர்மா (17) ஹரியாணா மாநிலம் ரோத்தக் பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை. டி20 சர்வதேச போட்டியில் இந்திய அணியில் பங்கேற்ற மிக இளவயது வீராங்கனை இவர். 15 வயதாக இருந்தபோதே அணியில் சேர்க்கப்பட்டார்.
அந்த ஆண்டின் பிற்பகுதியில் முதலாவது சர்வதேச அரை சதம் அடித்து, அதை எட்டிய மிக இளவயது இந்திய வீராங்கனை என்ற இடத்தைப் பிடித்தார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் டி20 வீராங்கனைகள் தகுதிப் பட்டியலில் இவர் இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். ஒரு முறை உள்ளூர் கிரிக்கெட் கிளப் ஆட்டத்தில் தன் சகோதரனுக்குப் பதிலாக வர்மா விளையாடுவதற்காக, இவரது முடியை இவரது தந்தை வெட்டி ஆண் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்.
சந்தியா ரங்கநாதன்
சந்தியா ரங்கநாதன் (22) தமிழ்நாடு கடலூரை சேர்ந்த கால்பந்து வீராங்கனை. தேசிய கால்பந்து அணியின் மைய கள ஆட்டக்காரராக உள்ளார். SAFF மகளிர் சாம்பியன் போட்டி மற்றும் 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் இவர் இடம் பிடித்துள்ளார்.
சேது எப்.சி. கிளப் அணிக்காகவும் இவர் விளையாடுகிறார். 2019 இந்திய மகளிர் லீக் போட்டியில் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டியின் மிகவும் மதிப்புக்குரிய வீராங்கனையாக இவர் அறிவிக்கப்பட்டார்.
எஸ் கலைவாணி
கலைவாணி சீனிவாசன் (21) தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவர். 48 கிலோ பிரிவில் பங்கேற்கிறார். ஒலிம்பிக் போட்டியில் 48 கிலோ பிரிவு இடம் பெறவில்லை.
2019-ல் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலைவாணி தங்கப் பதக்கம் வென்றார். அந்த ஆண்டு இந்திய தேசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில், `மிகவும் நம்பிக்கை தரும் குத்துச்சண்டை வீராங்கனை' என்று அறிவிக்கப்பட்டார்.
2012-ல் இவருக்கு 12 வயதாக இருந்தபோது, தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ரத்தன்பாலா தேவி
நோங்மைத்தேம் ரத்தன்பாலாதேவி (22), மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை. இவர் முன்களத்திலும், மைய களத்திலும் விளையாடக் கூடியவர்.
2017-ல் தேசிய அணிக்கு தேவி தேர்வு செய்யப்பட்டார். 2019 தெற்காசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வெல்ல உதவிகரமாக இருந்தார்.
கிரிப்சா எஃப்.சி. கிளப் அணிக்காகவும் இவர் விளையாடுகிறார். 2020 இந்திய மகளிர் லீக் போட்டியில் இறுதிச் சுற்று வரை தனது அணியை முன்னேறச் செய்தார். இறுதிச் சுற்றில் வெற்றி கிடைக்கவில்லை. மணிப்பூர் மாநில கால்பந்து அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
ராணி
ராணி (26) ஹரியாணா மாநிலம் குருசேத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஹாக்கி வீராங்கனை. தேசிய ஹாக்கி அணியில் ஸ்டிரைக்கர் மற்றும் முன்கள வீராங்கனையாக விளையாடுகிறார்.
2018-ல் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆசிய விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் வகையில் அணியை வழிநடத்தினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது ஆகியவற்றைப் பெற்றவர் ராம்பால். 2019-ல் உலக கேம்ஸ் அதலெட் என அறிவிக்கப்பட்டார். 2020-ல் மக்களுக்கு வழங்கப்படும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ரஹி சமோபட்
ரஹி சமோபட் (30) மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரை சேர்ந்த விளையாட்டு முறை துப்பாக்கி சுடும் வீராங்கனை. 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இவர் பங்கேற்கிறார். 2019-ல் ISSF உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார். முதலாவதாக 2013-ல் தங்கப் பதக்கம் வென்றார்.
2019-ல் தங்கப் பதக்கம் வென்றதால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். 2018-ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதலாவது இந்திய வீராங்கனையாக சாதனை படைத்தார். அதே ஆண்டில் அவருக்கு பெருமைக்குரிய அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
ஆர் வைஷாலி
வைஷாலி ரமேஷ்பாபு (19) தமிழ்நாடு சென்னையைச் சேர்ந்த சதுரங்கப் போட்டி வீராங்கனை. 2020-ல் பிடே ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்டில் ரஷியாவுடன் இணைந்து வெற்றி பெற்ற இந்திய அணியில் கோனெரு ஹம்பி, விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோருடன் கூடிய அணியில் இவரும் இடம் பெற்றிருந்தார்.
2012 ஆம் ஆண்டு 12 வயதுக்கு உள்பட்ட சிறுமியருக்கான உலக செஸ் சாம்பியன் போட்டியிலும், 2015-ல் 14 வயதுக்கு உள்பட்ட சிறுமியருக்கான உலக செஸ் சாம்பியன் போட்டியிலும், 2017 ஆசிய தனிநபர் பிளிட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியிலும் தங்கப் பதக்கங்களை வைஷாலி வென்றுள்ளார். 2018-ல் இவர் பெண் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்றார்.
பி.யூ. சித்ரா
பாலக்கீழில் உன்னிகிருஷ்ணன் சித்ரா (25) கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அதலெடிக் வீராங்கனை.
நடுத்தர தொலைவு ஓட்டப்பந்தய வீராங்கனையான இவர் 1500 மீட்டர் பிரிவில் பங்கேற்கிறார். 2019 மற்றும் 2017-ல் ஆசிய அதலெடிக் சாம்பியன் போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் சித்ரா வென்றுள்ளார்.
2017 உள் அரங்க மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டுகளிலும், 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசு பெறுவோர் மேடையில் உயர்ந்த இடத்தை அலங்கரித்தவர் இவர்.
பூனம் யாதவ்
பூனம் யாதவ் (29) உத்தர பிரதேசம் ஆக்ராவை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை. 2013ல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் முதலில் விளையாடினார். டி20 சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவராகவும் உள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுத்தவர்களுக்கான, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் இவர் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
2019-ல் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனையாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழு இவரை அறிவித்தது. அதே ஆண்டில் இவருக்குப் பெருமைக்குரிய அர்ஜுனா விருது அளிக்கப்பட்டது.
பூஜா கேலோட்
பூஜா கேலோட் (23) டெல்லியைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை. 51 கிலோ பிரிவில் இவர் போட்டியிடுகிறார். 2017 ஆசிய ஜூனியர் சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது தான் இவருடைய முதலாவது சர்வதேச வெற்றியாகும்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, 2019-ல் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்தப் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான போட்டியாக மட்டுமே மல்யுத்தம் கருதப்பட்ட காலத்தில், தடைகளைத் தகர்த்து முன்னேற கேலோட் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது.
தனது உறுதியின் காரணமாக குடும்பத்தினரை சம்மதிக்க வைத்து, தனது பயிற்சிக்கு உதவும் வகையில் டெல்லிக்கு மாறிச் செல்லவும் வைத்தது.
பூஜா தன்டா
பூஜா தன்டா (27) ஹரியாணா மாநிலம் ஹிஸார் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ப்ரீ ஸ்டைல் மல்யுத்த வீராங்கனை. இவர் 57 கிலோ மற்றும் 60 கிலோ பிரிவுகளில் போட்டியிடுகிறார்.
2018-ல் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் வெண்கல பதக்கத்தையும் தன்டா வென்றுள்ளார்.
முன்னதாக 2010 கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக்கில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், 2013-ல் ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் இவர் வென்றுள்ளார். 2019-ல் தன்டாவுக்கு மரியாதைக்குரிய அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
பாருல் பார்மர்
பாருல் தல்சுக்பாய் பார்மர் (47) குஜராத் மாநிலம் காந்தி நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை. தற்போதைய மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலில் இவர் முதல் இடத்தை வகிக்கிறார்.
2017BWF மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் உலக சாம்பியன் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் பார்மர் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார்.
போலியோவால் பாதிக்கப்பட்ட இவர், மூன்று வயதாக இருந்தபோது விபத்தில் சிக்கினார். ஆனால் இந்த விளையாட்டைத் தேர்வு செய்தார். 2009 ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய அர்ஜுனா விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நிக்கத் ஜரீன்
நிக்கத் ஜரீன் (24) தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் சேர்ந்த அமெச்சூர் குத்துச்சண்டை வீராங்கனை. இவர் 51 கிலோ பிரிவில் போட்டியிடுகிறார். 2019-ல் தாய்லாந்து ஓப்பன் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2011 ஆம் ஆண்டில் AIBA மகளிர் இளைஞர் & ஜூனியர் உலக சாம்பியன் போட்டியில் முதன்முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.
2015 ஆம் ஆண்டில், சீனியர் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் ஜரீன் தங்கம் வென்றார். தனது சொந்த நகரான நிஜாமாபாத்தின் அதிகாரப்பூர்வ தூதராக அவர் இருக்கிறார்.
நிகாங்கோம் தேவி
நிகாங்கோம் பால தேவி (31) மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை. மகளிர் தேசிய கால்பந்து அணியில் முன்கள வீராங்கனையாக விளையாடுகிறார்.
இந்திய அணியில் அதிக கோல்கள் அடித்தவரான தேவி, தேசிய அணியின் கேப்டனாக 5 ஆண்டுகள் இருந்துள்ளார். 2020-ல் ரேஞ்சர்ஸ் எப்.சி. கிளப் உடன் ஒப்பந்தம் செய்து கொண்ட, முதலாவது இந்திய தொழில்முறை பெண் கால்பந்தாட்ட வீராங்கனையாக ஆனார்.
2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த பெண் வீராங்கனையாக தேவி அறிவிக்கப்பட்டுள்ளார்.
மெஹுலி கோஷ்
மெஹுலி கோஷ் (20) மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு முறை துப்பாக்கி சுடும் வீராங்கனை. 10 மீட்டர் ஏர் ரைபிள் மகளிர் மற்றும் கலப்பு அணியில் இவர் போட்டியிடுகிறார்.
2019-ல் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கோஷ் தங்கப் பதக்கம் வென்றார். 2018-ல் உலகக் கோப்பை போட்டியில் வெண்களப் பதக்கம் வென்றார். 2017 ஆசிய ஏர் கன் சாம்பியன் போட்டியில் முதன்முறையாக சர்வதேச அளவிலான தங்கப் பதக்கம் வென்றார்.
2016 தேசிய சாம்பியன் போட்டியில் கோஷ் 9 பதக்கங்கள் வென்றார். இந்திய துப்பாக்கி சுடும் அணியில் உள்ள மிக இளவயது வீராங்கனை இவர்.
மனு பாக்கர்
மனு பாக்கர் (19) ஹரியாணா மாநிலம் ஜாஜ்ஜார் கிராமத்தைச் சேர்ந்த விளையாட்டு முறை துப்பாக்கி சுடும் வீராங்கனை. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுகளில் போட்டியிடுகிறார். 2018-ல் சர்வதேச விளைாட்டு முறை ஷூட்டிங் கோப்பை போட்டியில் மிகக் குறைந்த வயதில் தங்கம் வென்றவராக பாக்கர் இடம் பிடித்தார்.
அதே ஆண்டில் ISSF ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இவர் 2 தங்கப் பதக்கங்கள் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்க 2019-ல் இவர் தேர்வானார்.
2020 ஆம் ஆண்டில் பெருமைக்குரிய அர்ஜுனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மஞ்சு ராணி
மஞ்சு ராணி (21) ஹரியாணா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அமெச்சூர் குத்துச்சண்டை வீராங்கனை. அவர் 48 கிலோ பிரிவில் பங்கேற்கிறார். 2019-ல் AIBA மகளிர் குத்துச்சண்டை சாம்பியந் போட்டியிலும், ஸ்ட்ரான்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியிலும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளார்.
அதே ஆண்டில் தாய்லாந்து ஓப்பன் மற்றும் இந்திய ஓப்பன் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களும் வென்றுள்ளார்.
11 வயதாக இருந்த போது தன் தந்தையை ராணி இழந்தார். ஏழு குழந்தைகளை வளர்க்க அவருடைய தாயார் போராடிய நிலையில், கைகளுக்கு குத்துச்சண்டை உறைகள் வாங்குவதற்குகூட முடியாமல் ராணி போராடிய காலமும் இருந்தது.
மனசி ஜோஷி
மனசி ஜோஷி (31) குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த மாற்றுத் திறனாளி பாட்மிண்டன் வீராங்கனை. 2019 உலக மாற்றுத் திறனாளி பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
2017ல் நடந்த சாம்பியன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஜோஷி வெண்கலப் பதக்கம் வென்றார். 2015-ல் நடந்த போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பொறியியல் பயிற்சி முடித்த நிலையில், 2011-ல் விபத்தில் சிக்கியதை அடுத்து, மறுவாழ்வு சிகிச்சையின்போது பாட்மிண்டன் விளையாட்டைத் தேர்வு செய்தார். அதில் முன்னேறி சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்குப் பயிற்சி பெற்றார்.
மால்விகா பன்சோட்
மால்விகா பன்சோட் (19) மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பாட்மிண்டன் வீராங்கனை. இடது கை ஆட்டக்காரரான இவர் 2018 உலக ஜூனியர் சாம்பியன் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார்.
2019-ல் மாலத்தீவுகள் சர்வதேச பியூச்சர் சீரிஸ் மற்றும் அன்னபூர்ணா போஸ்ட் சர்வதேச சீரிஸ் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்று, உலக தரவரிசைப் பட்டியலில் முதல் 200 பேர் வரிசையில் நுழைந்தார்.
அதே ஆண்டில் அகில இந்திய சீனியர் ரேங்கிங் போட்டி மற்றும் அகில இந்திய ஜூனியர் ரேங்கிங் போட்டிகளில் இவர் வெற்றி பெற்றார்.
லவ்லினா போர்கோஹெயின்
லவ்லினா போர்கோஹெயின் (23) அசாம் மாநிலம் கோலகாட் மாவட்டத்தைச் சேர்ந்த அமெச்சூர் குத்துச்சண்டை வீராங்கனை. 69 கிலோ பிரிவில் இவர் போட்டியிடுகிறார். 2018 மற்றும் 2019ல் மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டிகள் மற்றும் 2017-ல் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளார்.
2020-ல் மதிப்புமிக்க அர்ஜுனா விருது இவருக்கு வழங்கப்பட்டது. அசாமில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதலாவது பெண்ணாக போர்கோஹெயின் உள்ளார்.
லால்ரெம்சியாமி
லால்ரெம்சியாமி (20) மிசோரம் மாநிலம் கோலாசிப் நகரைச் சேர்ந்த தொழில்முறை ஹாக்கி வீராங்கனை. தேசிய அணியில் முன்கள வீரராக விளையாடுகிறார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றபோது, மிசோரமில் இருந்து ஆசியப் பதக்கம் பெற்ற முதலாவது விளையாட்டு வீராங்கனை என்ற பட்டியலில் இடம் பிடித்தார்.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் 2019-ல் வளரும் நட்சத்திரம் என இவரை அறிவித்தது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள இந்திய அணியில் லால்ரெம்சியாமி இடம் பெற்றுள்ளார்.
கே.வி.எல். பவனி குமரி
கொல்லி வரலட்சுமி பவனி குமரி (17) ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டின மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை. 45 கிலோ பிரிவில் அவர் போட்டியிடுகிறார்.
2020-ல் ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளுதூக்கும் சாம்பியன் போட்டிகளில் இளம் மகளிர் மற்றும் ஜூனியர் மகளிர் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்கள் வென்றார்.
அந்த வெற்றிகளால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இவர் தகுதி பெற்றார். 2019-ல் தேசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டியில் சிறந்த பளுதூக்கும் வீராங்கனை என்ற விருது இவருக்குக் கிடைத்தது.
கோனெரு ஹம்பி
கோனெரு ஹம்பி (33) ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை. அதிவேக செஸ் போட்டி பிரிவில் இப்போது உலக சாம்பியனாக உள்ளார்.
2002 ஆம் ஆண்டில், தன் 15வது வயதில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஆடவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற முதலாவது இந்தியப் பெண்மணியாகவும் ஹம்பி உள்ளார். இவருக்கு 2003ல் பெருமைக்குரிய அர்ஜுனா விருதும், 2007-ல் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.
ஜமுனா போரோ
ஜமுனா போரோ (23) அசாம் மாநிலம் தேகியாஜுலி நகரைச் சேர்ந்த அமெச்சூர் குத்துச்சண்டை வீராங்கனை. 52 கிலோ பிரிவில் முதலில் போட்டியில் பங்கேற்கத் தொடங்கினார். 2010-ல் முதலாவது தேசிய தங்கப் பதக்கத்தை வென்றார். இப்போது 57 கிலோ பிரிவில் போட்டியிடுகிறார்.
2019-ல் AIBA உலகக் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அந்த ஆண்டில் இந்திய ஓப்பன் சர்வதேச குத்துச்சண்டை போட்டி மற்றும் 23வது பிரசிடென்ட் கோப்பைக்கான குத்துச்சண்டை சர்வதேச ஓப்பன் போட்டிகளில் தங்கப் பதக்கங்களும் வென்றுள்ளார்.
இஷா சிங்
இஷா சிங் (16) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அமெச்சூர் துப்பாக்கி சுடும் வீராங்கனை. 10 மீட்டர் ஏர் பிஸ்டர், 24 மீட்டர் ஸ்டான்டர்டு பிஸ்டர் மற்றும் 25 மீட்டர் பிஸ்டர் பிரிவுகளில் இவர் போட்டியிடுகிறார்.
2019-ல் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே ஆண்டில் ஆசிய ஏர்கன் சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
2018-ல் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் வென்று தேசிய சாம்பியன் பட்டம் பெற்றார். அப்போது இவருடைய வயது 13 மட்டுமே.
இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன் (21) தமிழ்நாடு கடலூரைச் சேர்ந்த விளையாட்டு முறை துப்பாக்கி சுடும் வீராங்கனை. குஜராத்தில் வளர்ந்தவர். இவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் போட்டியிடுகிறார்.
2019 ISSF உலக சாம்பியன் மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை இவர் வென்று, அந்தப் பிரிவில் முதல்நிலை வீராங்கனை தகுதிக்கு முன்னேறினார்.
2018 ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதே இவருடைய முதலாவது சர்வதேச வெற்றியாகும். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏக்தா பியான்
ஏக்தா பியான் (35) ஹரியாணாமாநிலம் ஹிஸார் நகரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை. கட்டை மற்றும் வட்டெறிதல் போட்டிகளில் பங்கேற்கிறார்.
2018 ஆசிய மாற்றுத் திறனாளி விளையாட்டுப் போட்டிகளில் கட்டை எறிதலில் பியான் தங்கப் பதக்கம் வென்றார். தேசிய மாற்றுத்திறனாளி அதலெடிக் சாம்பியன் போட்டிகளில் 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார்.
டோக்யோ மாற்றுத் திறனாளி ஒலிம்பிக் போட்டிக்கு பியான் தகுதி பெற்றுள்ளார். இவருக்கு மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசிய விருது 2018-ல் வழங்கப்பட்டது.
டட்டீ சந்த்
டட்டீ சந்த் (25) ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை. இவர் 100 மீட்டர் பிரிவில் பங்கேற்கிறார். உலக அளவிலான போட்டியில் 100 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற முதலாவது இந்தியராக இவர் உள்ளார். 2019 உலக யுனிவர்சியாஸ் போட்டியில் இந்தப் பதக்கத்தை இவர் வென்றார்.
இப்போது தேசிய சாம்பியனாக இருக்கும் இவர், சர்வதேச அதலெடிக் சம்மேளனங்களின் சங்கத்தின் புகார்களை எதிர்த்து வாதாடி வெறஅறி கண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.
2019-ல் ஒரு பாலின உறவில் தாம் ஈடுபட்டிருப்பதாக சந்த் தெரிவித்தார். ஓரின பாலுறவில் ஈடுபாடுள்ளதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முதலாவது நபராக இவர் இருந்தார்.
திவ்யா கக்ரன்
திவ்யா கக்ரன் (22) உத்தர பிரதேச மாநிலம் முஜாபர்நகர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ப்ரீஸ்டைல் மல்யுத்த வீராங்கனை.
2020-ல் ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் 68 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பட்டத்தைப் பெற்றார்.
அதே ஆண்டில் அவருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 2017-ல் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
தீக்சா டாகர்
தீக்சா டாகர் (20) ஹரியாணா மாநிலம் ஜாஜ்ஜாரைச் சேர்ந்த தொழில்முறை கோல்ப் விளையாட்டு வீராங்கனை. 2018-ல் மகளிர் ஐரோப்பிய டூர் போட்டியில் பட்டம் வென்ற மிக இளவயது இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
செவித்திறனற்ற மாற்றுத் திறனாளியாகப் பிறந்த இவர், செவித்திறனை ஓரளவுக்கு மீட்க காக்ளியர் சாதனம் பொருத்தி, பேசுவதற்கான பயிற்சி பெற்றார்.
2017-ல் காதுகேளாதோர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அந்தப் பதக்கம் வென்ற முதலாவது இந்தியராக இவர் இருந்தார். இடது கை பழக்கத்தில் கோல்ப் விளையாடும் மிகச் சிலரில் டாகரும் ஒருவர்.
சி.ஏ. பவானி தேவி
பவானி தேவி என அழைக்கப்படும் சடலவடா ஆனந்த சுதாரராமன் பவானி தேவி (27), தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை. சாப்ரே பிரிவில் இவர் போட்டியிடுகிறார்.
காமன்வெல்த் போட்டியில் வாள்வீச்சில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையை 2018-ல் தேவி பெற்றார்.
ஆசிய சாம்பியன் போட்டியில் 23 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் 2015-ல் வெண்கலம், 2014-ல் வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளார். பிற சர்வதேசப் போட்டிகளில் பல பதக்கங்கள் வென்றுள்ளார்.
பாவ்னா ஜாட்
பாவ்னா ஜாட் (24) ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அதலெடிக் வீராங்கனை. 23 கி.மீ. ரேஸ்வாக்கிங் போட்டியில் இவர் பங்கேற்கிறார். 2020 தேசிய சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றபோது புதிய தேசிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இவர் தகுதி பெற்றார். 2016 ஜூனியர் தேசிய சாம்பியன் போட்டியில் ஜாட் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆரம்ப காலத்தில் கட்டமைப்பு வசதிகள் கிடைக்காததால், போக்குவரத்து இல்லாத அதிகாலை நேரத்தில் கிராமத்துக்கு வெளியில் பயிற்சி மேற்கொண்டார்.
அர்ச்சனா காமத்
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேரந்த அர்ச்சனா கிரிஷ் காமத் (20) டேபிள் டென்னிஸ் வீராங்கனை. 2019ல் சீனியர் மகளிர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்திய தேசிய டேபிள் டென்னிஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
பின்னர் அதே ஆண்டில், காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
2018-ல் இளைஞர் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்று, அரையிறுதியில் நுழைந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.
அபூர்வி சன்டெலா
அபூர்வி சன்டெலா (28) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த விளையாட்டு முறை துப்பாக்கி சுடும் வீராங்கனை. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இவர் போட்டியிடுகிறார்.
2019-ல் ISSF உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்றபோது புதிய உலக சாதனை படைத்தார். இதன் மூலம் இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
2014 காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றதுதான் இவருடைய முதலாவது சர்வதேச பதக்கம். 2015 உலகக் கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2016-ல் மதிப்புமிகுந்த அர்ஜுனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அன்னு ராணி
28 வயதான அன்னு ராணி உத்தர பிரதேச மாநிலம் பாஸ்டி மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஈட்டி எறியும் வீராங்கனை. 2019 ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்குப் பிறகு, உலக தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்ற முதலாவது இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
2017-ல் அதே போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் இப்போது தேசிய சாம்பியன் பட்டத்துக்கு உரியவராக இருக்கிறார். வளரும் பருவத்தில், இவருக்கு நல்ல ஒரு ஈட்டி வாங்கித் தரும் வசதி இவருடைய தந்தைக்கு இல்லை. அதனால் மூங்கிலைப் பயன்படுத்தி இவரே ஒரு ஈட்டியை உருவாக்கிக் கொண்டார்.
அங்கிதா ரெய்னா
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரைச் சேர்ந்த அங்கிதா ரவீந்தர்கிருஷ்ணன் ரெய்னா (28) தொழில்முறை டென்னிஸ் வீராங்கனை. தற்போது இந்தியாவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் முதல்நிலை வீராங்கனையாக உள்ளார்.
2018-ல் வெண்கல பதக்கம் வென்றபோது, ஆசிய விளையாட்டுப் போட்டியில் சானியா மிர்ஸாவுக்கு அடுத்து ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே பெண்மணியாக இவர் பெருமை பெற்றார்.
அதே ஆண்டில் உலக தரவரிசைப் பட்டியலில் ஒற்றையர் பிரிவில் முதல் 200 பேர் வரிசையில் இடம் பிடித்த ஐந்தாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
அனிதா தேவி
அனிதா தேவி (36) ஹரியாணா மாநிலம் பல்வல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விளையாட்டு முறை துப்பாக்கி சுடும் வீராங்கனை. 10 மீட்டர் மற்றும் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவுகளில் இவர் போட்டியிடுகிறார்.
2016-ல் சர்வதேச ஷூட்டிங் போட்டியில் அணி பிரிவுகளில், 10 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
2015 தேசிய விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம், 2013 தேசிய ஷூட்டிங் சாம்பியந் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இப்போது இவருடைய மகன் இதே விளையாட்டில் பயிற்சி பெற்று வருகிறார்.
ஐஸ்வர்யா பிஸ்ஸாய்
ஐஸ்வர்யா பிஸ்ஸாய் (25) கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை. 2019-ல் FIM உலகக் கோப்பை போட்டியில் மோட்டார் ஸ்போர்ட்ஸில் பட்டம் வென்றதன் மூலம், அதை வென்ற முதலாவது இந்தியப் பெண்மணி என்ற பட்டத்தைப் பெற்றார்.
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் சம்மேளனத்தின் சார்பில் 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மோட்டார் ஸ்போர்ட்ஸில் தனிச்சிறப்பு மிக்க பெண்மணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தேசிய ரோட் ரேசிங் & ரேலி சாம்பியன் போட்டிகளில் இவர் ஆறு பட்டங்களை வென்றுள்ளார்.
அதிதி அசோக்
அதிதி அசோக் (22) கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழில்முறை கோல்ப் வீராங்கனை. மகளிர் 2016-ல் ஐரோப்பிய டூர் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றார். அந்த ஆண்டின் ரூக்கி என்று இவர் அறிவிக்கப்பட்டார்.
அந்த ஆண்டில், ரியோ ஒலிம்பிக்கில் அசோக் பங்கேற்றார். உலக அளவிலான கோல்ப் போட்டியில் பங்கேற்ற முதலாவது இந்தியப் பெண் மற்றும் மிகக் குறைந்த வயதில் பங்கேற்றவர் என்ற பெருமைகள் கிடைத்தன. அப்போது இவருக்கு வயது 18.
2017-ல் மகளிர் தொழில்முறை கோல்ப் சங்க டூர் கார்டு பெற்ற முதலாவது இந்திய பெண்மணியாகவும் இவர் இடம் பிடித்தார்.
இதில் பெரும்பாலான இந்திய விளையாட்டு வீராங்கனைகளைப் பற்றிய தகவல்கள் விக்கிபீடியாவில் இந்திய மொழிகளில் இல்லை என்பதை பிபிசி கண்டறிந்தது. பொது வாழ்வில் பிரபலமானவர்கள் பற்றிய தகவல்களை அறிவதற்கான பிரபலமான இணையதளமாக விக்கிபீடியா உள்ளது.
இந்த 50 விளையாட்டு வீராங்கனைகள் எப்படி தேர்வு செய்யப்பட்டனர்?
நாடு முழுக்க விளையாட்டு செய்தியாளர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் 40-க்கும் மேற்பட்ட நெறியாளர்களின் உதவியுடன் இந்த 50 இந்திய விளையாட்டு வீராங்கனைகளை பிபிசி அடையாளம் கண்டது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில், நெறியாளர்கள் தங்கள் பரிந்துரைகளை அளித்தனர். பெயரின் ஆங்கில முதல் எழுத்து வரிசைப்படி விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
- செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் - இது என்ன செய்யும்?
- தமிழ்நாட்டின் பயணத்தை மாற்றிய 1967ஆம் ஆண்டு தேர்தலில் நடந்தது என்ன?
- புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி வருமா? அடுத்தடுத்த திருப்பங்கள்
- ஆஸ்திரேலியாவில் செய்திகளை முடக்கும் ஃபேஸ்புக்: அதிகரிக்கும் முரண்- என்ன நடக்கிறது?
- புதுச்சேரியில் ராகுல் காந்திக்கு தவறாக மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி தரும் காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:




























































