பொங்கல் இந்த ஆண்டு ஜனவரி 15க்கு மாறியது ஏன்? அறிவியல் பின்னணி

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு பொங்கல் தினம் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால், 1940களில் இருந்து 2000களின் தொடக்கம் வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தோர் ஜனவரி 14ஆம் தேதியையே பொங்கல் தினமாகக் கொண்டாடியதாகக் கூறுகிறார் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
நிபுணர்களின் கூற்றுப்படி பொங்கல், சங்கராந்தி ஆகியவை அனுசரிக்கப்படும் தேதி மாறிக் கொண்டே வந்துள்ளது.
சமீபத்தில், ஜோதிட நிபுணரான வேதாஞ்சனம் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஜனவரி 13ஆம் தேதியன்று வெளியிட்ட பதிவில், "மகர சங்கராந்தி அடுத்த 69 ஆண்டுகளுக்கு ஜனவரி 14இல் அன்றி 15ஆம் தேதியில் வரும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்துப் பேசியபோது, இந்த மாற்றங்கள் புதியதல்ல என்று கூறினார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
மேலும் அவர், "நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பொங்கல், 1901இல் ஜனவரி 13ஆம் தேதியிலும், 1902, 1903, 1904 ஆகிய ஆண்டுகளில் ஜனவரி 14இலும் கொண்டாடப்பட்டது.
அதுவே, 2015, 2019, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் ஜனவரி 15ஆம் தேதியே பொங்கல் கொண்டாடப்பட்டது. அதுவே, 2016, 2017, 2018, 2020, 2021, 2022, 2025 ஆகிய ஆண்டுகளில் ஜனவரி 14ஆம் தேதியன்று வந்தது" என்று தெரிவித்தார்.
பொங்கல், சங்கராந்தி ஆகியவை இவ்வாறாக ஒரே குறிப்பிட்ட தேதியில் வராமல், மாறி மாறி வருவதற்குக் காரணம் என்ன?
பஞ்சாங்கக் கணக்கீடுகள் தவறாகின்றனவா?
பூமி சூரியனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அதோடு அது தனது அச்சிலும் தன்னைத் தானே சுழல்கிறது. பூமியின் சுழற்சி அச்சு, சூரியனை சுற்றியுள்ள அதன் சுற்றுப் பாதையில் 23.5 டிகிரி சாய்வாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த இரண்டு இயக்கங்கள் தவிர, பூமிக்கு முன்னிசைவு எனப்படும் மூன்றாவது இயக்கமும் உள்ளது. "இந்த அம்சம் பஞ்சாங்கக் கணக்கீடுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. இதுவே பஞ்சாங்கத்தில் பிழை ஏற்பட்டு, தேதிகள் மாறுவதற்கு முக்கியக் காரணம்" என்கிறார் முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன்.
பூமி தனது அச்சில் சுழல்வதால் இரவு, பகல் ஏற்படுகிறது. சூரியனைச் சுற்றி வருவதை வைத்து ஆண்டு கணக்கிடப்படுகிறது.
இவைபோகக் கூடுதலாக, "புவி அதன் அச்சில் சுழலும்போது மெதுவாக ஒரு வட்டத்தில் சாய்ந்து சுழல்கிறது. இந்தச் சாய்வு முன்னோக்கிய அசைவு என்று அழைக்கப்படுகிறது. இது ஒப்பீட்டளவில் மெதுவாக நிகழ்கிறது. மெதுவாகச் சுழலும் பூமியின் அச்சு அதன் முழு வட்டத்தைச் சுற்றி முடிக்க 26,000 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
எடுத்துக்காட்டாக, துருவ நட்சத்திரம் வட வானியல் துருவத்திற்கு அருகில் உள்ளது என வைத்துக் கொள்வோம். ஆனால், கி.பி.15,000இல் பூமியின் அச்சு லைரா விண்மீன் கூட்டத்தின் பிரகாசமான நட்சத்திரமான வேகாவை சுட்டிக்காட்டும். மேலும் வட வானியல் துருவத்திற்கு அருகில் அந்த நட்சத்திரமே இருந்திருக்கும், துருவ நட்சத்திரம் இருக்காது," என்று விளக்கினார் வெங்கடேஸ்வரன்.

பட மூலாதாரம், NASA
சுழலும் பம்பரம் போலத் தள்ளாடும் புவி அச்சு
பூமியைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வெற்றுப் பந்து இருப்பதாகக் கற்பனை செய்துகொள்வோம். அனைத்து நட்சத்திரங்களும் இந்தப் பந்தின் உட்புறப் பரப்பில் பதிக்கப்பட்டு இருப்பது போலத் தெரிகின்றன. இந்தக் கற்பனையான பந்து வானக்கோளம் என்று அழைக்கப்படுகிறது.
இப்போது, புவியின் நிலநடுக்கோட்டை வரைந்து, அதை வானம் வரை நீட்டிப்பதாகக் கற்பனை செய்தால், அது வானக் கோளத்தில் ஒரு பெரிய வட்டத்தை உருவாக்குகிறது. இந்த வட்டம் வான்நிலநடுக்கோடு என்றழைக்கப்படுகிறது.
"பூமி சுமார் 23.5 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இந்தச் சாய்வின் காரணமாக, சூரியன் சரியாக வான்நிலநடுக்கோட்டின் ஊடாகப் பயணிப்பதில்லை. மாறாக, சூரியன் வானத்தில் சற்றே சாய்ந்த ஒரு பாதையில் பயணிக்கிறது. இந்தப் பாதை கிரகணப் பாதை என்றழைக்கப்படுகிறது.
சூரியனின் பாதையும் வான்நிலநடுக்கோடும் இரண்டு புள்ளிகளில் ஒன்றையொன்று வெட்டிக்கொள்கின்றன. பூமி இந்தப் புள்ளிகளை அடையும்போது, ஒரு சம இரவு நாள் ஏற்படுகிறது. சம இரவு நாட்களின்போது, பூமியில் உள்ள ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் இரவுபகல் ஏறக்குறைய சமமாக இருக்கும்." என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்
மேலும் விவரித்த அவர், "சரியாக ஓராண்டுக்குப் பிறகு பூமி அதே நாளில் சம இரவுபகல் புள்ளியை அடைய வேண்டும். ஆனால், புவியின் அச்சு பம்பரம் சுழல்வது போலத் தள்ளாடுகிறது. இந்த மெதுவான இயக்கம் முன்னிசைவு என்றழைக்கப்படுகிறது.
இதன் காரணமாக பூமி, ஒவ்வோர் ஆண்டும் சம இரவுப் புள்ளியை சுமார் 20 நிமிடங்கள் முன்னதாகவே அடைகிறது. இப்படியே சிறிது சிறிதாகக் கூடி, 72 ஆண்டுகளில் அதுவொரு முழு நாளாகவே கூடிவிடுகிறது. ஆனால், பாரம்பரிய பஞ்சாங்கங்கள் இந்த மாற்றத்தைச் சரியாகக் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை" என்றார்.
பஞ்சாங்கங்களில் பயன்படுத்தப்படும் எண்களிலும் தவறுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார் அவர். பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுக்கும் உண்மையான நேரம், 365 நாட்கள், 5 மணிநேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 விநாடிகள். ஆனால், பண்டைய கணக்கீடுகள் இதைவிடச் சற்று நீண்ட நேரத்தைக் காட்டின.
"இந்தச் சிறிய தவறுகள் பல ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுகின்றன. அதனால் கணிப்புகளில் பிழைகள் ஏற்படுகின்றன."
இவற்றின் காரணமாக, சூரியனின் நிலையை அடிப்படையாகக் கொண்ட பண்டிகைகளின் தேதிகளில் மெதுவாக மாற்றங்கள் நிகழ்கின்றன.
உதாரணமாக, முன்பு ஜனவரி 14ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட பொங்கல், இப்போது பொதுவாக 15ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும், பூமி வானத்தில் அந்தக் குறிப்பிட்ட நிலையைச் சற்று முன்னதாகவே அடைவதால் இந்த மாற்றம் ஏற்படுவதாகக் கூறுகிறார் வெங்கடேஸ்வரன்.

பட மூலாதாரம், Getty Images
உத்தராயணம் குறித்த கணக்கீடு
பஞ்சாங்கங்கள் தங்கள் கணக்கீடுகளில் புவி அச்சின் முன்னிசைவு இயக்கத்தைக் கருத்தில் கொள்வதில்லை என்பதால் அவற்றின் கணக்கீடுகள் தவறாவதாகக் குறிப்பிடும் வெங்கடேஸ்வரன், அதற்கான உதாரணங்களாக, பொங்கல் பண்டிகை மற்றும் உத்தராயணத்தை குறிப்பிடுகிறார்.
உத்தராயணம் நிகழ்வு பற்றி விளக்கிய அவர், "ஓர் ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் சூரியன் துல்லியமாகக் கிழக்கில் உதிப்பதில்லை. புவியின் அச்சு 23.5 டிகிரி சாய்ந்திருப்பதால், சூரியன் உதிக்கும் புள்ளி வடக்கு-தெற்காக நகர்கிறது. உத்தராயண தினத்தன்று, சூரியன் உதயமாகும் புள்ளி கிழக்கு அடிவானத்தில் அதிகபட்ச தென்கிழக்கில் இருக்கும்.
அடுத்தடுத்த நாட்களில், சூரியன் உதிக்கும் புள்ளி முந்தைய நாளைவிட சற்றே வடக்கில் நகர்ந்திருக்கும். அடுத்த ஆறு மாதங்களில், சூரியன் உதிக்கும் புள்ளி கிழக்கு அடிவானத்தில் உச்சபட்ச வடகிழக்கை அடைகிறது. அந்த நாள் தட்சிணாயனம் என்று அழைக்கப்படுகிறது. தட்சிணாயனத்திற்குப் பிறகு, சூரிய உதயப் புள்ளி முந்தைய நாளைவிட தெற்கே நகர்வது போலத் தோன்றும். இந்த இயக்கத்தின்போது, சூரியன் ஆண்டுக்கு இருமுறை சரியாகக் கிழக்கில் உதிப்பது போலத் தோன்றும்," என்று விளக்கினார்.
வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் ஆகியவற்றின்படி, உத்தராயணம் ஜனவரி 14, 15 தேதிகளில் வரவேண்டும். ஆனால், "உண்மையில் அது டிசம்பர் 20-21 அன்றே நிகழ்ந்துவிடுகிறது."
இதுபோல, பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள கணக்கீடுகளில், வானியல் பொருட்களின் உண்மையான நிலைகளிலும் பல பிழைகள் இருப்பதாக த.வி.வெங்கடேஸ்வரன் விவரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
பொங்கல், சங்கராந்தி தேதி மாறுவது ஏன்?
மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படும் பொங்கல் தினம் மாறிக் கொண்டிருப்பதன் பின்னணியை விரிவாகப் பார்ப்பதற்கு முன்பாக, சங்கராந்தி என்றால் என்னவென்பதைப் பார்ப்போம்.
"சங்கராந்தி என்பது சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைக் குறிக்கும் நிகழ்வாகும். இது பஞ்சாங்கங்களில் சூரிய மாதங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது. வானக் கோளத்தில் சூரியனின் தோற்றப் பாதையான கிரகணப் பாதை, ராசிகள் எனப்படும் 12 சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மகர சங்கராந்தி என்பதை சூரியன் தனுசு ராசியில் இருந்து தை முதல் தேதியன்று மகர ராசியில் புகுவதாக பஞ்சாங்கம் கூறுகிறது. எனவே, தை 1 மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. ஆனால், உண்மையில் ஜனவரி 15 அன்று சூரியன் இன்னும் தனுசு ராசியில்தான் இருக்கிறது. சூரியன் டிசம்பர் 19 முதல் ஜனவரி 19 வரை தனுசு ராசியில் நிலைபெற்றிருக்கும். ஜனவரி 20ஆம் தேதிதான் மகர ராசிக்குள் நுழைகிறது. இதுவும் பஞ்சாங்கக் கணிப்புப்படி ஒரு பெரிய பிழை" என்று விளக்கினார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
அதோடு, பஞ்சாங்கக் கணக்கீடுகளில் உள்ள குறைபாடுகள் மிகத் தெளிவாகத் தெரிவதாகவும், பஞ்சாங்கத்தால் கணக்கிடப்பட்ட பொங்கலின் வானியல் தொடர்பு முற்றிலும் தவறானது எனவும் குறிப்பிட்டார் அவர்.

"சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, பொங்கல் திருநாள் உத்தராயணத் திருநாளாக இருந்தது. ஆனால் பூமி அச்சின் சுழற்சி இயக்கம் காரணமாக, பல ஆண்டுகளாக, பொங்கல் தினமும் உத்தராயணமும் 72 ஆண்டுகளுக்கு ஒரு நாள் வீதம் விலகிச் சென்றன.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், என் குழந்தைப் பருவத்தில், பொங்கல் பொதுவாக ஜனவரி 14ஆம் தேதி, அதாவது டிசம்பர் 21இல் உத்தராயணம் வந்து 25 நாட்கள் கழித்து வந்தது. காலப்போக்கில் இது ஒரு நாள் தள்ளிப்போய், ஜனவரி 15இல் பொங்கல் வரத் தொடங்கியது" என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
மேலும் அவர், "இதில் எந்தச் சீர்திருத்தமும் செய்யப்படாவிட்டால், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் ஜனவரி 16ஆம் தேதிக்கு மாறிவிடக்கூடும்" என்றும் குறிப்பிட்டார்.
பஞ்சாங்கத்தின் கணக்கீடுகளில் இத்தகைய குழப்பம் இருக்க, எப்படி அதில் கிரகணம் தொடங்கும், முடியும் நேரம் மட்டும் சரியாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது.
அதுகுறித்து முன்பு ஒருமுறை பிபிசிக்கு விளக்கமளித்த அவர், "கிரகணம் போன்ற வெறும் கண்களால் எளிதில் காணக்கூடிய நிகழ்வுகள் பிழையாக இருந்தால் அதன் மீதான நம்பகத்தன்மை அடிபடும். அதனால் பஞ்சாங்கத்தில் தங்கள் கணிப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கொல்கத்தாவில் உள்ள அறிவியல் நிறுவனமான வான்பொருள் நிலை கணிப்பு மையம் (Positional Astronomy Centre) கணிக்கும் தரவுகளை அப்படியே தங்களுடைய பதிப்பில் பிரசுரம் செய்துவிடுகிறார்கள். அதனால்தான் கிரகணம் போன்ற கண்களுக்குப் புலப்படக்கூடிய விஷயங்களில் சரியான கணக்கீடுகள் இருப்பது போலத் தெரிகின்றன" என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












