இரான் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த பின் மோதி அரசு மீது கேள்வி எழுவது ஏன்?

பட மூலாதாரம், @IN_HQENC
புதன்கிழமையன்று, இந்தியப் பெருங்கடலில் இரானியப் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா நீர்மூழ்கி ஏவுகணை ஏவி மூழ்கடித்தது.
இது தொடர்பாக, இந்தியாவின் எதிர்க்கட்சிகள் மோதி அரசாங்கத்தின் மீது கேள்விகளை எழுப்பி வருகின்றன. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு இரான் இப்போது எதிர்வினையாற்றியுள்ளது.
இந்தச் சம்பவம் மார்ச் 4-ஆம் தேதி நடந்தது.
அந்தப் போர்க்கப்பலின் பெயரை அமெரிக்கா குறிப்பிடவில்லை.
ஆனால், இரானியப் போர்க்கப்பலான 'தேனா' உதவி கோரி தங்களுக்கு சிக்னல் அனுப்பியதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்ததையடுத்து, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்காக இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்காவை விமர்சித்துள்ளார்.
"இரான் கரையிலிருந்து இரண்டாயிரம் மைல் தொலைவில் அமெரிக்கா, கடலில் ஒரு குற்றத்தைச் செய்துள்ளது. இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த, 130 கடற்படையினரை ஏற்றிச் சென்ற 'தேனா' எனும் போர்க்கப்பல், சர்வதேச எல்லைக்குள் எச்சரிக்கையின்றி தாக்கப்பட்டது. அமெரிக்கா தான் உருவாக்கியுள்ள இந்த சூழ்நிலைக்காக கடுமையான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த இரானியப் போர்க்கப்பல், சமீபத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படைக் கண்காட்சி 2026-ல் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், AP
மோதி அரசு பற்றி கேள்வி எழுப்பப்படுவது ஏன்?
இந்தத் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோதியை விமர்சித்துள்ளனர்
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், "இந்த இரானிய மாலுமிகள் ஒரு நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருந்தனர். நாம்தான் அவர்களை அழைத்தோம், அவர்கள் நமது விருந்தினர்கள். அவர்கள் திரும்பிச் செல்லும்போது, ஓர் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் அவர்கள் கப்பலைத் தாக்கி அவர்களைக் கொன்றுள்ளது," என்று சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார்.
மேலும் , "ஆனால் பிரதமர் மோதியிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்த கோழைத்தனம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமர் மோதியின் சமரசம் இந்தியாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது," என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங், இரானியக் கப்பலின் வீடியோவைப் பகிர்ந்து இந்தச் சம்பவத்திற்கு எதிர்வினையாற்றியுள்ளார்.
"இந்தியாவின் அழைப்பின் பேரில் இரான் தனது கப்பலை அனுப்பியது. அமெரிக்காவால் இந்தக் கப்பல் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட மாலுமிகள் கொல்லப்பட்டனர். நமது விருந்தினர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் மோதி அமைதியாக இருக்கிறார்," என்று சஞ்சய் சிங் பதிவிட்டுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பாரதியும் அரசாங்கம் மீது கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பிரியங்கா பாரதி எக்ஸ் தளத்தில், "முழுமையாக ஆயுதம் ஏந்திய அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல், போர் அல்லாத நடவடிக்கையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு போர்க்கப்பலை தாக்கியுள்ளது. இந்தியா ஏன் இதற்குப் பதிலளிக்கவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, 'ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா' இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகவும், அதில் இருந்த மொத்தம் 180 பேரில் சுமார் 140 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது.
மோதி அரசின் நிலைப்பாடு குறித்த விவாதம்
அதே நேரத்தில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகளை இந்திய அரசாங்கம் 'தவறானவை' என்று குறிப்பிட்டுள்ளது.
"அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சேனலில், முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரி கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர், இரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா இந்தியக் கடற்படைத் தளத்தைப் பயன்படுத்துவதாக கூறினார். இந்தக் கூற்று முற்றிலும் தவறானது" என்று அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை கண்டறியும் குழு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஆனால் பல நிபுணர்களும் முன்னாள் ராஜீய அதிகாரிகளும் இந்த விஷயத்தில் இந்திய அரசாங்கம் காட்டும் மௌனம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னாள் ராஜீய அதிகாரி கே சி சிங், அராக்சியின் பதிவைப் பகிர்ந்து எக்ஸ் தளத்தில் "மௌனம் என்பது ராஜீய நடவடிக்கை அல்ல. இந்தியா தொடர்ந்து மூலையில் தள்ளப்படுகிறது. இந்தியாவின் மறைமுக ஆதரவை அமெரிக்கா மதிக்கும் என்று பாஜக நினைத்தால், நேட்டோ அமெரிக்காவுக்கு ஒருபோதும் உதவவில்லை என்று டிரம்ப் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பல நேட்டோ உறுப்பு நாடுகள் ஆப்கானிஸ்தானில் போரிட்டுத் தங்கள் வீரர்களை இழந்த பிறகும் இது சொல்லப்பட்டது," என்று எழுதியுள்ளார்.
"நமது 'மிலன்' பயிற்சியில் பங்கேற்க இரானியக் கப்பலை நாம் அழைத்திருக்காவிட்டால், அது அங்கு இருந்திருக்காது. இந்தப் பயிற்சியின் நெறிமுறைகளின்படி, கப்பல்கள் எந்த வெடிமருந்துகளையும் எடுத்துச் செல்ல முடியாது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் இரானியக் கப்பல் ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை. இரானியக் கடற்படை வீரர்கள் நமது குடியரசுத் தலைவர் முன்னிலையில் அணிவகுப்பு கூட நடத்தினர். இரானியக் கப்பல் பயிற்சியில் பங்கேற்பதை அமெரிக்கா ஏற்கனவே அறிந்திருந்ததால் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்" என்று முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் உணர்வுகளை அமெரிக்கா புறக்கணிப்பதாக கன்வல் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
என்ன நடந்தது?
புதன்கிழமையன்று, இந்தியப் பெருங்கடலில் நீர்மூழ்கி ஏவுகணை பயன்படுத்தி இரானியப் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.
இருப்பினும், மூழ்கடிக்கப்பட்ட இரானியக் கப்பலின் பெயரை ஹெக்செத் குறிப்பிடவில்லை.
முன்னதாக, 'ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா' இந்தியப் பெருங்கடலில் மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த மொத்தம் 180 பேரில் சுமார் 140 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது.
இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய இரானியக் கப்பலில் இருந்த 80 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா பிபிசி சிங்களாவிடம் தெரிவித்தார்.
"இந்தச் சம்பவம் எங்களது கடல் எல்லைக்கு வெளியே நடந்தது. ஆனால் எங்களது தேடுதல் மற்றும் மீட்பு மண்டலத்திற்குள் நடந்தது. எனவே எங்களது சர்வதேச கடமைகளின்படி நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது," என்று இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயிடம் தெரிவித்தார்.
"தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தவர்களை மீட்டோம். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் இரானியக் கப்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது," என்றார் அவர்.
செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, கப்பலின் ஆவணங்களில் சுமார் 180 பேர் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












