ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய சங்கர் கணேஷின் 10 சிறந்த பாடல்கள்

பட மூலாதாரம், Instagram
- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ் திரையுலகின் இசைத்துறையில் ஜாம்பவான்களான எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் கொடிக்கட்டி பறந்த காலத்தில், தங்களுக்கென தனி பாதை அமைத்து பல வெற்றி பாடல்களை கொடுத்தவர்கள் சங்கர்-கணேஷ். இந்தப் பாடல்களெல்லாம் இவர்களுடையதா எனப் பலரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு, சூப்பர்ஹிட் பாடல்களை இவர்கள் கொடுத்து இருக்கிறார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உதவியாளர்களாக இருந்தபோது இந்த நண்பர்கள் நட்பால் இணைந்து இருக்கிறார்கள். பின்னர், இருவரும் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்கள். சங்கர் மறைந்துவிட்ட நிலையில், கணேஷ் இன்று (மார்ச் 03) பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அப்பாவின் பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பத்து பாடல்களை சொல்ல முடியுமா என்று அவருடைய மகனும், நடிகருமான ஸ்ரீயிடம் கேட்டோம்.

''மாமா சங்கர், அப்பா கணேஷ் நட்பு பற்றி, பாசம் பற்றி முதலில் சொல்கிறேன். சங்கர்- கணேஷ் என்ற பெயரை பிரிக்க முடியாத அளவுக்கு இருவரும் அவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள். இத்தனைக்கும் மாமா சங்கர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர், அப்பா பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்குழுவில் அப்பா ரிதம் பிரிவில் இருந்தார். சங்கர் மாமா ஆர்மோனியம் பிரிவில் இருந்தார். இருவருக்கும் இடையே இருந்த நட்பு, இசை மீதான ஆர்வம் அவர்களை சங்கர்-கணேஷ் ஆக ஒன்றிணைத்தது.
இருவருக்கும் இடையே எந்த ஏற்றத்தாழ்வோ, மனக்கசப்போ வந்தது இல்லை. மெட்டு உருவாக்கம், பின்னணி இசை என இரண்டிலும் இருவரும் ஈகோ இல்லாமல் பணியாற்றி காலத்தால் அழியாத பல பாடல்களைக் கொடுத்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சேர்த்து மொத்தம் 1,100-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்கள். மகராசி (1967) இவர்கள் இணைந்த முதல் படம். 50 ஆண்டுகளாக இவர்களின் இசை ராஜ்ஜியம் சிறப்பாக இருந்தது. அப்பாவின் பிறந்தநாளில் அவர்கள் இசையில் வந்த எனக்கு பிடித்த பாடல்களை பகிர்ந்துகொள்கிறேன்" என்று பிபிசி தமிழிடம் ஆர்வமாக பேச ஆரம்பித்தார் ஸ்ரீ.

பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு (இதயவீணை)
கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 1972-இல் வெளிவந்த படம் இதயவீணை. சங்கர்- கணேஷ் கூட்டணி ஆயிரக்கணக்கான பாடல்களை கொடுத்து இருந்தாலும் இதற்கு தனியிடம் உண்டு. காரணம், படத்தின் ஹீரோவான எம்ஜிஆர்தான் இந்த ட்யூனை தேர்வு செய்தார். தனது பட பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், படத் தொகுப்பில் ரொம்பவே ஆர்வமாக இருப்பார் எம்ஜிஆர். அந்த வகையில், இந்த கம்போசிங்கில் உட்கார்ந்து அவரே தேர்வு செய்த ட்யூன் இது. காஷ்மீர், இமயமலை பின்னணியில் எம்ஜிஆரும், மஞ்சுளாவும் ஆடிப்பாடும் அழகும், வாலியின் வரிகளும், டிஎம்எஸ், சுசீலா குரலும், சங்கர்-கணேஷ் இசையும் பாடலை இன்றும் இளமையாக வைத்து இருக்கிறது. இதே படத்தில் இடம்பெற்ற 'காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்' பாடலும் பிடிக்கும். காஷ்மீரை தமிழ் சினிமாவில் அழகாக காட்டிய பாடலும் கூட.
சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே (நான் ஏன் பிறந்தேன்)
இதுவும் எம்ஜிஆர் படம்தான். இந்த பாடலுக்கு ஏகப்பட்ட சிறப்பம்சம் இருக்கிறது. ஆம், 1972-இல் வந்த பாடலை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். இந்தப் பாடலை பார்க்கும்போது காதல் பாடல் மாதிரி தெரியும். எம்ஜிஆர் பியானோ வாசித்தபடி தொடங்குவார், காஞ்சனா இருப்பார். ஆனால், பாடலின் வரிகளை உன்னிப்பாக கவனித்தால், அது முழுக்க கம்யூனிச சிந்தனையுள்ள கருத்து. ஒவ்வொரு வரிகளும் தொழிலாளர்கள், உழைப்பு தியாகத்தை , பொதுவுடைமை தத்துவத்தை சொல்வதாக இருக்கும்.

பட்டுக்கோட்டை அம்மாளு (ரங்கா)
எஸ்பிபியும், மலேசியா வாசுதேவனும் இணைந்து கலக்கிய பாடல். ரஜினிகாந்த்தும், ராதிகாவும் அசத்தல் ஆட்டம் போட்டு இருப்பார்கள். சிறந்த கிராமத்து மெட்டு மாதிரி தெரியும், அதேசமயம் மேற்கத்திய இசையும் இருக்கும். இன்றைக்கும் இந்த பாடல் பல கச்சேரிகளில் பாடப்படுகிறது. இப்போது கூட ரீ மிக்ஸ் ஆகியுள்ளது.
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா (மூன்று முகம்)
எனக்கு மூன்று முகம் படத்தின் பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையும் ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு ரஜினிக்கும் அதில் வித்தியாசம் காண்பித்து இருப்பார். அதில் இடம்பெற்ற 'டிஸ்கோ ராமா, டிஸ்கோ கிருஷ்ணா' என் ஃபேவரைட். எஸ்பிபி, வாணி ஜெயராம் பாடியிருப்பார்கள். ஒரு கடற்கரை பின்னணியில் 'தேவாமிர்தம் ஜீவாமிர்தம் பெண்ணா என ஆரம்பித்து, ஹிப்பி ஸ்டைல் பாணிக்கு பாடல் மாறும். ரஜினிகாந்த் கெட்-அப்பே அவ்வளவு அருமையாக இருக்கும்.

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா (நீயா)
இன்றைக்கும் பாம்பு படமென்றால் நீயாதான் நினைவுக்கு வரும். அதில் இடம்பெற்ற அருமையான பாடல். கமல்ஹாசன் மீசை, அவர் பாடும் ஸ்டைல் பிரமாதமாக இருக்கும். இசையும், பாடலை எடுத்த விதமும், கதையும் பக்காவாக பொருந்தி இருக்கும்.
நடிகனின் காதலி, நாடகம் ஏனடி (தாயில்லாமல் நானில்லை)
இந்த பாடலில் காதல் இளவரசனாகவே வாழ்ந்திருப்பார் கமல்ஹாசன். சில வரிகளை அவர் 'பில்டப்' பேசிவிட்டு பாடலை தொடங்குவார். இந்த பட பாடல்கள் கம்போசிங் சமயத்தில் கமல்ஹாசன் வந்திருந்து, பாடல் பதிவை பார்த்து இருக்கிறார். வழக்கம்போல் எஸ்பிபி உருகி பாடியிருப்பார்.
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ( டார்லிங் டார்லிங் டார்லிங்)
இரவில் கேட்கும் பாடல்களில், பயணங்களில் கேட்கும் பாடல்களில் 'ஓ நெஞ்சே'வுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். பிரபல கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் இந்த பாடலை எழுத, எஸ்பிபி பாடியிருந்தார். பாக்யராஜ் கொஞ்சம் சோகமாக பாடுவது போல இருக்கும். பூர்ணிமா பாடலில் வரும் அழகே தனி.

கொண்ட சேவல் கூவும் நேரம், குக்கு, குக்கு (எங்க சின்ன ராசா)
'வாலிபக் கவிஞர்' வாலி வரிகளில் பாடல் துள்ளலாக இருக்கும். இந்த பாடலில் ராதா கண்ணடித்து பாக்யராஜுடன் டூயட் பாடுவார். தியேட்டரில் அப்படி ரசித்தார்கள். குறிப்பாக, எஸ்.ஜானகியின் குரல் பிரமாதமாக இருக்கும்
மேகமே மேகமே (பாலைவனச்சோலை)
வாணி ஜெயராமின் சிறந்த பாடல்களில் இதை எப்படி தவிர்க்க முடியும். அந்த தேன்குரலுக்கு அழகாக நடித்து இருப்பார் சுஹாசினி. சங்கர்- கணேஷ் மெலோடி பாடல்களில் மழை போல் பொழியும் இந்த டியூன் ரொம்பவே ஸ்பெஷல்.

பட்டுவண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம் (கன்னி பருவத்திலே)
கண்களை மூடி ரசித்தால் சில பாடல்கள் மாயம் செய்யும். அப்படிப்பட்ட பாடல் இது. கன்னிப்பருவத்திலே படத்தில் இடம்பெற்றது. இந்தப் பாடலை ஒலிபரப்பாத ரேடியோவே இல்லை. இந்தப் பாடலை கேட்காத ஊரே இல்லை எனலாம். மலேசியா வாசுதேவனும், ஜானகியும் பாட, அதற்கு வடிவுக்கரசி, ராஜேஷ் நடிப்பை அற்புதமாக இருக்கும்.
"இந்த பாடல்களை தவிர, நான் உன்ன நினைச்சேன் (கண்ணில் தெரியும் கதைகள்), ஒருகாதல் தேவதை (இதயத்தாமரை), செப்புக்குடம் (ஒத்தையடி பாதையில்), பருத்தி எடுக்கையிலே (ஆட்டுக்கார அலமேலு), தேவதாசும் நானும் (விதி), நான் ஏன் பிறந்தேன் (நான் ஏன் பிறந்தேன்) உள்ளிட்ட பாடல்களையும் நான் அடிக்கடி ரசிப்பேன். சினிமா தவிர, ஏகப்பட்ட ஆன்மீக பாடல்களையும் இந்த கூட்டணி கொடுத்து இருக்கிறது. தமிழில் மட்டுமல்ல, கன்னடத்திலும் கலக்கியிருக்கிறார்கள். அங்கே 200 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சிவராஜ்குமார், ரவிச்சந்திரன், அம்ரிஷ்க்கு ஏகப்பட்ட ஹிட் கொடுத்திருக்கிறார். தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களை கொடுத்து இருக்கிறார்கள். இந்தியில் அமிதாப்பச்சனின் இன்குலாப் உட்பட பல படத்துக்கு பின்னணி இசை கொடுத்து இருக்கிறார்கள்.
'ஒத்தையடி பாதையிலே' உட்பட ஏழு படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அப்பா கணேஷ் 'ஜெகதல பிரதாபன்', 'நான் உன்ன நெனச்சன்' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். 'வின்' என்ற படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கும் ஆடியிருக்கிறார். அனைத்து பாடல்களும் சங்கர்-கணேஷ் என்ற இருவரின் கூட்டணியில் உருவானது, இருவரையும் பிரிக்க முடியாது." என்கிறார் நடிகர் ஸ்ரீ
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












