'அடிக்கடி குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்கின்றன' - மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தமிழக மீனவர்களின் நிலை

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"அடிக்கடி குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்கின்றன. நடுவானில் தடுத்து நிறுத்தி அழிக்கப்படும் குண்டுகளின் ஒரு பகுதி கடலில் விழுவதைக் காண முடிகிறது," என்கிறார் பஹ்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழ்நாட்டு மீனவரான நவீன்.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவிவரும் நேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். பதற்றம் காரணமாக கடந்த நான்கு நாட்களாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை இரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்கான இரானின் எதிர்வினை அந்தப் பிராந்தியம் முழுவதும் விரிவிடைந்துள்ளது.
இந்த நிலையில், மீன்பிடித் தொழிலுக்காக தமிழ்நாட்டிலிருந்து இருந்து மத்திய கிழக்கு நாடுகளான துபை, பஹ்ரைன், இரான், ஓமன் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
"கடலில் விழுந்த குண்டுகள்"
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவரான நவீன் தற்போது பஹ்ரைனில் உள்ளார். எங்கு திரும்பினாலும் வெடி சத்தமாக கேட்கிறது என்றும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அங்குள்ள நிலையை விளக்கிப் பேசிய அவர், "நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தொழிலுக்காக பஹ்ரைன் நாட்டில் உள்ள மெதாராக் என்ற பகுதிக்கு வந்தேன். கடந்த ஒரு மாத காலம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் மீன்பிடி தொழில் செய்துவிட்டு பணம் அனுப்பி வந்தேன்."
"கடந்த சனிக்கிழமை மாலை முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எங்கு திரும்பினாலும் வெடிச் சத்தம் கேட்கிறது. இதனால் நாங்கள் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. எங்களுடன் மீன்பிடிக்கும் சக மீனவர்கள் ஒரு படகில் வியாழக்கிழமை மீன்பிடிக்க சென்று சனிக்கிழமை கரை திரும்பும்போது கடலில் அதிக சத்தத்தைக் கேட்டதாகவும், குண்டுகள் கடலில் அவ்வப்போது விழுந்ததாகவும் தெரிவித்தனர். அவர்கள் பிடித்து வந்த மீன்களையும் வாங்க வியாபாரிகள் வராததால் இன்று வரை மீன்கள் படகில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன." என்றார்.
ஒவ்வொரு முறை வெடிப்பு சத்தம் கேட்கும்போதும் அரசு சார்பில் தங்களுக்கு செல்போன்களில் குறுஞ்செய்தி மற்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அலாரம் வருகிறது எனக் கூறும் அவர், "நாங்கள் கடற்கரைப் பகுதியில் வசிப்பதால் இரவு நேரங்களில் அதிக வெளிச்சத்துடன் குண்டுகள் பாய்வதை எங்களால் காண முடிகிறது. வானில் தடுத்து நிறுத்தி அழிக்கப்படும் ராக்கெட் குண்டுகளின் ஒரு பகுதி கடலில் விழுவதைக் காண முடிகிறது." என்றார்.

பட மூலாதாரம், Getty Images
அரசாங்கத்தின் எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
அந்த குறுஞ்செய்தியில் தங்கி உள்ள அறையை விட்டு வெளியே செல்ல வேண்டாம், கட்டடங்களின் மேற்பரப்பில் உள்ள மேல் தளத்துக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய அரசு சார்பில் இரண்டு முறை தங்களை தொடர்புகொண்டு பாதுகாப்பு குறித்து கேட்டதாகவும் மீண்டும் சொந்த ஊர் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் மீனவர் நவீன் தெரிவித்தார்.
தொலைக்காட்சியில் போர் குறித்து பார்க்கும்போது மிகுந்த அச்சமாக உள்ளதாகக் கூறுகிறார், தங்கச்சி மடத்தில் வசிக்கும் நவீனின் சகோதரி அனிதா. பிபிசி தமிழிடம் பேசியபோது, "என் தம்பி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பஹ்ரைன் நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்காகச் சென்றான். தினசரி எங்களுடன் வீடியோ கால் பேசுவதால் மனதுக்கு சற்று தைரியமாக உள்ளது. இருப்பினும், அவனிடமிருந்து போன் வரும் போதெல்லாம் அச்ச உணர்வுடன் போனை எடுத்துப் பேச வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்." என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அவனுக்கு சிறு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. டிக்கெட் செலவு ஆனாலும் பரவாயில்லை மீண்டும் சொந்த ஊருக்கு வர சொல்லி அவனிடம் கேட்கிறோம். ஆனால், விமான நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால் அங்கிருந்து வர முடியவில்லை. இதனால் மிகுந்த வருத்தத்துடன் இருக்கிறோம். விரைவில் இந்த பதற்றம் நீங்கி நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்." என்றார்.
கடலில் தஞ்சமடைந்திருக்கும் மீனவர்கள்

பட மூலாதாரம், Getty Images
கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம்துறை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் தற்போது இரானின் கிஷ் தீவில் உள்ளார்.
"கடந்த நான்கு நாட்களாக செய்வதறியாது கடற்கரையில் தங்கி இருந்தோம். நேற்று எங்கள் படகின் முதலாளி எங்களை அழைத்து உடனடியாக படகை எடுத்துக்கொண்டு கடலில் பத்திரமாக இருக்குமாறு தெரிவித்துவிட்டார்," என்று பிபிசி தமிழிடம் பேசும்போது கூறினார் நவீன்.
ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வருவதாகக் கூறும் ராஜேந்திரன், "கரைப் பகுதிகளில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், கடலில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதற்காக எங்களை படகுடன் கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார். நாங்கள் மீன்பிடித்து விட்டு துபை சென்று எங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்குவது வழக்கம். ஆனால், தற்போது துபைக்கு செல்ல முடியாததால் எங்களிடம் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, குளிப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வருகிறோம்." என்று தெரிவித்தார்.
இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் ராஜேந்திரன். "எங்களால் குடும்பத்தினரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவ்வப்போது இன்டர்நேஷனல் கார்டு மூலம் பேசி வருகிறோம். எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை, இங்கிருந்து உயிருடன் சொந்த ஊர் செல்வோமா இல்லை இங்கேயே இறந்து விடுவோமா என தெரியாமல் வாழ்ந்து வருகிறோம்." என்றும் குறிப்பிட்டார்.
"என்னைக் காப்பாற்றி கொள்ளவே முடியவில்லை இதில் எப்படி உங்களை நான் காப்பாற்ற முடியும்? எனவே, நீங்கள் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்" என முதலாளி தெரிவித்துவிட்டதாகவும் ராஜேந்திரன் கூறுகிறார்.
"கடந்த வாரம் தூதரகத்தில் இருந்து எங்கள் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் மூலம் பெற்றனர். ஆனால், அதற்குப் பிறகு எங்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போரில் சிக்கி உயிரை விடுவதை தவிர வேறு வழியில்லை," என கனத்த இதயத்துடன் ராஜேந்திரன் பேசிக்கொண்டு இருக்கும்போது அவருடைய தொலைபேசி இணைப்பு துண்டித்தது. மீண்டும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

ராஜேந்திரனின் மனைவி நிர்மலா பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் பகுதியிலிருந்து எனது கணவர் உட்பட 59 பேர் கிஷ் தீவில் வேலை செய்து வருகின்றனர். மேலும், முகாம், அசலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் இரானில் மீன்பிடி தொழிலுக்குச் சென்றுள்ளனர்." என்றார்.
"கடந்த இரண்டு நாட்களாக எனது கணவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசும்போது அங்கு குண்டு விழும் சத்தம் எங்களால் கேட்க முடிகிறது. இதுகுறித்து என் கணவரிடம் கேட்கும்போது அவர், 'நான் இங்கு நலமாக இருக்கிறேன், குழந்தைகளை பார்த்துக்கொள்' என கூறிவிட்டு இரண்டு முறையும் போனை துண்டித்து விட்டார்."
அரசாங்கம் உடனடியாக அங்கு சிக்கித் தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக இங்கு அழைத்து வர வேண்டும் எனக் கூறும் நிர்மலா, "இணைய சேவை இல்லாததால் வாட்ஸ் ஆப்பில் அவருடன் பேச முடியவில்லை. எனினும், நாங்கள் தொடர்ந்து அவருடன் பேச முயற்சி செய்கிறோம். அங்கு அவர்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். தொலைக்காட்சி வழியாகப் பார்க்கும்போது நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகமாகி கொண்டே போகிறதே தவிர குறைந்தபாடில்லை." என்றார்.
"என் கணவர் என்னிடம் கடைசியாக பேசும் பேசும்போது, 'நான் உயிருடன் சொந்த ஊர் வருவது உறுதி இல்லை, எனவே குழந்தைகளை நீ பார்த்துக் கொள்' எனக் கூறினார். அந்த வார்த்தை எனக்கு மிகுந்த வேதனை அளித்தது," என கண்ணீருடன் தெரிவித்தார் நிர்மலா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












