நோயாளி ஒருவரின் சிறுநீரகப் பையில் இருந்து 3.1 கிலோ கல் அகற்றம் - மருத்துவர் கூறியது என்ன?

நோயாளி ஒருவரின் சிறுநீரகப் பையிலிருந்து எடுக்கப்பட்ட 3.1 கிலோ எடை கொண்ட கல்

பட மூலாதாரம், DR.BALAKIRSHNAN PRAGALATHAN

படக்குறிப்பு, நோயாளி ஒருவரின் சிறுநீரகப் பையிலிருந்து எடுக்கப்பட்ட 3.1 கிலோ எடை கொண்ட கல்
    • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பதிவுகளின் பிரகாரம், உலகிலேயே மிகப் பெரியது என நம்பப்படும் சிறுநீரக கல் ஒன்றை சத்திர சிகிச்சை மூலம் வெற்றிரமாக அகற்றிய சம்பவமொன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நகரிலுள்ள பொது மருத்துவமனையில் பணிப்புரியும் சிறுநீரக நிபுணர் மருத்துவர் பாலகிருஷ்ணன் பிரகலாதன் தலைமையிலான குழுவினரே இந்த சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரின் வயிற்றிலிருந்து 3 கிலோ 100 கிராம் எடையுடைய கல்லொன்றே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது மருத்துவமனையின் மருத்துவ வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பக்கவாதத்திற்கான சிகிச்சைகளை அளிக்க மருத்துவர்கள் முயற்சித்த தருணத்தில், அவரது வயிற்றில் கட்டியொன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த கட்டியானது, வயிற்றிற்கு வெளியில் தெரியும் வகையிலேயே காணப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுநீரகப் பையில் காணப்பட்ட கல்

பட மூலாதாரம், DR.BALAKIRSHNAN PRAGALATHAN

இதனைத் தொடர்ந்து, திருகோணமலை மருத்துவமனையில், குறித்த நபருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்ட போதே, சிறுநீரகப் பையில் கல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறுநீரகப் பையில் கல் இருப்பது உறுதியானதை தொடர்ந்து, இந்த நோயாளர் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் பாலகிருஷ்ணன் பிரகலாதன் உள்ளிட்ட குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணன் பிரகலநாதன் தலைமையிலான மருத்துவ குழு, மீண்டும் ஸ்கேன் பரிசோதனைகளை செய்ததை அடுத்து, குறித்த நபரின் வயிற்றில் மிகப் பெரிய கல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

19 சென்டிமீட்டர் நீள கல் ஒன்று அடையாளம் காணப்பட்டதாக மருத்துவர் பாலகிருஷ்ணன் பிரகலாதன், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

சிறுநீரகப் பையிலிருந்து அகற்றப்பட்ட கல்

பட மூலாதாரம், DR.BALAKIRSHNAN PRAGALATHAN

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதுதொடர்பில் பிபிசி தமிழ், மருத்துவர் பாலகிருஷ்ணன் பிரகலாதனிடம் வினவியது. அவரிடம் பிபிசி தமிழ் அளித்த கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

1. இந்த சத்திர சிகிச்சைகளை செய்வதற்கு எதிர்நோக்கிய சவால்கள் என்ன?

உடனடியாக சத்திரசிகிச்சைக்கு எம்மால் செல்ல முடியவில்லை. காரணம், கல்லின் எடை அதிகமாக காணப்பட்டமை மற்றும் பக்கவாதம் ஏற்பட்டிருந்தமை ஆகிய காரணங்களினால் உடனடியாக சத்திரசிகிச்சைக்கு செல்ல முடியவில்லை. கை, கால்களுக்கு வருகின்ற நரம்புகளை போன்று, சிறுநீரகத்திற்கும் நரம்புகள் வருகின்றன. அந்த நரம்பு பாதிக்கப்பட்டுள்ளமையினால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருந்தது.

பக்கவாதம் மற்றும் இரத்த ஓட்ட பாதிப்பு காரணமாகவும் சிறுநீரகப் பையின் அழுத்தம் அதிகரித்து, இரத்த அழுத்தம் அதிகரித்து, சிறுநீர் கீழ்நோக்கி வராது, சிறுநீரகத்திற்கு மேல் நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது. அதனால், சிறுநீரகத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய முடியாது. காரணம், நோயாளிக்கு உடலில் சத்திர சிகிச்சை செய்வதற்காக பலம் இருக்க வேண்டும். சிறுநீரகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, சிறுநீரகப் பையின் அழுத்தத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை செய்தோம். அதிலும் ஒரு பிரச்னை இருந்தது.

கல்லின் பாதிப்புகளினாலும், சிறுநீரகப் பைக்குள் கேடிட் உபகரணத்தை பொருத்துவது கஷ்டமாக இருந்தது. சரியாக கேடிட் உபகரணத்தை பொருத்தவிட்டால், அது கழன்று வீழ்ந்து விடும். இவருக்கு விரைவில் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம். இருதய செயற்பாடு, மூளை செயற்பாடு உள்ளிட்ட எல்லாம் சரியாக இருந்தமையினால் சத்திரசிகிச்சை செய்தோம். அவர் ஜுலை மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் மாதத்தில் நாங்கள் சத்திர சிகிச்சை செய்ய திட்டமிட்டோம்.

சத்திரசிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினர்

பட மூலாதாரம், DR.BALAKIRSHNAN PRAGALATHAN

படக்குறிப்பு, சத்திரசிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினர்

2. இந்த சத்திர சிகிச்சை செய்யும் போது, எதிர்பார்த்ததை விடவும் ஏதாவது வித்தியாசமாக நடைபெற்றதா?

ஆம். இவருக்கு இதற்கு முன்னரும் இதேமாதிரியாக சின்ன கல்லொன்று சத்திரசிகிச்சை மூலம் எடுத்துள்ளார்கள். 1998ம் ஆண்டு இந்த சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சின்ன கல் இருந்தால், நாங்கள் வெட்டி சத்திரசிகிச்சை செய்ய மாட்டோம். கேமரா அனுப்பி, லேசரின் மூலம் கல்லை திட்டமிட்டு உடைத்து தான் எடுப்போம். எனினும், 4 சென்டிமீட்டரை விட பெரிய கல்லாக இருந்தால், லேசர் மூலம் செய்ய நேரம் எடுக்கும். அதனால், வெட்டி தான் செய்வோம்.

1998ல் அந்த வசதிகள் இல்லாமையினால், அவருக்கு வயிற்றை வெட்டி தான் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. மறுபுறத்தில் சத்திரசிகிச்சை பக்கத்தில் எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை. சாதாரணமாக சத்திர சிகிச்சை போல தான் இருந்தது.

3. முழுமையாக கல்லை எடுத்து, சத்திர சிகிச்சையை செய்ய எவ்வளவு நேரம் எடுத்தது?

''சுமார் ஒரு மணிநேரம் வரை எடுத்தது."

4. இவ்வளவு பெரிய கல்லொன்று எப்படி உருவாகின்றது?

''குறிப்பாக சிறுநீர் பையில் கல் வருவதற்கு முக்கியமான காரணம், சிறுநீர் சரியாக வெளியேறாமையாகும். ஆண்களுக்கு சுமார் 40 அல்லது 50 வயதுக்கு பிறகு சிறுநீர் தொகுதிக்கு கீழ் உள்ள சுரப்பி பெரிதாகும். அந்த பெரிதாகும் போது சிறுநீர் சரியாக வெளியேறாது. சிறுநீர் சரியாக வெளியேறுவதில்லை, சிறுநீர் கழிக்கும் போது கஷ்டமாக இருக்கின்றது. அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்பதை போல இருக்கின்றது. சிறுநீர் கழித்த பின்னரும், மீண்டும் மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படுதல், இரவில் தூக்கத்தில் எழுந்து போகவேண்டும் என்பதை போல இருக்கின்றது. இதற்கு இது தான் காரணம்.

லட்ஸ் என்று சொல்வார்கள். இப்படியான நிலைமை இருக்கும் போது சிறுநீரக தொற்றுகள் ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படும். இந்த இரண்டு காரணங்களினால் சிறுநீரகப் பையில் கல்கள் உருவாவதற்கு சாத்தியம் ஏற்படும். இது சிறுநீரகப் பையில் மாத்திரம் கல் வருவதற்கான காரணி. இல்லையென்றால், சிறுநீரகத்திலுள்ள கற்கள், சிறுநீர் பையில் வீழ்ந்து, சிறுநீர் பையில் கற்கள் உருவாகலாம். அது பெரிதாக வாய்ப்புகள் குறைவு. காரணம். சிறுநீரகத்திலிருந்து வீழும் போது நோயாளருக்கு வலி வந்து விடும். அதனால், அந்த கல்லை முதலிலேயே அடையாளம் கண்டுகொள்ள முடியும். சிறுநீர் கழிக்கும் பிரச்னை வரும் போது, அதை சொல்லாமல் இருந்தால் தான் இந்த கல் பெரிதாக்கிக் கொண்டு வரும்.

கல் இருப்பது வயிற்றின் மேற்பரப்பிலேயே தெரிந்தது

பட மூலாதாரம், DR.BALAKIRSHNAN PRAGALATHAN

5. இந்த கல் இவ்வளவு பெரிதாகுவதற்கு எவ்வளவு காலம் எடுத்திருக்கும் என்று நம்புகின்றீர்கள்?

''சுமார் 5 முதல் 10 வருடங்கள் எடுத்திருக்கலாம்."

6. சிறுநீர்ப் பையிலிருந்து எடுக்கப்பட்ட உலகிலேயே பெரிய கல் என செய்திகள் வருகின்றன. அது உண்மையா?

''இப்போதைக்கு தரவுப்படுத்தப்பட்ட கல்களில் இது தான் பெரிய கல்லாக இருக்கின்றது. கிண்ணஸ் உலக சாதனைக்கு நாங்கள் விண்ணப்பித்துள்ளோம். இன்னும் சில நகர்வுகள் இருக்கின்றன. இதற்கு முதலில் பிரேசிலில் 2003ம் ஆண்டு 1.9 கிலோகிராம் கல் எடுக்கப்பட்டதாக தரவுகளில் பதியப்பட்டுள்ளது.""

7. இந்த நோயாளி எப்படி இவ்வளவு பெரிய கல்லை தாங்கிக் கொண்டிருந்தார்?

நாங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பேசினோம். அந்த கல் இருந்தது வெளிப்படையாக தெரிந்துள்ளது. மருத்துவ அறிவு இல்லாத ஒருவரால் கூட, வயிற்றில் இருந்த கட்டியை அடையாளம் கண்டுக்கொள்ள முடியும் அளவுக்கு வயிற்றில் கட்டியொன்று இருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு