அமெரிக்கா - இரான் மோதலில் எந்த நாடு யார் பக்கம்?

பட மூலாதாரம், Getty Images
இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந்திருப்பது போல் தோன்றுகிறது.
பல நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஆதரித்துள்ள நிலையில், சில நாடுகள் இரானுக்கு ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.
பல நாடுகள் மிகவும் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை எடுத்து நடுநிலையாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
இஸ்ரேலும் அமெரிக்காவும் சனிக்கிழமை இரான் மீது தாக்குதல் நடத்தின.
இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இரான் குறிவைக்கத் தொடங்கியது.
இந்தியா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார். இரு தலைவர்களும் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.
சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் மோதி எழுதிய பதிவில், சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தியதாகவும், குடிமக்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மோதலை விரைவில் நிறுத்துவது முக்கியம் என்பதையும் பிரதமர் மோதி மீண்டும் வலியுறுத்தினார்.
முன்னதாக, பிரதமர் ஞாயிற்றுக்கிழமை இரவு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனும் பேசினார்.
ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்களைப் பிரதமர் மோதி கண்டித்ததுடன், அங்கு வசிக்கும் இந்தியச் சமூகத்தினரைப் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்வதற்காக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையில், வளைகுடா பிராந்தியத்தின் நிலைமை குறித்து கவலை தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 28, சனிக்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது.
"இரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்"என்று வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது .
"பதற்றத்தைக் குறைக்கவும், சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய வழிகளைப் பின்பற்ற வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்ற பிரிட்டன்

பட மூலாதாரம், X / Keir Starmer
இரானிய ஏவுகணைத் தளங்கள் மீதான "தற்காப்பு" தாக்குதல்களுக்குப் பிரிட்டிஷ் ராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் கோரிக்கைக்குப் பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தகவலைப் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் வழங்கினார்.
இருப்பினும், பிரிட்டன் "இராக் தவறுகளில்" இருந்து பாடம் கற்றுக்கொண்டதாகவும், இரான் மீதான ஆரம்பக்கட்டத் தாக்குதலில் அது ஈடுபடவில்லை என்றும், "இனி வரும் எந்தத் தாக்குதல்களிலும் ஈடுபடாது" என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கும் முடிவு, கூட்டாளிகளின் "கூட்டுத் தற்காப்புக்காகவும்", பிரிட்டிஷ் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவும் எடுக்கப்பட்டது என்று ஸ்டார்மர் கூறினார்.
மத்திய கிழக்கு நாடுகள் மீது இரான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை விமர்சித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஃபிரடெரிக் மெர்ஸ் ஆகியோர் மத்திய கிழக்கில் தங்களது நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
ஐரோப்பிய நாடுகள் யாருக்கு சார்பாக உள்ளன?

பட மூலாதாரம், Getty Images
இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மற்றும் இரானின் பதிலடி நடவடிக்கைக்குப் பிறகு, ஐரோப்பிய தலைவர்களின் எதிர்வினைகள் வெளிவந்துள்ளன.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இரானின் "கொலைவெறி ஆட்சிக்கு" எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விரிவான தடைகளை விதித்துள்ளதை நினைவுபடுத்தினார்.
"அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், சர்வதேச சட்டத்தை முழுமையாக மதிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.
இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அலுவலகம், இரான் மக்களுடன் இணைந்து நிற்பதாக கூறியுள்ளது.
அவரது அறிக்கையில், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மதிப்பதற்கான கோரிக்கை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பதற்றத்தைக் குறைக்கும் முயற்சியாக மெலோனி தனது கூட்டாளிகள் மற்றும் பிராந்தியத் தலைவர்களுடன் பேசுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகையில், தனது நாடு "இரானிய மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் போது அவர்களுடன் நிற்கிறது" என்றும், இரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
இரானுக்கு வளைகுடா நாடுகள் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் மீது இரான் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவாதிக்க, அதன் உறுப்பு நாடுகள் ஞாயிற்றுக்கிழமை கூடின.
மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டதாக ஜி.சி.சி கூறுகிறது.
ஜி.சி.சி அமைப்பில் ஐக்கிய அரபு அமீரகம் , பஹ்ரைன், சௌதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நாடுகள் அனைத்தும் இரானின் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், இரான் தங்களது இறையாண்மையையும் சர்வதேச சட்டத்தையும் மீறுவதாகக் குற்றம் சாட்டின.
ஒரு செய்திக் குறிப்பில், தாக்குதல்களை நிறுத்துமாறு இரானை வலியுறுத்தியதுடன், பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தையும் ஜி.சி.சி வலியுறுத்தியது.
இருப்பினும், தங்களை தற்காத்துக் கொள்ள "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்" எடுப்போம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், அண்டை நாடுகளை இலக்கு வைத்ததாக கூறப்படுவதை இரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி மறுத்துள்ளார்.
"நாங்கள் பாரசீக வளைகுடா நாடுகளில் உள்ள எங்களது அண்டை நாடுகளைத் தாக்கவில்லை, அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ இருப்பையே நாங்கள் இலக்கு வைக்கிறோம். அண்டை நாடுகள் தங்கள் குறைகளை இந்தப் போரைத் தீர்மானித்தவர்களிடம் தெரிவிக்க வேண்டும்," என்று அவர் அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தான்
இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மறைவுக்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தத் துயரமான நேரத்தில் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் இரான் மக்களுடன் நிற்பதாக அவர் கூறினார்.
"இந்தத் துயரமான நேரத்தில் (பாகிஸ்தான்) அரசாங்கமும் மக்களும் இரானிய மக்களுடன் நிற்கிறோம். காமனெயியின் 'தியாகத்திற்கு' எங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"சர்வதேசச் சட்டத்தை மீறுவது குறித்து பாகிஸ்தான் கவலை தெரிவிக்கிறது. எந்தவொரு நாட்டின் தலைவரையும் இலக்கு வைக்கக் கூடாது என்பது நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் மரபு" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி உருது செய்தியின் படி, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பும் இரான் மீதான சமீபத்திய தாக்குதல்களுக்கு "ஆழ்ந்த வருத்தத்தை" தெரிவித்ததுடன், அவை "மிகவும் வருந்தத்தக்கவை" என்றும் கூறியுள்ளார்.
"பாகிஸ்தான் இரானுக்கு அனைத்து வகையிலும் ராஜ்ஜீய மற்றும் தார்மீக ஆதரவை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இரான் மீதான தாக்குதலைப் பாகிஸ்தான் தெளிவாகக் கண்டித்துள்ளது" என்று கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
சீனா
இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் உச்ச தலைவர் காமனெயி மறைவு குறித்து சீனா ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை "ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது" என்று சீனா அதில் குறிப்பிட்டுள்ளது.
"இரானின் உச்ச தலைவர் மீதான தாக்குதல் மற்றும் படுகொலை என்பது இரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாக மீறும் செயலாகும். இந்த நடவடிக்கை ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கும், சர்வதேச உறவுகளின் அடிப்படை நெறிமுறைகளுக்கும் எதிரானது. சீனா இதனை வன்மையாக எதிர்ப்பதுடன் கண்டிக்கிறது" என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைதியைப் பேணுமாறும் சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
"ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், பதற்றமான சூழலை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்றும், மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுமாறும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்," என்றும் என்று சீனா தெரிவித்துள்ளது.
ரஷ்யா
இரான் உச்ச தலைவர் காமனெயி மறைவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.
பிபிசி பெர்சியன் செய்தியின்படி, "அலி காமனெயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மரணம் 'மனித விழுமியங்கள் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு எதிரான கொலை'" என்று புதின் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனிடம் கூறினார்.
"அரசியல் மற்றும் ராஜ்ஜீய தீர்வை நோக்கிய பாதைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்" என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தப் பிராந்தியத்தை "மானுடவியல், பொருளாதார மற்றும் கதிரியக்கப் பேரழிவை நோக்கித் தள்ளுவதாக" ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












