சஞ்சு சாம்சன், பும்ராவின் 'மாறுபட்ட' உத்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது.
கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் 196 என்ற இலக்கை 5 விக்கெட்டுகள் மீதம் வைத்து சேஸ் செய்தது இந்தியா.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதிய இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. அ
திரடியாக விளையாடி 50 பந்துகளில் சஞ்சு சாம்சன் அடித்த 97 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) உதவியுடன் இந்தியா வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி சேஸ் செய்த மிகப் பெரிய இலக்கு இதுதான்.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் இந்தியா, அந்தப் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
மாறிய தொடக்க ஜோடி, மாறிய அணுகுமுறை
முக்கியமான இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியான ஒரு முடிவை எடுத்து தொடக்க வீரர் பிராண்டன் கிங்கை நீக்கியது.
அவருக்குப் பதில் மிடில் ஆர்டரில் ஆடும் ஆல்ரவுண்டர் ராஸ்டன் சேஸ் ஓப்பனராகக் களமிறக்கப்பட்டார்.
கேப்டன் ஷாய் ஹோப் நிதானமாக ஆட, சேஸ் அதிரடியைக் கையில் எடுத்தார். இதனால் விக்கெட்டும் விழாமல், ஓரளவு ரன் ரேட்டைத் தக்கவைத்தது அந்த அணி. அதனால் பவர்பிளேவில் விக்கெட்டே இழக்காமல் அந்த அணி 45 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து அதே அணுகுமுறையைக் கடைபிடித்த அந்தக் கூட்டணி 8.5 ஓவர்களில் 69 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து சுழற்பந்துவீச்சுக்கு எதிராகத் தடுமாறிக்கொண்டிருந்த ஷாய் ஹோப், வருண் சக்கரவர்த்தி வீசிய சற்றே வேகமான பந்தைக் கணிக்க முடியாமல் போல்டாகி வெளியேறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆட்டத்தை மாற்றிய பும்ராவின் ஓவர்
ஆரம்பத்தில் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்துவிட்டதால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டர்கள் ஆட்டத்தின் பிற்பகுதியில் தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று கருதப்பட்டது.
அதற்கு ஏற்றார் போல் மூன்றாவது பேட்டராகக் களமிறங்கிய ஹெட்மெயர் ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் பந்துகளில் சிக்ஸர்கள் விளாசினார். அதனால் அந்த அணியின் ரன்ரேட் அதிகரித்தது. 11 ஓவர்கள் முடிவில் அந்த அணி 99/1 என்ற நிலையில் இருந்தது.
இந்நிலையில், ஜஸ்ப்ரித் பும்ராவை மீண்டும் பந்துவீச அழைத்தார் சூர்யகுமார் யாதவ்.
அப்போது வர்ணனையில் இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், "பும்ராவை தற்போது அழைத்து வந்திருப்பதற்கான ஒரே காரணம் ஹெட்மெயரை வெளியேற்றுவதுதான்" என்று கூறியிருந்தார்.
அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்பவே ஹெட்மெயர் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா. அவர் வீசிய பந்து ஹெட்மெயர் பேட்டை உரசிக்கொண்டு சென்று சஞ்சு சாம்சனின் கைகளில் விழுந்தது. அதற்கு இரண்டு பந்துகள் கழித்து நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்த ராஸ்டன் சேஸ் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். பும்ரா தன் வேகத்தைக் குறைத்து அந்தப் பந்துக்கு பவுன்ஸ் கொடுக்க, அதைக் கணிக்க முடியாமல் சேஸ் கவர் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவை மீண்டும் ஆட்டத்துக்குள் எடுத்துவந்தார் பும்ரா.
இந்நிலையில் 15வது ஓவரில் ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்டை ஹர்திக் பாண்ட்யா அவுட் ஆக்கினார். அதனால், 102/1 என்ற நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ், 119/4 என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் வேகமான பந்துகளை விரும்புபவர்கள். அப்படி வேகமான பந்துகள் வீசப்பட்டபோது அதை அவர்கள் நன்றாகக் கையாண்டார்கள். அதே சமயம் பும்ரா அடிக்கடி 'ஸ்லோயர் பால்'களாக வீசினார். அதை வெஸ்ட் இண்டீஸ் வீரர்களால் சரியாகக் கையாள முடியவில்லை.
முதல் 15 ஓவர்களில் இந்திய பௌலர்கள் 14 ஸ்லோயர் பால்கள் வீசினார்கள். அவற்றுள் 11 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. அந்த 14 பந்துகளில் இரண்டில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகளையும் இழந்தது.

பட மூலாதாரம், Getty Images
அதிரடி காட்டிய பவல் - ஹோல்டர் கூட்டணி
ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராவ்மன் பவல், ஜேசன் ஹோல்டர் கூட்டணி சரிவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை மீட்டது. அதோடு அவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் ரேட்டையும் உயர்த்தினார்கள்.
அர்ஷ்தீப் சிங் வீசிய 16-வது ஓவரில் ராவ்மன் பவல் இரண்டு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார். அதுமட்டுமல்லாமல் அர்ஷ்தீப் ஒரு வைடில் பவுண்டரியும் கொடுக்க, அந்த ஓவரில் 24 ரன்கள் எடுக்கப்பட்டது.
வருண் சக்கரவர்த்தி வீசிய 17-வது ஓவரில் ஹோல்டர் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடிக்க, அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. பும்ராவின் 18-வது ஓவரிலும் அவ்விரு வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்களும் இணைந்து 12 ரன்கள் எடுத்தனர். அதனால், 18 ஓவர்கள் முடிவில் 175/2 என்ற நிலையை அடைந்தது வெஸ்ட் இண்டீஸ்.
தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடி காட்டிக்கொண்டிருந்த நிலையில், 19-வது ஓவரை சிறப்பாக வீசினார் அர்ஷ்தீப் சிங். அவர் தொடர்ச்சியாக 'வைட் யார்க்கர்' லைனிலேயே பந்துவீசினார். அதை வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்களால் பவுண்டரியாக்க முடியவில்லை. அதனால், அந்த ஓவரில் 6 ரன்களே கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களைக் கடக்காததற்கு இந்த ஓவர் மிகவும் முக்கியமான காரணமாக அமைந்தது.
பும்ரா வீசிய 20-வது ஓவரில் 14 ரன்கள் வர, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. பவல் 19 பந்துகளில் 34 ரன்களுடனும், ஹோல்டர் 22 பந்துகளில் 37 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
மீண்டும் சொதப்பிய இந்தியாவின் ஃபீல்டிங்.
இந்தப் போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங்கில் 4 வாய்ப்புகளைத் தவறவிட்டது. 3 கேட்ச்களைத் தவறவிட்ட இந்தியா ஒரு ரன் அவுட் வாய்ப்பையும் நழுவவிட்டது.
மூன்றாவது ஓவரில் பேட்டர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் ஒரு ரன் அவுட் வாய்ப்பு ஏற்பட்டது. வருண் சக்கரவத்தி கீப்பர் பக்கம் வீசியிருந்தால் விக்கெட் வீழ்ந்திருக்கும். ஆனால், அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
அதேபோல், ஐந்தாவது ஓவரில் ராஸ்டன் சேஸ் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. பும்ரா வீசிய 'ஸ்லோ பாலை' சேஸ் கணிக்க முடியாமல் தடுமாற, அவர் அடித்த ஷாட் அபிஷேக் ஷர்மாவின் கைக்கே சென்றது. ஆனால், அந்த கேட்சைப் பிடிக்க அவர் தவறவிட்டார்.
அக்ஷர் பட்டேல் வீசிய 13-வது ஓவரின் முதல் பந்தை ரதர்ஃபோர்ட் மிட் விக்கெட் திசையை நோக்கி அடித்தார். அங்கே பவுண்டரி எல்லைக்கு சற்று உள்ளே நின்றிருந்த திலக் வர்மா, இடது பக்கம் குதித்துப் பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், அவரால் அதைப் பிடிக்க முடியாமல் போனதோடு, பந்தும் பவுண்டரி எல்லைக்கு வெளியே விழுந்து சிக்ஸர் ஆனது.
சேஸ் கேட்சை தவறவிட்ட அபிஷேக் ஷர்மா, 19-வது ஓவரில் ராவ்மன் பவல் கேட்சையும் தவறவிட்டார். அர்ஷ்தீப் பந்துவீச்சில் பவல், மிட்விக்கெட் திசையில் அடித்த பந்தை முன்னே வந்து பிடிக்க முயற்சித்த அபிஷேக் அதையும் தவறவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ஆட்ட நாயகனாக ஜொலித்த சஞ்சு சாம்சன்
மிக முக்கியமான போட்டியில் இந்திய அணி பெரிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்தது. ஆனால், அப்படியான எந்த நெருக்கடியையும் காட்டாமல் இந்திய அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்தார் சஞ்சு சாம்சன். 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தார் சாம்சன்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் இன்னிங்ஸில் மொத்தம் 4 பேட்டர்கள் 30 ரன்களுக்கு மேல் எடுத்தார்கள். ஆனால், 199 ரன்கள் அடித்த இந்திய அணியில் இந்த இன்னிங்ஸில் 30 ரன்களைக் கடந்த ஒரே வீரர் சாம்சன் மட்டுமே. அவர் போக, திலக் வர்மாவைத் தவிர வேறு யாரும் 20 ரன்களைக் கூடக் கடக்கவில்லை. அப்படியொரு இன்னிங்ஸில் தனி ஆளாக ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார் சாம்சன்.

இந்த சேஸில் ஆரம்பம் முதலே மிகவும் நிதானமாக இருந்தார் சாம்சன். நிதானம் என்பது அவரது உடல் மொழியிலும் மனோபாவத்திலும் தெரிந்ததே தவிர, அவருடைய பேட்டிங்கில் அதிரடி நிரம்பியிருந்தது. மூன்றாவது ஓவரில் அகீல் ஹொசைன் பந்துவீச்சில் தன் அதிரடியைத் தொடங்கிய அவர், 20-வது ஓவர் வரை அதைத் தொடர்ந்தார்.
கட், புல், ஃப்ளிக், டிரைவ், ஸ்வீப் என அனைத்து விதமான ஷாட்களையும் துல்லியமாக அடித்தார் சாம்சன். ஆஃப் சைடில் ஃபீல்டர்களுக்கு இடையே இருந்த இடைவெளிகளை கண்டு, அங்கே பவுண்டரிகள் அடித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அதேசமயம் வழக்கமாக ஒவ்வொரு பந்தையும் அடிக்க நினைப்பதுபோல் இந்தப் போட்டியில் அவர் செய்யவில்லை. பவுண்டரிகளுக்குப் பிறகு அவர் சரியாக ஸ்டிரைக் ரொடேஷனும் செய்தார்.
இந்தப் போட்டி முடிந்த பிறகு சாம்சனின் ஆட்டம் பற்றி ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ், "வழக்கமாக சாம்சன் ஒரு பவுண்டரிக்குப் பிறகு, மீண்டும் மீண்டும் அடிக்கச் சென்று விக்கெட்டை இழப்பார். ஆனால், இன்று அவர் அப்படி பவுண்டரிகள் அடித்த பிறகு சிங்கிள்கள், டபுள்கள் எடுத்தார். அவருடைய வழக்கமான ஆட்டத்தில் இருந்து இது மிகப் பெரிய மாற்றமாக அமைந்தது" என்று கூறினார்.
அதேபோல் ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும் சாம்சன் அசரவில்லை. அதேபோல், அவர் விக்கெட் வீழ்ச்சியை தடுக்கவேண்டும் என்ற நோக்கில் ரன் ரேட்டையும் குறைக்கவில்லை.
அவர் தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். அதனால், புதிதாக வந்த பேட்டர், தேவைப்பட்ட ரன் ரேட் என எதுவுமே நெருக்கடியை சந்திக்கவில்லை.
தொடரின் தொடக்கத்தில் அணியில் இடமே கிடைக்காத சாம்சன், இப்போது மிகமுக்கியமான போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
வெஸ்ட் இண்டீஸ் ஃபீல்டிங் - கொஞ்சம் சிறப்பு கொஞ்சம் சொதப்பல்
ஒருபக்கம் சாம்சன் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், சீரான இடைவெளியில் ஒருபக்கம் இந்திய பேட்டர்கள் அவுட்டாகிக் கொண்டிருந்தார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் சிறப்பான 'கேட்சிங்' இந்திய பேட்டர்களை பெவிலியனுக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. ஆனால், இந்தியாவைப் போல் முக்கியமான தருணங்களில் அந்த அணியும் சில கேட்ச்களைத் தவறவிட்டது ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தியது.
மூன்றாவது ஓவரில், அபிஷேக் ஷர்மா அடித்த பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த ஹெட்மெயர் சுமார் 25 மீட்டர் முன்னாள் ஓடிவந்து கேட்ச் செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஐந்தாவது ஓவரில் மீண்டும் அதே ஸ்கொயர் லெக் திசையில் இன்னொரு கேட்ச் பிடித்தார் ஹெட்மெயர். இம்முறை ஹோல்டர் வீசிய ஷார்ட் பாலை அவர் புல் செய்ய, நன்றாக அடிக்கப்படாத பந்து எல்லையில் நின்றிருந்த ஹெட்மயருக்குச் சென்றது. கொஞ்சம் தன் காலைத் தவறாக வைத்திருந்தாலும், ஹெட்மெயர் எல்லைக்கோடை மிதித்திருக்கக்கூடும். ஆனால், அவர் எந்த நெருக்கடியும் இல்லாமல் பிடித்தார்.
சூர்யகுமார் யாதவ் அடித்த பந்தை ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் முன்னே ஓடி வந்து பந்து கீழே விழும் தருவாயில் மிகவும் தாழ்வாகப் பிடித்தார்.

திலக் வர்மாவின் கேட்சை மிட் ஆன் திசையில் நின்றிருந்த ஹெட்மெயர் நன்றாகக் குதித்து சிறப்பாகப் பிடித்தார். அவர் எதிர்விணையாற்ற 1.6 நொடிகளே இருந்த நிலையில், லாவகமாக செயல்பட்டு அதைப் பிடித்தார் ஹெட்மெயர்.
எப்படி சிறப்பாக கேட்ச் பிடித்து இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்திக்கொண்டிருந்தார்களோ, அதற்கு நேர்மாறாகவும் இரு தருணங்களில் அவர்கள் செயல்பட்டார்கள்.
பத்தாவது ஓவரில் மோட்டி பந்துவீச்சில், சூர்யா அடித்த பந்து வேகமாக பௌலருக்கே சென்றது. ஆனால், வேகமாக வந்த பந்தை அவரால் பிடிக்க முடியவில்லை.
17-வது ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்தை கவர் திசையில் நின்றிருந்த ஜேசன் ஹோல்டர் தவறவிட்டார். சில பந்துகள் முன்பே திலக் வர்மா அவுட் ஆகியிருந்த நிலையில், இந்த கேட்சை ஹோல்டர் பிடித்திருந்தால் இந்தியா மீது நெருக்கடி ஏற்பட்டிருக்கும். ஆனால், ஹோல்டர் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.,
இறுதியில் அரையிறுதி வாய்ப்பையும் வெஸ்ட் இண்டீஸ் அணி தவறவிட்டிருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












