கோடைக் காலத்தில் விந்தணுக்கள் நீந்தும் வேகம் அதிகரிப்பு – ஆய்வில் புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோ மெக்ஃபாட்டென்
- பதவி, சுகாதார செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
சமீபத்திய புதிய ஆய்வின்படி, விந்தணுக்கள் கோடையில் அதிக தரத்துடனும் குளிர்காலத்தில் மிகக் குறைந்த தரத்துடனும் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
டென்மார்க் மற்றும் ஃப்ளோரிடாவில் உள்ள 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட 15,581 ஆண்களிடம் இருந்து எடுக்கப்பட்ட விந்தணு மாதிரிகளை பிரிட்டன், கனடா, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
விந்தணுக்களின் இயக்கம், அவற்றின் திறம்பட நீந்தும் திறன் ஆகியவை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இரு பகுதிகளிலும் அதிகமாக இருந்தது என்பதை அவர்களின் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.
இந்தப் பருவகால முறைகளைப் புரிந்துகொள்வது, கருத்தரிக்க முயலும் தம்பதிகளுக்குச் சிறந்த வழிகாட்டுதலை வழங்குவதற்கான, சிகிச்சை மற்றும் கருவுறுதல் சோதனையின் நேரத்தை மேம்படுத்தும். அதன் மூலம் கருவுறுதல் சிகிச்சைகளை மேம்படுத்தலாம்.
இனப்பெருக்க உயிரியல் மற்றும் நாளமில்லா சுரப்பியியல் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, வானிலை அல்லது காலநிலை போன்றவற்றால் விந்தணுக்களின் இயக்கம் பெரியளவில் மாறுவதில்லை எனவும், மாறாக ஆண்டின் பல்வேறு பருவகாலங்களைப் பொறுத்து அது மாற்றமடைவதாகவும் கூறுகிறது.
ஃப்ளோரிடா ஆண்டு முழுவதும் வெப்பமாக இருந்தாலும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விந்தணுக்களின் அளவுகள் மிகக் குறைவாக இருந்தன.
ஆனால், விஞ்ஞானிகள் மொத்த விந்து செறிவு, அதாவது ஒருவரின் விந்துவில் உள்ள விந்தணுக்களின் அளவு அல்லது விந்து வெளியேறும்போது அதில் எவ்வளவு விந்தணுக்கள் வெளியேற்றப்படுகின்றன என்பது, எந்தப் பருவமாக இருந்தாலும், எவ்வித மாற்றத்தையும் எதிர்கொள்ளவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இதன் பொருள், விந்தணுக்களின் திறம்பட நீந்தும் திறன், பருவத்திற்கு ஏற்ப மாறுபடும் என்றாலும், ஆண்டின் காலகட்டம் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கையைப் பாதிப்பதில்லை என்பதாகும்.
இந்தக் கண்டுபிடிப்புகள், வெப்பநிலை வேறுபாடுகளை மட்டும் பாதிக்காமல், பருவகால முறைகள் ஆண்களின் கருவுறுதல் திறனை அதிகம் பாதிக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன.
சராசரியாக, விந்தணுக்கள் சேமிக்கப்படும் இடத்தின் வெப்பநிலை, உடலின் சராசரி வெப்பநிலையான 37 டிகிரியைவிட இரண்டு முதல் நான்கு டிகிரி குறைவாக இருக்க வேண்டும்.
இதைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் விந்தணு இயக்கத்தை அது எதிர்மறையாகப் பாதிக்கும். இதன் விளைவாக கருவுறுதல் திறன் பாதிக்கும்.

இந்த ஆய்வை இணைந்து எழுதிய மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆலன் பேசி, "இரண்டு முற்றிலும் மாறுபட்ட காலநிலைகளில் பருவகால முறை எவ்வளவு ஒத்துப் போகிறது என்பதைப் பார்த்து நாங்கள் வியப்படைந்தோம்.
ஃப்ளோரிடாவில், வெப்பநிலை சூடாக இருக்கும் இடத்தில்கூட விந்தணு இயக்கம் கோடையில் உச்சத்தை அடைந்து குளிர்காலத்தில் குறைகிறது. இது சுற்றுப்புற வெப்பநிலை மட்டுமே இந்த மாற்றங்களை விளைவிக்க வாய்ப்பில்லை என்பதை நமக்குக் காட்டுகிறது," என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "விந்து தரத்தை மதிப்பிடும்போது பருவகாலத்தைக் கருத்தில் கொள்வதன் முக்கியத்துவத்தை எங்கள் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. சூடான காலநிலையிலும்கூட விந்தணு இயக்கத்தில் பருவகால மாறுபாடு ஏற்படுகிறது என்பதையும் காட்டுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய நமது புரிதலை விரிவடையச் செய்வதோடு, கருவுறுதல் விளைவுகளை மேம்படுத்தவும் உதவும்," என்று விளக்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












