வெஸ்ட் இண்டீஸ் உடன் மோதுவதற்கு முன்பு இந்தியா தீர்க்க வேண்டிய 2 பிரச்னைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், யோ மஹேஷ்
- பதவி, சிஎஸ்கே முன்னாள் வீரர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஜிம்பாப்வேவுக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது இந்திய அணி. இந்த உலகப்கோப்பையில் இதுவரை பெரிய செயல்பாட்டைக் கொடுத்திடாத பேட்டர்கள் சேப்பாக்கத்தில் ரன்மழை பொழிந்தார்கள்.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு ஒருவகையில் திருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், இந்தப் போட்டிக்குப் பிறகு சில சந்தேகங்களுமே கூட எழுந்திருக்கிறது.
பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்தியாவின் செயல்பாட்டில் திருப்திதான். அதிலும் குறிப்பாக உலகின் நம்பர் 1 டி20 பேட்டர் அபிஷேக் ஷர்மா தன்னுடைய இயல்பான ஆட்டத்தை இந்த ஆட்டத்தில் ஓரளவு வெளிப்படுத்தினார்.
அவர் ஆட்டத்தில் நம்பிக்கையும் வெளிப்பட்டது. முதலில் ஓரிரு பவுண்டரிகள் வந்த பிறகு அவர் முற்றிலும் மாறுபட்ட பேட்டராகத் தெரிந்தார். அபிஷேக் மீண்டும் ரன்கள் அடித்து ஃபார்முக்கு வந்திருப்பது ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டின் செயல்பாட்டிலுமே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஹர்திக் பாண்ட்யா செயல்பாடு
அடுத்ததாக ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடு என்னை மிகவும் கவர்ந்தது.
அதிலும் குறிப்பாக அவரது 'என்ட்ரி பாயின்ட்' எனக்குப் பிடித்திருந்தது. அதாவது, அவர் பேட்டிங் செய்ய களத்துக்குள் நுழையும் தருணம். என்னைப் பொறுத்தவரை 10-வது ஓவருக்குப் பிறகு ஹர்திக் பாண்ட்யாவைத்தான் களமிறக்கவேண்டும்.
அவர்தான் அந்த இடத்துக்கான ஆஸ்தான பேட்டர். எந்த விதமான பௌலர் பந்துவீசினாலும், இப்போது அவர் இருக்கும் ஃபார்முக்கு அவர் நிச்சயம் சிறப்பாக அடிப்பார்.
அரைசதம் அடித்த பாண்ட்யா மற்றும் அபிஷேக் தவிர்த்து, இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரது செயல்பாடும் சிறப்பாக இருந்தது. சாம்சன் அதிரடியாக ஆடிய விதம், அபிஷேக் ஷர்மா சற்று களத்தில் செட்டில் ஆக அவகாசம் கொடுத்து அவருக்கும் உதவியது.
நம்பர் 3 ஸ்லாட்டில் பெரிதாக சோபிக்காத திலக் வர்மா இந்தப் போட்டியில் ஆறாவது வீரராக வந்து அசத்தியிருக்கிறார். இந்தப் போட்டியில் அடிக்காமல் இருந்திருந்தால், அணியில் அவரது இடமே கேள்விக்குறியாகியிருக்கும். அப்படியொரு நிலையில் அவர் சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டி ஒரு நாக் அவுட் ஆட்டமாக மாறியிருக்கும் இந்தத் தருணத்தில், அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு மிகவும் நல்ல விஷயம்.

பட மூலாதாரம், Getty Images
வருண் சக்கரவர்த்தி ஃபார்ம்
அதேசமயம், அப்படியொரு முக்கியமான போட்டிக்கு முன்பாக இரண்டு விஷயங்கள் இந்தியாவுக்கு பிரச்னையளிப்பதாக மாறிவிடுமோ என்று எனக்குத் தோன்றுகிறது. முதலாவது - வருண் சக்கரவர்த்தின் ஃபார்ம்.
கடந்த இரண்டு போட்டிகளாக வருண் சக்கரவர்த்தியின் ஃபார்மில் சிறு சரிவு தெரிவதுபோல் இருக்கிறது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக அவர் 4 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். பிரதான பௌலர்களில் எகானமி இவருக்கும், அக்ஷருக்கும் தான் (தலா 8.75) அதிகம்.
இதேபோல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வருண் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்திருந்தார். அந்தப் போட்டியில் அதிக எகானமி வைத்திருந்த பிரதான பௌலர் இவர்தான்.
இந்தப் போட்டிக்குப் பிறகு நான் இதை சொல்வதற்கான காரணம், ஜிம்பாப்வே அணிக்கெதிராக அவரிடம் பெரிய செயல்பாடு எதிர்பார்க்கப்பட்டது.
இந்தப் போட்டியில் அவர் ஓவருக்கு 6,7 ரன்கள் வீதம் கொடுப்பார் என்று நினைத்திருந்தேன். சரி, 256 ரன்களைத் துரத்துகிறார்கள் எனும்போது அடிக்கப் பார்ப்பார்கள். அங்கு அவ்வளவு சிக்கனமான ஸ்பெல்லை எதிர்பார்க்க முடியாது. ஆனால், அப்படி அடிக்கப்போகும்போது வருணின் வழக்கமான பந்துவீச்சுக்கு விக்கெட்டுகள் கிடைத்திருக்கவேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. அவர் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்.
இந்த செயல்பாட்டை அலசும்போது அவர் பந்துவீச்சில் எளிதாக ரன் சேர்க்கப்பட்டது போல் தெரிகிறது. ஜிம்பாப்வே பேட்டர்கள் எளிதாக வருண் பந்துவீச்சில் சிக்ஸர்கள் அடித்தார்கள். சிகந்தர் ராஸா 2 சிக்ஸர்களும், மருமானி ஒரு சிக்ஸரும் அடித்திருந்தனர். அந்த ஷாட்கள் எளிதாக அடிக்கப்பட்டது போல் எனக்குத் தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images
இன்னும் சற்று ஆழமாக சிந்திக்கும்போது வருண் சக்கரவர்த்தியின் கூக்ளியை பேட்டர்கள் கணிக்கத் தொடங்கிவிட்டார்களோ என்ற கேள்வி எழுகிறது. சிகந்தர் ராஸா, பென்னட் போன்றவர்கள் அடித்த விதமாகட்டும், முந்தைய போட்டியில் டேவிட் மில்லர், டெவால் பிரெவிஸ் ஆகியோர் அடித்த விதமாகட்டும்... அவை அந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்தன.
இதுபோன்ற பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களில், பௌன்ஸ் அதிகமாக இருக்கும்போது பந்து நன்றாக உள்ளே வரும். அப்போது சரியான லென்த்களில் பந்துவீசவில்லை என்றால், கூக்ளிக்களை கணிப்பதற்கு சற்று அதிக அவகாசமும் வாய்ப்பும் பேட்டருக்குக் கிடைத்துவிடும். அந்த லென்த் தற்போது சரியாக விழவில்லையோ என்று தோன்றுகிறது.
இதுவரை வருண் சக்கரவர்த்தி சர்வதேச டி20 போட்டிகளில் 70 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். அதில் சுமார் 50 விக்கெட்டுகள் கூக்ளி மூலம் எடுக்கப்பட்டவையே. அதை வீரர்கள் தற்போது புரிந்துகொண்டுவிட்டார்களோ, அதற்கு தயார் நிலையில் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. எனக்கு அதுதான் காரணமாக இருக்கும் என்றே கூடத் தோன்றுகிறது.
ஒருவேளை சற்று அதிகம் 'வெரைட்டி' காட்டுவதற்காக அவர் லெக் ஸ்பின் பந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகமாக வீசலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

ஆறாவது பௌலர் பிரச்னை
இன்னொரு முக்கியமான பிரச்னையாக நான் பார்ப்பது இந்தியாவின் ஆறாவது பௌலர்.
5 பிரதான பௌலிங் ஆப்ஷன்களோடு மட்டும் போகும்போது... ஒரு பௌலர் அதிக ரன்கள் கொடுக்கும்போது... ஓரிரு ஓவர்கள் வீசி அதை சரிசெய்வதற்கு அந்த ஆறாவது பௌலிங் ஆப்ஷன் மிகவும் முக்கியம்.
குறிப்பாக பெரிய அணிகளுக்கு எதிரான போட்டியில் ஆறாவது பௌலருக்கான தேவை அதிகம் இருக்கும். அதுவும் அவர்கள் சிறப்பாகப் பந்துவீசவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். அது ஏன் மிகவும் முக்கியமெனில், கேப்டன் மீதான சுமையை சற்றுக் குறைக்கும்.
ஷிவம் துபே கடந்த 2 போட்டிகளிலுமே அதிக ரன்கள் விட்டுக்கொடுத்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்த அவர், ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2 ஓவர்கள் 46 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
'பைலேட்டரல்' தொடர்களில் அவர் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு விக்கெட் எடுக்கிறார். ஆனால், உலகக் கோப்பையில் அது பெரும் சவாலாக விளங்குகிறது. ஜிம்பாப்வே வீரர்கள் துபேவின் ஓவரில் எளிதாக ரன் சேர்த்தார்கள். அவர் விக்கெட் எடுத்தாலும், எனக்கு அது ஒரு பிரச்னையாகவே தெரிகிறது.
அடுத்த போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது. அதிரடியாக, அக்ரஸிவாக ஆடும் நிறைய பேட்டர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்திய பௌலர்களை நிச்சயமாக சோதிப்பார்கள். அதனால், நிச்சயம் ஆறாவது பௌலருக்கான தேவை ஏற்படும்.
அந்தப் போட்டியில் வெற்றி முக்கியம் எனும்போது, அனைத்து ஏரியாக்களும் சரியாக செயல்படவேண்டும். அந்தப் போட்டி கொல்கத்தாவில் வேறு நடக்கப்போகிறது. அதனால், அது இன்னும் பெரிய சவாலாக இருக்கும். அதற்குள் இந்த ஆறாவது பௌலர் பிரச்னையை அணி நிர்வாகம் சரிசெய்யும் என்று எதிர்பார்க்கிறேன். ஷிவம் துபேவும் அவருடைய செயல்பாட்டை சற்று மெருகேற்ற வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












