லண்டனில் 'வீராசாமி' உணவகம் மூடப்படுவதை தடுக்குமாறு அரண்மனையை எட்டிய கோரிக்கை

லண்டன், வீராசாமி உணவகம்
படக்குறிப்பு, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே வீராசாமி உணவகத்தின் ஆதரவாளர்கள் திரண்டனர்.
    • எழுதியவர், சோபியா காபி மற்றும் கோனி போக்கர்
    • பதவி, பக்கிங்ஹாம் அரண்மனை
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிரிட்டனில் உள்ள மிகப் பழமையான இந்திய உணவகம் ஒன்று மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனு பக்கிங்ஹாம் அரண்மனை வரை சென்றுள்ளது. அந்த உணவகம் மூடப்படுவதை மன்னர் சார்லஸ் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது அவர்களின் விருப்பம்.

வீராசாமி என்கிற அந்த உணவகம் 1926 மார்ச் மாதம் நிறுவப்பட்டது. இது தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ரீஜென்ட் தெருவில் விக்டரி ஹவுஸில் இயங்கி வருகிறது; இரண்டாம் உலகப் போரின் போது லண்டன் தாக்குதலுக்கு உள்ளான போதும் இந்த உணவகம் தொடர்ந்து உணவு வழங்கி வந்தது.

உணவகத்தின் இணை உரிமையாளர் ரஞ்சித் மத்ரானி, வீராசாமி ஓட்டல் "மூடப்படுவதில்" இருந்து காத்து உதவுமாறு மன்னரிடம் கேட்டுக்கொள்வதாகவும், குத்தகையைப் புதுப்பிக்காதது "குறுகிய நோக்கம்" கொண்டது என்றும் கூறினார்.

விக்டரி ஹவுஸில் இருந்து உணவகத்தை அகற்றுவது "நாங்கள் எளிதாக எடுத்த முடிவு அல்ல" என்று கிரவுன் எஸ்டேட் தெரிவித்துள்ளது. இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவு கிரவுன் எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயம் என்று கூறப்பட்டுள்ளது.

கிரவுன் எஸ்டேட் என்பது ஒரு சுதந்திரமாக செயல்படும் ஒரு சொத்து நிறுவனம், இதன் லாபம் கருவூலத்திற்குச் செல்கிறது.

ரேமண்ட் பிளாங்க், மைக்கேல் ரூக்ஸ் மற்றும் ரிச்சர்ட் கோரிகன் உள்ளிட்ட பிரபல சமையல் கலைஞர்களும் இந்த உணவகத்தை காப்பாற்றுவதற்கான கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளனர், தற்போது இதில் 20,000-க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

"ஒரு வரலாற்று நிறுவனத்தைப் பாதுகாக்கவும்" மற்றும் "இந்திய-பிரிட்டிஷ் கலாசாரத் தொடர்புகளின் அடையாளத்தை" காப்பாற்றவும் அந்த மனு மன்னரை கோருகிறது.

லண்டன், வீராசாமி உணவகம்
படக்குறிப்பு, தங்களது மனுப் பெட்டியுடன் வீராசாமி உணவகத்தின் இணை உரிமையாளர்கள்

மத்ரானி கூறுகையில், "100 ஆண்டுகால வரலாறு குப்பைத் தொட்டிக்குத் தள்ளப்படுவது" போல், தாம் உணருவதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்: "கிரவுன் எஸ்டேட் என்பது பாலிஸ்டிரீன் பாணியிலான நாகரிகத்தால் மூடப்பட்ட ஒரு செங்கல் சுவர் போன்றது.

"அவர்கள் (கிரவுன் எஸ்டேட்) எங்களிடம் பேசவும், நியாயமாக நடந்து கொள்ளவும் மற்றும் கலந்துரையாடலில் ஈடுபடவும் மன்னர் ஆவன செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."

அவரது மனைவியும் உணவகத்தின் இணை உரிமையாளருமான நமீதா பஞ்சாபி கூறுகையில்: "வீராசாமி உணவகம் மறைந்த ராணிக்காக பக்கிங்ஹாம் அரண்மனையில் இரண்டு முறை உணவு வழங்கியுள்ளது.

"முதல்முறை 2009-ல் இந்திய குடியரசுத் தலைவர் வருகை தந்தபோதும், இரண்டாவது முறை 2017-ல் இந்தியா தனது 70-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடிய போதும் வழங்கப்பட்டது.

"இதையெல்லாம் தாண்டி எங்களை வெளியேறச் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. ஹாம்லீஸ் மற்றும் லிபர்ட்டி ஆகியவற்றுடன் நாங்களும் ரீஜென்ட் தெருவின் பழமையான வாடகைதாரர்கள்."

லண்டன், வீராசாமி உணவகம்
படக்குறிப்பு, உணவகத்தின் வழக்கமான வாடிக்கையாளரான சினன் அர்தார், இந்த உணவகம் "ஒரு விலைமதிப்பற்ற நிறுவனம்" என்று கூறினார்.

சினன் அர்தார் 25 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனுக்குக் குடிபெயர்ந்ததிலிருந்து வீராசாமி உணவகத்தின் வாடிக்கையாளராக இருந்து வருகிறார்.

"கிரவுன் எஸ்டேட் பொது நலனைக் கருத்தில் கொண்டு இந்த விலைமதிப்பற்ற நிறுவனத்தைக் காப்பாற்ற முயல வேண்டும். இந்த இடம் அலுவலகமாக மாற்றப்படக் கூடாது. நான் அங்கு செல்லும் போதெல்லாம் என் வீட்டில் இருப்பது போல உணர்கிறேன்."

லண்டன், வீராசாமி உணவகம்
படக்குறிப்பு, சோனியா கன்னாவோ வீராசாமி உணவகத்தில் 21 ஆண்டுகளாகப் பணிபுரிகிறார்.

21 ஆண்டுகளாக வீராசாமியில் பணிபுரியும் சோனியா கன்னாவோ கூறுகையில், "இந்தச் செய்தியால் நான் மிகவும் வருத்தமடைகிறேன், நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம், கிரவுன் எஸ்டேட் எங்களைத் தொடர்ந்து இயங்க அனுமதிக்கும் என நம்புகிறோம்.

"நாங்கள் இங்கு 100 ஆண்டுகளாக இருக்கிறோம், இதில் ஒரு பகுதியாக இருப்பது எனக்குக் கிடைத்த பெருமை."

உணவகத்திற்கும் கிரவுன் எஸ்டேட்டிற்கும் இடையிலான சர்ச்சை, 'கிரேடு II' பட்டியலில் உள்ள அந்த கட்டடத்தை நவீனப்படுத்தும் திட்டத்தை நில உரிமையாளர் அறிவித்த பிறகு தொடங்கியது.

லண்டன், வீராசாமி உணவகம்

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, ரீஜென்ட் தெருவில் உள்ள விக்டரி ஹவுஸில் 1926-ல் வீராசாமி உணவகம் திறக்கப்பட்டது.

கிரவுன் எஸ்டேட்டின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "விக்டரி ஹவுஸை நவீன தரத்திற்கு மாற்றவும், முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் விரிவான புதுப்பித்தல் பணிகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்," என்று கூறினார்.

அந்த நிறுவனம் புதிய வெஸ்ட் எண்ட் இடத்தைக் கண்டறிய உதவிகளும் மற்றும் நிதி இழப்பீடும் வழங்கப்பட்டதாக அந்தத் தொடர்பாளர் தெரிவித்தார்.

"பிரிட்டன் அரசு பொது செலவினங்களை செய்வதற்கு ஏதுவாக நீண்ட கால மதிப்பை உருவாக்கும் வகையில் தனது நிலத்தையும் சொத்தையும் நிர்வகிக்கும் சட்டப்பூர்வமான பொறுப்பு கிரவுன் எஸ்டேட்டுக்கு உள்ளது", என அவர் மேலும் தெரிவித்தார்.

"இது நாங்கள் எளிதாக எடுத்த முடிவு அல்ல.

"உரிய ஆலோசனைகளுடன், எம்டபிள்யு ஈட் வழங்கிய மாற்றுத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை நாங்கள் பரிசீலித்தோம், துரதிர்ஷ்டவசமாக இந்த பாரம்பரியமாக பட்டியலிடப்பட்ட கட்டடத்தின் பாதுகாவலர்களாக எங்களது பொறுப்புகள், சட்டக் கடமைகள் மற்றும் பொதுப் பணத்தை நிர்வகிப்பதற்கான எங்களது பொறுப்புகளைப் பூர்த்தி செய்யும் மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு