பாகிஸ்தான் - ஆப்கன் தாலிபன் மோதல் இந்தியாவை பாதிக்குமா? பகுப்பாய்வு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே
- பதவி, பிபிசி
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தான் தாலிபன்களுக்கும் இடையேயான மோதல் மீண்டும் வெடித்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தான் தாலிபன்களுக்கு எதிராக "நேரடிப் போரை" அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான சதித்திட்டங்களும் தாக்குதல்களும் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து திட்டமிடப்பட்டவை என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது, ஆனால் தாலிபன் ஆட்சி இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.
"ஆப்கானிஸ்தான் தாலிபன்களுக்கு எதிரான எங்கள் பொறுமை தீர்ந்து விட்டது, இப்போது நேரடிப் போர் இருக்கும்" என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்தார்.
"ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் உலகம் முழுவதிலும் உள்ள பயங்கரவாதிகளை திரட்டுகிறார்கள்" என கவாஜா ஆசிஃப் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ''காபூலில் உள்ள இடைக்கால அரசு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்துள்ளது" என அவர் கூறியதாக பிபிசி உருது தெரிவித்துள்ளது.
இதே நேரத்தில் "பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு நாங்கள் பதிலளித்துள்ளோம்" என்று ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் செய்தித் தொடர்பாளர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து பின்னர் அதனை நீக்கியிருந்தார்.
இந்த நிலையில் தாலிபன் ராணுவ செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் பேசியபோது "நாங்கள் தாக்கப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம். ஆனால் இப்போது சண்டையிடத் தொடங்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் பிபிசி உருது செய்தியின்படி, பாகிஸ்தான் தனது ராணுவ நடவடிக்கைகள் மூலமாக இதுவரை 133 ஆப்கானிஸ்தான் தாலிபன்களை கொன்றதாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், தலைநகர் காபூல், பாக்டிகா மற்றும் கந்தஹாரில் பல இடங்களில் பாகிஸ்தான் குண்டுவீச்சு நடத்தியதை உறுதிப்படுத்தினார்.
இந்த தாக்குதல்களில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என அவர் கூறினார்.
ஆனால் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் இரவு முழுவதும் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதாக தாலிபன்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள ஏழு பயங்கரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய பாகிஸ்தான், சமீபத்தில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவை நடத்தப்பட்டதாகவும் கூறியது.

பட மூலாதாரம், Reuters
பிராந்திய நிலைத்தன்மைக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தல்?
ஆப்கானிஸ்தானுடன் இந்தியா எவ்வித எல்லை பகிர்வோ, தாலிபன் அரசுடன் பலமான ராஜ்ஜீய உறவுகளையோ கொண்டிருக்கவில்லை
ஆனால், இந்த பதற்றத்திற்கு இடையில் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தான் ஆட்சிக்கும் இடையே ஒரு நீண்ட போர் வெடித்தால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்?
தெற்காசிய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் தனஞ்சய் திரிபாதி, "இதுபோன்ற போர் பிராந்திய உறுதித்தன்மையை பாதிக்கும், மற்ற நாடுகள் இதில் தலையிட வாய்ப்பளிக்கும்" என்று தெரிவித்தார்.
"பாகிஸ்தானுக்கு எதிராகப் போராட ஆப்கானிஸ்தானில் பல்வேறு அமைப்புகள் தோன்றினால், அது எதிர்காலத்தில் இந்தியாவிற்கு நல்லதல்ல. தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான், பலுசிஸ்தானில் உள்ள குழுக்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ள வேண்டும்." என்று தனஞ்சய் திரிபாதி கூறுகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் ராணுவம் ஒராக்ஸாயில் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறியபோது, இரு தரப்பினருக்கும் இடையிலான சமீபத்திய மோதல்கள் தொடங்கின. இந்த நடவடிக்கையில் 19 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
தங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தாலிபன் அமைப்பினர் மீது ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாகிஸ்தான் பல ஆண்டுகளாகக் கோரி வருகிறது.
பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தெஹ்ரீக்-இ-தாலிபன் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானில் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களில் ஆப்கானிஸ்தான் நாட்டினர் ஈடுபட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கக்கூடும்?
கடந்த ஆண்டு அக்டோபரில், ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஆறு நாள் பயணமாக இந்தியாவிற்கு வந்திருந்தார்.
முத்தாகியின் இந்திய வருகையின் போது, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் மோதல் ஏற்பட்டது.
முத்தாகியின் இந்திய வருகை பாகிஸ்தானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது.
சமீபத்தில் ஏராளமான ஆப்கானிய அகதிகளை பாகிஸ்தான் நாடு கடத்தியுள்ளது.
"இரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே இதுபோன்ற மோதல் இந்தியாவையும் இரானையும் பாதிக்கலாம்" என்று மத்திய கிழக்கு நுண்ணறிவு தளத்தின் நிறுவனர் சுபாதா செளத்ரி கூறுகிறார்.
இருப்பினும், பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை சிறப்பாக இல்லாததால் இந்த மோதல் நீண்ட காலம் நீடிக்காது என்றும் அவர் நம்புகிறார்.
வெளியுறவு நிபுணர் கமர் ஆகா, "இந்த மோதல் நீண்ட காலம் தொடர்ந்தால், அது இந்தியாவிலும் இரானிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சீனா, மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா போன்றவை இந்த மோதல் அதிகரிப்பதை விரும்பாது, ஏனெனில் அவை பாகிஸ்தானுடனான தனது உறவுகளை கட்டியெழுப்பும் முயற்சிகளில் உள்ளது" என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"தாலிபன் ஆட்சிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் நீண்ட காலம் தொடர்ந்தால், அது ஆப்கானிஸ்தானில் பல குழுக்கள் உருவாக வழிவகுக்கும். இதற்கு வலுவான வாய்ப்பு உள்ளது" என்று கமர் அகா கூறுகிறார்.
"இது இந்தியாவிற்கு நல்ல செய்தியாக இருக்காது, ஏனென்றால் பல குழுக்கள் தோன்றுவதால், அவற்றில் சில இந்தியாவிற்கு எதிராகத் திரும்பக்கூடும், மேலும் இது பிராந்திய அளவில் இந்தியாவிற்கு நல்லதல்ல. இது முழு பிராந்தியத்திலும் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும்" என்றும் அவர் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












