'தாய் கிழவி' விமர்சனம் - அறிமுக இயக்குநருடன் சேர்ந்து ஹிட் கொடுத்தாரா ராதிகா?

பட மூலாதாரம், Sivakarthikeyan Productions
ராதிகா சரத்குமார் நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது தாய் கிழவி திரைப்படம். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்த சிவக்குமார் முருகேசனுக்கு இயக்குநராக இது முதல் திரைப்படம்.
இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனங்கள் இத்திரைப்படம் பற்றி என்ன சொல்கின்றன?

பட மூலாதாரம், Sivakarthikeyan Productions
படத்தின் கதை என்ன?
கருமாத்தூர் என்ற கிராமத்தில் வாழ்கிறார் பவுனுத்தாயி (ராதிகா சரத்குமார்) என்கிற மூதாட்டி.
வட்டிக்கு கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிக்க அவர் கிராம மக்களைத் துரத்துகிறார். அவரது கூர்மையான வார்த்தைகள் யாரையும் விட்டுவைப்பதில்லை. அதனால் அவர் கிராமத்தில் பெரும் வெறுப்பைச் சம்பாதிக்கிறார்.
அவருக்கு மூன்று மகன்கள் (அருள்தாஸ், சிங்கம்புலி, பாலசரவணன்) மற்றும் ஒரு மகள் (ரேச்சல் ரெபெக்கா). அவரது மகன்கள், மருமகள்கள் உள்பட அனைவருமே பவுனுத்தாயியை வெறுக்கிறார்கள்.
ஒருநாள் பவுனுத்தாயிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிடுகிறது. அனைவரும் அவர் மரணத்துக்காக காத்திருக்க, குமார் (இளவரசு) என்பவர் மூலம் அவர் மகன்களுக்கு ஒரு விஷயம் தெரியவருகிறது.
தன் சொத்துகளில் மகன்களுக்குப் பங்கில்லை என பவுனுத்தாயி முன்பே அறிவித்திருந்தாலும், 160 சவரன் தங்க நகைகளை அவர் ரகசியமாகச் சேர்த்திருப்பதாக தகவல் வருகிறது.
இதனால் முதலில் தாய் இறக்கவேண்டும் என்று நினைக்கும் மகன்கள், தங்கத்துக்காக அவரைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். அவர்களால் தங்கள் தாயைக் காப்பாற்ற முடிந்ததா, தங்கம் அவர்களுக்குக் கிடைத்ததா என்பதே படத்தின் கதை.

பட மூலாதாரம், Sivakarthikeyan Productions
படம் எப்படி இருக்கிறது? இயக்குநர் எப்படி செயல்பட்டிருக்கிறார்?
"தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்கள் அவ்வப்போது தங்களின் தனித்துவமான திரைக்கதை மூலம் ஆச்சரியப்படுத்துவது உண்டு. அந்த வரிசையில், இயக்குநர் சிவகுமார் முருகேசன் நகைச்சுவை, சென்டிமென்ட், ஆழமான சமூகக் கருத்துகள் என சரியான விகிதத்தில் கலந்து ஒரு தரமான திரை விருந்தை கொடுத்துள்ளார்" என்று இந்து தமிழ் திசை விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மருமகள் கதாபாத்திரங்கள் இன்னும் கொஞ்சம் வலுவாக இருந்திருக்கலாம். கிளைமாக்ஸில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்திற்கு ஈடாக அவர்களின் முந்தைய காட்சிகள் அமையவில்லை என்ற உணர்வு தோன்றுகிறது. குறிப்பாக ஒரே இரவில் பலரும் திருந்துவது போன்ற காட்சி எடுபடவில்லை" என்றும் அந்த விமர்சனம் சொல்கிறது.
இந்தியா டுடே விமர்சனத்தில், "தாய் கிழவி திரைப்படம் நல்ல நோக்கம் கொண்டிருக்கிறது, கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான படமாகவும் இருக்கிறது. இது ஒரு போதனை போலத் தோன்றாமல், பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் அவர்களின் சுய அதிகாரத்தைப் பற்றிப் பேசுகிறது" என்று படத்தையும் இயக்குநரையும் பாராட்டியிருக்கிறது.
"கமல்ஹாசனின் அறிவுசார் நகைச்சுவை பாணியை முறையாகப் பயின்ற மாணவராகத் தெரியும் முருகேசன், தனது எழுத்தைக் கூர்மையாகவும், காட்சிகளை எதார்த்தமாகவும் அமைத்துள்ளார். படம் நெடுகிலும் அவர் கமல்ஹாசனுக்குத் தனது மரியாதையைச் செலுத்துகிறார். எந்தளவிற்கு என்றால், படம் முழுவதும் கமல்ஹாசனே ஒரு கதாபாத்திரமாகவே நீடிக்கிறார்" என்றும் அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சினிமா எக்ஸ்பிரஸ் விமர்சனத்தில், "ராதிகா இப்படத்தின் இதயம் என்றால், இந்தப் படத்தின் உலகம் அதன் ஆன்மா. கமல்ஹாசனின் சில சூப்பர் ஹிட் பாடல்கள் அந்த ஆன்மாவை வருடும் மெல்லிசையாக அமைந்துள்ளன. இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்தப் பாடல்களைப் பயன்படுத்திய விதமும், அந்தந்த ஊருக்கே உரிய தனித்துவமான கதாபாத்திர வார்ப்புகளும் கதைக்கு மெருகூட்டுகிறது. இதனால் 'தாய் கிழவி' திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே படுவேகமாகப் பயணிக்கிறது" என்று எழுதியிருக்கிறது
"தாய் கிழவி மூலம் பெண்ணியம், சம உரிமை என்று நமக்கு மிரட்டலான பாடம் எடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன். கதைக்கரு முதல் கதாப்பாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வரை சரியான தேர்வு" என்று விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கும் மாலை மலர், விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவையும், நிவாஸ் கே பிரசன்னாவின் இசையையும் பாராட்டியிருக்கிறது.

நடிகர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
"தாய் கிழவி ஒரு எதார்த்தமான கிராமத்து நகைச்சுவைப் படத்திலிருந்து, ஒரு மாஸ் கமர்ஷியல் காமெடித் திரைப்படமாக உயர்வதற்கு ராதிகாவின் நடிப்பே காரணம். தன்னிடம் கடன் வாங்கியவர்களை அவர் மிரட்டும் விதம், 'நாமும் இவருக்கு ஆதரவாக நிற்க வேண்டுமோ?' என்று நினைக்கத் தூண்டுகிறது. 140 நிமிடங்கள் கொண்ட இந்தத் திரைப்படத்தில் ராதிகா வெறும் 30-40 நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும், படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது தாக்கம் நிறைந்திருக்கிறது" என்று சினிமா எக்ஸ்பிரஸ் விமர்சனம் பாராட்டுகிறது.
"சமீப காலத்தின் மிகவும் துணிச்சலான முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றாக பவுனுத்தாயி கதாபாத்திரத்தை மாற்ற, ராதிகா தனது பல ஆண்டுகால அனுபவத்தைப் பயன்படுத்தியுள்ளார். அவருக்கு ஈடுகொடுத்து மற்ற கலைஞர்களும் சிறப்பாக நடித்திருப்பதோடு, தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் தனித்து ஜொலிக்கிறார்கள்" என்றும் அந்த விமர்சனத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Sivakarthikeyan Productions
குறை என்ன?
"மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிகச்சிறப்பாகக் கையாண்டுள்ளனர். குறிப்பாக, முனிஷ்காந்த் மற்றும் பால சரவணன் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் இரண்டையுமே அபாரமாக வெளிப்படுத்தி ஈர்க்கிறார்கள் ''என்கிறது இந்தியா டுடே.
இந்தப் படத்தின் சில காட்சிகளை யூகிக்க முடிகிறது என்றும், இரண்டாம் பாதியில் லாஜிக் மீறல்கள் எட்டிப்பார்க்கின்றன என்றும் தினத்தந்தி தன் விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
"படத்தில் ராதிகாவின் அசத்தலான நடிப்பு பெரும் பலம். ஆரம்பம் மற்றும் இறுதிக் காட்சி தவிர படம் முழுக்க படுக்கையிலேயே இருந்தாலும் அவரது இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கிறார். அவரது திரைப் பயணத்தில் மற்றொரு மைல்கல் இந்த பவுனுத்தாயி" என்கிறது ஹிந்து தமிழ் திசை விமர்சனம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












