காமனெயி எங்கே, எப்போது கொல்லப்பட்டார்? இதுவரை நடந்தவை பற்றிய முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஹஃப்சா கலீல் மற்றும் டேவிட் கிரிட்டன்
- பதவி, பிபிசி நியூஸ்
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
இரான் நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மரணமடைந்துவிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் காமனெயி மரணம் குறித்து பதிவிட்டிருந்தார்.
சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது நடத்திய மிகப்பெரிய அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து காமனெயி மரணச் செய்தி வெளியாகியுள்ளது.
"டெஹ்ரானில் உள்ள காமனெயி இல்லம் ஒரு தீவிரமான திடீர் தாக்குதலில் அழிக்கப்பட்டது. 86 வயதான அந்த மதத் தலைவர் உயிரிழந்ததற்கான பல அறிகுறிகள் உள்ளன," என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள நான்கு வளைகுடா அரபு நாடுகளான - பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் - ஆகியவற்றின் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவித் தாக்கியது.
இரான் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையின்படி, ஆயதுல்லா அலி காமனெயி சனிக்கிழமை அதிகாலை தனது அலுவலகத்தில் "பணிகளில் தீவிரமாக இருந்தபோது" உயிரிழந்தார் என அரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கண்ணீருடன் அறிக்கைகளை வாசித்தார்.
இதற்கிடையில், டெஹ்ரானில் உள்ள காமனெயி அலுவலகமான 'லீடர்ஷிப் ஹவுஸ்' வளாகத்தின் பல பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பிபிசி வெரிஃபை (BBC Verify) உறுதிப்படுத்தியுள்ளது.
இரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், காமனெயி தனது அலுவலகத்திலேயே உயிரிழந்தது, அவர் எங்கோ ஒளிந்து கொண்டிருப்பதாக பரவிய செய்திகள் "எதிரிகளின் உளவியல் போர்" என்பதற்கான ஆதாரம் என்று கூறியுள்ளது.
இரானில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 09:30 மணியளவில், தலைநகர் டெஹ்ரானில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இரான் ஊடகங்கள் தெரிவித்தன. நகரின் ஜம்ஹூரி சதுக்கம் மற்றும் ஹசன் அபாத் சதுக்கத்திற்கு மேல் புகை மூட்டம் காணப்பட்டது.
டெஹ்ரானுக்கு அருகிலுள்ள கரஜ், நாட்டின் மையப்பகுதியில் உள்ள இஸ்ஃபஹான் மற்றும் கோம், மற்றும் மேற்கில் உள்ள கெர்மான்ஷா ஆகிய நகரங்களிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிபிசி உறுதிப்படுத்திய காணொளிகளில், டெஹ்ரானில் உள்ள காமனெயி இல்லமான லீடர்ஷிப் ஹவுஸ் வளாகத்தின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வெடிப்புகள் நிகழ்ந்ததைக் காண முடிந்தது.
செயற்கைக்கோள் படங்களும் அந்த வளாகத்தில் கட்டடங்கள் கருப்பாக மாறியிருப்பது, இடிபாடுகள் மற்றும் புகை மண்டலத்தைக் காட்டின.
தாக்குதல் நடந்த சமயத்தில் ஆயதுல்லா அலி காமனெயி அங்கு இருந்தாரா இல்லையா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்ல
சனிக்கிழமை மதியம் அதிஉயர் தலைவரின் உடல்நிலை குறித்துக் கேட்கப்பட்டபோது, இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், 'எதையும் உறுதிப்படுத்தும் நிலையில் தான் இல்லை' என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால், சனிக்கிழமை மாலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு தொலைக்காட்சி உரையில், 'டெஹ்ரானின் மையப்பகுதியில் இருந்த சர்வாதிகாரி காமனெயியின் வளாகத்தை நாங்கள் அழித்துவிட்டோம். அந்தச் சர்வாதிகாரி இப்போது உயிருடன் இல்லை என்பதற்கான பல அறிகுறிகள் உள்ளன' என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், 'வரலாற்றின் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான காமனெயி இறந்துவிட்டார்' என்று எழுதினார்.
டிரம்ப் மேலும் கூறுகையில், 'இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றிய எங்களது உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதையும் செய்ய முடியாமல் போனது. இரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இதுவாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
டெஹ்ரானில் தாக்குதல்கள்

பட மூலாதாரம், ISNA/AFP via Getty Images
செய்திகளின்படி, தலைநகரில் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் அலுவலகமும் முதல் தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டது. அதிபர் பெசெஷ்கியான் 'பாதுகாப்பாக' இருப்பதாக இரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது, பின்னர் அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்.
நாள் முழுவதும் தாக்குதல்கள் மற்றும் வெடிப்புகள் குறித்த பல சம்பவங்கள் நடந்திருந்தாலும் சனிக்கிழமை காலை கிட்டத்தட்ட முழுமையான இணைய முடக்கம் இருந்ததை கண்காணிப்பாளர்கள் கண்டறிந்தனர்.
டெஹ்ரான், கரஜ் மற்றும் கோம் ஆகியவற்றுடன் மேற்கு மாகாணங்களான லோரெஸ்தான், ஹமாதான், கெர்மான்ஷா மற்றும் இலாம், வடமேற்கில் தப்ரிஸ், மற்றும் தெற்கு வளைகுடா மாகாணமான ஹோர்மோஸ்கானின் சில பகுதிகள், கெஷ்ம் தீவு உட்பட பல இடங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக இரான் அரசு செய்தி நிறுவனமான இர்னா தெரிவித்துள்ளது.
மேற்கு நகரமான டெஸ்புல், தெற்கில் ஷிராஸ் மற்றும் கெர்மானின் புறநகர்ப் பகுதிகள், வடமேற்கில் குர்திஸ்தான் மற்றும் மேற்கு அஜர்பைஜான், மத்திய மாகாணமான மர்காசி, வடக்கில் கஸ்வின் மற்றும் ஜான்ஜன், மற்றும் தென்கிழக்கில் சிஸ்தான் பலுசிஸ்தான் ஆகியவற்றிலும் வெடிப்புகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சனிக்கிழமை மாலை, இரான் செம்பிறை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உள்ளூர் ஊடகங்களிடம் கூறுகையில், இரான் நாட்டின் 31 மாகாணங்களில் 24 மாகாணங்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டன என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், அன்று இரவு 20:45 மணி வரை நாடு முழுவதும் மொத்தம் 201 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 747 பேர் காயமடைந்தனர், ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த விரிவான விவரங்களை அவர் அளிக்கவில்லை.
ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் மினாப்பில் உள்ள சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
பிபிசியால் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை. அடுத்த அறிவிப்பு வரும் வரை நாட்டின் வான்பரப்பு மூடப்படுவதாக இரான் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறியது என்ன?

பட மூலாதாரம், @netanyahu
சனிக்கிழமை காலை முதல் அறிக்கையை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்டார். அவர் கூறுகையில், தனது நாடு "அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக இரான் மீது முன்னெச்சரிக்கை தாக்குதல் நடத்தியுள்ளது" என்றும், இஸ்ரேலியர்கள் பதில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்குத் தயாராக இருக்குமாறும் எச்சரித்தார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டார். அதில் தாக்குதல்களில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்திய அவர், இதன் நோக்கம் "இரான் ஆட்சியிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதாகும்" என்று கூறினார்.
"நாங்கள் அவர்களின் ஏவுகணைகளை அழிப்போம், அவர்களின் ஏவுகணைத் தொழிலை மண்ணோடு மண்ணாக ஆக்குவோம். அது முழுமையாக அழிக்கப்படும். நாங்கள் அவர்களின் கடற்படையை அழிப்போம். இப்பிராந்தியத்தின் பயங்கரவாத பினாமிகள் இனி இப்பகுதியையோ அல்லது உலகையோ சீர்குலைக்க முடியாது என்பதையும், எங்களது ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த முடியாது என்பதையும் நாங்கள் உறுதி செய்வோம்," என அவர் மேலும் கூறினார்.
"இரான் அணு ஆயுதங்களைப் பெறாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று டிரம்ப் கூறினார்.
முன்னதாக, டிரம்ப் பல வாரங்களாக இரான் நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தார். "இரான் தனது அணுசக்தி திட்டம் குறித்த புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன்" என்று அவர் கூறியிருந்தார்.
தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதிக்கானது என்றும், தான் அணு ஆயுதங்களைப் பெற விரும்பவில்லை என்றும் இரான் பலமுறை கூறியுள்ளது.
இரான் பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களை கைவிட்டால் முழுமையான பாதுகாப்பை பெறலாம் அல்லது "நிச்சயமான மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று டிரம்ப் கூறினார்.
இரான் குடிமக்களையும் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறும், மதகுருமார்கள் வர்க்கத்தை தூக்கியெறியத் தயாராக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
"எங்கள் வேலை முடிந்ததும், உங்கள் அரசாங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதை நீங்களே எடுத்துக்கொள்ள வேண்டும். இது பல தலைமுறைகளில் உங்களுக்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கலாம்" என்று டிரம்ப் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலும் அமெரிக்காவும் "இரான் பயங்கரவாத ஆட்சியால் உருவான தனது (இஸ்ரேலின்) இருப்பிற்கான அச்சுறுத்தலை அகற்ற இந்த நடவடிக்கையை" மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
டிரம்பிற்கு நன்றி தெரிவித்த அவர், "முழு மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தலாக மாறும் வகையில் இரான் அணு ஆயுதங்களை பெற அனுமதிக்கக் கூடாது" என்ற தனது செய்தியை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தத் தாக்குதல்கள் "வீரம் மிக்க இரான் மக்கள் தங்கள் விதியைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கும்" என்று அவர் கூறினார்.
"இரான் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அடக்குமுறையிலிருந்து விடுபடவும், சுதந்திரமான மற்றும் அமைதியை விரும்பும் இரான் நாட்டை உருவாக்கவும் இதுவே தருணம்" என்று நெதன்யாகு கூறினார்.
அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் "இரான் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைப்பைத் தகர்க்க, உடனடி அச்சுறுத்தலாக இருக்கும் இடங்களுக்கு முன்னுரிமை அளித்து இலக்குகளைத் தாக்கத் தொடங்கியுள்ளன" என்று தெரிவித்தது.
இந்த இலக்குகளில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமையகம் மற்றும் கட்டுப்பாட்டு வசதிகள், வான் பாதுகாப்பு திறன்கள், ஏவுகணை மற்றும் டிரோன் ஏவுதளங்கள் மற்றும் ராணுவ விமான ஓடுதளங்கள் ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மேற்கு மற்றும் மத்திய இரான் பகுதிகளில் "ஏவுகணை வரிசைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலில்" சுமார் 200 போர் விமானங்கள் பங்கேற்றதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
போர் விமானங்கள் ஒரே நேரத்தில் சுமார் ஐந்நூறு இலக்குகளின் மீது நூற்றுக்கணக்கான ஆயுதங்களை வீசியதாகவும், இதில் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் அடங்கும் என்றும், இது இரான் நாட்டின் தாக்குதல் நடத்தும் திறனைப் பெருமளவு குறைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் "காமனெயி ஆட்சியின் முக்கிய அதிகாரிகள், புரட்சிகர காவல்படையின் தளபதிகள் மற்றும் அணுசக்தி திட்டத்தின் முக்கிய நபர்களைச் செயலிழக்கச் செய்துவிட்டன" என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.
இரான் பாதுகாப்பு அமைப்பின் ஏழு முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது.
அவர்களில் இரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரும் காமனெயியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகருமான அலி சம்கானி, ஐஆர்ஜிசி தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஜீஸ் நசீர்சாதே ஆகியோர் அடங்குவர்.
ஐடிஎஃப் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர் கூறுகையில், கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் இரான் நாட்டுக்கும் இடையே நடந்த 12 நாள் போருக்குப் பிறகு, இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அரசியல் மற்றும் ராணுவத் தலைமை சனிக்கிழமை தாக்குதல்களுக்காக ஒரு "ஆழமான மற்றும் முழுமையான கூட்டு செயல்பாட்டுத் திட்டமிடல் செயல்முறையை" தொடங்கியதாகத் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல்களின் போது, இரான் நாட்டின் மூன்று குறிப்பிட்ட அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது.
இரான் என்ன பதில் அளித்துள்ளது?

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா "முற்றிலும் தூண்டுதலற்ற, சட்டவிரோதமான மற்றும் அநியாயமான" போரைத் தொடங்கியதாக இரான் வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டினார்.
இரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி எக்ஸ் தளத்தில், "எமது சக்திவாய்ந்த ராணுவம் இந்த நாளுக்காகத் தயாராக உள்ளது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு தகுந்த பாடத்தைக் கற்பிப்போம்" என்று எழுதினார்.
இரான் பாதுகாப்பு அமைச்சகமும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் "கொடூரமான தாக்குதலுக்கு" "கடுமையான மற்றும் இரு நாடுகளிலும் வருத்தத்தை ஏற்படுத்தும்" பதிலடியைக் கொடுப்பதாகச் சூளுரைத்தது.
இரான் நாட்டின் தஸ்னிம் செய்தி நிறுவனம், ஐஆர்ஜிசி-யை மேற்கோள் காட்டி, அதன் படைகள் இஸ்ரேலின் பல இடங்கள் மீதும், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ஐந்து முக்கிய ராணுவ தளங்களான - கத்தாரில் உள்ள அல் உதைத் விமான தளம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படைத் தலைமையகம், குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமான தளம் மற்றும் ஜோர்டானில் உள்ள முவஃபக் சால்டி விமான தளம் - ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்ததாகக் கூறியது.
அந்த செய்தியின்படி, அமெரிக்காவின் போருக்கு உறுதுணையாக இருக்கும் கப்பல் மீது ஏவுகணைகளால் "கடுமையான தாக்குதல்கள்" நடத்தப்பட்டதாகவும், கத்தாரில் உள்ள அமெரிக்காவின் PF-132 ரேடார் அமைப்பு "முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும்" ஐஆர்ஜிசி கூறியுள்ளது.
இதற்கிடையில், இப்பிராந்தியத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படைப் பிரிவான 'யுனாவ்ஃபோர் அஸ்பைட்ஸ்' (EUNAVFOR ASPIDES), வளைகுடா பகுதியில் "எந்தவொரு கப்பலும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதியில்லை" என்று ஐஆர்ஜிசி வானொலி செய்தி மூலம் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தது. உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 20% இந்த வழியாகவே செல்கிறது.
அமெரிக்க மத்திய கட்டளை மையம் தனது படைகள் சனிக்கிழமை "இரான் ஏவுகணை மற்றும் டிரோன்களின் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தன" என்று கூறியது.
அமெரிக்கர்கள் எவரும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்றும், இப்பகுதியில் உள்ள அமெரிக்க நிலைகளுக்கு "குறைந்தபட்ச சேதமே ஏற்பட்டுள்ளது மற்றும் இதனால் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் இஸ்ரேலிய ஊடகங்கள், இரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 150 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சிறியவை என்றும், அத்துடன் டஜன்கணக்கான தாக்குதல் டிரோன்களையும் ஏவியதாகத் தெரிவித்தன.
வான் பாதுகாப்பு அமைப்புகள் பல ஏவுகணைகளைத் தடுத்ததாகவும், சில திறந்தவெளிகளில் விழுந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேகன் டேவிட் அடோம் ஆம்புலன்ஸ் சேவை, மத்திய இஸ்ரேலில் காயமடைந்த ஒரு சிறுவனுக்கும், வடக்கில் காயமடைந்த ஒருவருக்கும் சிகிச்சை அளித்துள்ளதாகக் கூறியது.
வடக்கில் மற்றொரு நபர் ஏவுகணை வெடிப்புக்குப் பிறகு உயரமான இடத்திலிருந்து விழுந்து காயமடைந்ததாகவும் அது மேலும் கூறியது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம், தனது வான் பாதுகாப்பு அமைப்பு "இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்ளடக்கிய ஒரு தாக்குதலை" எதிர்கொண்டதாகவும், அவற்றில் பலவற்றைத் இடைமறித்ததாகவும் கூறியது.
இருப்பினும், அபுதாபி நகரில் விழுந்த இடிபாடுகளால் பாகிஸ்தான் குடிமகன் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். துபையில் உள்ள பிரபலமான பாம் டெவலப்மென்ட் பகுதியில் நான்கு பேர் காயமடைந்தனர்.
துபை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை மாலை நடந்த ஒரு "சம்பவத்தில்", உலகின் பரபரப்பான சர்வதேச போக்குவரத்து விமான நிலையமான துபை சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததாகவும், நான்கு பணியாளர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான முனையங்களிலிருந்து பயணிகள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டதாக அது தெரிவித்தது.
அமெரிக்க தளம் அமைத்திருக்கும் அலி அல் சலேம் விமான தளத்தை இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் குறி வைத்ததாகவும், இதனால் மூன்று குவைத் வீரர்கள் காயமடைந்ததாகவும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
குவைத் சர்வதேச விமான நிலையத்திலும் ஒரு டிரோன் தாக்குதல் நடந்துள்ளது, இதனால் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதுடன், பொருட் சேதமும் ஏற்பட்டது.
பஹ்ரைன் உள்துறை அமைச்சகம், மனாமா மற்றும் முஹராக் ஆகிய இடங்களில் மூன்று குடியிருப்பு கட்டடங்கள் டரோன் தாக்குதல்கள் மற்றும் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணையின் உடைந்த துண்டுகள் விழுந்ததால் சேதமடைந்ததாகக் கூறியது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவு சேவை மையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடந்ததாகவும் பஹ்ரைன் அரசாங்கம் தெரிவித்தது.
தனது நாட்டை நோக்கி ஏவப்பட்ட பல ஏவுகணைகளைத் தனது ராணுவம் தடுத்து நிறுத்தியதாக கத்தார் கூறியது. தலைநகர் தோஹாவில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.
இங்கே பயணம் செய்வது பாதுகாப்பானதா?

பட மூலாதாரம், Getty Images
பெரிய விமான நிறுவனங்கள் பாதுகாப்பு கவலைகளைச் சுட்டிக்காட்டி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான விமானங்களைத் திருப்பிவிட்டுள்ளன அல்லது ரத்து செய்துள்ளன.
வான்பயணங்கள் பகுப்பாய்வு நிறுவனமான 'சிரியம்' அளித்த தரவுகளின்படி, சனிக்கிழமை இப்பகுதியில் தரையிறங்க வேண்டிய சுமார் 4,218 விமானங்களில் 966 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை 4,329 திட்டமிடப்பட்ட விமானங்களில் 716 விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
விஸ்ஏர் (Wizz Air) நிறுவனம் இஸ்ரேலுக்கு மார்ச் 7 வரைpயலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபை மற்றும் அபுதாபி, ஜோர்டானில் உள்ள அம்மான் மற்றும் செளதி அரேபியாவிற்கு செல்லும் விமானங்களை செவ்வாய்க்கிழமை வரையிலும் நிறுத்தி வைத்துள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் டெல் அவிவ் மற்றும் பஹ்ரைனுக்கான விமானங்களை புதன்கிழமை வரை ரத்து செய்துள்ளது.
"நீங்கள் லண்டன் ஹீத்ரோ மற்றும் அபுதாபி, அம்மான், பஹ்ரைன், தோஹா, துபை அல்லது டெல் அவிவ் இடையே விமானத்தில் செல்லவிருந்தால், மார்ச் 6 வரை உங்கள் விமானத்தை எவ்வித கட்டணமும் இன்றி மாற்றிக்கொள்ளலாம்" என்று நிறுவனம் கூறியுள்ளது.
அந்த நிறுவனத்தின் படி, "மார்ச் 4 வரை பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் முழு பணத்தையும் திரும்பப் பெற கோரலாம்."
சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையில், "சுவிஸ் மற்றும் லுஃப்தான்சா குழும ஏர்லைன்ஸ் மார்ச் 7 வரை டெல் அவிவ், (லெபனானில் உள்ள) பெய்ரூட், அம்மான், (இராக்கில் உள்ள) எர்பில் மற்றும் டெஹ்ரானுக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன" என்று கூறியது.
அரசு ஊடகங்களின்படி, குவைத் விமான போக்குவரத்து ஆணையம் அடுத்த அறிவிப்பு வரும் வரை இரான் நாட்டிற்கான அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாகக் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
துபைக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் விமானங்களை எமிரேட்ஸ் நிறுவனம் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. லுஃப்தான்சா, ஏர் இந்தியா, விர்ஜின் அட்லாண்டிக் மற்றும் டர்கிஷ் ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.
இராக் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட இப்பகுதியின் சில நாடுகளும் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது வான்வெளியைச் "சிறிதளவும் மற்றும் சில காலத்திற்கும்" மூடியுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












