அமெரிக்கா, பிரிட்டன் எண்ணெய் கப்பல்கள் மீது இரான் தாக்குதலா? 3 கப்பல்கள் பற்றி எரிவதாக தகவல்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம், Fatemeh BahramiAnadolu via Getty Images

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் மீது சனிக்கிழமை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ளது. இரான் உச்ச தலைவர் காமனெயி, ராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சர் உள்பட 48 முக்கிய தலைவர்களை கொன்றுவிட்டதாகவும், தங்களது நோக்கம் நிறைவேறும் வரை நடவடிக்கை தொடரும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இரானில் முதல் 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இரானின் அணுசக்தி மையங்களை தாக்க பயன்படுத்திய பி-2 குண்டுவீச்சு விமானங்கள் மூலம் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளத்தை தாக்கியதாகவும் அந்த மையம் கூறியுள்ளது. இஸ்ரேலும் இரான் மீதான தனது தாக்குதலை தொடர்கிறது.

அதேநேரத்தில், இரானும் பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல நாடுகளிலும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. சில தளபதிகளை இழந்தாலும் எங்கள் திறன் குறையவில்லை என்று இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக கூறியுள்ள இரான், அமெரிக்கா, பிரிட்டனுக்குச் சொந்தமான 3 எண்ணெய் கப்பல்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம், Majid SaeediGetty Images

முதல் 24 மணி நேரத்தில் 1,000 இலக்குகள் மீது தாக்குதல் - அமெரிக்கா

ஆபரேஷன் எபிக் ஃப்யூரியின் முதல் 24 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட இரானிய இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட குண்டுவீச்சு விமானம், டிரோன்கள், போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அது பட்டியலிட்டிருந்தது.

கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் மற்றும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கூட்டுத் தலைமையகம் உள்ளிட்ட தாக்குதலுக்குள்ளான இரானிய இலக்குகளையும் இது பட்டியலிட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் (IDF) கருத்துகளை இது எதிரொலிக்கிறது, நடவடிக்கையின் முதல் நாள் "மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளை" செய்ததாக இஸ்ரேல் ராணுவம் முன்னதாக கூறியிருந்தது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம், ATTA KENARE AFP via Getty Images

'நோக்கம் நிறைவேறும் வரை தாக்குதல் தொடரும்'

டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், "போர் நடவடிக்கைகள் முழு பலத்துடன் தொடரும். எங்கள் அனைத்து நோக்கங்களும் அடையப்படும் வரை தொடரும்." என்று கூறியுள்ளார்.

"துரதிர்ஷ்டவசமாக இன்னும் அதிகமான அமெரிக்க உயிரிழப்புகள் இருக்கும். அதை தவிர்க்க இயலாது. அவர்களின் மரணத்திற்கு அமெரிக்கா பழிவாங்கும். நாகரிகத்திற்கு எதிராகப் போரை நடத்திய பயங்கரவாதிகளுக்கு மிகவும் தண்டனைக்குரிய அடியை வழங்கும்" என்று அவர் தெரிவித்தார்.

"இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர், போலீசார் ஆயுதங்களை கீழே போட்டால் உயிர் தப்பலாம் அல்லது நிச்சயம் மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அது நிச்சய மரணம்" என்றார் அவர்.

"அணு ஆயுதங்களுடன் கூடிய இரத்தவெறி கொண்ட பயங்கரவாத ஆட்சியை" ஒழிக்க இரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் "சரியானவை" மற்றும் "அவசியமானவை" என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த சகிக்க முடியாத அச்சுறுத்தல்கள் இனி தொடராது" என்று டிரம்ப் தெரிவித்தார்.

"சுதந்திரத்திற்காக ஏங்கும் அனைத்து இரானிய தேசபக்தர்களும் இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், தைரியமாக இருக்கவும் நான் அழைப்பு விடுக்கிறேன்," என்று டிரம்ப் கூறினார்.

"தைரியமாக இருங்கள், வீரத்துடன் இருங்கள், உங்கள் நாட்டைத் திரும்பப் பெறுங்கள். அமெரிக்கா உங்களுடன் உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம், Donald Trump/Truth Social

'எங்கள் இராணுவத் திறனில் எதுவும் மாறவில்லை'

ஏபிசி நியூஸிடம் பேசிய இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இரான் "சில தளபதிகளை இழந்திருந்தாலும்... எங்கள் இராணுவத் திறனில் எதுவும் மாறவில்லை" என்று கூறியுள்ளார்.

"கடந்த முறை இதுதான் நடந்தது," என்று அவர் கூறுகிறார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தாக்குதல்களை அவர் குறிப்பிடுகிறார்.

"எங்கள் உயர் தளபதிகளில் சிலரை அவர்கள் கொன்றனர், ஆனால் அவர்கள் மிக விரைவில் மாற்றப்பட்டனர். அடுத்த 12 மணி நேரத்திற்குள், எங்களால் பதிலடி கொடுக்கத் தொடங்க முடிந்தது," என்றார் அவர்.

"இந்த முறை, அது இன்னும் வேகமாக இருந்தது."

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது இன்னும் சாத்தியமா என்று கேட்கப்பட்டது.

"நீங்கள் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவும்." என்று கூறிவிட்டு தொடர்ந்த அராக்சி, கடந்த வியாழக்கிழமை இரானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் "ஜெனீவாவில் மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளை" மேற்கொண்டனர், பின்னர் திங்களன்று வியன்னாவில் மீண்டும் ஒரு சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் "சமாதானத்தை எதிர்ப்பவர்கள் அதைக் கெடுக்க முடிவு செய்தனர்" என்றார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம், Getty Images

மூன்று எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக இரான் தகவல்

அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் "ஏவுகணைகளால் தாக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கின்றன" என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கூறியதாக இரான் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் பிரிட்டனும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

UK கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தனது தினசரி அறிவிக்கையில், அந்தப் பகுதியில் "பல கடல்சார் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன" என்று கூறுகிறது. இரண்டு கப்பல்கள் "எறிகணைகளால்" தாக்கப்பட்டதாக அது கூறுகிறது, இதனால் தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் கப்பல்கள் எங்கிருந்து வந்தன அல்லது அவை எங்கு பதிவு செய்யப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வளைகுடா மற்றும் தற்போது மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்த நீரிணை உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தக பாதைகளில் ஒன்றாகவும், எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழியாகவும் பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம், Getty Images

வார இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஆசியாவில் திங்கள்கிழமை காலை எரிசக்தி சந்தைகள் திறந்தபோது பிரெண்ட் கச்சா எண்ணெய் மற்றும் நைமெக்ஸ் லைட் ஸ்வீட் எண்ணெய் இரண்டும் 10% க்கும் அதிகமாக உயர்ந்தன.

ஒரு கட்டத்தில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 9% உயர்ந்து $79.30 ஆக இருந்தது, அதே நேரத்தில் நைமெக்ஸ் சுமார் 8.5% அதிகரித்து $72.70 ஆக இருந்தது.

இரானுக்கு வளைகுடா கவுன்சில் எச்சரிக்கை

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள், ஹோர்முஸ் நீரிணை, கச்சா எண்ணெய் விலை உயர்வு

பட மூலாதாரம், StringerAnadolu via Getty Images

படக்குறிப்பு, இரான் தாக்குதலுக்கு இலக்கான பஹ்ரைனின் மனாமாவில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது பிரிவு தலைமையகம்.

இரானிய தாக்குதல்களால் ஏற்பட்ட பெரும் சேதம் குறித்து விவாதிக்க வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சௌதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் குவைத் ஆகியவற்றைக் கொண்ட இந்த அமைப்பு இரானின் தாக்குதல்களைக் கண்டித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை இரான் மீறுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாக்குதல்களை நிறுத்துமாறு இரானை கேட்டுக் கொண்டுள்ள அந்த அமைப்பு, பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த "தேவையான அனைத்து நடவடிக்கைகளும்" எடுக்கப்படும் என்றும் இரானை வளைகுடா கவுன்சில் எச்சரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு