காமனெயி கொலைக்கு பின் இரானில் அதிகாரம் யார் கையில்? அடுத்த தலைவர் எப்படி தேர்வாவார்?

இரான் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி

பட மூலாதாரம், Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு வான்வழி தாக்குதல்களைத் தொடர்ந்து இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உயிரிழந்தார். இது, இரான் மற்றும் பரந்த பிராந்தியத்தில் நிச்சயமற்ற மற்றும் ஆபத்தான எதிர்காலத்தை முன்னறிவிக்கிறது.

நாட்டின் தலைவராகவும், இரானிய புரட்சிகர காவல் படை (IRGC) உட்பட ராணுவத்தின் தலைமை தளபதியாகவும் காமனெயி இருந்தார்.

கடந்த காலத்தில் தலைமை பொறுப்பு தொடர்வதை உறுதிசெய்யவும் அதிகார வெற்றிடம் ஏற்படாமல் தடுக்கவும் அடுத்த தலைமை விரைவாக முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இரான் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாலும் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் மீது அந்நாடு ஏவுகணைகளை ஏவிவருவதாலும் தற்போது அடுத்த தலைமையை தேர்ந்தெடுப்பது சிக்கலானதாகவும் பிரச்னைகள் நிறைந்ததாகவும் இருக்கலாம்.

தெஹ்ரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்படாமல் தடுக்க புதிய அதிஉயர் தலைவரை விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும்

தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை

ஞாயிற்றுக்கிழமை இரானிய அரசு ஊடகத்தில் காமனெயியின் மரணம் அறிவிக்கப்பட்ட உடனேயே, அரசு 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்தது, மேலும் ஏழு நாட்கள் பொது விடுமுறையையும் அறிவித்தது.

தற்போது, நிபுணர்களின் சபை (Assembly of Experts) மீது கவனம் திரும்பியுள்ளது. இது 88 மூத்த மதகுருமார்கள் அடங்கியதாகும்.

அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய அளவிலான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பாதுகாவலர்கள் மன்றம் என்ற கடும்போக்கு கொண்ட கண்காணிப்பு அமைப்பு பரிசீலிக்கும்.

புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு நிபுணர்கள் சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. 2024ம் ஆண்டில் காமனெயியின் விசுவாசிகள் அதன் அனைத்து இடங்களையும் கைப்பற்றினர். எனவே, காமனெயியை போன்று கடும்போக்கு கொண்ட ஒருவரே அடுத்து பதவிக்கு வருவார் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதற்கான நடைமுறை நடந்துவரும் நிலையில், அடுத்த தலைவர் கண்டறியப்படும் வரை தற்காலிகமாக மூன்று உறுப்பினர்கள் கொண்ட சபை பொறுப்பேற்க அரசியலமைப்பு அனுமதிக்கிறது.

இந்த சபையில் தற்போதைய அதிபர் மசூத் பெஸெஷ்கியன், நீதித்துறை தலைவர் கோலம்ஹோசெய்ன் மோஹ்செனி எஜெஹெய் மற்றும் பாதுகாவலர்கள் மன்றத்தின் மூத்த மதகுருமாரான ஆயதுல்லா அலிரெஸா அராஃபி ஆகியோர் இருப்பார்கள்.

எந்தவொரு உறுப்பினருக்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலோ அல்லது இரானில் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக நிபுணர்களின் சபை சந்திக்க முடியவில்லை என்றாலோ, இடைக்கால சபை காலவரையின்றி ஆட்சி செய்யலாம்.

இறுதியாக, அடுத்த அதிஉயர் தலைவர் தொடர்பான முடிவு தொடர்பாக அதிகாரமிக்க இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) நிபுணர்களின் சபை இணைந்து பணியாற்ற வேண்டும்.

அதன் அனைத்து உறுப்பினர்களும் காமனெயியின் விசுவாசிகள் என்பதால், அடுத்து பதவிக்கு வருபவர் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக உள்ளாரா அல்லது கடும்போக்கு கொண்டவராக உள்ளாரா என்பது இத்தகைய முக்கிய காலத்தில் நுட்பமான வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும் என பிபிசி மானிட்டரிங் கூறுகிறது

1979 புரட்சியின்போது உருவாக்கப்பட்ட கொள்கைகளை பாதுகாக்கும் அமைப்பாக புரட்சிகர காவல் படை உள்ளது. மேலும், வழக்கமான ராணுவம் மற்றும் எதிர்ப்பை நசுக்க அண்டை நாடுகளில் உள்ள தன்னார்வ படைகளின் பரந்த வலையமைப்பை பாதுகாப்பதும் அதன் பணியாகும்.

 இரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியன்

காமனெயியின் இறப்புக்கு முன்பு அடுத்து சாத்தியமான போட்டியாளர்கள் குறித்த ரகசிய பட்டியலை நிபுணர்களின் சபையில் உள்ள மூன்று உறுப்பினர்கள் அடங்கிய துணைக்குழு தயாரித்ததாக பிபிசி மானிட்டரிங் கூறுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான பதற்றம் அதிகரித்தபோது, காமனெயி இலக்காக இருந்தது தெளிவான நிலையில் இது நடந்துள்ளது.

"நிபுணர்களின் சபை யாரை நியமிக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். போட்டியாளர்கள் யார் என்பது நமக்கு தெரியாது, மேலும் குண்டுவீச்சுக்குப் பிறகு சபையின் உறுப்பினர்கள் அல்லது போட்டியாளர்களின் நிலைமை என்ன என்பதும் அல்லது வரும் நாட்களில் அவர்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதும் தெரியாது," என ஆய்வாளரும் மத்திய கிழக்கில் நிபுணத்துவம் பெற்றவருமான ரோசா மெனெசெஸ் கூறுகிறார்.

அவர், அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சமகால அரபு இயல் மையத்தைச் சேர்ந்தவராவார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சாத்தியமான போட்டியாளர்கள்

மறைந்த ஆயதுல்லா காமனெயியின் இரண்டாவது மகனான மொஜ்தாபா காமனெயி தன் தந்தையின் இடத்திற்கு வருவதற்கான சாத்தியமான வேட்பாளராக கருதப்படுகிறார்.

தன்னுடைய தந்தையின் அலுவலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பின்போது அவருக்கு அதிகளவிலான ஊடக வெளிச்சம் இருந்தது, மேலும் காமனெயியின் "நோக்கங்களை முன்னேற்றுவதற்காக" அமெரிக்காவால் அவர் தடை செய்யப்பட்டுள்ளார்.

எனினும், வாரிசு அரசியல் ஒரு சாத்தியமான பிரச்னை என பிபிசி மானிட்டரிங் கூறுகிறது.

காமனெயி மற்றும் அவருக்கு முன்பு இருந்த ருஹொல்லா கொமேனி இருவரும் பஹ்லவி மன்னராட்சியின்போது பரம்பரை வாரிசுரிமையை விமர்சித்துள்ளார். பஹ்லவி ஆட்சி 1979 இஸ்லாமிய புரட்சியின்போது அகற்றப்பட்டது.

ஹசன் கொமேனியின் பெயரும் இதில் குறிப்பிடப்படுகிறது. அவர் இரானில் உள்ள சீர்திருத்தவாதிகளுக்கு நெருக்கமானவர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், அவர் 1989ம் ஆண்டு உயிரிழந்த இஸ்லாமிய புரட்சியின் நிறுவனர் ஆயதுல்லா ருஹோல்லா கொமேனியின் பேரனாவார். அதாவது, ஒரே குடும்பத்தில் தலைமைப் பொறுப்பை வழங்குவதாக எழும் வாதம் இங்கு பொருந்தாது.

அவருடைய மத ரீதியிலான தகுதி மற்றும் குடும்ப பாரம்பரியம் ஆகியவை வலு சேர்த்தாலும், குறைவான அரசியல் அனுபவம் மற்றும் வலுவான போட்டியாளர்கள் இருப்பு ஆகியவை அவருக்கான வாய்ப்புகளை குறைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றன.

தெஹ்ரானில் இரான் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அகி காமனெயியின் வளாகம் சேதமடைந்ததை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

பட மூலாதாரம், Airbus DS 2026

படக்குறிப்பு, தெஹ்ரானில் இரான் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் வளாகம் சேதமடைந்ததை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

நிபுணர்களின் சபையில் உள்ள சில உறுப்பினர்களும் சாத்தியமான வேட்பாளர்களாக உள்ளனர். காமனெயிடமிருந்து நியமனம் பெற்ற நீண்ட வரலாறு கொண்ட 65 வயதான மத குருவான அராஃபியும் இதில் ஒருவராவார். அடுத்த அதிஉயர் தலைவர் நியமிக்கப்படும் வரை இரானை ஆட்சி செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள சபையில் அவர் இடம்பெற்றுள்ளார்.

அராஃபி நாடு முழுவதும் உள்ள இறையியல் பள்ளிகளின் இயக்குநராகவும் உள்ளார், இது இரானில் மத ரீதியாக முக்கியமான பொறுப்பாக உள்ளது. 2019ம் ஆண்டு பாதுகாவலர் மன்றத்திற்கு அவரை காமனெயி நியமித்தார்.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Donald Trump / Truth Social

உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய செயலாளராக உள்ள அலி லரிஜானி, அதிஉயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது. ஆனால், அதற்கான நடைமுறையில் அவர் செல்வாக்கு செலுத்தலாம்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின்படி, அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள், இரானின் பிராந்திய உறவுகள் மற்றும் உள்நாட்டில் போராட்டங்களை வன்முறையுடன் அடக்குதல் போன்ற பல்வேறு விவகாரங்களை லாரிஜானி கையாண்டுள்ளார். மேலும், காமனெயிக்கு பிறகு யார் வருவார் என்பதில் ஒரு முக்கிய மத்தியஸ்தராக உள்ளார்.

நாட்டின் முன்னணி மதகுருமார்களின் குடும்பங்களுள் ஒன்றை சேர்ந்த அவர், அமெரிக்காவுடன் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை எட்டும் இரானின் முயற்சிகளை மேற்பார்வையிட்டார். நியூ யார்க் டைம்ஸ் செய்திப்படி, அரசுக்கு எதிரான போராட்டங்களை கொடூரமான முறையில் அடக்குவதற்கு தலைமை தாங்கியதாக, ஜனவரி மாதம் அவருக்கு அமெரிக்கா தடை விதித்த அடுத்த மாதம் இது நடந்தது.

இரான் இஸ்ரேலிடமிருந்தும், ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவிடமிருந்தும் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கு உள்ளாகி வரும் வேளையில், அடுத்த அதிஉயர் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் இருப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.

பிபிசி நியூஸ் பெர்சியன், பிபிசி நியூஸ் முண்டோ, பிபிசி மானிட்டரிங் மற்றும் பிபிசி குளோபல் ஜர்னலிசம் வழங்கிய தகவல்களுடன்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு