இரானின் பதிலடி தாக்குதல் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பின் திறன் பற்றி எழுப்பும் கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோனாதன் பீல்
- பதவி, பிபிசி பாதுகாப்பு செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை இரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பது அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பில் உள்ள பலவீனங்களை அம்பலப்படுத்தியது.
வெளிப்படையாக, இது அமெரிக்காவிற்கும் பிராந்தியத்தில் உள்ள அதன் கூட்டாளி நாடுகளுக்கும் கவலை அளிக்கும் செய்தியாக இருக்கும்.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை பிரிவின் தலைமையகத்தைச் சுற்றி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த செய்தி எழுதும் நேரம் வரை, இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க இராணுவத்திற்கு சில எச்சரிக்கைகள் கிடைத்திருக்கலாம். முன்னெச்சரிக்கையாக, இங்கிருந்து அதன் பணியாளர்களை வெளியேற்றியிருக்கலாம்.
ஒப்பீட்டளவில், பஹ்ரைனின் மோசமான வான் பாதுகாப்பு காரணமாக, இரான் அதை ஒரு முக்கிய இலக்காகக் கண்டிருக்கலாம் என்று பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் முன்னாள் தளபதி டாம் ஷார்ப் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க வான் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு
மெதுவாக நகரும் இரானின் ஷாஹெட் ட்ரோன் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பை தாண்டிச் செல்வதை ஒரு காணொளி காட்டுகிறது.
யுக்ரேனில், இதுபோன்ற டிரோன்களை சாதாரண இயந்திர துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முடியும். கடந்த சில வாரங்களாக, அமெரிக்கா இந்தப் பகுதிக்கு அதிகமான வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, இதில் நவீன THAAD மற்றும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளும் அடங்கும்.
இவற்றால் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியும், ஆனால் அவை மிகவும் அதிக மதிப்பு மிக்கவை. அவற்றின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
யுக்ரேனிடம் 10க்கும் குறைவான பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. யுக்ரேன் தலைநகர் கீவை பாதுகாக்க அவை இன்னும் போராடி வருகின்றன என்பதன் மூலமும் இதைப் புரிந்து கொள்ளலாம்.
மத்திய கிழக்கில் உள்ள அனைத்து ராணுவ தளங்களையும் பாதுகாக்க போதுமான அளவு அவற்றை வைத்திருப்பது அமெரிக்காவிற்கு இன்னும் எளிதானது அல்ல.
அமெரிக்க கடற்படை வளைகுடா மற்றும் கிழக்கு மத்திய தரைக் கடலில் சுமார் ஒரு டஜன் ஆர்லீ பர்க் வகை போர்க் கப்பல்களை (Arleigh Burke-class destroyers) நிறுத்தியுள்ளது.
அவற்றில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளால் டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்த முடியும். ஏமனில் இரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செங்கடலில் அவை ஏற்கனவே திறம்பட செயல்பட்டுள்ளன.
2024 மற்றும் 2026 க்கு இடையில், அமெரிக்கா சுமார் 400 ஹூதி டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்தது.
இந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் விமானங்கள், டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டவை.
அமெரிக்கா தற்போது இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போர் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது. ஆனால் இந்த பெரிய திறன்களால் கூட இரான் சில இலக்குகளை வெற்றிகரமாக தாக்குவதைத் தடுக்க முடியவில்லை.
இந்தப் புதிய அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு முன்பு, இரான் சுமார் 2,000 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்ட ஆயுதக் களஞ்சியத்தைக் கொண்டிருந்திருக்கலாம். மேலும் பல ஒருவழி தாக்குதல் டிரோன்களையும் அது கொண்டுள்ளது.
இரானின் ஷாஹெட் டிரோன் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு யுக்ரேன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யா இப்போது ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான டிரோன்களை உற்பத்தி செய்து வருகிறது. இரானின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் ரஷ்யா உதவியிருக்கலாம்.
ஷாஹெட் டிரோனால் யுக்ரேனில் பேரழிவு

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டிஷ் ராயல் கடற்படையில் தான் பணியாற்றிய காலத்தில், மத்திய கிழக்கில் உள்ள ஒரு ராணுவத் தளத்தின் மீது இரானிய தாக்குதலை உருவகப்படுத்தி போர் பயிற்சிகளை நடத்தியதாக ஷார்ப் கூறுகிறார்.
இந்தக் காலகட்டத்தில் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வான் பாதுகாப்புப் பகுதிகள் வழியாகச் சென்றன.
ஆட்சி அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்து விரைவாகத் தாக்கினால், அமெரிக்கா இறுதியில் தாட் (THAAD) மற்றும் பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு அமைப்புகளை இழந்துவிடும் என்று அவர் கூறுகிறார்.
இரானின் டிரோன் மற்றும் ஏவுகணை திறன்கள் "மிகவும் விரிவானவை" என்றும் ஷார்ப் கூறினார்.
ஆனால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அறக்கட்டளை (Foundation for Defense of Democracies) மூத்த உறுப்பினரான எட்மண்ட் ஃபிட்டன்-பிரவுன், "இரான் பதிலடி கொடுக்க விரும்புகிறது என்பதற்கான சான்றுகள் இருக்கலாம், ஆனால் அதை ஒரு பெரிய மோதலாக விரிவாக்க விரும்பவில்லை" என்று கூறுகிறார்.
கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் இரானின் சில ராணுவத் திறன்களுக்கு எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார்.
"இரானின் பதிலடி மிகவும் லேசானதாக இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன. யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் திறனை அமெரிக்கா சேதப்படுத்தினாலும் அவற்றை முற்றிலுமாக அழிக்கவில்லை என்பதை நினைவில் கொள்வது உகந்தது" என்று அவர் மேலும் கூறுகிறார்.
அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் போர்க்களம் உள்ளது

பட மூலாதாரம், Getty Images
வான்வழியே மட்டுமே நடத்தப்படும் போர்கள் அரிதாகவே வெற்றியையோ அல்லது அரசாங்கத்தை மாற்றுவதற்கான வாய்ப்பையோ அளிக்கின்றன.
2011-இல் லிபியாவிற்கு எதிரான நேட்டோ தலைமையிலான தாக்குதல் நடவடிக்கை ஒரு பெரிய விதிவிலக்காக இருக்கலாம். இருப்பினும் அது கணிசமான குழப்பத்தை அது ஏற்படுத்தியது.
இரானின் தாக்குதல் வரம்புக்குள் அமெரிக்க கடற்படை வந்தால் அதைத் தாக்கும் திறன் இரானுக்கு உள்ளது. அது கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளின் பெரிய தொகுப்பையும், சிறிய, வேகமான, ஆளில்லா தாக்குதல் படகுகளையும் கொண்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சீனா இரானுக்கு இராணுவ ஆதரவை வழங்கியிருக்குமா என்பது இன்னும் பதிலளிக்கப்படாத மற்றொரு கேள்வியாகும்.
"ஆரம்ப தாக்குதல்கள் இரானின் தலைமையையும் இராணுவ சொத்துகளையும் சேதப்படுத்தக் கூடும், ஆனால் அமெரிக்கா தனது நடவடிக்கையைத் தொடர போராட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் இரான் அரசு தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள தன் நிலையை வெறுமனே தக்கவைத்துக் கொள்வதே போதுமானது" என்று அமெரிக்காவின் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வு மையத்தின் டேனியல் பைமன் கூறினார்.

வான் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை யுக்ரேன் தெளிவாக நினைவூட்டுகிறது. அதிபர் ஸெலென்ஸ்கி தனது கூட்டாளிகளுக்கு விடுக்கும் மிக முக்கியமான கோரிக்கையாக இது இன்னும் உள்ளது. நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் டஜன்கணக்கான ஏவுகணைகளை உள்ளடக்கிய பல, சிக்கலான தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்பதையும் யுக்ரேன் நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
அமெரிக்காவிடம் அதிக வலிமையும் வளங்களும் உள்ளன. அத்துடன் இஸ்ரேலுடன் இணைந்து இரானின் டிரோன் மற்றும் ஏவுகணை தொழிற்சாலைகளையும் ஏவுதளங்களையும் அமெரிக்கா குறிவைத்து தாக்கலாம்.
ஆனால் அந்த அச்சுறுத்தலை முற்றிலும் அகற்றுவது எளிதல்ல. நீடித்த போர் இரானுக்கு மட்டுமல்ல, அமெரிக்க ஆயுத இருப்பு மற்றும் சப்ளைக்கும் ஒரு சவாலாக இருக்கும். ஏனெனில் இது அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் நடத்தப்படும் ஒரு போர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












