'40 நிமிடங்களுக்கு என் இதயம் நின்றுவிட்டது' – இறப்பின் நுனி வரை சென்று திரும்பிய நபர்

- எழுதியவர், அலெக்ஸ் டெய்லர்
- பதவி,
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இறப்பு என்பது பொதுவாக ஒருவருக்கு புதிய வாழ்க்கையின் தொடக்கத்துக்கு வழிவகுக்காது. ஆனால், பேட்ரிக் சார்ன்லிக்கு மட்டும் அப்படித்தான் நடந்தது.
அவர் ஓர் உயர்மட்ட கார்ப்பரேட் வழக்கறிஞராக இருந்தார். தனது ஓய்வு நேரத்தை "வீணான நேரம்" எனக் கருதினார். வெற்றி அடைவதற்காக அயராது பாடுபட்டார்.
ஆனால், 2021ஆம் ஆண்டு கோவிட் பேரிடர் காலத்தில் நீண்ட நேரம் வேலை செய்துகொண்டிருந்தபோது, 39 வயதில் உடல் ஆரோக்கியத்தில் உச்சத்தில் இருந்த, இரண்டு குழந்தைகளின் தந்தையான அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
ஒரு சராசரி இரவாகத் தொடங்கிய அந்த இரவில், சோஃபாவில் சாசேஜ்கள் மற்றும் சிப்ஸை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவர் மயக்கமடைந்தார்.
பரம்பரையாக ஏற்பட்ட இந்தப் பாதிப்பால், அவரது இதயம் நின்றுவிட்டது. பேட்ரிக் 40 நிமிடங்கள் மருத்துவரீதியாக உயிரிழந்துவிட்டார். அவரது மனைவி அவருக்கு சிபிஆர் எனப்படும் அவசரகட்ட முதலுதவி சிகிச்சையைச் செய்தார். அதேநேரத்தில், அப்போது ஒன்பது மற்றும் ஏழு வயதாகியிருந்த அவரது மகளும் மகனும், உதவிக்கு அழைக்க விரைந்தனர்.
அவசர உதவிக்கான துணை மருத்துவர்கள், மின் அதிர்ச்சியைப் பயன்படுத்தி அவரது இதயத்தை மீண்டும் இயங்க வைக்க முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. அவர் இறக்கும் தருவாயில் இருந்ததால், அவரது உயிரைக் காப்பாற்ற இறுதி முயற்சியாக அவருக்கு அட்ரினலின் ஊசி போடப்பட்டதாக பேட்ரிக் கூறுகிறார்.
"அவர்கள் எனக்கு ஒன்றன் பின் ஒன்றாக, அடுத்தடுத்து மின் அதிர்ச்சியைக் கொடுத்தார்கள்" என்கிறார் அவர். அவர் இறந்துவிட்டதாக அவரது மனைவி சந்தேகிக்கத் தொடங்கிய தருணத்தில் திடீரென அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது.
ஒரு வார காலம் கோமாவில் இருந்து, பார்வை, நினைவாற்றல், சகிப்புத்தன்மையை பாதிக்கும் மூளை பாதிப்புடன், பேட்ரிக் ஒரு புதிய மனிதராக மீண்டெழுந்தார்.
அவரால் இனி முன்பு போல் வேலை செய்யவோ அல்லது வாழவோ முடியாது என்பதால், அவரது வாழ்க்கையிலும் உறவுகளிலும் அதிக கவனம் செலுத்த அது உதவியாக இருக்கும் என்று உணர்ந்தார்.
ரெடி டூ டாக் பாட்காஸ்டில் எம்மா பார்னெட்டிடம், "இந்தப் புதிய சிந்தனை முறையைத் தனது பழைய வாழ்க்கைக்குத் திரும்ப வாய்ப்பு கிடைத்தாலும்கூட தான் மாற்றிக்கொள்ளப் போவதில்லை" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
'சுயநினைவு திரும்பியபோது கண் தெரியவில்லை'
இருந்தபோதும், அவரது நிலைமையை ஏற்றுக்கொள்வதற்கான பாதை மிகவும் அதிர்ச்சி நிறைந்ததாக உள்ளது.
"நான் சுயநினைவுக்குத் திரும்பியபோது எனக்குப் பார்வை இல்லை. நான் இந்த விஷயங்களை அனுபவித்துக்கொண்டிருந்தபோது, அவற்றுடன் பிணைக்கப்பட்டதாக நான் உணரவில்லை" என்று பேட்ரிக் விழித்து எழுந்தவுடனான தனது முதல் நினைவைப் பற்றிக் கூறுகிறார்.
அவரது பார்வை இழப்பு, அவருக்குத் தெளிவான மாயத்தோற்றங்களை அனுபவிக்க வித்திட்டது. சார்லஸ் போனட் நோய்க்குறி என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, திடீரென காட்சித் தகவல் இழப்பு நேரிடும்போது மூளை மேற்கொள்ளும் "ஈடுசெய்யும்" ஒரு வழியாகும்.
சில மாயத்தோற்றங்கள் "பயங்கரமானவை" என்றாலும், மற்றவை "சிறந்தவை" மற்றும் விசித்திரமாக அழகாகத் தோன்றியதாக அவர் கூறுகிறார்.
ஒரு சந்தர்ப்பத்தில் அவரது இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஓர் அமெரிக்க செவிலியர் அவரைக் கொல்ல முயல்வதாக அவர் உறுதியாக நம்பினார். ஆனால், இந்த மாயத்தோற்றங்கள் அவருக்கு அமைதியையும் சில நேரங்களில் வழங்கக்கூடும்.
அத்தகைய தோற்றங்களில் ஒருவர் அவரை ஆல்ப்ஸில் உள்ள ஒரு சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு செவிலியர்கள் அடுத்த அறையில் பேசிக்கொண்டிருந்தபோது, பனி மூடிய மலைகளை அவர் பார்த்தார். அந்த அனுபவம் அவருக்கு மகிழ்ச்சியான பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தது.
அவரது பார்வை படிப்படியாகத் திரும்பியபோது, பார்வை பிரச்னை மூளைக் காயத்துடன் தொடர்புடையவை என்பதை மருத்துவர்கள் உணர்ந்தனர். அவரது பார்வை இன்னும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.
முதல் அறிவாற்றல் சோதனைகள் அவரை நினைவாற்றல் மற்றும் செயலாக்க வேகத்தில் கடைசி 2 சதவிகிதத்தில் வைத்தன. அவர் மிகவும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், சில நேரங்களில் உடனடி தகவல்களைத் தக்கவைத்துக்கொள்வதில் இன்னும் சிரமப்படுகிறார்.
ஆனால், அவரது காயங்களின் முழு தாக்கமும் வீடு திரும்பிய பின்னரே தெளிவாகத் தெரிந்தது.

பட மூலாதாரம், Patrick Charnley
'ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்கிறேன்'
கடுமையான சோர்வு அவரைத் தனது ஆற்றலை நிர்வகிக்கக் கட்டாயப்படுத்துகிறது. "நான் ஒருபோதும் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க மாட்டேன். மேலும், நாள் செல்லச் செல்ல அது மோசமாகிறது," என்று அவர் விளக்கினார்.
அவர் வாழ கற்றுக்கொள்ளத் தேவையான மன மாற்றங்களையும் சந்தித்திருக்கிறார். அவர் முதலில் குணமடைந்த பிறகு, தனக்கு எதுவும் உண்மையில் முக்கியமில்லை என்று உணர்ந்ததை பேட்ரிக் உணர்ந்தார். அதைச் சரியாக மனச்சோர்வு என்று கூறிவிட முடியாது. ஆனால், எல்லாவாற்றிலும் ஆழ்ந்த, ஆரோக்கியமற்ற ஆர்வமின்மை அவருக்கு இருந்தது. அவர் அதை "காலப்போக்கில் செல்வது" போல உணர்ந்ததாகக் கூறுகிறார். எதையும் நிலையாகவோ அல்லது எதன் மீதும் பிணைப்புடனோ இல்லாதது போல் இருந்ததாக அதை அவர் விவரித்தார்.
சிகிச்சையும் மருந்தும் அவரது உந்துதலை மீண்டும் பெறுவதற்கு உதவியுள்ளன. மேலும் ஓர் உளவியலாளர் அவர் இழந்த வாழ்க்கை குறித்து துக்கப்பட ஊக்குவித்துள்ளார். அப்படியிருந்தும், வாழ்க்கையின் தன்னிச்சையான தன்மையையும், தனது வயதை ஒத்தவர்களுடன் பொருந்துவதையும், எதிர்பார்த்தபடி "சமூகத்தில் பங்கேற்பதையும்" அதேபோலத் தனது குழந்தைகளுடன் தீவிரமாக விளையாடுவதையும் தான் இழப்பதாக பேட்ரிக் கூறுகிறார்.
அவர் தனது மனைவிக்காகவும் வருந்துகிறார். ஏனெனில் அவர் தனது நினைவாற்றலுக்காக அவரைச் சார்ந்திருப்பதாக உணர்கிறார். "உண்மை என்னவெனில், அவர்தான் என்னை கவனித்துக்கொள்கிறார்" என்கிறார் அவர். அவர் தனக்கு முக்கிய ஆதரவான நபராக மாறிவிட்டதையும் ஒப்புக்கொள்கிறார்.
"நான் மிகவும் வயதானவனைப் போல வாழ்கிறேன்" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Patrick Charnley
பெரிய மாற்றங்கள் இருந்தபோதிலும், பல வழிகளில் இந்த வாழ்க்கையைத் தான் விரும்புவதாக பேட்ரிக் கூறுகிறார். அவர் தனது பணியை எழுத்தாளர் ஆவதற்காக மாற்றிக்கொண்டார். இப்போது வாழ்க்கையை அனுபவிக்க அதிக நேரம் கிடைத்துள்ளதாகக் கூறுகிறார்.
"நான் இப்போது வாழ்க்கையை என் விருப்பப்படி இல்லையென்றாலும் அமைதியாக வாழ்கிறேன். ஆனால், அதை மிகவும் பாராட்டுகிறேன். முன்பைவிட சுற்றியுள்ள விஷயங்களின் அழகை அதிகமாகக் காண்கிறேன். மெதுவாகச் செயல்படுவதன் மூலம் நான் மிகவும் முழுமையான வாழ்க்கையை வாழ்வதாக உணர்கிறேன்," என்று மேலும் கூறினார் அவர்.
"எனது பார்வை தீவிரமாக மாறிவிட்டது. உயிருடன் இருப்பதற்கு நான் நன்றியுள்ளவனாக உணர்கிறேன்."

அவரது குடும்பத்துடனான அவரது உறவும் மேம்பட்டுள்ளது.
அவர்களுடன் தனது நிலையின் தனித்தன்மைகளைப் பற்றி அவரால் பேசிச் சிரிக்க முடியும். "நாங்கள் எப்போதையும்விட நெருக்கமாக இருக்கிறோம் எனக் கருதுகிறேன். உண்மையில், நடந்த விஷயங்களால் எங்களுக்குள் மிகவும் வலுவான பிணைப்பு ஏற்பட்டுள்ளது" என்றார் அவர்.
"எனக்கு மிக முக்கியமான விஷயம் எப்போதும் என் குடும்பம்தான். இப்போது நான் அவர்களுக்காக என்னை அர்ப்பணிக்க முடியும். முன்பு, நான் மேம்போக்காக வாழ்ந்தேன்," என்கிறார் அவர்.
பேட்ரிக்கின் தனித்துவமான சூழ்நிலை அவரை அன்றாட வேலையில் இருந்து விடுபட அனுமதித்துள்ளது. "நிறைய பேர் அப்படி உணர்கிறார்கள். நான் என் வாழ்க்கையை வாழ்வதில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். நடந்ததை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை."
"வரம்புகள் இருந்தாலும், எனக்கு இப்போது என் வாழ்க்கை பிடித்துள்ளது. குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பி வரும்போது நான் வீட்டில் இருப்பது எனக்குப் பிடித்துள்ளது. அவசரப்படாமல் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நிதானமாகச் செல்வதை நான் விரும்புகிறேன்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












