மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? புதிய தாக்குதலை தொடங்கிய இரான், இஸ்ரேல் - சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம், Wana / Reuters
மத்திய கிழக்கில் போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலும் இரானும் புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன
லெபனான் மற்றும் இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துகிறது. இரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் வெடிப்புகள் காணப்படுகின்றன.
இஸ்ரேலில் இரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் மற்றும் தாக்குதல்கள் இடைமறிக்கப்பட்டபோது வானத்தில் வெடிப்புகள் காணப்பட்டன. பிராந்தியத்தில், கத்தார் மற்றும் பஹ்ரைனில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
இரண்டு இரானிய டிரோன்களால் தாக்கப்பட்டதாக அஜர்பைஜான் கூறுகிறது.
வளைகுடாவில் ஒரு அமெரிக்க கப்பலைத் தாக்கியதாக இரான் கூறுகிறது

பட மூலாதாரம், AFP via Getty Images
இஸ்ரேலில் தாக்குதல்
வியாழக்கிழமை அதிகாலையில் இஸ்ரேலை நோக்கி இரான் பல ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இரண்டு மணி நேரத்தில் மூன்று தனித்தனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஜெருசலேமில் வெடி சத்தங்கள் கேட்டதாக ஏ.எஃப்.பி செய்தியாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், மக்கள் பாதுகாப்பு புகலிடங்களிலிருந்து வெளியேற ராணுவம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, இரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் மற்றுமொரு தொடர் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
"இரான் ஆட்சிக்கு சொந்தமான ராணுவ உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து, தெஹ்ரான் முழுவதும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை(ஐ.டி.எஃப்) கூடுதல் தாக்குதலை தொடங்கியுள்ளது," என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images
தாக்குதல் நடத்தப்படும் குறிப்பிட்ட இடங்களைப் பற்றிய மேலதிக தகவல்கள் எதையும் அது வழங்கவில்லை, ஆனால் கூடுதல் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.
புதன்கிழமை இரவு தலைநகரில் ஒரு சக்திவாய்ந்த வெடி சத்தத்தை தங்கள் செய்தியாளர்கள் உணர்ந்ததாக ஏ.எஃப்பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
முன்னதாக, தலைமை மையங்கள் மற்றும் உள் பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட கிழக்கு தெஹ்ரான் வளாகத்தின் மீது தனது விமானப்படை "பெரிய அளவிலான தாக்குதலை" நடத்தி முடித்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்திருந்தது.

இந்தியப் பெருங்கடலில் இரானிய கடற்படைக் கப்பல் மீது அமெரிக்க டார்பிடோ (நீர்மூழ்கி ஏவுகணை) தாக்கிய தருணத்தின் காட்சிகளை பென்டகன் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் கூறுகையில், "சர்வதேச கடற்பரப்பில் தான் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்த ஒரு இரான் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்தது" என்று தெரிவித்தார்.
'ஐஆர்ஐஎஸ் டெனா' (Iris Dena) கப்பலில் சுமார் 180 பேர் இருந்ததாகக் கருதப்படுகிறது - அவர்களில் 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை 80 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
இரானின் அச்சுறுத்தல்களால் 20,000 மாலுமிகள் கடலில் சிக்கியுள்ளனர் - ஐநா அமைப்பு தகவல்
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் அங்கேயே சிக்கிக்கொண்டுள்ளதாக ஐநா-வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற இரான் நாட்டின் அச்சுறுத்தல்களால், அப்பகுதியில் கடல்சார் போக்குவரத்து ஏறக்குறைய முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இதுமட்டுமின்றி, உல்லாசக் கப்பல்களில் இருக்கும் மேலும் 15,000 பயணிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்செனியோ டோமிங்குஸ் கூறியுள்ளார்.
உலகளாவிய வர்த்தகத்திற்கு இந்த ஹோர்முஸ் நீரிணை ஒரு முக்கியமான பாதையாகும். சாதாரணச் சூழலில் உலகின் 20% எண்ணெய் விநியோகம் இந்தப் பகுதி வழியாகவே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Reuters
இதற்கிடையில் போர் தொடங்கிய ஆரம்ப நாட்களில் குவைத்தில் இரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்தாவது வீரரின் பெயரை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
அயோவாவின் வௌகி பகுதியைச் சேர்ந்த மேஜர் ஜெஃப்ரி ஓ'பிரையன், 2012-ஆம் ஆண்டில் ராணுவ இருப்பில் சிக்னல் கார்ப்ஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அவர் 2019-ஆம் ஆண்டில் குவைத்திற்குப் பணியமர்த்தப்பட்டார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குவைத்தின் போர்ட் சுவைபாவில் உள்ள ஒரு கட்டுப்பாட்டு மையத்தை, வான் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து தப்பித்து வந்த ஒரு "ட்ரோன்" தாக்கியதில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் மூன்று வீரர்கள் இறந்ததாக அமெரிக்க மத்திய தலைமை முதலில் கூறியிருந்தது. ஆனால், காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மற்றும் இடிபாடுகளுக்குள் மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் திங்களன்று உறுதிப்படுத்தினர்.
அமெரிக்க அதிபரின் போர் அதிகாரங்களை குறைப்பதற்கான வாக்கெடுப்பு தோல்வி

பட மூலாதாரம், US Senate
அமெரிக்க செனட்டில் போர் அதிகாரங்கள் குறித்த வாக்கெடுப்பு 47-53 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது. சட்டமியற்றுபவர்கள் பெரும்பாலும் தங்கள் கட்சி நிலைப்பாட்டுக்கு ஏற்பவே வாக்களித்தனர்.
இந்த மசோதா நிறைவேறியிருந்தால், போர் தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கான அமெரிக்க அதிபரின் அதிகாரங்கள் குறைந்திருக்கும்.
இந்த மசோதாவின்படி, போர் தொடர்பான எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கு முன்னால், டிரம்ப் அமெரிக்க காங்கிரஸின் (நாடாளுமன்றம்) அனுமதியைப் பெற வேண்டியிருந்திருக்கும்.
இந்த மோதலுக்குப் பிறகு அமெரிக்க செனட்டில் கொண்டு வரப்பட்ட இத்தகைய முதல் மசோதா இதுவாகும், ஆனால் இது டிரம்பைத் தடுப்பதில் தோல்வியடைந்துள்ளது.
ஆனால், இரான் மீதான இந்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் (அமெரிக்க நாடாளுமன்றம்) பேசப்போகும் கடைசி விஷயம் இதுவல்ல. ஏனெனில், அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாகப் போரை அறிவிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.
நாளை இதே கேள்வி குறித்து பிரதிநிதிகள் சபை வாக்களிக்க உள்ளது. டிரம்ப் கணித்துள்ள ஒரு சில வாரங்களைத் தாண்டி போர் நீடித்தால், எதிர்காலத்தில் போர் அதிகாரத் தீர்மானத்தை ஆதரிக்கத் தாங்கள் அதிக விருப்பத்துடன் இருப்பதாக சில செனட் உறுப்பினர்கள் கேபிடல் ஹில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தோஹாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே வசிப்பவர்களை வெளியேற்றும் கத்தார்
இதற்கிடையே, தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோஹாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே வசிக்கும் மக்களை கத்தார் வெளியேற்றத் தொடங்கியுள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"தேவையான தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவர்களுக்குப் பொருத்தமான தங்குமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன," என்று அமைச்சகம் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செளதி அரேபியா மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் துபையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது இந்த வாரம் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், இப்பிராந்தியத்திலிருந்து பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது நிறுத்தி வைக்கப்பட்டாலோ, அமெரிக்க குடிமக்கள் உடனடியாக மத்திய கிழக்கை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்காக சார்ட்டர் விமானங்களை ஏற்பாடு செய்ய அமெரிக்க அரசு தீவிரமாக முயன்று வருகிறது. அத்துடன், மற்ற இடங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள் வணிக ரீதியிலான விமானங்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யவும் உதவி வழங்கி வருகிறது.
பிரிட்டிஷ் குடிமக்களை ஓமனிலிருந்து திரும்ப அழைத்து வருவதற்காக பிரிட்டன் அரசு ஏற்பாடு செய்திருந்த சார்ட்டர் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திட்டமிட்டபடி புதன்கிழமை மாலை புறப்படவில்லை என்பதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, பிரிட்டன் அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வாடகை விமானம் திட்டமிட்டபடி நேற்று ஓமனிலிருந்து புறப்பட முடியவில்லை. அந்த விமானம் இன்று பிற்பகல் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்றார்.
லெபனான், இரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் இந்த மோதலின் பாதிப்பை அதிகளவில் உணர்கின்றன.
இரான் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து மார்ச் 3 வரை 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 28 முதல் சுமார் 17,500 குடிமக்கள் மத்திய கிழக்கிலிருந்து தாயகம் திரும்பியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேறிய 20,000 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் தாயகம் திரும்புகின்றனர்

பட மூலாதாரம், Courtesy Yogi Oversea
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்து கோவில்களைத் தரிசிப்பதற்காகச் சென்றிருந்த 200 இந்தியச் சுற்றுலாப் பயணிகள், போர் வெடித்ததால் அங்கு சிக்கிக்கொண்ட நிலையில், தற்போது அங்கிருந்து பத்திரமாக வெளியேறியுள்ளனர்.
இந்தச் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்த 'யோகி ஓவர்சீஸ்' நிறுவனத்தின் தலைவர், வான்வெளி இடையூறுகள் காரணமாக இந்தப் பெரிய குழுவினர் விமானங்களுக்காகப் பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது என்று தெரிவித்தார்.
"பயணிகள் யாரும் பீதியடையவோ அல்லது அசௌகரியமாகவோ உணரக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதே எங்களது முதல் முன்னுரிமையாக இருந்தது," என்று அந்த நிறுவனத்தின் தலைவர் கௌஷல் தமேஷா கூறினார். தமேஷாவும் மற்ற சில சுற்றுலா வழிகாட்டிகளும் துபையிலேயே தங்கியிருந்து, டஜன் கணக்கான பயணிகள் அங்கிருந்து வெளியேறுவதை உறுதி செய்தனர்.
இந்தக் குழுவில் முதியவர்களும் குழந்தைகளும் இருந்ததாக தமேஷா தெரிவித்தார். "எங்கள் டூர் மேனேஜர் பயணிகளுடன் நீண்ட நேரம் உரையாடினார், அவர்களுடன் விளையாடினார், மேலும் அவர்களை உற்சாகமாக வைத்திருந்தார்," என்று அவர் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியாவின் எந்தப் பகுதிக்காவது விமானம் வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் கடைசி குழு இன்று அழைத்துச் செல்லப்பட்டது. அவர்கள் தற்போது தங்களின் இல்லங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

போர் தணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ள ஆல்பனீஸ் மற்றும் கார்னி
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் மற்றும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் மத்திய கிழக்கில் போர் தணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதே நேரத்தில், இரான் அணு ஆயுதத்தை உருவாக்க முடியாத நிலை ஏற்படும் வரை போர்நிறுத்தம் ஏற்படக்கூடாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.
கான்பெராவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஆல்பனீஸ் பேசுகையில், "உலகம் அமைதியை விரும்புகிறது... இதில் சம்பந்தப்படாத வளைகுடா நாடுகளும், சுற்றுலாப் பகுதிகளும் கூடத் தாக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம்," என்றார்.
சனிக்கிழமை தொடங்கிய இரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதல்களுக்கு இரு தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
'எங்கள் மக்கள் ஒரு இயல்பான வாழ்க்கைக்குத் தகுதியானவர்கள்' - இரானியர் ஆதங்கம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குத் தொடர்ந்து இலக்காகி வரும் நிலையில், பிபிசி பெர்சியன் இரானியர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டு வருகிறது.
பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருப்பதாகவும், உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துவிட்டதாகவும், தெருக்கள் மிகவும் நிசப்தமாக இருப்பதாகவும் சஜாத் கூறுகிறார். மக்கள் "கவலையிலும் மன அழுத்தத்திலும்" இருக்கும் அதே வேளையில், அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் மரணம் தனக்கு "எதிர்காலத்தைப் பற்றிய அதிக நம்பிக்கையை" அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். "நிலைமை இந்த அளவுக்குச் செல்லும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை," என்று கூறும் அவர், மேற்கு நகரமான உருமியாவின் மீதான "இந்தத் தாக்குதல்களின் அளவு" உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இரான் நாட்டை விட்டு வெளியேறி, தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித்தவிக்கும் அமீர் கூறுகையில்: "போரினால் நல்லது எதுவும் வராது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒரு சிறந்த நாளை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இந்த வலியைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்."
தெஹ்ரான் மீதான மற்றொரு தாக்குதலைப் பற்றி கேள்விப்படும் போதெல்லாம் தான் "நடுங்குவதாக" அவர் கூறுகிறார், ஏனெனில் அவரது குடும்பத்தினர் அங்கேயே உள்ளனர்: "எனது அன்புக்குரியவர்களுக்கு இது நடக்கிறது என்பதை இங்கே இருந்து தெரிந்துகொள்வதை விட, நானே அந்த குண்டுவீச்சின் கீழ் இருப்பதை விரும்புவேன். எங்கள் மக்கள் ஒரு இயல்பான வாழ்க்கைக்குத் தகுதியானவர்கள்."
"தெஹ்ரான் மிகவும் வெறிச்சோடிக் காணப்படுகிறது," என்கிறார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். "அவசரத் தேவை இருந்தாலொழிய எவரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை, இல்லையெனில் அவர்கள் வீட்டிலேயே தங்கி விடுகிறார்கள்."
மேற்படிப்புக்காக ஐரோப்பாவுக்குப் பயணம் செய்ய நேற்று ஒரு விமான டிக்கெட் வைத்திருந்ததாகவும், ஆனால் "இப்போது எனது திட்டங்கள் அனைத்தும் அந்தரத்தில் தொங்குகின்றன, இது எனக்குச் சற்று வருத்தத்தை அளிக்கிறது" என்றும் அவர் கூறுகிறார்.
"முதல் நாளில், மக்கள் கோஷமிட்டனர் மற்றும் அனைவரும் மகிழ்ச்சியாகத் தெரிந்தனர்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் இப்போது சுற்றிலும் போலீஸ் படைகள் உள்ளனர். பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பேக்கரிகள் மட்டும் திறந்துள்ளன, இருப்பினும் சில ஏடிஎம்கள் (ATMs) வேலை செய்யவில்லை."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












