இங்கிலாந்து சுழலை சமாளித்து இந்தியா இமாலய ரன் குவிக்க உதவிய 'கேப்டனின் ஒரு முடிவு'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வித்யுத் சிவராமகிருஷ்ணன்
- பதவி, சிஎஸ்கே முன்னாள் வீரர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஒரு பிரமாதமான உலகக் கோப்பை அரையிறுதி ஒன்றைப் பார்த்திருக்கிறோம். ஒரு அணி 20 ஓவர்களில் 253 ரன்கள் எடுத்தால், இன்னொரு அணி அதைத் துரத்திக்கொண்டே 246 ரன்கள் எடுக்கிறது. ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் போட்டி ஒரு விருந்தாக அமைந்திருக்கும். குறிப்பாக இந்திய ரசிகர்களுக்கு இதுவொரு மறக்க முடியாத போட்டியாக இருக்கும். ஏனெனில், இது இந்தியாவை இன்னொரு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
டாஸ் வென்று இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது இந்திய அணிக்கு ஒருவகையில் சாதகமாக அமைந்துவிட்டது. வான்கடே மைதானத்தின் செம்மண் ஆடுகளங்களில் பவுன்ஸ் நன்றாக இருக்கும். பேட்டர்கள் அந்த பவுன்ஸை நன்கு நம்பி ஆடலாம்.
சஞ்சு சாம்சன் போன்ற ஒரு வீரருக்கு ஏற்ற சரியான ஆடுகளம் இது. சொல்லப்போனால், அடிக்கத் தேவையில்லை. பந்து வரும் வேகத்துக்கு, நல்ல 'டைமிங்' இருந்தாலே போதுமானதாக இருக்கும். அதற்கு ஏற்ப அவரும் ஒரு அட்டகாசமான இன்னிங்ஸ் ஆடினார். தன்னுடைய சிறப்பான ஃபார்மை அவர் இந்தப் போட்டியிலும் தொடர்ந்திருக்கிறார்.
எனக்குப் பிடித்த விஷயமே சாம்சன் மீதான அடையாளம் தற்போது மாறத் தொடங்கியிருப்பது என்பதுதான். வழக்கமாக அவர் ஒரு போட்டியில் நன்றாக அடித்தால், அடுத்த போட்டியில் நன்றாக ஆடமாட்டார் என்ற பேச்சு இருக்கும். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகனாக ஜொலித்தவர், அதை இந்தப் போட்டியிலும் தொடர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதிலும் குறிப்பாக தொடர்ந்து அந்த நல்ல 20, 30 ரன்கள் அடித்துக்கொண்டிருந்தவர் தற்போது அதை 70, 80 ரன்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் தற்போது சீரான செயல்பாட்டைக் கொடுப்பது இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்ல விஷயம்.
உலகக் கோப்பையின் அரையிறுதியில் இப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பது அபாரமானது. இங்கிலாந்து பௌலர்கள் அவ்வளவு மோசமாக பந்துவீசிடவில்லை. ஆனால், சாம்சன் அதை சிறப்பாக எதிர்கொண்டார்.
அவர் ஆடிய விதமும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது. சொல்லப்போனால், சாம்சன் நல்ல ஃபார்மில் ஆடும் போது அவரை விட அழகாக ஆடும் வீரர் இன்று உலக கிரிக்கெட்டில் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

பட மூலாதாரம், Getty Images
இப்படியொரு பெரிய போட்டியில், இது மாதிரியான ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கு அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும். இந்தப் போட்டியில் சாம்சனுக்கு அதுவும் கிடைத்தது. அவரது கேட்சை ஹாரி ப்ரூக் தவறவிட்டது, சாம்சன் இன்னொரு பெரிய இன்னிங்ஸைக் கட்டமைக்க காரணமாக அமைந்துவிட்டது.
சாம்சனைத் தவிர்த்து இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே என எல்லோருமே துரிதமாக ரன் சேர்த்தனர். இந்தியாவின் அந்த மெகா ஸ்கோருக்கு எல்லோருமே முக்கியமான பங்களிப்பைக் கொடுத்தனர். அவற்றுள் நான் மிகவும் முக்கியமானதாகக் கருதுவது திலக் வர்மாவின் இன்னிங்ஸ் தான். இந்தியாவை 230-ல் இருந்து 250-க்கு எடுத்துச் சென்றது அவருடைய அந்த பங்களிப்பு தான்.
இலங்கையில் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடியது இங்கிலாந்துக்கு பாதகமாக அமைந்துவிட்டதோ என்று நினைக்கிறேன். பந்து நன்கு சுழலும் பெரிய மைதானங்களில் வில் ஜேக்ஸ், ஆதில் ரஷீத், ரெஹான் அஹமது போன்ற இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஆனால், அவர்கள் வான்கடேவில் பந்துவீசும் போது அப்படி செயல்பட முடியவில்லை. விக்கெட்டுகள் விழுந்தாலும், அவர்களது பந்துவீச்சில் இந்திய பேட்டர்கள் சிறப்பாகவே ரன் சேர்த்தனர்.
ஆதில் ரஷீத் வீசிய முதல் பந்திலேயே அழகான ஒரு கவர் டிரைவ் மூலம் பவுண்டரி அடித்தார் சாம்சன். அதன்பிறகு ஷிவம் துபே வந்து சில சிக்சர்களை பறக்கவிட்டார். அங்கேயே ரஷீத்தின் தாக்கத்தைக் குறைத்துவிட்டார்கள். சூர்யகுமாருக்குப் பதில் துபேவை நம்பர் 4 இடத்தில் களமிறக்கியது மிகவும் சிறந்த முடிவு. அதுதான் ரஷீத்தை இந்தியா நன்றாகக் கையாளக் காரணமாக அமைந்தது. இந்த முடிவுக்காக கௌதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் இருவரையும் பாராட்டியாக வேண்டும்.

சுழற்பந்துவீச்சாளர்களை மட்டுமல்ல, வேகப்பந்துவீச்சையும் இந்தியா இன்னும் சிறப்பாக எதிர்கொண்டது. குறிப்பாக அந்த அணியின் பிரதான பௌலரான ஜோஃப்ரா ஆர்ச்சரை அணுகிய விதம் பிரமாதம். அவர் வீசிய 4 ஓவர்களில் இந்தியா 61 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்தில் சாம்சன், இறுதியில் திலக் என அவரது பந்துவீச்சில் இந்திய பேட்டர்கள் முக்கியமான ரன்களை சேர்த்தனர்.
என்னதான் ஆடுகளம் சாதகமாக இருந்தது என்று சொன்னாலும், இந்திய பேட்டர்களின் அணுகுமுறையுமே இந்த பெரிய ஸ்கோர் வருவதற்கு முக்கியக் காரணம். மிகப் பெரிய போட்டியில், முக்கியமான தருணங்களில் எப்படி பேட்டிங் செய்யவேண்டும் என்பதை அவர்கள் காட்டியிருக்கிறார்கள். லீக் சுற்றின்போது இந்தியாவின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. ஆனால், போகப் போக முக்கியமான தருணத்தில் சரியாக எழுச்சி பெற்றிருக்கிறார்கள்.
இந்தியா இப்படி பெரிய ஸ்கோர் எடுப்பதற்கு இங்கிலாந்தின் மோசமான ஃபீல்டிங்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்துவிட்டது. கேப்டன் ஹாரி ப்ரூக் கேட்ச் விட்டது ஒருபக்கம் என்றால், நிறைய மிஸ்ஃபீல்டுகளையும் பார்க்க முடிந்தது. இது அந்த அணியின் நம்பிக்கையை வெகுவாக பாதித்தது.
அரையிறுதி போன்ற ஒரு போட்டியில் 253 ரன்கள் எடுத்த பிறகு அதை சேஸ் செய்வது என்பது அசாத்தியமான விஷயம். ஆனால், இங்கிலாந்து மிகவும் அருகில் வந்துவிட்டது. சிறப்பாகப் போராடினார்கள்.
ஜேக்கெப் பெத்தல் தன் வாழ்நாளுக்கான ஒரு இன்னிங்ஸை விளையாடினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரால் அணியை வெற்றிக்கோட்டுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அவர் எதிர்காலத்துக்கான ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்திருக்கிறார். பெரிய போட்டியில் தன் முதிர்ச்சியையும் அவர் காட்டியிருக்கிறார். ஆஷஸ் தொடரில் சிட்னி டெஸ்ட் போட்டியிலேயே தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை அவர் காட்டினார். தற்போது உலகக் கோப்பை அரங்கிலும் அதை வேறொரு பரிணாமத்தில் செய்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஒருவேளை இங்கிலாந்து ஓப்பனர்கள் ஓரளவு நல்ல பங்களிப்பைக் கொடுத்திருந்தால் நிச்சயம் போட்டியின் முடிவு மாறியிருக்கக்கூடும். ஜாஸ் பட்லர் தொடர்ந்து இந்த உலகக் கோப்பையில் தடுமாறி வந்தார். இந்தப் போட்டியில் ஓரளவு ரன் சேர்த்திருந்தாலும், அவருக்கு பந்து பேட்டில் நன்றாகப் படவேயில்லை. ஒருவேளை பவர்பிளேவில் 3 விக்கெட்டுகள் விழாமல் இருந்திருந்தால் நிச்சயம் இங்கிலாந்து ஜெயிப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும்.
இங்கிலாந்து ஜெயிக்காததற்கு இன்னொரு முக்கியமான காரணம் - பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பந்துவீச்சு. பும்ரா எப்படி தொடர்ச்சியாக இப்படியொரு செயல்பாட்டைக் கொடுக்கிறார் என்று தெரியவில்லை. 18-வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்தியாவை மீண்டும் ஆட்டத்துக்குள் கொண்டுவந்தார். அதேபோல், ஹர்திக் பாண்டியா பவர்பிளேவில் விக்கெட் எடுத்தது மட்டுமல்லாமல், 19-வது ஓவரிலும் சிறப்பாகப் பந்துவீசினார்.
இவர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள் என்றாலும், பந்துவீச்சில் பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக உலகின் நம்பர் ஒன் டி20 பௌலர் வருண் சக்கரவர்த்தியின் ஃபார்ம். சூப்பர் 8 சுற்றிலிருந்து அவரது பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. இறுதிப் போட்டிக்கு முன்பாக அவர் எப்படியும் தன்னுடைய ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும். அவர் இதுபோல் பல தருணங்களைச் சந்தித்திருக்கிறார். அதனால், மீண்டும் சிறந்த கம்பேக் கொடுப்பார் என்று நம்பலாம்.

பட மூலாதாரம், Getty Images
சாம்சன், திலக், பும்ரா, ஹர்திக் என்று ஒருபக்கம் பேசினாலும், என்னைப் பொறுத்தவரை இந்தப் போட்டியில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது என்றால் அது அக்ஷர் பட்டேல் தான். இரண்டு பிரமாதமான ஃபீல்டிங் முயற்சிகள் மூலம் இந்தியாவை வெற்றி பெற வைத்திருக்கிறார் அவர். வில் ஜேக்ஸ் கேட்சை அவ்வளவு தூரம் ஓடிச்சென்று பிடித்து சரியாகக் கணித்து துபேவுக்குத் தூக்கிப் போட்டார். அதேபோல், ப்ரூக் கேட்ச்சைம் பின்னால் ஓடிச் சென்று அபாரமாகப் பிடித்தார். ப்ரூக் ஒட்டுமொத்தமாக ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரு வீரர். அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால், இங்கிலாந்தின் வாய்ப்பு கூடியிருக்கும்.
ஒட்டுமொத்தமாகவே இந்திய அணி சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறது. போட்டி கடைசி வரை சென்றாலும், பல நல்ல செயல்பாடுகளை இந்தியாவிடமிருந்து பார்க்க முடிந்தது. இரண்டு நாள்கள் ஓய்வுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் விளையாடப் போகிறார்கள். தொடர்ந்து 2 உலகக் கோப்பைகள் வெல்வதற்கு இதுவொரு நல்ல வாய்ப்பு.
(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












