ஆர்.என். ரவி மேற்கு வங்கத்துக்கு திடீர் மாற்றம் - பின்னணி 2 காரணங்கள் இதுவா?

ஆர்.என். ரவி உள்பட பல ஆளுநர்கள் மாற்றம்; பின்னணி என்ன?

பட மூலாதாரம், LokBhavanTamilNadu/Facebook

படக்குறிப்பு, ஆர்.என். ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உட்பட இந்தியா முழுவதும் பல ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் இந்திய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரியிலும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், மேற்கு வங்க ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் சி.வி ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்தது, அதற்கு அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜியின் எதிர்வினை என இந்திய அளவில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தமிழக ஆளுநரும் மாற்றம் செய்யப்பட்டது பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை.

தனது செயல்களாலும் கருத்துகளாலும் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தை பரபரப்பாகவே வைத்திருந்த ஆளுநர் ஆர்.என். ரவி பெரிய சலசலப்பின்றி வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

2021-ஆம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக இருந்தார். இதற்கு சில மாதங்களுக்குப் பிறகு, அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக பன்வாரிலால் இருந்தபோதும் ஆளுநர் மாளிகையைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தன என்றாலும், ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த நான்கரை ஆண்டு காலமும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமலேயே இருந்தது.

மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரம், அரசு தயாரிக்கும் ஆளுநர் உரையை படிக்க மறுத்து வெளிநடப்புச் செய்வது, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது என மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்துவந்தன.

நிர்வாக ரீதியான மோதல்கள் தவிர, சில சமயங்களில் முதலமைச்சரும் ஆளுநரும் மாறி மாறி விமர்சித்துக்கொண்ட தருணங்களும்கூட இருந்தன.

சி.வி ஆனந்த போஸ்

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, சி.வி ஆனந்த போஸ்

முரண்பாடுகளின் துவக்கம்

ஆர்.என். ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான முதல் மோதல், நீட் தேர்வு தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில்தான் ஆரம்பித்தது.

இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட் தேர்வு) இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் வகையில், ஒரு மசோதாவை தமிழ்நாடு அரசு இயற்றியது.

ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இந்த மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த மசோதா குறித்து முடிவெடுக்க ஆர்.என். ரவி தாமதம் செய்ய ஆரம்பித்தார். இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆர்.என். ரவியைச் சந்தித்து, மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டுமெனக் கோரினார்.

இந்திய நாடாளுமன்றத்திலும் தி.மு.க. இந்த விவகாரத்தை எழுப்பியது.

இதையடுத்து மசோதாவை திருப்பி அனுப்பிய ஆர்.என். ரவி அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோரினார்.

ஆனால், தமிழ்நாடு அரசு இதே மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. மீண்டும் முதல்வர் ஆளுநரைச் சந்தித்து மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கக் கோரினார். பிறகு ஒருவழியாக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆர்.என். ரவி அனுப்பிவைத்தார்.

இந்த மசோதா மட்டுமல்லாமல், வேறு பல மசோதாக்களும் ஆளுநரால் முடிவெடுக்கப்படாமல் நிலுவையிலேயே வைக்கப்பட்டிருந்தன. ஒரு கட்டத்தில் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட 22 மசோதாக்கள் நிலுவையில் இருந்தன.

இவற்றில் பல்கலைக்கழக சட்டங்களை மாற்றியமைப்பது தொடர்பான பத்து மசோதாக்களை 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டன. அவற்றை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது. இருந்தபோதும் ஆளுநர் மசோதாக்களின் மீது முடிவு ஏதும் எடுக்கவில்லை.

நீதிமன்றத்தில் வழக்கு

இதையடுத்து ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக அறிவித்தது.

சட்டம் இயற்றுவது மட்டுமல்லாமல், அமைச்சர்கள் நியமனம் தொடர்பாகவும் தொடர்ந்து சலசலப்புகளை ஏற்படுத்திவந்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து அவர் வகித்து வந்த மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முத்துசாமிக்கும் பிரித்து வழங்கப்பட்டது.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்த நிலையில், அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக ஆளுநர் மாளிகையிலிருந்து அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பு தெரிவித்தது. ஆளுநரின் தன்னிச்சையான இந்த அறிவிப்பு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பிறகு அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டார் ஆர்.என். ரவி.

ஆர்.என். ரவி உள்பட பல ஆளுநர்கள் மாற்றம்; பின்னணி என்ன?

பட மூலாதாரம், LokBhavanTamilNadu/Facebook

மோதல் புதிதல்ல

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி தனது பதவியை இழந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை நிறுத்திவைத்தது. இதையடுத்து அவரை மீண்டும் அமைச்சர் பதவியில் நியமிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரைத்தார். ஆனால், ஆர்.என். ரவி அதனை ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு, பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இதுதவிர, ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு தயாரித்தளிக்கும் உரையை ஆளுநர் வாசிக்க வேண்டிய தருணத்தில், அதன் சில பகுதிகளை மாற்றி வாசிப்பது, வாசிக்க மறுத்து வெளிநடப்புச் செய்வது என சலசலப்புகளை ஏற்படுத்தினார் ஆர்.என். ரவி.

மேலும், சனாதனம், திருவள்ளுவர், திராவிடம் போன்றவை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

மாநிலத்தின் பெயர் 'தமிழ்நாடு' என்பதைவிட 'தமிழகம்' என்ற பெயர் மிகவும் பொருத்தமாக இருக்கும் என ஆர்.என். ரவி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறி ஆளுநர் விளக்கம் அளித்தார்.

தமிழ்நாட்டின் ஆளுநர்களுக்கும் முதலமைச்சர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்படுவது புதிதல்ல.

ஜெ. ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராக இருந்தபோது, அப்போதைய ஆளுநராக இருந்த சென்னா ரெட்டிக்கு அவருக்கும் இடையில் மிக மோசமான மோதல்கள் ஏற்பட்டன.

பல தருணங்களில் தமிழ்நாடு அரசின் செயலர்களை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து நிர்வாகம் குறித்து கேட்டறிந்தார் சென்னா ரெட்டி.

தலைமைச் செயலர் ஹரி பாஸ்கரின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான கோப்பை மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, அதில் கையெழுத்திட மறுத்தார் .

அரசு நிர்வாகம் தொடர்பான தகவல்கள் தனக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என வெளிப்படையாக குற்றம்சாட்டினார். பதிலுக்கு, படுமோசமான குற்றச்சாட்டுகளை ஆளுநரின் மீது சுமத்தினார் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

காரணம் என்ன?

அதேபோல, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாடு ஆளுநராகப் பதவி ஏற்ற பன்வாரிலால் புரோகித், மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல நடவடிக்கைளில் இறங்கினார்.

பல மாவட்டங்களுக்கு அவரே நேரடியாக சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். அந்தத் தருணத்தில் இருந்த தமிழ்நாடு அரசுக்கு இவை தர்மசங்கடத்தை ஏற்படுத்தின.

ஆனால், அவருக்குப் பிறகு வந்த ஆர்.என். ரவி, ஆளுநர் - முதலமைச்சர் மோதல்களின் உச்சகட்டத்தைக் காட்டும் அளவுக்குச் சென்றார்.

இப்போது சட்டமன்றத் தேர்தல்களுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் தமிழ்நாட்டிற்குப் பொறுப்பு ஆளுநர் நியமிக்கப்படுகிறார். ஆளுநர்களில் ஆர்.என். ரவி அளவுக்கு மாநில அரசுக்கு தொந்தரவு கொடுத்த ஆளுநர்கள் யாருமே இருக்க முடியாது. அவ்வளவு தொந்தரவு கொடுத்தார். சர்ச்சைகளை ஏற்படுத்தினார். இவரைப் பார்த்துத்தான் கேரள ஆளுநரே மாநில அரசு தயாரித்துத் தரும் ஆளுநர் உரையை படிக்க மறுக்க ஆரம்பித்தார்.

அப்படி ஒரு ஆளுநரை மேற்கு வங்கத்திற்கு மாற்றியிருக்கிறது மத்திய அரசு. அங்கே ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் மீது, சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் நேரத்தில் மேற்கு வங்க அரசு பெரிதாக்கலாம் என மத்திய அரசு கருதியிருக்கலாம். அப்படி ஒரு சங்கடத்தைத் தவிர்க்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அங்கே மாற்றப்பட்டிருக்கிறார்.

மேலும், ஆர்.என். ரவி ஏற்படுத்தும் சலசலப்புகளுக்கும் தமிழ்நாட்டில் பெரிய எதிர்வினை ஏற்படுவதில்லை. கடந்த சில மாதங்களில், சட்டப்பேரவையில் அரசின் உரையை படிக்க மறுத்தது தவிர, அவரது எந்த செயல்பாடுகளும் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆகவே, அவருடைய தாக்கம் இங்கே குறைந்துவிட்டது என்றும் மத்திய அரசு கருதியிருக்கலாம். " என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

கேரள மாநிலத்தின் ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்

பட மூலாதாரம், Facebook/Governor of Kerala

படக்குறிப்பு, கேரள மாநிலத்தின் ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்

மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸின் ராஜினாமா அகில இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தமிழக ஆளுநர் மாற்றம் மேற்கு வங்க ஆளுநரின் மாற்றத்தோடு தொடர்புடையது என்கிறார் மேற்கு வங்கத்தில் செயல்படும் 'பங்ளா போக்கோ' இயக்கத்தைச் சேர்ந்த கார்கா சாட்டர்ஜி.

"பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் நியமிக்கப்படும் ஆளுநர்களைப் போலவே, சி.வி. அனந்த போஸும் மாநில அரசுக்கு பெரிய அளவில் தொந்தரவு கொடுத்து வந்தார். ஆனால், சில காலத்திற்கு முன்பாக அவர் மீது ஒரு மிக மோசமான ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில்தான் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அவரை மாற்ற மத்திய அரசு முடிவுசெய்ததது. இது தவிர, வேறு சில காரணங்களும் இருக்கலாம் எனக் கருதுகிறேன். அதாவது, மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. இதனால், குறித்த காலத்தில் தேர்தலை நடத்த முடியாது என்று கூறி, மேற்கு வங்கத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவைத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவரலாம். அந்தத் தருணத்தில் ஆர்.என். ரவி போல ஒருவர் இருப்பது நல்லது என பா.ஜ.க. அரசு நினைத்திருக்கும்" என்கிறார் கார்கா சாட்டர்ஜி.

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக மாற்றப்பட்ட பிறகு, கேரள மாநிலத்தின் ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும், இமாசலப் பிரதேசத்தின் ஆளுநராக இருந்த சிவ் பிரதாப் சுக்லா, தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தெலுங்கானாவின் ஆளுநர் ஜிஷ்னு தேவ் வர்மா, மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாகாலாந்து மாநில ஆளுநராக நந்த் கிஷோர் யாதவும் பிகார் மாநில ஆளுநராக சையத் அட்டா ஹஸ்னைனும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு