மன்னராட்சியை வீழ்த்தி இஸ்லாமிய குடியரசான இரான் வரலாறு என்ன?

இரான், மன்னராட்சி, ஆயத்துல்லா அலி கமேனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி

1979-இல் இரானில் மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு, ஆயதுல்லா கொமேனி தலைமையில் மதகுருமார்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது, இரான் ஓர் இஸ்லாமியக் குடியரசானது.

ஷாவின் ஆட்சிக்கு புரட்சி ஒரு முடிவுகட்டியது. நவீனமயமாக்கல் மற்றும் மேற்கத்தியமயமாக்கல் திட்டங்களோடு, தன்னை எதிர்த்தவர்களையும் ஷா ஒடுக்கியதால் மதத் தலைவர்கள், அரசியல் சக்திகள் மற்றும் பொதுமக்களை அவருக்கு எதிராக திரும்பினர்.

பண்டைய உலகின் மிகச்சிறந்த பேரரசுகளில் ஒன்றாக இரான் விளங்கியது. மேலும், தனது மொழியைத் தக்கவைத்துக்கொண்டதாலும், இஸ்லாமின் ஷியா பிரிவைப் பின்பற்றுவதாலும் இது நீண்டகாலமாக ஒரு தனித்துவமான கலாசார அடையாளத்தை கொண்டிருக்கிறது.

தலைவர்கள்

அதிஉயர் தலைவர்: ஆயதுல்லா அலி காமனெயி

அதிஉயர் தலைவர் — நீதித்துறை, ராணுவம் மற்றும் ஊடகத் துறைகளின் தலைவர்களை நியமிக்கிறார். மேலும், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவரை அவரே உறுதிப்படுத்துகிறார்.

ஆயதுல்லா கொமேனியைத் தொடர்ந்து, 1989 ஜூன் மாதம் ஆயதுல்லா அலி காமனெயி வாழ்நாள் முழுவதும் இந்தப் பதவியில் நீடிக்கும் வகையில் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு அவர் 1980-களில் தொடர்ந்து இரண்டு முறை அதிபராகப் பணியாற்றினார்.

அதிபர்: மசூத் பெசெஷ்கியன்

மசூத் பெசெஷ்கியன், இரான், மன்னராட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மசூத் பெசெஷ்கியன்

சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன், பழமைவாதியும் போட்டியாளருமான சயீத் ஜலிலியை தோற்கடித்து, 2024 ஜூலை மாதம் இரானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டாம் கட்டத் தேர்தலில் பதிவான 3 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் அவர் 53.3 சதவீத வாக்குகளைப் பெற்றார். அதே சமயம் ஜலிலி 44.3 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

தேர்தலின் முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மை பெறாததைத் தொடர்ந்து இந்த இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. முதல் சுற்றில் வரலாற்றுலேயே குறைந்த அளவாக 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

2024-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இரானின் அதிபர் இப்ராகிம் ரையீசி மற்றும் அவருடன் இருந்த மற்ற ஏழு பேர் உயிரிழந்ததை அடுத்து, இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.

இதய அறுவை சிகிச்சை நிபுணரும், இரான் நாடாளுமன்ற உறுப்பினருமான பெசெஷ்கியன், இரானின் சர்ச்சைக்குரிய ஒழுக்கக் காவல் படையை கடுமையாக விமர்சித்து வந்தவர்.

அவர் "ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு'' உருவாக்கப்படும் என்றும் உலக நாடுகளிடமிருந்து இரானின் "தனிமைப்படுத்தப்பட்ட நிலையை" முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பது தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடன் 'ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை' நடத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இரானின் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்குப் பதிலாக, தனது அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்த இரான் ஒப்புக்கொண்டிருந்தது.

அதிபர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் அவர் நாட்டின் தரவரிசையில் அதிஉயர் தலைவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். அரசாங்கத்தின் அன்றாட நிர்வாகத்திற்கு அவரே பொறுப்பானவர். அத்துடன் உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளியுறவு விவகாரங்களில் அவர் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளார்.

இருப்பினும், அவரது அதிகாரங்கள் வரம்புக்குட்பட்டவை - குறிப்பாகப் பாதுகாப்பு விவகாரங்களில். அதிபரின் உள்துறை அமைச்சகம் தேசியக் காவல் படையை நிர்வகிக்கிறது. அதன் தளபதி அதிஉயர் தலைவரால் நியமிக்கப்பட்டவர், மேலும் அவர் நேரடியாக அதிஉயர் தலைவரிடமே பதிலளிக்க வேண்டிய கடமை கொண்டவர்.

இதே நிலைதான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் பசிஜ் அமைப்பின் தளபதிகளுக்கும் பொருந்தும்.

அதிபரின் அதிகாரங்கள் நாடாளுமன்றத்தினாலும் கட்டுப்படுத்தப்படலாம், இந்த நாடாளுமன்றமே புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.

அதே சமயம், அதிஉயர் தலைவருக்கு மிக நெருக்கமானவர்களைக் கொண்ட பாதுகாவலர் குழு, புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பணியைச் செய்கிறது. மேலும் அந்தச் சட்டங்களை ரத்து செய்யும் வீட்டோ அதிகாரமும் அக்குழுவிற்கு உள்ளது.

ஊடகம்

ஊடகம், ஈரான், மன்னராட்சி, ஆயத்துல்லா அலி கமேனி

பட மூலாதாரம், Getty Images

இரானிய மண்ணிலிருந்து ஒளிபரப்பப்படும் அனைத்து ஊடகங்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன, மேலும் அவை அரசின் கருத்தியலயே பிரதிபலிக்கின்றன. அதே சமயம், இணையதளம் மற்றும் அச்சு ஊடகங்களில் ஓரளவு மாறுபட்ட கருத்துக்களைக் காண முடியும்.

பத்திரிகையாளர்களுக்கு அடக்குமுறை நிறைந்த நாடுகளில் இரான் ஒன்றாகும் என எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கூறுகிறது.

ஊடகம், இரான், மன்னராட்சி, ஆயத்துல்லா அலி கமேனி

பட மூலாதாரம், Getty Images

இரான் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்

  • 1794 - முகமது கான் காஜர் அதிகாரத்தைக் கைப்பற்றி, காஜர் வம்சத்தைத் தோற்றுவித்தார்.
  • 1921 - ராணுவத் தளபதி ரேஸா கான் அதிகாரத்தைக் கைப்பற்றினார்; பின்னர் அவர் ரேஸா ஷா பஹ்லவி என்ற பெயருடன் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
  • 1941 - இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனும் ரஷ்யாவும் இரானை ஆக்கிரமித்தன.
  • 1953 - பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளால் திட்டமிடப்பட்ட ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு, பிரதமர் முகமது மொசாடக் தலைமையிலான அரசாங்கத்தைப் பதவி இறக்கியது.
  • 1979 - இரானியப் புரட்சி ஷாவின் ஆட்சிக்கு முடிவு கட்டியது.
  • 1980-1988 - இரான் -இராக் போர்.
ஊடகம், இரான், மன்னராட்சி, ஆயத்துல்லா அலி கமேனி

பட மூலாதாரம், Getty Images

  • 1989 - இஸ்லாமியக் குடியரசைத் தோற்றுவித்தவரும், அதன் அதிஉயர் தலைவருமான ஆயதுல்லா கொமேனி காலமானார்; அவருக்குப் பின் ஆயதுல்லா அலி காமனெயி புதிய அதிஉயர் தலைவராகப் பொறுப்பேற்றார்.
  • 1997 - சீர்திருத்தவாதியான முகமது காதமி, அபார வெற்றியைப் பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2004 - இரானின் அணுசக்தித் திட்டம் வளர்ந்து வரும் ஒரு அச்சுறுத்தல் என்று அமெரிக்கா கூறியதுடன், சர்வதேசத் தடைகளை விதிக்க அழைப்பு விடுத்தது.
  • 2005 - கடும்போக்குவாதியான மஹ்மூத் அகமதிநெஜாத் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2009 - சர்ச்சைக்குரிய தேர்தலில் அஹ்மதினெஜாத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், இது "க்ரீன் மூவ்மெண்ட்" என்று அழைக்கப்படும் பல மாதங்களுக்கு நீடித்த மாபெரும் போராட்டங்களைத் தூண்டியது.
  • 2013 - மிதவாதி ஹசன் ரூஹானி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2015 - இரானுக்கும் உலகின் முக்கிய வல்லரசு நாடுகளுக்கும் இடையே, இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த ஒரு ஒப்பந்தமிடப்பட்டது. அதன் மீதான பொருளாதாரத் தடைகளைப் பகுதி அளவில் நீக்க அணுசக்தித் திட்டத்தைக் குறைத்துக் கொள்ள இரான் ஒப்புக்கொண்டது
ஊடகம், ஈரான், மன்னராட்சி, ஆயத்துல்லா அலி கமேனி
  • 2018 - இரானின் 2015 அணுசக்தித் திட்டம் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது; மேலும் இரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
  • 2020 - இரானின் புரட்சிகர காவல் படையின் 'குத்ஸ் படை' என்ற பிரிவின் தலைவரும், காமனெயிக்கு அடுத்தபடியாக இரானின் மிகவும் சக்திவாய்ந்த நபராகக் கருதப்பட்டவருமான காசிம் சுலைமானி, இராக்கில் அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டார்.
  • 2021 - கடும்போக்குவாதியான இப்ராகிம் ரைசி இரானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2022 - மாசா அமினி காவல் துறையின் பிடியில் இருந்தபோது உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டங்கள் வெடித்தன.
  • 2024 - அதிபர் இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்; அதனைத் தொடர்ந்து சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2025 - இஸ்ரேல் - இரான் இடையே ராணுவ மோதல் உச்சத்தில் இருந்தபோது இரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுகளை வீசியது.
  • 2025 டிசம்பர் இறுதியில் இரான் நாணயத்தின் வீழ்ச்சிக்கு எதிராக தொடங்கிய போராட்டங்கள் அந்நாட்டில் நடைபெற்று வரும் மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டமாக மாறியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு