முஸ்தஃபிசுர் விவகாரம் - டி20 உலக கோப்பை, கேகேஆர் மற்றும் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

முஸ்தஃபிசுர் விவகாரம்: டி20 உலகக் கோப்பை, நைட் ரைடர்ஸ், வங்கதேச கிரிக்கெட் ஆகியவற்றில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையே வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.

வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை, ஐபிஎல் ஏலத்தில் 9.2 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(கேகேஆர்) அணி வாங்கியிருந்தது.

சமீப காலமாக இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே அரசியல் பதற்ற நிலை அதிகரித்துவரும் சூழலில், முஸ்தஃபிசுர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்பட்டதற்கு சில வலதுசாரி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் ரஹ்மானை தங்கள் அணியிலிருந்து விடுவிக்குமாறு நைட் ரைடர்ஸ் நிர்வாகத்திடம் பிசிசிஐ அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து கேகேஆர் அணி முஸ்தஃபிசுரை தங்கள் அணியிலிருந்து விடுவித்தது.

இந்த முடிவு பலதரப்பட்ட விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. "வங்கதேசத்துடன் நல்ல உறவைக் கொண்டிருப்பது இந்தியாவின் தேசிய நலனுக்கு முக்கியம். அதற்கு கிரிக்கெட் உதவியிருக்கும். ஆனால், இந்த முடிவு டாக்காவையும், பாகிஸ்தானையும் நெருக்கமாகக் கொண்டுவரக்கூடிய ஒன்றாக இருக்கிறது" என்று கூறியிருந்தார் எழுத்தாளர் ராமசந்திர குஹா.

அரசியல் ரீதியாக இந்த முடிவு பற்றி மாறுபட்ட கருத்துகள் நிலவிக்கொண்டிருக்கின்றன. அதேபோல், கிரிக்கெட் ரீதியாக இந்த விஷயம் பலதரப்பட்ட விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

'முஸ்தஃபிசுர் மதம் தாக்கம் ஏற்படுத்துகிறதா?'

இஸ்லாமிய வீரர் என்பதால் முஸ்தஃபிசுர் ரஹ்மான் மீது காழ்ப்புணர்வு காட்டப்பட்டிருக்கிறதா என்று பலரும் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள்.

"இதே இடத்தில் லிட்டன் தாஸ் அல்லது சௌம்சா சர்க்கார் போன்ற வீரர்கள் இருந்திருந்தால் என்ன முடிவு எடுக்கப்பட்டிருக்கும்? இங்கு யாரை தண்டிக்கிறார்கள்? ஒரு தேசத்தையா, ஒரு தனி நபரையா அல்லது ஒரு மதத்தையா?" என்று எக்ஸ் தளத்தில் கேள்வியெழுப்பியிருந்தார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி சசி தரூர்.

இதில் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், அரசியல் காரணங்கள் ஐபிஎல் தொடரில் தாக்கம் ஏற்படுத்துவது இது முதல் முறையல்ல.

மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அரசியல் உறவில் விரிசல் ஏற்பட்டதால், பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் அனுமதிக்கப்படவில்லை.

அதேபோல், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை காரணமாக இலங்கை வீரர்கள் சென்னையில் ஆடக்கூடாது என்று 2013-ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து எந்த அணியின் இலங்கை வீரர்களும் சென்னையில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அதேசமயம் சென்னையில் நடக்க வேண்டிய பிளே ஆஃப் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டன.

2010-ஆம் ஆண்டு இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்டதால், 'ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கமாட்டோம்' என்று சிவசேனா மிரட்டல் விடுத்தது. ஆனால், அந்தப் பிரச்னை அப்போது சுமுகமாக முடிக்கப்பட்டது.

முஸ்தஃபிசுர் விவகாரம்: டி20 உலகக் கோப்பை, நைட் ரைடர்ஸ், வங்கதேச கிரிக்கெட் ஆகியவற்றில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷாரூக் கான் எளிமையான இலக்காக்கப்படுகிறார் என்கிறார் ராஜ்தீப் சர்தேசாய்

நைட் ரைடர்ஸுக்கு இது எவ்வளவு பெரிய இழப்பு?

இந்த 2026 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா 9.2 கோடி ரூபாயை முஸ்தஃபிசுர் மீது முதலீடு செய்திருந்தது. இருந்தாலும், 4 வெளிநாட்டு வீரர்களே ஒரு போட்டியில் களமிறங்க முடியும் என்பதால், அவருக்கு உறுதியான இடம் இருந்திருக்க வாய்ப்பு குறைவுதான்.

ஏனெனில், கொல்கத்தா அணி 25.2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய கேமரூன் கிரீன், சுனில் நரைன் இருவரையும் 100% களமிறக்கும். அவர்களிடம் முன்னணி இந்திய விக்கெட் கீப்பர்கள் இல்லாததால் டிம் சைஃபர்ட் அல்லது ஃபின் ஆலன் இருவரில் ஒருவர் ஆடியாகவேண்டும். மீதமிருக்கும் ஒரு இடத்துக்கு பதிரானா, முஸ்தஃபிசுர் இடையே போட்டியிருந்திருக்கும்.

பதிரானா 18 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதால், அவர் பிரதானப்படுத்தப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல், சென்னை அணியில் டுவைன் பிராவோ பயிற்சியாளர் குழுவில் இருந்த போதுதான் பதிரானா சிறப்பாக செயல்பட்டார். இப்போது பிராவோ கொல்கத்தா அணியில் இருப்பதால், பதிரானாவுக்கு முன்னுரிமை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும்.

ஆனால், அவர்கள் பதிரானாவையும் எடுத்துவிட்டு முஸ்தஃபிசுரையும் எடுத்ததற்கான இன்னொரு காரணம், பதிரானாவின் ஃபார்ம் மற்றும் காயமடையும் தன்மை. பதிரானா ஃபார்மில் இல்லாவிட்டாலோ, காயமடைந்தாலோ முஸ்தஃபிசுர் இருக்கும்போது, அது கேகேஆர் அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதப்பட்டது. ஏனெனில், அவரும் டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்படக்கூடியவர்.

ஏலத்துக்குப் பின்பு தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கே.ஶ்ரீகாந்த், "பதிரானா ஒரு 'ஹிட் ஆர் மிஸ்' பௌலர். ஆனால், புத்திசாலித்தனமாக முஸ்தஃபிசுரை வாங்கியிருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

ஆனால், தற்போது முஸ்தஃபிசுர் இல்லாதது அந்த அணிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். என்னதான், மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யலாம் என்றாலும், டெத் ஓவர்களில் சிறப்பாகச் செயல்படக்கூடிய வீரர்கள் அதிகம் கிடையாது. இது பதிரானா மீதும், அந்த அணியின் மீதும் கூடுதல் உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தும்.

அதுமட்டுமல்லாமல், முஸ்தஃபிசுர் பற்றிய இந்த முடிவு ஏலத்தின்போதே எடுக்கப்பட்டிருந்தால், கொல்கத்தா அணி அந்தத் தொகையை வேறொரு வீரருக்கு செலவு செய்திருக்கலாம். அவர்கள் அந்த வாய்ப்பையும் இழந்திருக்கலாம். ஒட்டுமொத்த அணியையும் அந்த ஏலத்தில் மொத்தமாகக் கட்டமைத்த நைட் ரைடர்ஸுக்கு அது பெரும் இழப்பு தான்.

முஸ்தஃபிசுர் விவகாரம்: டி20 உலகக் கோப்பை, நைட் ரைடர்ஸ், வங்கதேச கிரிக்கெட் ஆகியவற்றில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2025 ஐபிஎல் தொடரில் முஸ்தஃபிசுர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்

டி20 உலகக் கோப்பை பாதிக்கப்படுமா?

முஸ்தஃபிசுர் நீக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா பங்கேற்காது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்திருக்கிறது.

2026 டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் இந்தியாவில் மட்டுமே நடப்பதாக இருந்தது. ஆனால், 2025 பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி விளையாட இந்தியா மறுப்புத் தெரிவிக்க, அதனால் இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் மறுப்புத் தெரிவிக்க, இலங்கையிலும் போட்டிகள் நடக்க முடிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இப்போது வங்கதேசமும் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது.

இந்த போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்படுகின்றன என்றால், அது இலங்கைக்குமே சிக்கலை ஏற்படுத்தலாம். உதாரணமாக, பிப்ரவரி 22 ஆமதாபாத்தில் ஆடவிருக்கும் வங்கதேசத்தின் ஆட்டம் மாற்றப்படவேண்டும்.

அதே நாளில் கண்டியில் ஒரு ஆட்டம் இருக்கிறது. கொழும்புவில் அதற்கு முந்தைய நாள் தான் ஒரு ஆட்டம் முடிந்திருக்கும். அதனால், அடுத்தடுத்து போட்டிகளை நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இல்லையேல், புதிதாக இன்னொரு மைதானத்தைத் தயார் செய்யவேண்டிய நிலை ஏற்படும்.

மேலும், வேறுசில அணிகள் கூட அட்டவணை குறித்து பிரச்னைகளை எழுப்பக்கூடும்.

முஸ்தஃபிசுர் விவகாரம்: டி20 உலகக் கோப்பை, நைட் ரைடர்ஸ், வங்கதேச கிரிக்கெட் ஆகியவற்றில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியில் முஸ்தஃபிசுர் இடம்பெற்றிருக்கிறார்

இந்திய விளையாட்டுக்கு இது நல்லதா?

உலகக் கோப்பை போட்டிகள் மாற்றப்படுவது பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு இழப்பை ஏற்படுத்தும். இந்தப் போக்கு இந்திய விளையாட்டுத் துறையை ஒட்டுமொத்தமாக பாதிக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்த பத்திரிகையாளர் வேங்கட கிருஷ்ணா, "ஒரு பெரிய தொடருக்கு வங்கதேச வீரர் ஒருவரை அரசியல் காரணங்களுக்காக அனுமதிக்காதது, ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் லட்சியம் கொண்ட ஒரு நாட்டின் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தாது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்போது வங்கதேசம் உலகக் கோப்பையில் விளையாட மறுத்திருப்பதால், அடுத்தாக வங்கதேசத்தில் இந்தியா ஆடவிருக்கும் 'பைலேட்டரல்' தொடர் நடப்பது கேள்விக்குறியாக்கக்கூடும். அது மெல்ல வளர்ந்து இன்று இந்தியா - பாகிஸ்தான் இருக்கும் நிலைக்கு மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது.

2030-ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் காமன்வெல்த் போட்டிகள் நடக்கவிருக்கும் நிலையில் சூழல் எப்படி மாறும் என்பது கணிக்க முடியாதது.

வங்கதேச கிரிக்கெட்டுக்கு நல்லதா?

வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தப் பிரச்னைக்குப் பிறகு அதிரடியான முடிவுகள் எடுத்தால், மேற்சொன்னதுபோல் இன்னொரு இந்தியா - பாகிஸ்தான் சூழ்நிலை ஏற்பட்டால் அது வங்கதேச கிரிக்கெட்டுக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும்.

ஒரு வெளிநாட்டு வீரர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவேண்டுமானால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் என்ஓசி வாங்கவேண்டும். வீரர்கள் பங்கேற்கும்பட்சத்தில் அவர்கள் ஊதியத்தின் மதிப்பில் 20% அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்குக் கிடைக்கும். இது வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்குக் கிடைக்காது. அதேபோல், அதிக ஒளிபரப்பு வருமானத்தை ஈட்டக்கூடிய இந்தியாவுக்கு எதிரான தொடரையும் அவர்கள் இழக்க நேரிடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு