தமிழ்நாட்டில் இந்த 4 போராட்டங்களும் திமுகவுக்கு தேர்தலில் நெருக்கடியாக அமையுமா?

செவிலியர்கள் போராட்டம்
படக்குறிப்பு, செவிலியர்கள் போராட்டம் (கோப்புப்படம்)
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே ஆங்காங்கே பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆசிரியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம் ஆகியவை சமீபத்தில் முக்கியத்துவம் பெற்றன. சில போராட்டங்கள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்போதைக்கு தொடராவிட்டாலும் போராடும் மக்களின் கோரிக்கைகள் இன்னும் உயிர்ப்புடனேயே உள்ளன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த போராட்டங்கள் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியாக மாறியுள்ளதா?

"தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி போராட்டங்கள் நடப்பது வழக்கமானதுதான்." என்கிறார், திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

அரசு ஊழியர்கள் போராட்டம் தாக்கத்தை செலுத்தும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

இத்தகைய முக்கிய போராட்டங்கள் குறித்தும் அதில் அரசின் நிலைப்பாடு, தற்போதைய நிலை குறித்தும் முதலில் தெரிந்துகொள்வோம்.

ஆசிரியர்கள் போராட்டம்

தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த நான்கு தினங்களாக சென்னையில் போராட்டம் நடத்திவந்தனர். 'சம வேலை - சம ஊதியம்' என்பதை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், திங்கட்கிழமை சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முன்பு இடைநிலை ஆசிரியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை குண்டுகட்டாக தூக்கி காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு மே 31 அன்று நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ. 8,370 அடிப்படை ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், அதே ஆண்டு ஜூன் 1 அன்று நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ. 5,200 அடிப்படை ஊதியமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 'சம வேலை - சம ஊதியம்' என்பதை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 16 ஆண்டுகளாக போராடிவருகின்றனர்.

இந்த நிலையில் தான், கடந்த சில தினங்களாக ஆசிரியர்கள் போராடிவந்த நிலையில், திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

"ஊதிய முரண்பாட்டை தீர்க்கிறோம் என திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை." என இடைநிலை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில், "இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அதிமுக ஆட்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அத்தகைய 20,000 ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு திமுக ஆட்சியில் மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போன்று காலமுறை ஊதியம் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று, சென்னை சிவானந்தா சாலையில் பகுதிநேர ஒப்பந்த ஆசிரியர்களும் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பணிநிரந்தரம் கோரி கடந்த 13 ஆண்டுகளாக போராடி வருவதாக கூறுகின்றனர்.

இன்றும் (செவ்வாய்கிழமை) இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

பிபிசி தமிழிடம் பேசிய பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம், "2012ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என, கடந்த 13 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனாலும், இன்னும் எங்களை வாக்குறுதியில் கூறியபடி பணி நிரந்தரம் செய்யவில்லை." என்றார்.

இதுதொடர்பான திமுக தேர்தல் வாக்குறுதியில், "பள்ளிக் கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றிவரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜாக்டோ ஜியோ போராட்டம்
படக்குறிப்பு, கோப்புப்படம்

அரசு ஊழியர்கள் போராட்டம்

திமுக தன் தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், 2026ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

முன்னதாக, சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 22-ம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் திட்டமிட்டபடி ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.

பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் மற்​றும் ஒருங்கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டம் ஆகிய மூன்று ஓய்​வூ​தி​யத் திட்டங்கள் குறித்து விரி​வாக ஆராய்வதற்காக, அரசு செயலாளர் ககன்தீப்​சிங் பேடி தலை​மை​யில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது இடைக்​கால அறிக்​கையை அரசிடம் கடந்த அக்டோபர் மாதம் சமர்ப்பித்தது.

இந்நிலையில், அக்குழு தங்களின் அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்கிழமை சமர்ப்பித்தது. இதனடிப்படையில், ஓய்வூதியம் தொடர்பாக அரசு முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவிலியர்கள் போராட்டம்

செவிலியர்கள் போராட்டம்
படக்குறிப்பு, சமீபத்தில் நடந்த செவிலியர்கள் போராட்டம்

சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் கடந்த வாரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"மாநிலம் முழுவதும் தொகுப்பூதியத்தைப் பெற்றுக்கொண்டு தற்காலிகப் பணியில் இருக்கும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கை," என பிபிசி தமிழிடம் அப்போது பேசியிருந்த தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.கே. சுஜாதா தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 2014-15 காலகட்டத்தில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தற்காலிக செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சுமார் இரண்டாண்டு காலம் பணியாற்றிய பிறகு அவர்கள் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டது.

இதற்குப் பிறகு தொடர்ச்சியாக, தற்காலிக செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, சுமார் 15,300 பேர் இப்படி செவிலியர்களாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சுமார் 7,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்ட நிலையில், சுமார் 8,300 பேர் தற்காலிக செவிலியர்களாகவே பணியாற்றி வருகின்றனர். இவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது பிரதான கோரிக்கை.

இதையடுத்து, டிசம்பர் 24 அன்று மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காணொளி வாயிலாக செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக முடித்துக்கொள்ளப்பட்டதாக செவிலியர்கள் தரப்பு தெரிவித்தது.

தங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அதற்கான உத்தரவுகள் தொடர்ச்சியாகப் பிறப்பிக்கப்படும் என்று அமைச்சர் உத்தரவாதம் அளித்து இருப்பதாகவும் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைப்படி, "நிரந்தரப் பணி முதல்கட்டமாக ஆயிரம் பேருக்கு வழங்குதல், மகப்பேறுக்கான ஊதியம் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு 24/10/25 முதல் ஊதியத்துடன் வழங்குதல், நிலுவையிலுள்ள ஊதிய உயர்வு 14000-இல் இருந்து 18 ஆயிரமாக நிலுவையுடன் வழங்கப்படும், ஒப்பந்த செவிலியர் கலந்தாய்வு விண்ணப்ப தேதி ஒத்தி வைக்கப்படுகிறது. மீதமுள்ள தொகுப்பூதிய செவிலியர்களை நிரந்தரப் பணியிடங்களை உருவாக்கி படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படும் ஆகியவை உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளுக்கு அமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளார்."

மேலும், போராட்ட காலத்தில் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது, நடவடிக்கை எடுக்கப்படாது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை சென்னை தொழிலாளர் நல ஆணையரக அலுவலகம் முன்பு தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்களாக உள்ள செவிலியர்கள் 'சம வேலைக்கு சம ஊதியம்' என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்
படக்குறிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம், திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகள் மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 5 மண்டலங்களில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு இரவு, பகலாக போராடி வந்த நிலையில், அவர்கள் ஆகஸ்ட் 14 அன்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் ஆங்காங்கே இன்று வரை போராட்டம் நடத்திய நிலையில் உள்ளனர்.

அந்த சமயத்தில் போராட்டக்காரர்களை சந்தித்த பின்னர் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அளித்த பேட்டியில், "கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களின் தூய்மை பணி தனியார்மயமானது. அப்போது ஏன் இந்த அநீதியை தடுக்கவில்லை? ஏன் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை?" என்றார்.

2021 சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"அறநிலையத்துறை, காகித ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சித் துறையில் மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் பராமரிப்புப் பணியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்."

அதேபோன்று, வாக்குறுதி எண். 285ல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஊராட்சிகள், அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மாணவர் விடுதிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகள், ஆகியவற்றில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்."

உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை பேசுகையில், "அரசு இன்னும் கோரிக்கையை ஏற்கவில்லை. தொடர் போராட்டத்தை நடத்துவோம். எங்கெங்கு அரசு அலுவலகங்கள், ஆட்சியாளர்கள் இருக்கின்றனரோ அங்கெல்லாம் சென்று நியாயம் கேட்கும் போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்தார்.

இந்தநிலையில் செவ்வாய்கிழமை தூய்மை பணியாளர்கள் அண்ணா சாலையில் உள்ள கருணாநிதி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் மாற்றுத்திறனாளி தற்காலிக பணியாளர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தி, சென்னையில் திங்கட்கிழமை குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுக்கு நெருக்கடியா?

பத்திரிகையாளர் குபேந்திரன்
படக்குறிப்பு, பத்திரிகையாளர் குபேந்திரன்

இந்த போராட்டங்களால் திமுக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்தார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

"தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் இத்தகைய போராட்டங்கள் அதிகம் நடக்கும். அரசு ஊழியர்களுக்காக திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நிறைய வாக்குறுதிகளை அளித்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது நடைமுறை சாத்தியம் அற்றது. ஆனால், அதனை அமல்படுத்துவோம் என்றனர். இதைத்தான் அரசு ஊழியர்கள் கடுமையாக வலியுறுத்துகின்றனர். அதை அமல்படுத்துவதில் உள்ள நெருக்கடியும் அரசுக்கு தெரியும்" என்றார்.

"அரசு ஊழியர்கள் நியமனத்தை அதிகப்படுத்தியிருந்தால் போராட்டங்களின் தீவிரம் தணிந்திருக்கலாம். இதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் தவறவிட்டுவிட்டனர்" என்றார் அவர்.

அதிமுகவோ, திமுகவோ எந்த அரசாக இருந்தாலும் அரசு ஊழியர்கள் அக்கட்சியின் பிரசார பலமாக இருப்பார்கள் என்றும் அரசு ஊழியர்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் என்பதால் இது நிச்சயம் திமுகவுக்கு தர்மசங்கடம், நெருக்கடிதான் என்று குபேந்திரன் தெரிவித்தார்.

"அரசு ஊழியர்களின் குடும்பங்களில் இத்தகைய போராட்டங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்." என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திமுக கூறுவது என்ன?

திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி போராட்டங்கள் நடப்பது வழக்கமானதுதான். பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட போராட்டக்காரர்கள் கேட்கும் திட்டங்களை செயல்படுத்தினாலும் வேறு ஏதாவது கோரிக்கையை எடுத்துக்கொண்டு வருவார்கள். அதற்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் இதுவரை இல்லாத அளவுக்கு குரல் கொடுப்பார்கள். இந்த கோரிக்கைகளை இயன்று செய்யாமல் இருந்தால் வருத்தப்படலாம், இயலாததை புரிந்துகொள்ள வேண்டும்." என்றார்.

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேசிய அவர், "அதுகுறித்து ஆராய குழு அமைத்திருக்கிறோம், பொறுத்திருந்து பார்ப்போம். நிதி ஆதாரங்கள் இல்லாத சூழல் இருக்கிறது. மிக விரைவில் அதற்கான தீர்வை முதலமைச்சர் தருவார்." என்றார்.

ஒரு சமூகமாக இத்தகைய போராட்டங்கள் தேர்தலில் தாக்கத்தை செலுத்தாது என அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு