இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இனியும் செல்லுமா? - நிபுணர்களின் பார்வை

இந்தியா, அமெரிக்கா, வர்த்தக ஒப்பந்தம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியாவும் அமெரிக்காவும் பிப்ரவரி 6 ஆம் தேதி வழங்கிய கூட்டு அறிக்கையில் வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தன
    • எழுதியவர், சந்தீப் ராய்
    • பதவி, பிபிசி
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என்ற அமெரிக்க உச்ச நீதிமன்ற அறிவிப்பிற்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் நிலை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத வரியை 18 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்திருந்தார். அதோடு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த 50 சதவீத வரியில், 25 சதவீதம் பரஸ்பர வரியாகவும் மீதமுள்ள 25 சதவீதம் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்கான அபராத வரியாகவும் விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 6 பேர் வரி ரத்துக்கு ஆதரவாகவும், 3 பேர் இந்த தீர்ப்புக்கு எதிராகவும் இருந்தனர். ஆனால், பெரும்பான்மை நீதிபதிகளின் ஆதரவு இருந்ததால் வரி ரத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, டிரம்ப் வர்த்தகச் சட்டம் 1974-ன் பிரிவு 122-ஐ பயன்படுத்தி புதிதாக முதலில் 10 சதவீத உலகளாவிய வரியை விதித்த டிரம்ப், பின்னர் சனிக்கிழமையன்று அதனை 15 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார்.

புதிய உலகளாவிய வரி பிப்ரவரி 24 முதல் 150 நாட்களுக்கு அமலில் இருக்கும்.

இருப்பினும், வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகு, வெள்ளை மாளிகையில் நீண்ட செய்தியாளர் சந்திப்பை நடத்திய டிரம்ப், அதில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்தத் தீர்ப்பால் இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் "எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் இந்தியா தொடர்ந்து பணம் செலுத்தும்" என்று கூறினார்.

ஆனால், இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட பழைய வரிகளுக்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டிரம்ப்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு,

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அவசரமாக செய்யப்பட்டதா?

அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பிய இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், "அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை ஏன் காத்திருக்கவில்லை?" என இந்திய அரசைக் கேட்டுள்ளது.

இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து, அதன் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சனிக்கிழமையன்று காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது. இந்த ஒப்பந்தம் 'விரக்தியில்' அவசர அவசரமாகச் செய்யப்பட்டதாகவும், தற்போது இது 'நடைமுறைக்கு சாத்தியமற்றது' என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், "2026 பிப்ரவரி இரண்டாம் தேதி இரவு அதிபர் டிரம்ப் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடிக்கு இருந்த கட்டாயம் என்ன? பிரதமர் மோடி தனது பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் பதற்றம் அடையாமல், 18 நாட்கள் மட்டும் காத்திருந்திருந்தால், இந்திய விவசாயிகள் இந்தத் துன்பத்திலிருந்தும் நெருக்கடியிலிருந்தும் தப்பித்திருக்கலாம்; இந்தியாவின் இறையாண்மையும் பாதுகாக்கப்பட்டிருக்கும்," என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "பிரதமரின் பொறுமையின்மை மற்றும் சரணடைதல் காரணமாக இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நாட்டிற்கு ஒரு கடினமான சோதனையாக மாறியுள்ளது" என்று அவர் குற்றம் சாட்டினார்.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தை மக்களுக்கு இழைக்கப்பட்ட 'துரோகம்' என்று காங்கிரஸ் கூறியது. ஆனால், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் ஆகியோர், "இந்த ஒப்பந்தத்தில் விவசாயம் மற்றும் பால் பண்ணை துறைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன," என்று உரிமை கோரினர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், எக்ஸ் வலைதளத்தில் பிப்ரவரி 15-ல் எழுதிய கட்டுரை ஒன்றை மேற்கோள் காட்டி பிப்ரவரி 20 அன்று இவ்வாறு கூறியுள்ளார்: "அதிபர் டிரம்பின் வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்தால், இந்தியாவும் அமெரிக்காவும் 2025 ஏப்ரல் 2-ஆம் நாளுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பிவிடும் என்று நான் எழுதியிருந்தேன்".

அதே பதிவில் ப. சிதம்பரம், "இதற்கிடையில், அமெரிக்கா தனது தரப்பில் எந்த சலுகையும் வழங்காமல், இந்தியாவிடமிருந்து பல சலுகைகளைப் பெற்றுள்ளது. அந்தச் சலுகைகளின் நிலை இப்போது என்னவாகும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து அவர், "அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பல தயாரிப்புகளுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படும் என்று கூட்டு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா உத்தேசித்துள்ளதாகவும் கூறப்பட்டது. அத்துடன் ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்காது மற்றும் அமெரிக்க தயாரிப்புகள் மீதான வரி அல்லாத தடைகளை நீக்கும் போன்ற விஷயங்களும் அதில் இடம் பெற்றிருந்தன. இந்த வாக்குறுதிகளின் நிலை இப்போது என்ன?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் கட்டமைப்பை இறுதி செய்ய இந்தியக் குழு ஒன்று தற்போது அமெரிக்காவில் உள்ளது. இப்போது அந்தக் குழு என்ன செய்யும்? என்று முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் தாக்கம் குறித்து இந்திய ஒப்பந்தத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்க உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 பேர் டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராகவும், 3 பேர் ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கினர்

வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த கேள்விகள்

அமெரிக்க உச்ச நீதிமன்றம் வரிகளின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து தீர்ப்பளிக்கப் போகிறது என்பதை அறிந்திருந்தும், இந்தியா, கட்டமைப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஏன் ஒப்புக்கொண்டது என சர்வதேச விவகார நிபுணர் பிரம்மா செலானி கேள்வி எழுப்பினார்.

அவர் 'எக்ஸ்' தளத்தில் எழுதியுள்ள பதிவில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான போதிலும், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் இறக்குமதி வரிகள் முக்கியப் பங்கினை வகிக்கும். டிரம்ப் அறிவித்துள்ள புதிய 10 சதவீத உலகளாவிய வரி (இது 15 சதவீதமாக உயர்த்தப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்) அதற்கான அறிகுறியாகும். இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பு அவரது நிலையைச் சற்று பலவீனப்படுத்தியுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த பிரம்மா செலானி, "சர்வதேச ஒப்பந்தங்களில் இந்திய அரசாங்கங்களின் சாதனை சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. பேச்சுவார்த்தை மேசையில் தங்களுக்குச் சாதகமாக உள்ள நிலையை விட்டுக்கொடுக்கும் போக்கையே அடிக்கடி காண முடிகிறது. மோதி அரசாங்கம் இந்த பலவீனமான பாரம்பரியத்தைத் தொடர்கிறது. லடாக் எல்லைப் பகுதிகளில் சீனாவின் பெரிய அளவிலான ஊடுருவலுக்குப் பிறகு பெய்ஜிங்குடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நிறுத்திய போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் சமீபத்தில் அமெரிக்காவுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றில் இது தெளிவாகத் தெரிகிறது," என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், "அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரப்போவதை அறிந்திருந்தும், புது தில்லி இந்த மாத தொடக்கத்தில் புதிய கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் இந்தியாவின் பொறுப்புகள் முதல் கட்டத்திலேயே மிகத் தெளிவாகவும், அளவிடக்கூடியதாகவும், கண்காணிப்புக்கு உட்பட்டதாகவும் உள்ளன. ஆனால் அமெரிக்காவின் வாக்குறுதிகளோ படிப்படியாக செயல்படுத்தக்கூடியவை, நிபந்தனைகளுக்கு உட்பட்டவை மற்றும் பல சந்தர்ப்பங்களில் திரும்பப் பெறக்கூடியவையாக உள்ளன," என்று எழுதியுள்ளார்.

இவை அனைத்தையும் விட மிகத் தீவிரமான விஷயம் என்னவென்றால், இந்த ஒப்பந்தத்தில் வர்த்தகம் சாராத பிற நிபந்தனைகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரம்மா செலானி கூறுகிறார். அதில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைப் படிப்படியாகக் குறைப்பது மற்றும் இந்தியாவின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில் (கடல் பகுதி), மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு உள்ளான கப்பல்களுக்கு இடையேயான எண்ணெய் பரிமாற்றத்தைத் தடுப்பது போன்றவை அடங்கும். இந்த விஷயத்தில் இந்தியாவும் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த பிப்ரவரி 16 அன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கத் தடைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று எண்ணெய் டாங்கர்களை இந்தியா தனது கடல் எல்லையில் பறிமுதல் செய்ததாகத் தெரிவித்திருந்தது. இருப்பினும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், அந்த டாங்கர்கள் இரானுக்குச் சொந்தமானவை என்பதை மறுத்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்க உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு,

இப்போது இந்தியாவின் மீதான உண்மையான வரி என்னவாக இருக்கும்?

பிபிசி செய்தியாளர் கிரேஸ் எலிசா குட்வின் அறிக்கையின்படி, வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள பிரிட்டன், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளும் பிரிவு 122-ன் கீழ் 10 சதவீத உலகளாவிய வரி (டிரம்ப் இதை 15 சதவீதமாக உயர்த்தியுள்ளார்) பொருந்தும் என்று தெரிவித்தார்.

இந்த நாடுகள் தங்கள் வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் வழங்கப்பட்ட சலுகைகளை தொடர்ந்து மதிக்கும் என்று டிரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்று அந்த அதிகாரி கூறினார்.

இருப்பினும், டெல்லியைச் சேர்ந்த 'உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி' (GTRI) அமைப்பின் அஜய் ஸ்ரீவஸ்தவாவின் கூற்றுப்படி, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பரஸ்பர வரியை 25 என்பதிலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பதாக டிரம்ப் உறுதியளித்திருந்தார், அது நடக்கவிருந்தது, ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அது அமலாவதற்கு முன்பே வந்துவிட்டதால், பரஸ்பர வரி சட்டவிரோதமானதாகிவிட்டது என்று அஜய் ஸ்ரீவஸ்தவா பிபிசியிடம் கூறினார். ஆனால், அதிபர் டிரம்ப் புதிதாக 15 சதவீத உலகளாவிய வரியை அறிவித்துள்ளார். இது தற்காலிகமானது மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் பொருந்தும்," என்று விளக்கினார்.

அவரது கருத்துப்படி, "நீங்கள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், அவர்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டியிருக்கும். ஒப்பந்தம் செய்யாவிட்டால், எந்தச் சலுகையும் வழங்காமல் 15 சதவீத வரி விதிக்கப்படும்."

தற்போது இந்தியப் பொருட்கள் மீதான வரி கணக்கீட்டில் உள்ள குழப்பத்தை விளக்கிய அஜய் ஸ்ரீவஸ்தவா, "அமெரிக்காவிற்குச் செல்லும் இந்திய ஏற்றுமதியில் 55 சதவீதப் பங்கிற்கு 25 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அதற்குப் பதிலாக 15 சதவீத உலகளாவிய வரி விதிக்கப்படும்," என்றார்.

மேலும், "மீதமுள்ள 45 சதவீத இந்திய ஏற்றுமதியில் ஏறத்தாழ பாதியளவிற்கு அமெரிக்கா ஏற்கனவே உலக நாடுகள் அனைத்திற்கும் வரிவிலக்கு அளித்துள்ளது. இதில் ஸ்மார்ட்போன்கள், மருந்துகள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் அடங்கும். எஞ்சியுள்ள எஃகு மற்றும் அலுமினியம் போன்ற தயாரிப்புகளுக்கு அமெரிக்கா உலக நாடுகள் மீது ஏற்கனவே 50 சதவீத வரி விதித்துள்ளது. சில வாகன உதிரிபாகங்களுக்கு 25 சதவீத வரி உள்ளது. இந்த ஃபார்முலா உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியாகப் பொருந்தும்" என்று அவர் கூறுகிறார்.

வரி விதிக்கும் அதிகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்ற அடிப்படையில், டிரம்பின் வரி விதிப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்க உச்ச நீதிமன்றம், வர்த்தக ஒப்பந்த மறுபரிசீலனை

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படை தகர்ந்துவிட்டதா?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்ட பிறகு, "இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் எதுவும் மாறாது, அவர்கள் தொடர்ந்து பணம் செலுத்துவார்கள்; ஆனால் அமெரிக்கா எதையும் செலுத்த வேண்டியதில்லை" என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், டிரம்பின் இந்த வாதத்திற்கு எந்தவிதமான சட்டப்பூர்வ ஆதாரமும் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதே கருத்தை எதிரொலிக்கும் அஜய் ஸ்ரீவஸ்தவா, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தையில் உள்ள வர்த்தக ஒப்பந்தத்திற்கு, பிப்ரவரி 6-ம் தேதி வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை மட்டுமே ஒரே சட்டப்பூர்வ அடிப்படை என்று அவர் கூறுகிறார்.

அவரது கூற்றுப்படி, "அந்தக் கூட்டு அறிக்கையில் ஒரு மிகத் தெளிவான நிபந்தனை எழுதப்பட்டுள்ளது. அதாவது, இரு நாடுகளில் யாராவது ஒருவர் தங்கள் இறக்குமதி வரிகளை மாற்றியமைத்தால், மற்றொரு நாடு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சுதந்திரம் உண்டு. இப்போது அமெரிக்காவில் வரிகள் மாற்றப்பட்டுவிட்டன. இந்த அடிப்படையில் பார்த்தால், நமக்கு இதில் எந்த லாபமும் இல்லை, எனவே இந்த ஒப்பந்தத்தை மறுபரீசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது."

அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள புதிய 15 சதவீத உலகளாவிய வரிக்கும் மிக பலவீனமான அடித்தளமே உள்ளது என்றும், இந்த வரிவிதிப்பும் நீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்றும் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

உண்மையில், டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ள பிரிவு 122-ன் கீழ் அதிகபட்சம் 150 நாட்களுக்கு மட்டுமே 15 சதவீத வரி விதிக்க முடியும். அதிலும் ஒரு நிபந்தனை உள்ளது. அந்நாட்டின் பணப்பரிமாற்ற சமநிலையில் சிக்கல் இருந்தால் மட்டுமே இதை அமல்படுத்த முடியும். மேலும், இந்தச் சட்டம் 'நிலையான மாற்று விகிதம்' நடைமுறையில் இருந்த காலத்தைப் பற்றிப் பேசுகிறது.

அஜய் ஸ்ரீவஸ்தவா மேலும் கூறுகையில், "தற்போது அமெரிக்காவிற்கு பணப்பரிமாற்ற சமநிலை சிக்கலும் இல்லை, அங்கு நிலையான மாற்று விகித முறையும் இல்லை. இதனால்தான் இப்போதே மக்கள் இதனை எதிர்த்து வழக்குத் தொடரப்போவதாகக் கூறத் தொடங்கிவிட்டனர். மிக விரைவில் அமெரிக்கா இதையும் திரும்பப் பெற வேண்டியிருக்கும்" என்றார்.

 இந்தியா, அமெரிக்கா, வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்க உச்ச நீதிமன்றம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியா இப்போது என்ன செய்ய வேண்டும்?

அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு உலகளாவிய வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ள நிலையில், இந்தியா தனது வர்த்தக ஒப்பந்த நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

அவர் கூறுகையில், "நாம் இதற்கு முன்பு மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் இப்போது தலைகீழாக மாறிவிட்டன. எனவே, நாம் அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது குறித்து யோசிக்க வேண்டும் அல்லது புதிய நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்," என்கிறார்.

மேலும் அவர், "பழைய ஒப்பந்தம் இப்போது முற்றிலும் பொருத்தமற்றதாகிவிட்டது. தற்போது அமெரிக்காவில் இறக்குமதி வரிகள் தொடர்பாக மிகுந்த நிலையற்ற சூழல் நிலவுகிறது. எனவே, இந்தியா இதிலிருந்து தற்காலிகமாக விலகி நின்று, அமெரிக்காவிலும் உலக அளவிலும் என்ன நடக்கிறது என்பதை அமைதியாகக் கவனிக்க வேண்டும். வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சைச் சில காலத்திற்குத் தள்ளிப்போட வேண்டும்," என்று குறிப்பிடுகிறார்.

அஜய் ஸ்ரீவஸ்தவாவின் கூற்றுப்படி, 'அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.'

இருப்பினும், இது குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க உச்ச நீதிமன்றம் வரிகள் தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் கவனித்து வருகிறோம். இது குறித்து அதிபர் டிரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பையும் பார்த்துள்ளோம். அமெரிக்க நிர்வாகம் சில புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைப் புரிந்துகொள்வதற்காக நாங்கள் அவற்றை ஆய்வு செய்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு