அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்?

அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான், ஜே.டி.வான்ஸ், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை 21 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்றது.
    • எழுதியவர், ருஹான் அஹமது
    • பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"இது எங்களின் இறுதி மற்றும் சிறந்த முன்மொழிவு. இதை இரானியர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். நன்றி," என்று கூறி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது செய்தியாளர் சந்திப்பை முடித்தார்.

அமெரிக்கா மற்றும் இரான் இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த தீர்வும் எட்டப்படாமல் முடிந்தது.

இதனை செய்தியாளர் சந்திப்பில் உறுதிபடுத்திய ஜே.டி.வான்ஸ், 'அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான இடைவெளியைக் குறைத்து ஒரு சமரசத்தை எட்டுவதற்கு பாகிஸ்தான் தன்னால் இயன்றவரை முயன்றது' என்றும் தெரிவித்தார். "ஆனால் கெட்ட செய்தி என்னவென்றால் எங்களால் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியவில்லை." என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் செய்தி இரானைப் போல அமெரிக்காவுக்கு அவ்வளவு மோசமானதல்ல எனக் கூறும் வான்ஸ், "எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை, நாங்கள் அமெரிக்காவிற்கே திரும்பிச் செல்கிறோம்." என்றார்.

பாகிஸ்தானின் கோரிக்கைக்கு இணங்க இரண்டு வாரகால போர்நிறுத்தத்திற்கு அமெரிக்காவும் இரானும் ஒப்புக்கொண்டன. இரு நாடுகளின் குழுக்களும் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் சென்றன. அங்குள்ள சுமார் 21 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை முடிவில்லாமல் போனதாகக் குறிப்பிடும் வான்ஸ், ஒப்பந்தம் ஏற்படாதது இரண்டு வாரகால போர்நிறுத்தத்தின் மீது என்ன தாக்கம் செலுத்தும் என்பதை தெளிவுபடுத்தவில்லை.

வான்ஸின் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷக் தர், அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தர் பணியை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

"இரு தரப்பும் போர்நிறுத்தத்திற்கான தங்களின் அர்ப்பணிப்பைத் தொடர்வது முக்கியம்." என்றும் கூறினார்.

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது ஏன்?

அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான், ஜே.டி.வான்ஸ், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிகாரிகளுடன் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கலந்து கொண்டார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு அமெரிக்காவும் இரானும் வெவ்வேறு காரணங்களை வழங்குகின்றன.

"எங்களின் வரம்பு என்ன, எதில் சமரசம் செய்துகொள்ளலாம், எதில் சமரசம் செய்ய முடியாது என்பதை தெளிவுபடுத்திவிட்டோம்," என ஜேடி.வான்ஸ் கூறியிருந்தார்.

"அவர்கள் (இரான்) எங்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதில்லை என முடிவெடுத்துவிட்டார்கள்," என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

எந்தெந்த நிபந்தனைகள் நிராகரிக்கப்பட்டன என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வான்ஸ், "பேச்சுவார்த்தை பற்றிய முழு தகவல்களை வழங்க முடியாது. அவர்கள் (இரான்) அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டார்கள் மற்றும் அந்த திறனை அடைவதற்கு தேவையான உபகரணங்களைப் பெற மாட்டார்கள் என்கிற உத்தரவாதம் எங்களுக்கு வேண்டும்." என்றார்.

"அமெரிக்க அதிபரின் முக்கியமான இலக்கு இது தான், அதை நாங்கள் பேச்சுவார்த்தையின் மூலம் அடைய நினைத்தோம்."

இரானின் யுரேனியத்தை செறிவூட்டும் திறன் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டதாக கூறும் வான்ஸ், "ஆனால் எப்போதும் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்கிற விருப்பத்தை இரானிடம் நம்மால் பார்க்க முடிகிறதா? அந்த விருப்பத்தை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை." என்றும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின்போது, ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள இரானின் சொத்துகளை விடுவிப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறும் வான்ஸ், "எங்களின் நிபந்தனைகளை இரான் ஏற்றுக்கொள்ளும் புள்ளியை எங்களால் அடைய முடியவில்லை." என்கிறார்.

"நாங்கள் மிகவும் நெகிழ்வுத்தன்மை உடன் நடந்து கொண்டோம் என நினைக்கிறேன். நல்லெண்ணத்துடன் இந்தப் பேச்சுவார்த்தைக்குச் சென்று ஒப்பந்தம் மேற்கொள்ள முடிந்தவரை முயற்சிக்குமாறு அதிபர் எங்களிடம் கூறியிருந்தார். நாங்கள் அதைச் செய்தோம். ஆனால் துர்திருஷ்டவசமாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை," என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

பேச்சுவார்த்தையின்போது எத்தனை முறை டிரம்பை தொடர்பு கொண்டீர்கள் என்கிற கேள்விக்குப் பதிலளித்த வான்ஸ், "அதிபருடன் தொடர்ந்து இணைப்பில் இருந்தோம். கடந்த 21 மணி நேரத்தில் எத்தனை முறை பேசினோம் எனத் தெரியவில்லை. பல முறை பேசியிருப்போம்." எனத் தெரிவித்தார்.

"அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையத்தின் தளபதி அட்மிரல் கூப்பர், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பு குழுவிடனும் தொடர்பில் இருந்தோம். நாங்கள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததால் தொடர்ந்து இணைப்பில் இருந்தோம்," என்றும் வான்ஸ் குறிப்பிட்டார்.

"ஒரு புரிதலை எட்ட எளிமையான முன்மொழிவை நாங்கள் ஏற்படுத்தினோம். இது தான் எங்களின் இறுதியான மற்றும் சிறந்த முன்மொழிவு. இதை இரானியர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா அல்லது இல்லையா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்." எனக் கூறி செய்தியாளர் சந்திப்பை முடித்தார் ஜே.டி.வான்ஸ்

செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு ராவல்பிண்டியில் உள்ள நுர் கான் விமானப்படை தளத்திற்குச் சென்ற ஜே.டி.வான்ஸ் அங்கிருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார். அவரை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், வெளியுறவு அமைச்சர் இஷக் தர் மற்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

அமெரிக்கா நெகிழ்வுத்தன்மை காட்டவில்லை - இரான் ஊடகங்கள்

அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான், ஜே.டி.வான்ஸ், இஸ்ரேல்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, செய்தியாளர் சந்திப்பை நடத்திய ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவிற்கு திரும்பிச் சென்றார்.

இரானிய அரசு ஊடகங்களின்படி, அமெரிக்காவின் "நியாயமற்ற கோரிக்கைகள்" தான் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை சீர்குலைத்ததற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இரான் குழுவின் பல முயற்சிகளைக் கடந்தும் அமெரிக்கா தரப்பிலிருந்து வைக்கப்பட்ட நியாயமற்ற கோரிக்கைகள் தான் பேச்சுவார்த்தை நின்றுபோனதற்கு காரணம். அப்படித்தான் பேச்சுவார்த்தைகள் முடிந்தன," என இரான் அரசு ஊடகமான ஐ.ஆர்.ஐ.பி டெலிகிராமில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.

இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் தலைமையிலான குழுவும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் சென்றன.

இரண்டு குழுக்களும் தனித்தனியாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், வெளியுறவு அமைச்சர் இஷக் தர் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்புகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் மத்தியஸ்தராக தன்னுடைய பணியைத் தொடரும் என்றும் இந்தப் பேச்சுவார்த்தைகள் மோதலை முடிவுக்கு கொண்டு வர உதவும் என்றும் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

முதலில் பாகிஸ்தான் மூலமாக இரான் மற்றும் அமெரிக்க குழுக்கள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டதாகவும் அதன் பின்னர் பாகிஸ்தான் அதிகாரிகளின் முன்னிலையில் சுமார் இரண்டரை மணி நேரம் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் பிபிசி உருதுவிடம் தெரிவித்தனர்.

அதன் பிறகு ஒரு மணி நேர இடைவேளை எடுக்கப்பட்டு இரானிய மற்றும் அமெரிக்க வல்லுநர்கள் இடையே கோரிக்கைகளின் தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டன.

பாகிஸ்தான் அதிகாரிகளின்படி, தொழில்நுட்ப பிரச்னைகள் தொடர்பான செய்திகள் பரிமாற்றம் நள்ளிரவு வரை நடைபெற்றது.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்காமல் போனதற்கு அமெரிக்காவின் நிலைப்பாட்டில் நெகிழ்வுத்தன்மை இல்லாதது தான் காரணம் என இரானின் தஸ்னிம் செய்தி முகமை தெரிவிக்கிறது.

தஸ்னிம் செய்தி முகமையின்படி, "தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலே உத்தரவாதத்தை அமெரிக்கா மீறியதற்கான அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்யவும்" சபாநாயகர் கலிபாஃப் தலைமையிலான குழு பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியை இருமுறையும் பாகிஸ்தான் பிரதமரை ஒருமுறையும் சந்தித்துள்ளது.

மேலும் அந்த செய்தியில், "அமெரிக்க குழு உடனான பேச்சுவார்த்தை 21 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. இந்த சமயத்தில் இரான் தனது முன்மொழிவுகளை மீண்டும் வழங்கி யதார்த்தத்தின் பக்கம் அமெரிக்காவைக் கொண்டு வர முயற்சித்தது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஒவ்வொரு கட்டத்திலும் அமெரிக்காவின் அதிகப்படியான கோரிக்கைகள் தான் ஒரு பொதுவான வேலைதிட்டத்தை உருவாக்குவதற்கு தடையாக இருந்தது. அமெரிக்காவின் நிலைப்பாட்டில் நெகிழ்வுத்தன்மை இல்லாததால் தான் பேச்சுவார்த்தை எந்த தீர்வும் இல்லாமல் முடிந்தது," என தஸ்லின் செய்தி முகமை தெரிவிக்கிறது.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான நேரம், இடம் மற்றும் நடைமுறை தொடர்பாக எந்த அட்டவணையும் வெளியிடப்படவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு