'இந்தியாவின் அந்த முடிவு ஒரு புரியாத புதிர்': முதல் தோல்வி தந்த ஆட்டம் பற்றிய 7 முக்கிய விஷயங்கள்

இந்தியா - தென்னாப்பிரிக்கா, டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Manan VATSYAYANA / AFP via Getty Images

    • எழுதியவர், வித்யுத் சிவராமகிருஷ்ணன்
    • பதவி, முன்னாள் கிரிக்கெட் வீரர், தமிழ்நாடு
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி இப்படி ஒருதலைப்பட்சமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தென்னாப்பிரிக்க அணி விளையாடிய விதத்தைப் பாராட்டியாக வேண்டும். பிரமாதமாக விளையாடினார்கள். கடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் சென்று தோற்றார்கள். அந்தத் தோல்விக்கு ஆறுதல் தேடும் விதமாக இந்த செயல்பாடு அமைந்திருந்தது.

இந்தியா இந்தப் போட்டியை சிறப்பாகவே தொடங்கியது. ஆனால், அதன்பிறகு தென்னாப்பிரிக்கா ஆடிய விதம் சிறப்பாக இருந்தது. 20/3 என்ற ஸ்கோரில் இருந்து மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்தார்கள். தங்கள் உறுதியான குணத்தை அவர்கள் காட்டினார்கள். கையில் விக்கெட் இருந்தால் பின்பு சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள். சுழல்பந்துவீச்சாளர்களை எளிதாக ஆட முடியும் என்று புரிந்திருந்தார்கள்.

டேவிட் மில்லர் - பிரெவிஸ் அபார ஆட்டம்

டி20 கிரிக்கெட்டில் அதீத அனுபவம் கொண்டிருக்கும் டேவிட் மில்லர் அணிக்கு எப்போது தேவையோ அப்போது இப்படியொரு செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார். எந்த பௌலரை அடிக்கவேண்டும் என்று தேர்வு செய்து அவர் விளையாடினார். இந்த ஆடுகளம் சுழலுக்கு பெரிதாக உதவாது என்று புரிந்து அவர்களை குறி வைத்தார். டெவால்ட் பிரெவிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரிடமிருந்து அவருக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அதனால் அவர்கள் சரிவிலிருந்து மீண்டு ஒரு நல்ல ஸ்கோரை பதிவு செய்தார்கள்.

அதேசமயம் டெவால்ட் பிரெவிஸ் இன்னிங்ஸையும் மறக்கக் கூடாது. ஷிவம் துபே பந்துவீச்சை குறிவைத்து அடித்தார். மில்லருக்கு பக்கபலமாக ஆடினார். எப்போது ஆடுகளத்தில் 'மூவ்மென்ட்' குறைந்ததோ அப்போதிருந்து ஹர்திக் பாண்டியா, வருண், துபே போன்ற பௌலர்களை நன்கு அடித்து ஆடினார்கள்.

மில்லர் - பிரெவிஸ் இணைந்த பிறகு ரன் விகிதம் குறையவேயில்லை. அவர்கள் ரன்ரேட்டை சீராக வைத்திருந்தார்கள். ஒருகட்டத்தில் தென்னாப்பிரிக்கா 140 ரன்கள் தான் எடுக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், 186 என்ற பெரிய ஸ்கோர் எடுக்க அந்த ஜோடியே காரணமாக அமைந்தது.

அவர்கள் ஒரு அணியாக விளையாடினார்கள். அதுதான் எனக்கு அவர்களிடம் பிடித்த விஷயம். எப்போதுமே அவர்கள் அப்படித்தான் ஆடுவார்கள்.

குறிப்பாக, இந்த ஆட்டத்தில் அவர்கள் வருண் சக்கரவர்த்தியை ஆடிய விதம் என்னை மேலும் கவர்ந்தது. அச்சமில்லாமல் அவரை அடித்து ஆடினார்கள். முதல் மூன்று ஓவர்களில் வருண் 39 ரன்கள் கொடுத்துவிட்டார். வருண் இதுபோன்ற ஒரு செயல்பாட்டைக் கொடுப்பது மிகமிக அரிதான நிகழ்வு. அது சரியாக இந்தப் போட்டியில் நடந்துவிட்டது.

'இந்தியாவின் அந்த முடிவு ஒரு புரியாத புதிர்'

இந்த மிடில் ஆர்டர் பார்ட்னர்ஷிப் பற்றி நான் பேசுவதற்கான காரணம் இருக்கிறது. இந்த ஆடும் லெவனைப் பற்றி எனக்குப் புரியாத ஒரு விஷயம் இந்தியா ஏன் குல்தீப் யாதவை இந்தப் போட்டியில் பயன்படுத்தவில்லை என்பது. சமீபகாலமாக இந்திய அணியிடம் ஒரு விஷயத்தைப் பார்க்க முடிகிறது - போட்டிகளில் ஜெயித்தாலும் அந்த காம்பினேஷனை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆமதாபாத் சற்று பெரிய பவுண்டரி எல்லை கொண்ட மைதானம். அங்கு இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் ஆடும் போது குல்தீப் போன்ற ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். டி20 கிரிக்கெட்டில் அவருடைய அருமை பலருக்கும் தெரிவதில்லை. எப்போதுமே 7 - 15 ஓவர்களில் நிலைத்து நின்று ஆடிக் கொண்டிருக்கும் பேட்டர்களின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்திக் கொடுப்பார். மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி அவர் நிச்சயம் தென்னாப்பிரிக்காவுக்கு சவால் கொடுத்திருப்பார். எனக்கு அவரை சேர்க்காதது மிகவும் ஆச்சர்யம்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Matt Roberts-ICC/ICC via Getty Images

படக்குறிப்பு, குல்தீப் யாதவ் இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியிருக்கிறார்

சுழலை எதிர்கொள்வதில் தடுமாற்றம்

ஆனால், இதையெல்லாம் விட இந்திய அணிக்குப் பெரிய சிக்கல் பேட்டிங்கில் தான் இருக்கிறது. ஆஃப் ஸ்பின்னர்கள் தொடர்ச்சியாக இந்திய பேட்டர்களை தடுமாற வைத்திருக்கிறார்கள். இது இந்த உலகக் கோப்பையில் பெரும் பிரச்னையாக மாறிக்கொண்டிருக்கிறது.

இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் இந்திய அணியின் பலம், பலவீனம் பற்றி எழுதியிருந்த கட்டுரையில் ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டிருந்தேன். அதிக இடது கை பேட்டர்கள் இருப்பதால், அது எதிரணிகள் ஒரு திட்டம் தீட்டி செயல்படுத்துவதற்கு ஏதுவாக அமையலாம் என்றும், அவர்கள் ஆஃப் ஸ்பின்னை வைத்து இந்திய பேட்டர்களை டார்கெட் செய்ய முடியும் என்றும் அப்போது நான் குறிப்பிட்டிருந்தேன்.

ஆடுகளங்களில் ஈரப்பதம் இருக்கும்போது, அது ஆஃப் ஸ்பின்னர்களுக்கு இன்னும் உதவிகரமாக அமைந்துவிடுகிறது. பந்து நின்று வரும்போது அது இந்தியாவின் இடது கை பேட்டர்களுக்கு பெரும் எதிரியாக அமைந்துவிடுகிறது. இதை இந்திய அணி சரிசெய்தே தீரவேண்டும். ஆனால், அதற்கான அவகாசம் அவ்வளவாக இருக்காது. அடுத்து இந்தியாவை எதிர்த்து ஆடப்போகும் ஜிம்பாப்வே அணியிலும் சிக்கந்தர் ராஸா போன்ற நல்ல ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். என்ன, இந்த சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்குமா என்று பார்க்கவேண்டும்.

'இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்'

அதேசமயம், இந்தியாவின் இந்தப் பிரச்னைக்கு ஆஃப் ஸ்பின்னர்கள் மட்டும் தான் காரணம் என்று எனக்குத் தோன்றவில்லை. நெருக்கடியோடு விளையாடுவதே இந்த தடுமாற்றத்தின் காரணமோ என்றும் எனக்குத் தோன்றுகிறது.

கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாகவே இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு தொடர்களில் இந்திய அணி மிகவும் உற்சாகமாக விளையாடியது. முன்பெல்லாம் பவர்பிளேவில் எதிரணி பௌலர்களை அநாயசமாக எதிர்கொண்டார்கள். ஆனால், தற்போது உலகக் கோப்பையில் விளையாடுகிறோம் என்று அதிகம் யோசிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. அப்படி யோசித்தால் நிச்சயம் இந்திய அணி கஷ்டப்படவேண்டியிருக்கும்.

சிந்தனைகள் ஏதுமில்லாமல் ஆடியபோது பவர்பிளேவில் சீராக 70, 80 ரன்கள் அடித்த அணி இது. இந்திய அணியால் அதை இன்னும் செய்ய முடியும். ஆனால், அதற்கு அவர்கள் மனதில் எந்த குழப்பமும் இல்லாமல் தங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

நான் இந்த இடத்தில் குறிப்பிடுவது நெருக்கடியை உணராமல் இயல்பாக ஆடும் ஆட்டத்தை. கண்ணை மூடிக்கொண்டு சுத்தவேண்டும் என்று சொல்லவில்லை. அது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சில தருணங்களில் அப்படியும் பேட்டர்கள் விளையாடுகிறார்கள். அங்குதான் ஒரு அடிப்படையான விஷயத்தை யாரும் புரிந்துகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், MB Media/Getty Images

படக்குறிப்பு, தொடர்து மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆன அபிஷேக் ஷர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 15 ரன்கள் எடுத்தார்

'இந்தியாவில் எல்லா ஆடுகளங்களிலும் சற்று ஈரப்பதம் இருக்கவே செய்யும்'

ஐபிஎல் தொடரில் நிறைய 240, 250 போன்ற ஸ்கோர்களைப் பார்த்துவிட்டு நாம் அதைப்பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இப்போதுதான் இந்தியாவில் பனிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதனால் எல்லா ஆடுகளங்களிலும் சற்று ஈரப்பதம் இருக்கவே செய்யும். அந்த வகையில் ஆமதாபாத் ஆடுகளத்தைப் பார்க்கும்போது அதில் வேகம், பவுன்ஸ், 'lateral movement' எல்லாம் இருந்தது. ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சன் என அனைத்து வேகப் பந்துவீச்சாளர்களுமே சிறப்பாக செயல்பட்டார்கள். அதனால் தான் ரசிகர்கள் எதிர்பார்த்த பெரிய ஸ்கோர் வரவில்லை.

என்னைப் பொருத்தவரை இந்திய அணி எதைப் பற்றியும் யோசிக்காமல் ஜாலியாக அவர்கள் பாணியில் ஆட முயற்சி செய்யவேண்டும்.

'அபிஷேக் தனது அச்சமில்லாத அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்'

குறிப்பாக அபிஷேக் ஷர்மா அதைச் செய்யவேண்டும். ஒருவழியாக இந்த உலகக் கோப்பையில் அவர் தன் ரன் கணக்கைத் தொடங்கிவிட்டார். இருந்தாலும் அவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவிலை.

என்ன இருந்தாலும் ஒரு இளம் வீரர் உலகக் கோப்பை என்று வருகையில் நெருக்கடியை உணரவே செய்வார். ஆனால், அவர் அப்படி நினைக்கக்கூடாது. அவரை இந்த இடத்துக்கு கொண்டுவந்திருப்பது அச்சமில்லாமல் ஆடும் அந்த அணுகுமுறை தான். அதையே அவர் இனி தொடர்வது நல்லது. ஒரு போட்டியில் அவர் பேட்டில் பந்து நன்றாகப் பட்டுவிட்டால் போதும், அதன்பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிடும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சாம்சன் மீண்டும் சேர்க்கப்படுவாரா?

இது ஒரு படுதோல்வியாக அமைந்திருந்தாலும், இந்த உலகக் கோப்பையில் இதுதான் இந்தியாவுக்கு முதல் தோல்வி என்பதையும், இத்தனை காலம் இந்த அணி எப்படி ஆடியது என்பதைப் பற்றியும் நாம் மறந்துவிடக்கூடாது. இப்படியான சில தோல்விகள் வரவே செய்யும். இந்த ஃபார்மட்டில் எந்த அணியும் எந்த அணியையும் வென்றுவிட முடியும். அதனால் இந்தியா தோற்பதும் விளையாட்டின் ஒரு பகுதி தான். நாம் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒருசில அணுகுமுறைகளை சரிசெய்தால் ஜிம்பாப்வே உடனான அடுத்த போட்டியில் இந்திய அணி நிச்சயம் பெரிய வெற்றியைப் பெற முடியும்

அந்தப் போட்டிக்கு முன்பு இந்தியா நிச்சயம் அவர்களின் டாப் ஆர்டர் காம்பினேஷன் பற்றி யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன். சஞ்சு சாம்சனை அவர்கள் மறுபடியும் தொடக்க வீரராக்குவார்களா? அது அவர்களுக்கு இடது - வலது காம்பினேஷனைக் கொடுக்கலாம். அப்படியெனில், அவர் அபிஷேக் ஷர்மாவுக்குப் பதில் வருவாரா இல்லை திலக் வர்மாவுக்குப் பதில் வருவாரா என்பதையும் முடிவு செய்யவேண்டும். ஒருபுறம் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடவேண்டும் என்றாலும், இந்தத் தோல்வியை பெரிதுபடுத்தாமலும் இருக்க வேண்டும். மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன்.... இது ஒரு தோல்வி தான்.

(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு