நேரலை, மெக்சிகோ: போதைப்பொருள் கும்பல் தலைவர் கொல்லப்பட்டதால் பதற்றம்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

  • ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களை இந்தியா கண்டித்துள்ளது.
  • மெக்சிகோ போதைப்பொருள் கும்பலின் தலைவர் 'எல் மெஞ்சோ'வை கைது செய்வதற்கான நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பாஃப்தா விருது வென்ற மணிப்பூரி மொழி திரைப்படம்

    மணிப்பூரி மொழி திரைப்படம் பூங், பாஃப்தா விருது

    பட மூலாதாரம், Mike Marsland/WireImage

    2026 ஆம் ஆண்டுக்கான பாஃப்தா (BAFTA - பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அகாடமி) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து சென்ற மணிப்பூரி மொழி திரைப்படமான "பூங்" இந்த விருதை வென்றுள்ளது.

    "சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படம்" பிரிவில் "பூங்" திரைப்படம் விருது வென்றது, இந்த பிரிவில் BAFTA விருதை வென்ற முதல் இந்திய திரைப்படம் இதுவாகும்.

    இந்த ஆண்டு பாஃப்தா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்திய திரைப்படம் இதுவாகும்.

    இந்த படத்தை ஃபர்ஹான் அக்தரின் எக்செல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இதை லட்சுமிப்ரியா தேவி இயக்கியுள்ளார்.

    லண்டனில் உள்ள ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் நடைபெற்ற விழாவில் ஃபர்ஹான் அக்தர், ரித்தேஷ் சித்வானி, லட்சுமிப்ரியா தேவி மற்றும் ஆலன் மெக்அலெக்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  2. 'திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டிருக்கிறோம்' - மனிதநேய மக்கள் கட்சி

    எம்.ஹெச். ஜவாஹிருல்லா

    பட மூலாதாரம், @jawahirullah_MH/twitter

    படக்குறிப்பு, எம்.ஹெச். ஜவாஹிருல்லா

    திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் தருமாறு கேட்டிருப்பதாக, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, திமுகவின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக மனிதநேய மக்கள் கட்சி பாடுபடும்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் பாபநாசம், மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றோம். இந்த முறை 5 தொகுதிகள் வேண்டும் என கோரியிருக்கிறோம். இது முதல்கட்ட பேச்சுவார்த்தைதான். திமுக தலைவரிடமும் எங்கள் கோரிக்கையை எடுத்துச் சொல்வோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறியிருக்கின்றனர்.” என தெரிவித்தார்.

  3. ரயில்வே முன்னாள் அமைச்சர் முகுல் ராய் மரணம்

    முகுல் ராய்

    பட மூலாதாரம், Sanjay Das

    படக்குறிப்பு, முகுல் ராய் மமதா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டார்.

    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும் ரயில்வே முன்னாள் அமைச்சருமான முகுல் ராய் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 71.

    உடல்நலக் குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நீண்ட காலமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    முகுல் ராய் மாரடைப்பால் உயிரிழந்ததாக அந்த மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். அவரது மரணச் செய்தியைக் கேள்விப்பட்டதும், அவரது வீட்டுக்கு வெளியே கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூடினர்.

    முகுல் ராய் உடல் மதியம் 12 மணியளவில் சட்டமன்ற வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார். அங்கு, சபாநாயகர் மற்றும் பலர் அஞ்சலி செலுத்துவார்கள்.

    இதன் பின்னர் உடல் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள காஞ்ச்ரபராவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

    2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக கிருஷ்ணாநகர் வடக்கு தொகுதியில் ராய் வெற்றி பெற்றார். பின்னர், அவர் திரிணாமுல் காங்கிரஸுக்குத் திரும்பினார், ஆனால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை.

    2012 ஆம் ஆண்டு மத்தியில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் சுமார் ஆறு மாதங்கள் ரயில்வே அமைச்சராக இருந்தார்.

  4. மெக்சிகோ: போதைப்பொருள் கும்பல் தலைவர் கொலையால் பதற்றம்

    "எல் மெஞ்சோ" என்று அழைக்கப்படும் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டஸ்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, "எல் மெஞ்சோ" என்று அழைக்கப்படும் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டஸ்

    மெக்சிகோவில் மிகவும் தேடப்பட்ட நபரும், ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ (CJNG) போதைப்பொருள் கும்பலின் தலைவருமான ‘எல் மெஞ்சோ’வை கைது செய்வதற்கான நடவடிக்கையின் போது அவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    "எல் மெஞ்சோ" என்று அழைக்கப்படும் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டஸ் அவரது ஆதரவாளர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான மோதல்களில் பலத்த காயமடைந்தார். பின்னர், தலைநகர் மெக்சிகோ நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

    இதில், மத்திய-மேற்கு ஜாலிஸ்கோ மாகாணமான (state) டபல்பா நகரில் நான்கு அந்த போதைப்பொருள் கும்பலின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். மூன்று ராணுவ வீரர்க;ள காயமடைந்தனர். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா தகவல்களை வழங்கி மெக்சிகோவுக்கு உதவியிருந்தது.

    ‘எல் மெஞ்சோ’ உயிரிழப்புக்கு எதிர்வினையாக, கார்களை தீ வைத்து எரித்தல், சாலையில் தடைகளை ஏற்படுத்துதல் மற்றும் எட்டு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரைத் தாக்குவது போன்ற நடவடிக்கைகளில் அந்த போதைப்பொருள் கும்பல் ஈடுபட்டது.

    ஜாலிஸ்கோ, டமாலிபாஸ் மாகாணங்களிலும், மிக்கோகான், குரேரோ மற்றும் நியூவோ லியோன் ஆகிய சில பகுதிகளிலும் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு தங்குமிடம் தொடர்பான எச்சரிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை விடுத்துள்ளது.

    மெக்சிகோவின் அதிபர் கிளாடியா ஷீன்பாம் பார்டோ மக்களை "அமைதி காக்குமாறு” வலியுறுத்தினார்.

  5. மோதி இஸ்ரேல் செல்வது எப்போது? நெதன்யாகு தகவல்

    இந்தியா - இஸ்ரேல்

    பட மூலாதாரம், Ajay Aggarwal/Hindustan Times via Getty

    இந்தியப் பிரதமர் மோதி புதன்கிழமை இஸ்ரேலுக்கு வருகை தரவிருக்கிறார் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் நெதன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டார், மேலும் இந்த பயணத்தின் "வரலாற்று முக்கியத்துவம்" குறித்தும் அவர் பேசினார்.

    இந்த வருகை குறித்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவின் அடித்தளம் இரண்டு உலகத் தலைவர்களுக்கிடையேயான வலுவான கூட்டணியாகும். புதுமை, பாதுகாப்பு மற்றும் பகிரப்பட்ட மூலோபாய பார்வையில் நாங்கள் கூட்டாளிகளாக உள்ளோம்." என தெரிவித்துள்ளார்.

    "நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு உறுதியளித்த நாடுகளின் கூட்டணியை நாங்கள் உருவாக்கி வருகிறோம். செயற்கை நுண்ணறிவு முதல் பிராந்திய ஒத்துழைப்பு வரை, எங்கள் கூட்டாண்மை தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுகிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    "பிரதமர் மோதி, ஜெருசலேமில் உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!" என்று நெதன்யாகு கூறியுள்ளார்.

    பெஞ்சமின் நெதன்யாகுவின் சமூக ஊடகப் பதிவுக்கு பிரதமர் நரேந்திர மோதி பதிலளித்துள்ளார். இந்தியா-இஸ்ரேல் உறவுகள் குறித்த நெதன்யாகுவின் கருத்துகளுக்கு அவர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

    "இஸ்ரேலுடனான வலுவான மற்றும் நீடித்த நட்புக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த நட்பு பரஸ்பர நம்பிக்கை, புதுமை மற்றும் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பகிரப்பட்ட விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது" என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோதி விரைவில் இஸ்ரேலுக்கு பயணம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், அவர் தனது சமூக ஊடகப் பதிவில் வருகையின் நேரம் அல்லது தேதியைக் குறிப்பிடவில்லை.

    பிரதமர் மோதியின் இஸ்ரேல் பயணம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகமும் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

  6. ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் தாக்கியது பற்றி இந்தியா கூறியது என்ன?

    ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான், இந்தியா கண்டனம்

    பட மூலாதாரம், ANI

    ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களை இந்தியா கண்டித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    "புனித ரமலான் மாதத்தில் ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் உயிரிழப்புக்கு காரணமான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களை இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    "இது பாகிஸ்தானின் உள்நாட்டுத் தோல்விகளுக்கு மற்றவர்களைக் குறைகூற பாகிஸ்தான் மேற்கொண்ட மற்றொரு முயற்சி. ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கான தனது ஆதரவை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது" என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

    ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள 'ஏழு பயங்கரவாத முகாம்களை' குறிவைத்ததாக பாகிஸ்தான் சனிக்கிழமை கூறியது.

    இந்த தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகம் கடுமையாக பதிலளித்ததுடன், 'பொருத்தமான நேரத்தில்' பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்தது.

  7. வணக்கம் நேயர்களே!

    இன்று (23-02-2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குவது நந்தினி வெள்ளைச்சாமி.