எஸ்ஐஆர்: சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க இனி விண்ணப்பிக்க முடியுமா? - 5 கேள்விகள், பதில்கள்

பட மூலாதாரம், Getty Images
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆர்.) பிந்தைய, இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் இன்று வெளியிடப்பட்டது.
சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பிருந்த வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 5,67,07,380 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்ட நிலையில், "இதற்குப் பின்னும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம்" என்று தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் அல்லது இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் தந்த தகவலின்படி, இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பது பற்றி விளக்குகிறது இந்தத் தொகுப்பு.
74 லட்சம் வாக்காளர்கள் குறைவு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 4 என்று காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதன்பின் கணக்கீட்டுப்படிவம் சமர்ப்பிப்பதற்கு டிசம்பர் 14 இறுதிநாளாக அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 19 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியலில் 97.30 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. அதற்குப் பின்பு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் நீக்கவும் முகவரி மாற்றம் செய்யவும் ஜனவரி 30 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. பெயர் சேர்க்க 22.8 லட்சம், நீக்க 2 லட்சம், திருத்தம் செய்ய 9.90 லட்சம் என மொத்தம் சுமார் 34.7 லட்சம் என்ற எண்ணிக்கையில் படிவங்கள் வழங்கப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டன. தேவையான சேர்க்கை மற்றும் மாற்றங்கள் செய்தபின்பு, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
வாக்காளர் எண்ணிக்கை
23.02.2026 அன்றைய நிலவரப்படி தமிழ்நாடு வாக்காளர் எண்ணிக்கை
- மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380
- ஆண்கள்: 2,77,38,925
- பெண்கள்: 2,89,60,838
- மூன்றாம் பாலினத்தவர்: 7,617
- 18-19 வயதுடைய வாக்காளர்கள்: 12.51 லட்சம்
- மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்: 4.63 லட்சம்
- மூத்த குடிமக்கள் (85 வயதுக்கு மேற்பட்டவர்கள்) - 3.99 லட்சம்
சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பு, 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். முன்பிருந்த பட்டியலை விட 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 பேர் குறைவாக உள்ளனர். இது முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட 12 சதவீதம் குறைவாகும்.
தமிழ்நாடு தொகுதிகளில் சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 5,36,991 வாக்காளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகம் விளங்குகிறது. இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 1,16,896.

பட மூலாதாரம், ANI
இனி எப்படி விண்ணப்பிப்பது?
கேள்வி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்பும் இதில் பெயர் சேர்க்க முடியுமா...இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
பதில்: இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருக்கிறதா என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்வது அவசியம். சிலருக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் குறிப்பிட்டு பெயர் தெரியாவிட்டால், தொடர்பு எண்ணைப் பயன்படுத்தி பெயர் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கலாம். சிறப்பு தீவிர திருத்தத்தின்படி, ஏராளமான வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகள் மாற்றப்பட்டிருப்பதை அறியலாம்.
இதன் பின்னரும் மாற்றம் தேவைப்பட்டால் நேரடியாகவும், ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரிக்குச் சென்று, அதில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்த வழிமுறைகள் அதே இணையத்திலேயே (GUIDELINES FOR FILLING UP THE APPLICATION) தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. Voters Helpline என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன்மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்கின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
* அதேபோன்று வெளிநாட்டில் வாழும் இந்தியராக இருந்தால் 6 ஏ என்ற படிவத்தைத் தேர்வு செய்து அதில் உரிய தகவல்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும்.
* இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும், ஒரு வாக்களரின் பெயர் இருமுறையோ அல்லது வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் இடம்பெற்றிருந்தாலோ அவற்றை நீக்கவும் படிவம் 7-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
* வீடு மாறிவிட்டால் முகவரி மாற்றத்துக்கு படிவம் 8-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
* பெயரில் இனிஷியல் இல்லை, எழுத்துப்பிழையாகவுள்ளது, பிறந்த தேதி தவறாகவுள்ளது என்றால் அதற்கும் படிவம் 8 ல் தான் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோன்று வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விட்டது என்றால் புதிதாக விண்ணப்பிக்கவும் இதே படிவத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், தங்களால் வாக்குச்சாவடிக்கு வரமுடியாது என்று வீட்டில் வந்து வாக்குச்சேகரிக்க வேண்டுமென்று கோருவது என மொத்தம் 4 விதமான விண்ணப்பங்களுக்கும் படிவம் 8 பயன்படுகிறது.
இது தவிர நேரடியாகவும் விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகம் செயல்படுகிறது. அங்கு படிவம் 6 ஐ வாங்கி உரிய ஆதார ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கலாம்.
முறைப்படி ஏற்கெனவே விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள், 15 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம். அதிலும் நிராகரிக்கப்பட்டால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, அடுத்த 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கு உள்ள காலக்கெடு என்ன?
கேள்வி: எப்போதிலிருந்து எப்போது வரையிலும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்?
பதில்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நாளிலிருந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரையிலும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தாலும், உரிய ஆவணங்களுடன் சரியான முறையில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கேள்வி: ஆன்லைன் முறையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்களை இணைக்க வேண்டும்?
பதில்: தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆதார், ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை ஸ்கேன் செய்து படிவத்தைச் சமர்ப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்ப்பதற்கு பிறப்புச்சான்றிதழ் அல்லது பள்ளி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். புகைப்படம் மட்டும் வெள்ளை பின்னணியில் (white background photo) எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

கேள்வி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்ட நிலையில். இனிமேல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் வாக்காளர்களின் பெயர்கள் எந்தப் பட்டியலில் இடம் பெறும்...அது எப்போது வெளியாகும்?
பதில்: இனிமேல் வேறு எந்த வாக்காளர் பட்டியலும் வெளியாகாது. இப்போது வெளியாகியிருப்பதே இறுதி வாக்காளர் பட்டியல். ஆனால் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பவர்களின் படிவங்கள், ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு, இணைப்புப் பட்டியலாகத் தயாரிக்கப்படும். அது அந்தந்த வாக்குச்சாவடிக்கு மட்டும் அனுப்பப்படும்.
கேள்வி: வாக்காளர் இணைப்புப் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
பதில்: இதற்காக விண்ணப்பிக்கும் அதே இணைய முகவரியில் (https://voters.eci.gov.in/) நமது விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி 24x7 என முழுநேரமும் இயங்கும் மாவட்ட தொடர்பு மையங்களை 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் நமது விண்ணப்பத்தின் நிலையை அறியமுடியும். மாநில தொடர்பு மையத்தையும் 1800 4252 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்கின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












