விஜயின் ஜன நாயகன் திரைப்படம் வெளியீடு ஒத்திவைப்பு - காரணம் என்ன?

ஜன நாயகன் பட வழக்கில் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் என்ன?

பட மூலாதாரம், KVN PRODUCTIONS

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

இயக்குநர் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருந்த ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனத்தில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9-ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "கனத்த இதயத்துடன் இந்த தகவலை பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9-ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜன நாயகன் திரைப்பட வெளியீடு நமது கட்டுப்பாட்டை மீறிய தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தைச் சுற்றிய எதிர்பார்ப்பு, ஆர்வம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாக புரிந்துகொள்கிறோம். இந்த முடிவு நம் யாருக்குமே எளிதான ஒன்று அல்ல. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

அது வரை உங்களுடைய பொறுமையையும், நீடித்த அன்பையும் கோருகிறோம். உங்களின் ஆதரவு தான் எங்களுக்கும், ஒட்டுமொத்த ஜனநாயகன் படக்குழுவுக்கும் மிகப்பெரிய பலம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நாளை (ஜனவரி 9) தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

ஜன நாயகன் கேவிஎன் புரொடக்ஷன்ஸ்

பட மூலாதாரம், KVN Productions

படக்குறிப்பு, ஜன நாயகன் திரைப்பட தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை

ஜன நாயகன் திரைப்படத்திற்கு என்ன சிக்கல்?

"அனைத்தும் விநோதமாக உள்ளது. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்குவதற்கு முடிவு செய்த பிறகு மறுஆய்வுக்கு அனுப்பியது ஏன்.. மறுஆய்வுக்கு அனுப்புவது குறித்து தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்?" - 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கில் நீதிபதி பி.டிஆஷா எழுப்பிய கேள்விகள் இவை.

ஆனால், அனைத்தும் சட்டப்படி நடந்து வருவதாக மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (சிபிஎப்சி) சார்பில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஜனவரி 9 அன்று வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது.

இந்தச் சூழலில் தான் ஜனநாயகன் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் திரைப்பட வெளியீடு தாமதமாவதற்கான காரணம் என எதையும் அந்நிறுவனம் குறீப்பிடவில்லை. "கட்டுப்பாட்டை மீறிய தவிர்க்க முடியாத காரணங்கள்" என்று மட்டுமே கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

ஜனநாயகன் படம் வெளியாகுமா? நீதிமன்றத்தில் நடந்த வாதம் என்ன?

பட மூலாதாரம், KVN PRODUCTIONS

நீதிமன்றத்தில் நடந்த விசாரணை

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ஜனநாயகன் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் வரும் 9-ஆம் தேதியன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால், 'படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை' எனவும் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரியும் கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

ஜனவரி 6 அன்று நீதிபதி பி.டி.ஆஷா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ''படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (சிபிஎப்சி) வாரியம் கூறியது. அதனையேற்று அந்தக் காட்சிகளை படக்குழு நீக்கியது. அதன்பிறகும் சான்றிதழ் வழங்கப்படவில்லை'' என, படத் தயாரிப்பு குழு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

வாரியம் தெரிவித்த அனைத்து நடைமுறைகளை பின்பற்றியும் யாரோ ஒருவர் புகார் அளித்துள்ளதாகக் கூறி தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இருப்பதாகவும் அவர் வாதிட்டார்.

அப்போது சிபிஎப்சி சார்பில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் படத்தை மறுஆய்வுக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.

அப்போது, படத்தை 500 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருப்பதாக படத்தின் தயாரிப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய மத்திய அரசின் வழக்கறிஞர், "ஒரு கோடி ரூபாயில் படம் எடுத்தாலும் 500 கோடி ரூபாயில் படத்தை எடுத்தாலும் குறிப்பிட்ட காலத்துக்குள் சான்றிதழ் வழங்குமாறு நிர்பந்திக்க முடியாது" என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, படத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை ஜனவரி 7 ஆம் தேதியன்று அன்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, "பட வெளியீட்டை ஏன் தள்ளிவைக்கக் கூடாது" எனக் கூறிய நீதிபதி, "தை பிறந்தால் வழி பிறக்குமே?" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "படத்தின் வெளியீட்டு தேதியை ஏற்கெனவே அறிவித்துவிட்டோம்" எனத் தெரிவித்தார்.


ஜனநாயகன்

பட மூலாதாரம், KVN PRODUCTIONS

மறு ஆய்வுக்கு காரணம் என்ன?

புதன்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'ஜனநாயகன் படத்துக்கு எதிராக இமெயில் மூலம் பெறப்பட்ட புகாரின் நகல் உள்பட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக', மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி பி.டி.ஆஷா, "திரைப்படத்தை மறுஆய்வு செய்வதற்கு அந்தப் புகார் மட்டும் தான் அடிப்படையாக உள்ளது.'' என்றார்

ஜனநாயகன் படம் வெளியாகுமா? நீதிமன்றத்தில் நடந்த வாதம் என்ன?

பட மூலாதாரம், KVN PRODUCTIONS

வாரியம் சொன்னது என்ன?

"படத்தை ஆய்வு செய்த குழுவில் இருந்தவர் அளித்த புகார் ஏற்கத்தக்கதா?" எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, "அனைத்தும் விநோதமாக உள்ளது. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்குவதற்கு முடிவு செய்த பிறகு மறுஆய்வுக்கு அனுப்பியது ஏன் எனவும் மறுஆய்வுக்கு அனுப்புவது குறித்து தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

''ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளில் திருப்தி இல்லையென்றால் மறுஆய்வுக்குழுவுக்கு படத்தை அனுப்புவதற்கு வாரிய தலைவருக்கு அனுமதி உள்ளது'' எனக் கூறினார் மத்திய அரசு வழக்கறிஞர்.

மேலும், ஜனநாயகன் படத்தில் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கான நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனவும் வாதிட்டார்.

படத்துக்கு சான்றிதழ் வழங்குவதற்கு முன்பும் மறுப்பு தெரிவிப்பதற்கு முன்பு நீதிமன்றதை மனுதாரர் அணுக முடியாது என வாதிட்ட அரசு வழக்கறிஞர் ''சட்டவிதிகளைப் பின்பற்றியே அனைத்தும் நடந்துள்ளது. ஜனவரி 5 ஆம் தேதியே இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது'' எனக் கூறினார்.

"வாரியத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது" என வாதிட்ட அவர், "இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை" எனக் கூறினார்.

"மறுஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல" எனக் கூறிய அவர், " வாரிய தலைவருக்குத் தான் அதிகாரம் உள்ளது" எனவும் வாதிட்டார்.

படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மறுஆய்வு குறித்து ஏன் தெரிவிக்கவில்லை என வாரியத்திடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, "மறுஆய்வு குறித்து முன்கூட்டியே அவர்கள் எச்சரிக்கப்படவில்லை" எனவும் தெரிவித்தார்.

ஜனநாயகன் படம் வெளியாகுமா? நீதிமன்றத்தில் நடந்த வாதம் என்ன?

பட மூலாதாரம், KVN PRODUCTIONS

'அனைத்தும் ரகசியம்' - படக்குழு முன்வைத்த வாதம் என்ன?

படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் மோகன் பராசரன், "திரைப்படத்தைப் பார்த்த அந்த உறுப்பினர் பரிந்துரைகளை மட்டுமே அளித்திருக்க முடியும். புகார் அளித்திருக்க முடியாது. இங்கு என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை" என வாதிட்டார்.

"குழுவின் உறுப்பினர் தற்போது புகார்தாரராகிவிட்டார். இது எப்படி நடந்தது எனத் தெரியவில்லை" எனக் கூறிய அவர், " வாரியம் தனது முடிவை மறுஆய்வு செய்ய முடியாது. பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர்" எனக் கூறினார்.

குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் புகார் அளித்தார் என்பதே இன்று தான் தெரியவந்ததாகக் கூறிய மோகன் பராசரன், "ஐந்தில் நான்கு உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை முடிவுக்கு மாறாக ஒரு உறுப்பினர் மட்டுமே ஆட்சேபம் தெரிவித்துள்ளார் என்றால் படத்தை எப்படி மறுஆய்வுக்கு அனுப்ப முடியும்?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது என ஒரே ஒரு உறுப்பினர் எவ்வாறு கூற முடியும் எனவும் படத் தயாரிப்புக் குழு கேள்வி எழுப்பியது. மேலும், இந்த முழு நடவடிக்கையும் யாருடைய கவனத்துக்கும் வராமல் ரகசியமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைப்பதாக நீதிபதி பி.டி.ஆஷா தெரிவித்தார். ஜனவரி 9 ஆம் தேதியன்று வழக்கில் தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்த சூழலில் தான் திரைப்பட வெளியீட்டை தள்ளி வைப்பதாக படக்குழு கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு