திப்பு சுல்தான் வீழ்ச்சிக்கு பிறகு கிடைத்த செல்வம் – ஹைதராபாத் நிஜாம் உருவாக்கியது என்ன?

திப்பு சுல்தான் வீழ்ச்சிக்கு பிறகு கிடைத்த செல்வம் – ஹைதராபாத் நிஜாம் உருவாக்கியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஹைதராபாத்தில் உள்ள மீராலம் ஏரியின் மீது ஒரு கேபிள் பாலம் அமைக்க தெலங்கானா மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது.

இது கட்டி முடிக்கப்பட்டால், துர்கம் செருவுக்கு அடுத்தபடியாக ஹைதராபாத்தில் மற்றுமொரு கேபிள் பாலம் பயன்பாட்டிற்கு வரும்.

இந்த மீராலம் ஏரிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மைசூர் போருக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது.

திப்பு சுல்தானை தோற்கடித்த பிறகு கிடைத்த செல்வத்தின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி அந்த நேரத்தில் மீராலம் ஏரி கட்டப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மூன்றாவது நிஜாமின் திவானாக (பிரதமராக) பணியாற்றிய மீர் ஆலம் என்பவரின் பெயரில் இந்த ஏரி கட்டப்பட்டதை வரலாற்று ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

பரிசுப் பணத்தில் கட்டப்பட்ட ஏரி

மீராலம் ஏரி மூன்றாவது நிஜாம் சிக்கந்தர் ஜா (மூன்றாவது ஆசஃப் ஜா) ஆட்சியின்போது கட்டப்பட்டது.

மீர் ஆலம், 1804-1808 காலகட்டத்தில் ஹைதராபாத் சமஸ்தானத்தின் திவானாக பணியாற்றினார்.

மீராலம் ஏரியை கட்டமைப்பதற்கு, 1804ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், அது இரண்டு ஆண்டுகளில், அதாவது 1806ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதிக்குள் கட்டி முடிக்கப்பட்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் காட்டுகின்றன.

திப்பு சுல்தானை வீழ்த்தியதில் கிடைத்த செல்வம் – மீராலம் ஏரியை கட்டிய ஹைதராபாத் நிஜாம்

ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியர் முகமது சஃபியுல்லா, இந்த ஏரியின் கட்டுமானத்தில் திப்பு சுல்தானுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறுகிறார்.

"திப்பு சுல்தான் 1799இல் நடந்த நான்காவது ஆங்கிலே-மைசூர் போரில் உயிரிழந்தார். திப்பு சுல்தான் பேரரசின் செல்வங்களில் சிலவற்றை ஆங்கிலேயர்கள் ஹைதராபாத் நிஜாமுக்கு பரிசாக அளித்தனர். பின்னர், அந்தச் செல்வத்தில் இருந்து ஒரு பகுதி பணம் ஏரி அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. அந்த ஏரி திவான் மீர் ஆலமால் உருவாக்கப்பட்டது," என்று விவரித்தார் சஃபியுல்லா.

பொருளாதார மற்றும் சமூக ஆய்வுகளுக்கான மையத்தின் பேராசிரியர் சிகுருபதி ராமச்சந்திரையா, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் பிராந்திய ஆய்வுகள் மையத்தின் பேராசிரியர் ஷீலா பிரசாத் ஆகியோர் தங்கள் ஆய்வுக் கட்டுரையில், மீர் ஆலம் தாமே இந்த ஏரியின் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டதாக எழுதியுள்ளனர்.

ஸ்ரீரங்கப்பட்டணத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு கிடைத்த பரிசுப் பணத்தைக் கொண்டு அதன் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திப்பு சுல்தானை வீழ்த்தியதில் கிடைத்த செல்வம் – மீராலம் ஏரியை கட்டிய ஹைதராபாத் நிஜாம்

பட மூலாதாரம், fb/Mohammed Riyaz Ali

நிஜாமின் ராணுவத்தை வழிநடத்திய மீர் ஆலம்

நான்காவது ஆங்கிலேய -மைசூர் போர் 1799இல் நடந்தது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அப்போதைய ஹைதராபாத் நிஜாம் பிரிட்டிஷ் படைகளுக்கு ஆதரவளித்தார். நிஜாமின் ராணுவம் திப்புவுக்கு எதிராக பிரிட்டிஷ் படையுடன் இணைந்து போரிட்டது.

திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப்பட்டணம் போரில் உயிரிழந்தார்.

இந்தப் போரில் மீர் ஆலம் நிஜாமின் ராணுவத்தை வழிநடத்தினார். 'நிஜாம், அவரது வரலாறு மற்றும் பிரிட்டிஷ் அரசுடனான அவரது உறவுகள் என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளபடி, இந்தச் செயல்பாட்டின் மூலம் மீர் ஆலம் அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலான லார்ட் வெல்லஸ்லியுடன் மிகவும் நெருக்கமானார்.

பின்னர், மீர் ஆலம் நிஜாம் அரசாங்கத்தின் திவான் ஆவதற்கு பிரிட்டிஷார் பெரிதும் ஊக்கமளித்ததாக அந்தப் புத்தகத்தில் நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

மீர் ஆலம் திவானான பிறகு, ஏற்கெனவே இருந்த உசேன் சாகரில் அல்லாமல், மூசி ஆற்றின் தெற்குப் பக்கத்தில் மற்றொரு நீர்த்தேக்கத்தைக் கட்ட முடிவு செய்யப்பட்டது.

மீராலம் ஏரி கட்டப்பட்ட பிறகு, நிஜாம் காலத்தில் இந்த ஏரி குடிநீர் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

திப்பு சுல்தானை வீழ்த்தியதில் கிடைத்த செல்வம் – மீராலம் ஏரியை கட்டிய ஹைதராபாத் நிஜாம்

"குதுப் ஷாஹிகளின் காலத்தில், உசேன் சாகர் கட்டப்பட்டது. அதிலிருந்து குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. ஆசஃப் ஜாஹிகளின் காலத்தில், அதாவது, 1724க்கு பிறகு, உசேன் சாகர் தவிர பழைய நகரத்தில் மற்றொரு ஏரி இருக்க வேண்டுமென்று கருதப்பட்டது."

"உசேன் சாகர் தொலைவில் இருந்ததால், மீர் ஆலம் ஏரியைக் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அது கட்டி முடிக்கப்பட்டதும், அக்காலத்தின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அந்த ஏரி முக்கியப் பங்காற்றியது," என்று ஹைதராபாத்தை சேர்ந்த வரலாற்றாசிரியர் பரவஸ்து லோகேஷ்வர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த ஏரியைக் கட்டமைப்பதில் பிரெஞ்சு பொறியாளர்கள் பங்களித்ததாக வரலாறு கூறுகிறது.

'நிஜாம், அவரது வரலாறு மற்றும் பிரிட்டிஷ் அரசுடனான அவரது உறவுகள்' என்ற புத்தகத்தில், மீர் ஆலம் அந்த நேரத்தில் பிரிட்டிஷார் மற்றும் பிரெஞ்சுகாரர்களுடன் நல்ல உறவுகளைக் கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.ஜே.எம். ரேமண்ட் என்பவர் மீர் ஆலம் ஏரியின் கட்டடக் கலைஞராக இருந்துள்ளார்.

திப்பு சுல்தானை வீழ்த்தியதில் கிடைத்த செல்வம் – மீராலம் ஏரியை கட்டிய ஹைதராபாத் நிஜாம்

நிஜாம்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்த ஏரி

சிகுருபதி ராமச்சந்திரையா மற்றும் ஷீலா பிரசாத் எழுதிய 'நீர்த்தேக்கங்களின் மீது நகர்ப்புற வளர்ச்சியின் தாக்கம் – ஹைதராபாத்தில் ஓர் ஆய்வு' என்ற தலைப்பிலான ஓர் ஆய்வுக் கட்டுரை, ஜனவரி 2008இல் வெளியிடப்பட்டது.

மீராலம் ஏரியின் கட்டுமானம் நிறைவடைந்தபோது, அந்த ஏரியின் சுற்றளவு 8 மைல்களாக இருந்ததாக இந்த ஆய்வுக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது. 1960கள் மற்றும் 1970கள் வரை, மீராலம் ஏரியில் இருந்து நகரின் பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டதாக பரவஸ்து லோகேஷ்வர் கூறுகிறார்.

"நாங்கள் மீராலம் ஏரியின் நீரைக் குடித்தோம். அப்போது அதில் இருந்த நீர் மிகவும் தூய்மையாக இருந்தது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய நீரியல் நிறுவனத்தின் 2005ஆம் ஆண்டு அறிக்கை, மீராலம் ஏரியின் நீர் மாசுபட்டுவிட்டதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

திப்பு சுல்தானை வீழ்த்தியதில் கிடைத்த செல்வம் – மீராலம் ஏரியை கட்டிய ஹைதராபாத் நிஜாம்

மீராலம் ஏரிக்கு அருகில் காய்கறித் தோட்டங்கள் இருந்ததாகவும், அந்த நீரின் உதவியுடன் காய்கறிகள் பயிரிடப்பட்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

"மீராலம் ஏரியின் நீர் உதவியுடன் பயிரிடப்பட்ட காய்கறிகள் அருகிலேயே கொண்டு வந்து விற்கப்பட்டன. படிப்படியாக, அது மீராலம் மண்டி ஆனது," என்கிறார் பரவஸ்து லோகேஷ்வர்.

மீராலம் ஏரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே, நேரு உயிரியல் பூங்காவை ஒட்டி அமைந்துள்ளது.

மீராலம் ஏரி அதிகளவில் மாசடைந்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு