இரான் அரசியலில் மீண்டும் நுழைய முயலும் நாடு கடத்தப்பட்ட முன்னாள் இளவரசர் ரெசா பஹ்லவி

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், பிபிசி பாரசீக சேவை
- பதவி,
இரானின் கடைசி ஷா-வின் (மன்னர்) மகனான ரெசா பஹ்லவி, அந்நாட்டில் சமீபத்தில் வெடித்த போராட்ட அலைகளின் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையன்று ஒரு பெரிய புதிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியால் பதவியிறக்கப்பட்ட மன்னரின் மூத்த மகனான இவர் யார்?
பிறந்தது முதலே இரானின் 'மயில் சிம்மாசனத்தை' அலங்கரிக்கத் தயார் செய்யப்பட்ட ரெசா பஹ்லவி, 1979ஆம் ஆண்டு புரட்சி அவரது தந்தையின் முடியாட்சியைத் தூக்கியெறிந்தபோது, அமெரிக்காவில் போர் விமானி பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்த அவரது தந்தை முகமது ரெசா ஷா பஹ்லவி, தஞ்சம் புக வேறு நாடு கிடைக்காமல் திணறியதையும், இறுதியில் எகிப்தில் புற்றுநோயால் இறந்ததையும் அவர் தொலைவில் இருந்து கவனித்தார்.
அதிகாரத்தை திடீரென இழந்தது இளம் இளவரசரையும் அவரது குடும்பத்தையும் நாடற்றவர்களாக்கியது; நாடுகடத்தப்பட்ட நிலையில் ஒரு சில ஆதரவாளர்களையும் நலம் விரும்பிகளையும் மட்டுமே அவர்கள் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.
அடுத்தடுத்த தசாப்தங்களில், அவரது குடும்பத்தை ஒன்றுக்கு மேற்பட்ட முறை சோகங்கள் தாக்கின. அவரது தங்கை, தம்பி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர், வரலாறாகிவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு வம்சத்தின் அடையாளத் தலைமையாக அவரை மாற்றியது.
தற்போது 65 வயதாகும் ரெசா பஹ்லவி, மீண்டும் தனது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒரு பங்கை வகிக்க முயல்கிறார்.
வாஷிங்டன் டி.சி.க்கு அருகிலுள்ள ஓர் அமைதியான புறநகர்ப் பகுதியில் உள்ள இல்லத்தில் வசிக்கும் அவர் "அடக்கமானவர் மற்றும் எளிதில் அணுகக்கூடியவர். உள்ளூர் சிற்றுண்டிச் சாலைகளுக்கு அடிக்கடி செல்பவர், பெரும்பாலும் அவரது மனைவி யாஸ்மினுடன் எவ்வித வெளிப்படையான பாதுகாப்புமின்றி செல்வார்" என்று அவரது ஆதரவாளர்கள் விவரிக்கின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டில், இரானின் போராட்ட இயக்கத்தின் தலைவராக உங்களைக் கருதுகிறீர்களா என்று வழிப்போக்கர் ஒருவர் கேட்டபோது, அவரும் யாஸ்மினும் ஒரே குரலில்: "மாற்றம் உள்ளிருந்தே வர வேண்டும்" என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு திருப்புமுனை
இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் அவரது தொனி மிகவும் உறுதியானதாக மாறியுள்ளது. 2025ஆம் ஆண்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பல மூத்த இரானிய ஜெனரல்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாரிஸில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பஹ்லவி பேசுகையில், இஸ்லாமிய குடியரசு வீழ்ந்தால் ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்துவதற்குத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அதன் பின்னர் இடைக்கால நிர்வாகத்திற்கான 100 நாள் திட்டத்தை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
நாடுகடத்தப்பட்ட காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அவரது தந்தை விட்டுச் சென்ற "முடிக்கப்படாத பணி" ஆகியவற்றில் இருந்தே இந்தப் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக பஹ்லவி வலியுறுத்துகிறார்.
"இது கடந்த காலத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது அல்ல," என்று அவர் பாரிஸில் செய்தியாளர்களிடம் கூறினார். "இது அனைத்து இரானியர்களுக்கும் ஒரு ஜனநாயக எதிர்காலத்தை உறுதி செய்வதைப் பற்றியது."

பட மூலாதாரம், UPI/Bettmann Archive/Getty Images
ராஜரீக வளர்ப்பு
கடந்த 1960ஆம் ஆண்டு அக்டோபரில் தெஹ்ரானில் பிறந்த பஹ்லவி, ஷா மன்னரின் முந்தைய இரண்டு திருமணங்களிலும் ஆண் வாரிசு இல்லாத நிலையில் பிறந்த ஒரே மகன் ஆவார்.
அவர் அனைத்து சலுகைகளுடனும் வளர்ந்தார், தனியார் ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்பட்டு, சிறு வயதில் இருந்தே முடியாட்சியைப் பாதுகாப்பதற்கான பயிற்சியைப் பெற்றார்.
அவர் 17 வயதில், போர் விமானியாகப் பயிற்சி பெற டெக்சாஸுக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அவர் பணிக்குத் திரும்புவதற்கு முன்பே, புரட்சி அவரது தந்தையின் ஆட்சியை வீழ்த்தியது.
அப்போதிருந்து, பஹ்லவி அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் அரசியல் அறிவியலைப் பயின்றார், ஒரு வழக்கறிஞரும் இரானிய-அமெரிக்கருமான யாஸ்மினை திருமணம் செய்து கொண்டார்; இவர்களுக்கு நூர், இமான், ஃபாரா என மூன்று மகள்கள் உள்ளனர்.
பிளவுபட்ட மரபு
புகலிட வாழ்க்கையை வாழும் நிலையிலும், முடியாட்சி ஆதரவாளர்களுக்கு பஹ்லவி ஒரு வலுவான அடையாளமாகத் திகழ்கிறார். பலர் பஹ்லவி காலத்தை விரைவான நவீனமயமாக்கல் மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான நெருக்கமான உறவுகளின் காலமாக நினைக்கிறார்கள்.
மற்றவர்களோ, அந்தக் காலத்தைச் தணிக்கை முறை மற்றும் எதிர்ப்பை ஒடுக்கப் பயன்படுத்தப்பட்ட, மனித உரிமை மீறல்களுக்குப் பெயர் பெற்றிருந்த பயங்கரமான 'சவாக்' ரகசிய காவல்துறை ஆகியவற்றால் குறிக்கப்பட்ட காலமாக நினைவு கூர்கிறார்கள்.
பல ஆண்டுகளாக, இரானுக்குள் அவரது செல்வாக்கு ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது. 1980ஆம் ஆண்டில், கெய்ரோவில் அடையாள ரீதியான முடிசூட்டு விழாவை நடத்தி, தன்னை ஷா மன்னராக அறிவித்துக் கொண்டார். இது நடைமுறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவரது தற்போதைய ஜனநாயக சீர்திருத்தச் செய்தியை இது பலவீனப்படுத்துவதாகச் சில எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2013இல் தொடங்கப்பட்ட 'சுதந்திர தேர்தல்களுக்கான இரானின் தேசிய கவுன்சில்' உள்பட, எதிர்க்கட்சிக் கூட்டணிகளை உருவாக்க அவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை உட்கட்சி மோதல்கள் மற்றும் இரானுக்குள் போதிய ஆதரவு இல்லாத காரணங்களால் சிரமப்பட்டன.
நாடு கடத்தப்பட்ட சில எதிர்ப்புக் குழுக்களைப் போலன்றி, பஹ்லவி தொடர்ந்து வன்முறையை நிராகரித்து வருகிறார். மேலும் 'முஜாஹிதீன்-இ கல்க்' போன்ற ஆயுதமேந்திய அமைப்புகளிடம் இருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளார்.
அவர் அமைதியான ஆட்சி மாற்றம் மற்றும் இரானின் எதிர்கால அரசியல் முறையைத் தீர்மானிக்க ஒரு தேசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்.

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock
வெளிநாட்டில் சர்ச்சை
பஹ்லவி சமீபத்திய ஆண்டுகளில் புதிய கவனத்தைப் பெற்றுள்ளார். 2017ஆம் ஆண்டு அரசு எதிர்ப்புப் போராட்டங்களின் போது "ரெசா ஷா, உங்கள் ஆன்மா ஆசீர்வதிக்கப்படட்டும்" (அவரது தாத்தாவை குறிக்கும் வாசகம்) என்ற முழக்கங்கள் மீண்டும் எழுந்தன.
கடந்த 2022ஆம் ஆண்டில் போலீஸ் காவலில் மாசா அமினி கொல்லப்பட்டது நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டியது. இது அவரை மீண்டும் ஊடக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
சிதறிக் கிடக்கும் இரானின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் அவரது முயற்சி சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றாலும், இறுதியில் அந்த வேகத்தைத் தக்கவைக்க முடியவில்லை. 40 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தும், அவரால் ஒரு நிலையான அமைப்பையோ அல்லது ஒரு சுதந்திரமான ஊடகத்தையோ இன்னும் உருவாக்க முடியவில்லை என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
கடந்த 2023இல் அவர் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட சர்ச்சைக்குரிய பயணம் கருத்துகளை மேலும் பிளவுபடுத்தியது. பஹ்லவி ஒரு இனப்படுகொலை நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார். சில இரானியர்கள் இதை ஒரு நடைமுறை ரீதியான அணுகுமுறையாகப் பார்த்தனர்; மற்றவர்கள் இது இரானின் அரபு மற்றும் முஸ்லிம் நட்பு நாடுகளை அந்நியப்படுத்தும் செயலாகக் கருதினர்.
இரானுக்குள் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, அவர் கடினமான கேள்விகளை எதிர்கொண்டார்.
பிபிசியின் லாரா குயின்ஸ்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில், பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலிய தாக்குதல்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது.
சாதாரண இரானியர்கள் இலக்கு அல்ல என்று அவர் கூறியதோடு, "ஆட்சியைப் பலவீனப்படுத்தும் எதுவாக இருந்தாலும்" அது இரானுக்குள் இருக்கும் பலரால் வரவேற்கப்படும் என்று கூறினார். இந்த கருத்துகள் கடுமையான விவாதங்களைத் தூண்டின.

எழுதப்படாத எதிர்காலம்
இன்று, பஹ்லவி தன்னை ஒரு வருங்கால மன்னராகக் காட்டிக் கொள்ளாமல், தேசிய நல்லிணக்கத்திற்கான ஓர் அடையாளமாக முன்னிறுத்துகிறார்.
இரானை சுதந்திரமான தேர்தல்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் பெண்களுக்கு சமமான உரிமைகள் ஆகியவற்றை நோக்கிய பாதையில் வழிநடத்த உதவ விரும்புவதாகவும், அதே நேரத்தில் மீண்டும் முடியாட்சியைக் கொண்டு வருவதா அல்லது குடியரசை நிறுவுவதா என்பது குறித்த இறுதி முடிவை ஒரு நாடு தழுவிய வாக்கெடுப்பிற்கு விட்டுவிடுவதாகவும் அவர் கூறுகிறார்.
அவரது ஆதரவாளர்கள் அவரை மட்டுமே நாடு முழுவதும் அறியப்பட்ட மற்றும் அமைதியான மாற்றத்திற்காக நீண்டகாலமாக உழைக்கும் ஒரே எதிர்க்கட்சி ஆளுமையாகப் பார்க்கிறார்கள். ஆனால், அவர் இன்னும் வெளிநாட்டு ஆதரவையே அதிகம் நம்பியிருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் பல தசாப்த கால அரசியல் கொந்தளிப்பால் சோர்வடைந்துள்ள இரானுக்குள் இருக்கும் மக்கள், நாடு கடத்தப்பட்ட ஒரு தலைவரை நம்பத் தயாராக இருக்கிறார்களா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இரானிய அரசாங்கம் அவரை ஓர் அச்சுறுத்தலாகச் சித்தரித்தாலும், ஒரு திறந்த அரசியல் களம் மற்றும் நம்பகமான கருத்துக் கணிப்புகள் இல்லாமல் அவரது உண்மையான ஆதரவை அளவிடுவது சாத்தியமற்றது.
சில இரானியர்கள் இன்னும் அவரது குடும்பப் பெயரை மதிக்கிறார்கள்; மற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படாத ஓர் ஆட்சியாளருக்குப் பதிலாக, ஜனநாயகப் போர்வைக்குள் இருந்தாலும் மற்றொரு தேர்வு செய்யப்படாத ஆட்சியாளர் வருவதை எண்ணி அஞ்சுகிறார்கள்.
கெய்ரோவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பஹ்லவியின் தந்தையுடைய உடல் ஒரு நாள் அடையாள ரீதியாக இரானுக்கு திரும்பும் என்று முடியாட்சி ஆதரவாளர்கள் நம்பிக் காத்திருக்கிறார்கள்.
நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் அந்த நாளை - அல்லது ஒரு சுதந்திர இரானை - எப்போதாவது காண்பாரா என்பது, தனது கடந்த காலத்துடன் இன்னும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தைப் பற்றிய பல பதிலளிக்கப்படாத கேள்விகளில் ஒன்றாகவே உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு








