காலமானார் நல்லகண்ணு : மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

காலமானார் நல்லகண்ணு கோப்புப்படம்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, இரா.நல்லகண்ணு (கோப்புப்படம்)
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார் அவருக்கு வயது 101.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், " நல்லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தது. " என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்," பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது." என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

'அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு 25. 02. 2026 அன்று பிற்பகல் 1. 55 மணியளவில் காலமானார்.' என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

'நூற்றாண்டு' கண்ட நல்லகண்ணு

தமிழ்நாட்டுக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்டதாகக் கூறி கடந்த 2022ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

இதற்காகத் தனக்குக் கொடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் தன்னுடைய பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே நல்லகண்ணு வழங்கினார்.

நல்லகண்ணுவின் ஆரம்ப கால வாழ்க்கை

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார்.

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த நல்லகண்ணுவுக்கு பொதுவுடைமைக் கருத்துகளை பள்ளி ஆசிரியராக இருந்த பலவேசம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர் நல்லகண்ணு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமன்றி இதர கட்சிகளின் தலைவர்களும் 'தோழர் ஆர்.என்.கே' என்ற அடைமொழியோடு அவரை அழைக்கின்றனர்.

கடந்த 1943ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு, இன்றுவரை அதே கட்சியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கினார்.

அதுகுறித்து முன்பு கலந்துரையாடல் ஒன்றில் நினைவுகூர்ந்த நல்லகண்ணு, "என்னுடைய 16 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயன்றேன். அவர்கள் என்னைச் சேர்க்கவில்லை. '18 வயது ஆகட்டும், சேர்த்துக் கொள்கிறோம்' என்றனர். 18 வயது வந்ததும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தேன்" என்றார்.

நல்லகண்ணு தொடர்பாக பிபிசி தமிழின் செய்தியாளர்களிடம் கடந்த காலங்களில் இடது சாரி அமைப்புகளின் நிர்வாகிகள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இந்த கட்டுரையின் பின்வரும் பத்திகளில் காணலாம்.

"பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக நல்லகண்ணு இருந்தார். அதன்பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறினார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். திருநெல்வேலியில் நடந்த சுதந்திர போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார்" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் லெனின்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

நெல்லை சதி வழக்கு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சில ஆண்டுகளில் நல்லகண்ணுவுக்கு கிளைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1948ஆம் ஆண்டில் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது.

ஆயுதம் தாங்கிய போராட்டமாக இது இருந்ததாகக் கூறும் லெனின், "இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டார். அவரது மீசையை போலீஸ்காரர்கள் சுருட்டை வைத்துப் பொசுக்கினர். ஆனாலும், சக தோழர்களை அவர் காட்டிக் கொடுக்கவில்லை" என்றார்.

இந்த வழக்கில் ஏழு ஆண்டுகள் நல்லகண்ணு சிறையில் இருந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு அன்னசாமி என்பவர், தனது மகள் ரஞ்சிதத்தை திருமணம் செய்து கொடுத்தார். இந்தத் திருமணம் 1958ஆம் ஆண்டு நடந்தது.

இதே காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் நிலச்சுவான்தார்களின் கைகளில் நிலம் இருந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் தலித் மக்கள் வீடுகளையோ நிலங்களையோ வைத்துக்கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது.

"நிலையான வீடு இல்லாததால் தலித் மக்களை 'ஓடும் குடிகள்' என அழைத்தனர். இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை நல்லகண்ணு பெற்றுத் தந்தார்" என்கிறார் லெனின்.

நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாய சங்கத்தின் பணிகளே பிரதானமாக இருந்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் நடந்த நில மீட்சிப் போராட்டத்தில் ஒரு சிலரின் கைகளில் இருந்த நிலங்களை மீட்பதற்காக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தது.

அப்போது தமிழ்நாட்டில் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து சிறிய நூல் ஒன்றை நல்லகண்ணு வெளியிட்டார்.

சாதிக் கலவரத்தைத் தடுத்த நல்லகண்ணு

"நல்லகண்ணுவின் பிரதான காலகட்டம் என்பது விடுதலைப் போராட்டமும் அதற்குப் பிந்தைய காலகட்டமும்தான்" எனக் கூறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், 1996ஆம் ஆண்டு நடந்த சாதிக் கலவரத்தைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் சில தகவல்களைத் தெரிவித்தார்.

தென் மாவட்டங்களில் 1996ஆம் ஆண்டு முக்குலத்தோர் மற்றும் தலித் மக்களுக்கு இடையே சாதிக் கலவரம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமி கொல்லப்பட்டார்.

"அது கொந்தளிப்பான நேரம். சற்று பிசகினாலும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால் அமைதியை ஏற்படுத்தும் பணியில் நல்லகண்ணு ஈடுபட்டார். 'சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது' என்பதை அவர் நிலை நிறுத்தினார்" என்கிறார் கனகராஜ்.

மதுரையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தலித் ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் நிலவியது. இதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த நல்லகண்ணு, சுமார் நான்காயிரம் பேரைத் திரட்டி மாபெரும் உண்ணாவிரதம் இருந்தார்.

"இந்தப் போராட்டம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. 2006ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான அரசு, தேர்தலை நடத்தியே தீருவது என முடிவெடுத்து தேர்தலை நடத்தியது" என்று விவரித்தார் லெனின்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு