'இஸ்லாமிய உலகில் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் அதிகரிப்பு' - இஸ்ரேல் முன்னாள் பிரதமரின் எச்சரிக்கை

இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஜெருசலேமில் நடைபெற்ற 'முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில்' உரையாற்றிய இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட், பிராந்தியத்தில் ஒரு புதிய அச்சு உருவாகி வருவதாகவும், அதில் துருக்கி, கத்தார், முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் அணுசக்தி கொண்ட பாகிஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

இந்தக் கூட்டணி இஸ்ரேலுக்கு எதிரான விரோதப் போக்கைத் தூண்டிவிடுவதாகவும், செளதி அரேபியாவின் மீதும் செல்வாக்கு செலுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் நஃப்தாலி கூறினார்.

இஸ்ரேலுக்கு துருக்கி ஒரு புதிய அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும், இது குறித்து அரசாங்கம் அறியாமல் இருப்பதாகவும் பென்னட் இந்த மாநாட்டில் எச்சரித்தார்.

மேலும் பென்னட் கூறுகையில், "துருக்கி அதிபர் ரசிப் தையிப் எர்துவான் இஸ்ரேலைச் சூழ்ந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு ஆபத்தான போட்டியாளர். நாம் மீண்டும் நமது கண்களை மூடிக்கொள்ளக் கூடாது" என்றார்.

"தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஒருமுறை தூங்கிக் கொண்டிருக்கிறது. நமது எல்லைகளில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலின் கவலைக்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. ஒரு விரோதமான முஸ்லிம் சகோதரத்துவ அச்சு உருவாகியுள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களின் ஆதரவு உள்ளது மற்றும் இதனை வெற்றிபெறும் துடிப்பும், விரோதமும் கொண்ட துருக்கி தலைமை தாங்கி நடத்துகிறது," என பென்னட் கூறுகிறார்.

"இரானில் இருந்து வரும் அச்சுறுத்தல் மற்றும் துருக்கியில் இருந்து வரும் விரோதப் போக்கு ஆகியவற்றிற்கு எதிராக நாம் வெவ்வேறு வழிகளில் ஆனால் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். துருக்கி என்பது புதிய இரான் ஆகும்," என பென்னட் மேலும் தெரிவித்தார்.

2021-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட்டுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட்டுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி

செளதி மற்றும் துருக்கியுடன் பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் நெருக்கம்

செளதி அரேபியாவும் பாகிஸ்தானும் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

செளதி அல்லது பாகிஸ்தான் ஆகிய இரண்டில் எவருக்கு எதிராக "எந்த வகையான ஆக்கிரமிப்பு" நடந்தாலும், அது இருவர் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் கூறுகிறது.

இது நேட்டோவின் பிரிவு-5 போன்றது. செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தானின் 'பாதுகாப்பு ஒப்பந்தத்தில்' துருக்கியும் இணையப் போவதாகக் கூறப்படுகிறது. அணுசக்தி கொண்ட ஒரே இஸ்லாமிய நாடு பாகிஸ்தான் மட்டுமே. இதன் காரணமாகவும் இஸ்லாமிய உலகில் பாகிஸ்தானின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இரானின் அணுசக்தித் திட்டத்தை இஸ்ரேல் தனக்கான அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இஸ்ரேல் கடந்த ஆண்டு இரானின் யுரேனியம் செறிவூட்டும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால் இஸ்ரேலில் சிலர் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

செளதி, பாகிஸ்தான் மற்றும் துருக்கியின் நெருக்கம், ஒரு வலுவான கூட்டணியாகப் பார்க்கப்படுகிறது.

அங்காராவைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான டிஇபிஏவியின் மூலோபாய நிபுணர் நிஹாத் அலி ஓஸ்கான் அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க்கிடம் பேசுகையில், "செளதி ரேபியாவிடம் நிதி பலம் உள்ளது. பாகிஸ்தானிடம் அணுசக்தி திறன், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் மனித வளம் உள்ளது, அதே சமயம் துருக்கியிடம் ராணுவ அனுபவம் உள்ளது மற்றும் அது ஒரு பாதுகாப்புத் தொழிலை உருவாக்கியுள்ளது." என்றார்.

"அமெரிக்கா இப்பகுதியில் தனது மற்றும் இஸ்ரேலின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதால், மாறிவரும் சூழ்நிலைகள் மற்றும் பிராந்திய மோதல்களின் முடிவுகள், நண்பர் மற்றும் எதிரியை அடையாளம் காண புதிய வழிமுறைகளை உருவாக்க நாடுகளைத் தூண்டுகின்றன," என ஓஸ்கான் மேலும் கூறுகிறார்.

ஜூன் 2016-இல் 'ஜெருசலேம் போஸ்ட்' இஸ்ரேலிய செய்தித்தாளில் பத்திரிகையாளர் அஹ்மார் முஸ்திகான் எழுதுகையில், "இரானின் சாத்தியமான ஆயுதங்கள் எவ்வளவு ஆபத்தானவையோ, அதே அளவிற்கு பாகிஸ்தானின் அணு ஆயுதங்களும் ஆபத்தானவை என்பதை இஸ்ரேலும், உலக யூத சமூகமும் புரிந்துகொள்வது அவசியம்." என்று குறிப்பிட்டிருந்தார்.

இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான்-செளதி கூட்டணி யாருக்கு எதிரானது?

சிந்தனை குழுவான தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையத்தின் வளைகுடா திட்டத் தலைவரும் மூத்த ஆராய்ச்சியாளருமான யோயல் குசான்ஸ்கி, ஜெருசலேம் போஸ்ட் கட்டுரையில் செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தானின் வளர்ந்து வரும் நெருக்கம் இஸ்ரேலுக்கு எதிரானது அல்ல என்று கூறியிருந்தார்.

யோயல் குசான்ஸ்கி கடந்த ஆண்டு செப்டெம்பர் 22-ஆம் தேதி எழுதுகையில், "செளதி மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் அணு ஆயுத விவகாரம் தெளிவாக இல்லை. அநேகமாக இது திட்டமிட்டே செய்யப்பட்டிருக்கலாம். செளதி அரேபியாவிற்கான பாகிஸ்தானின் 'அணுசக்தி குடை' குறித்த வதந்திகள் பல ஆண்டுகளாக நீடிக்கின்றன. ரியாத் இஸ்லாமாபாத்திற்கு வழங்கிய நிதி உதவி, குறிப்பாக அதன் யுரேனியம் செறிவூட்டும் திட்டத்திற்கான நிதி உதவி காரணமாக இந்த வதந்திகள் வலுப்பெறுகின்றன," என்று கூறியுள்ளார்.

"இருப்பினும் வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்கள் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிரானது மட்டுமே தவிர, பிராந்திய பாதுகாப்பு குடையாக அல்ல என்ற தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. செளதி அரேபியா பாகிஸ்தானை ஒரு சாத்தியமான அணுசக்தி மாற்றாகப் பார்க்கலாம். ஆனால் பாகிஸ்தானும் அதை அதே கண்ணோட்டத்தில் பார்க்கிறதா? முரண்பாடு என்னவென்றால், இந்தக் கூட்டணியை அதிக பகிரங்கமாக்கியதன் மூலம் ரியாத்தும் இஸ்லாமாபாத்தும் ஊகங்களை மேலும் அதிகரித்துள்ளன. முன்பு மூடிய அறைகளுக்குள் முணுமுணுக்கப்பட்ட கேள்விகள் இப்போது பகிரங்கமாக விவாதப் பொருளாக உள்ளன," என யோயல் குசான்ஸ்கி மேலும் எழுதியுள்ளார்,

யோயல் குசான்ஸ்கியின் கூற்றுப்படி, "இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை தமக்கு எதிரான நேரடிப் பகையாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக, பாகிஸ்தானுடனான உறவை முறைப்படுத்துவதற்கான செளதியின் முடிவு, அமெரிக்காவின் நம்பகத்தன்மை குறித்த செளதியின் அதிகரித்து வரும் கவலைகள், இரானிய ஆக்கிரமிப்பு மற்றும் பிராந்திய உறுதியற்ற தன்மையைப் பிரதிபலிக்கிறது."

ஆனால் இஸ்ரேலிய ஊடகங்களில் பாகிஸ்தான் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. புவிசார் அரசியல் நிபுணர் செர்ஜியோ ரெஸ்டெல்லி கடந்த ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலில்' எழுதுகையில், இஸ்ரேலும் இந்தியாவும் தங்களது ராணுவம், தொழில்நுட்பம் மற்றும் ராஜதந்திர உறவுகளை ஆழமாக்கி வரும் வேளையில், செளதி, பாகிஸ்தான் மற்றும் துருக்கியின் நெருக்கமும் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 1, 2005 அன்று இஸ்தான்புல்லில் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரி, அப்போதைய இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் சில்வான் ஷாலோமை சந்தித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செப்டம்பர் 1, 2005 அன்று இஸ்தான்புல்லில் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரி, அப்போதைய இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் சில்வான் ஷாலோமை சந்தித்தார்

பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் உறவுகள்

பாகிஸ்தான் இதுவரை இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் இல்லை. இஸ்ரேல் தொடர்பாக பாகிஸ்தானுக்குள் அவ்வப்போது வன்முறையான போராட்டங்கள் நடைபெறுகின்றன. இஸ்ரேலுடன் பாகிஸ்தானுக்கு எந்த சர்ச்சையோ, மோதலோ இல்லாத போதிலும், அது இஸ்ரேலை ஒரு தேசமாக ஏற்கவில்லை. அரபு நாடுகளுடன் இஸ்லாமிய ஒற்றுமையைக் காட்டுவதற்காகப் பாகிஸ்தான் இவ்வாறு செய்கிறது.

ஆனால் அரபு நாடுகளே இஸ்ரேலுடன் நெருங்கி வரும்போது, இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்திக்கொள்வதில் பாகிஸ்தானுக்கு என்ன பிரச்சனை?

இதற்கான பதிலை 2020-ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வழங்கினார்.

"மற்ற நாடுகள் என்ன செய்தாலும், எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. முகமது அலி ஜின்னா 1948-இல் கூறினார் - பாலத்தீனர்களுக்கு அவர்களது உரிமை கிடைக்கும் வரை, இஸ்ரேலை எங்களால் ஏற்க முடியாது," என இம்ரான் கான் கூறியிருந்தார்.

பாகிஸ்தான் இஸ்ரேலை அங்கீகரித்தால் அமெரிக்காவுடனான அதன் உறவுகள் சிறப்பாக அமையலாம் என்று பலர் வாதிடுகின்றனர். ஆனால் பாகிஸ்தானின் சாதாரண மக்களின் இஸ்ரேல் எதிர்ப்பு உணர்வு அவ்வப்போது தெருக்களில் போராட்டங்களாக வெடிக்கிறது.

இஸ்ரேலும் பாலத்தீனமும் ஏதேனும் ஒரு சமாதான ஒப்பந்தத்தை எட்டினால், இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியிருந்தார்.

2005-ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரி மற்றும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் சில்வான் ஷாலோம் ஆகியோர் இஸ்தான்புல்லில் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பை எர்துவான் ஏற்பாடு செய்ததாகச் சொல்லப்படுகிறது. பாகிஸ்தானில் இந்தச் சந்திப்பு குறித்துப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

"எங்களது உரையாடல் மிகவும் முக்கியமானது. இந்த உரையாடல் பாகிஸ்தானுடனான எங்களது உறவுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த முஸ்லிம் உலகிற்கும் முக்கியமானது. அனைத்து அரபு முஸ்லிம் நாடுகளுடன் மட்டுமல்லாது பாகிஸ்தானுடனும் ராஜதந்திர உறவுகளை விரும்புகிறோம்," என குர்ஷித் கசூரியுடனான சந்திப்பிற்குப் பிறகு சில்வான் ஷாலோம் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாகிஸ்தானில் இஸ்ரேல் ஒரு எதிரியாகப் பார்க்கப்பட்டாலும், இஸ்ரேலில் பாகிஸ்தான் குறித்து தெருக்களில் இது போன்ற கோபத்தைக் காண முடிவதில்லை. 2018-இல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியப் பயணம் மேற்கொண்டார்.

"இஸ்ரேல் பாகிஸ்தானின் எதிரி அல்ல, பாகிஸ்தானும் எங்களது எதிரியாக இருக்கக் கூடாது," என இந்தப் பயணத்தின் போது நெதன்யாகு கூறினார்.

இதன் பிறகு பாகிஸ்தானில் இஸ்ரேல் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குரல்கள் மெல்லியதாக எழுந்தன. ஆனால் அப்போதைய பாகிஸ்தான் செனட் தலைவர் ரசா ரப்பானி முஸ்லிம் உலகை எச்சரித்துப் பேசுகையில், "இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே உருவாகி வரும் கூட்டணி முஸ்லிம் உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு