முஸ்லிம் அல்லாத நபர்களுக்கும் விருத்தசேதனமா? ஆந்திராவில் புதிய சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பல்லா சதீஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் விருத்தசேதன அறுவை சிகிச்சைகள் அதிகரித்திருப்பது குறித்த பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆண்குறியின் நுனியை மூடியிருக்கும் தோலை அகற்றும் அறுவை சிகிச்சையை விருத்தசேதனம் (Circumcision) என்று அழைக்கின்றனர்.
மருத்துவ ரீதியில் இந்த அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது என்பது ஒருபுறம் என்றாலும், இஸ்லாமியர்கள், யூதர்கள் என சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மதரீதியிலான காரணங்களுக்காக விருத்தசேதனம் செய்கிறார்கள்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஓர் அரசுத் திட்டத்தின் கீழ் விருத்தசேதன அறுவை சிகிச்சைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டி, மாநில சுகாதார அமைச்சருக்கு சிபிஐ முன்னாள் இயக்குநர் நாகேஸ்வர ராவ் கடிதம் ஒன்றை எழுதியதை அடுத்து இந்த விவாதம் புதிய திருப்பத்தை எடுத்தது.
"மருத்துவ காரணங்களுக்காக என்ற போர்வையில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு விருத்தசேதனம் செய்வதன் மூலம் அவர்கள் ஓர் மதத்தின் குறிக்கோளை செயல்படுத்துகிறார்கள்" என்று நாகேஸ்வர ராவ் குற்றம் சாட்டினார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சர், இந்த விஷயம் உண்மை என்று கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தாலும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்காது என்றும், எந்தவொரு மருத்துவரும் தேவையில்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை இருக்காது என்றும் சில நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
குற்றச்சாட்டுகள் யாவை?
சிபிஐ முன்னாள் இயக்குனர் நாகேஸ்வர ராவ் சமூக ஊடகங்களில் வெளியிட்ட கடிதத்தின் சாராம்சம் இது:
"ஆந்திராவில் உள்ள சில மருத்துவர்கள் விருத்தசேதனம் ஆரோக்கியமானது என்று நம்புகிறார்கள். அவர்கள், இஸ்லாமியர் அல்லாத ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்து வருகின்றனர். இது சில காலமாகவே நடந்து வருகிறது. இது தொடர்பான தகவல்கள் குறைவாக உள்ளது. இது மருத்துவ நடைமுறை என்ற பெயரில் ஓர் மதத்தின் குறிக்கோளை செயல்படுத்துவதற்கான திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம். எனவே, ஆந்திராவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு செய்யப்படும் விருத்தசேதனம் குறித்து விசாரிக்க உடனடியாக குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்" என்று அவர் கோரினார்.
"கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட விருத்தசேதன வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும், உண்மையிலேயே மருத்துவ ரீதியாக அவசியமானவற்றின் பட்டியலை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்த நாகேஸ்வர ராவ், இந்தப் பதிவில் ஆந்திரப் பிரதேச சுகாதார அமைச்சர் சத்ய குமாரை டேக் செய்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சத்ய குமார், "இந்த விஷயத்தை என் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. ஆந்திர மாநில அரசு, சான்றுகள் சார்ந்த மருத்துவ நடைமுறை, நெறிமுறை மதிப்புகள் மற்றும் மத நல்லிணக்கத்திற்கு உறுதிபூண்டுள்ளது. நீங்கள் எழுப்பியுள்ள பிரச்னைகளை மருத்துவத் துறை ஆராய்ந்து, நடைமுறையில் உள்ள மருத்துவச் சட்டங்களின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்," என்று பதிலளித்தார்.
சமீபத்தில் விருத்தசேதன அறுவை சிகிச்சைகளுக்கான விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் தோன்றியதே இந்த விவாதம் பரபரப்பானதற்கான முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
நிபுணர்கள் சொல்வது என்ன?
நம்பகமான தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் கடிதத்தை எழுதியதாக நாகேஸ்வர ராவ் கூறுகிறார். "இது நிச்சயமாக தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். எந்த மருத்துவரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்," என்று அவர் கூறினார். "இதன் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா, மத நோக்கம் ஊக்குவிக்கப்படுகிறதா அல்லது இந்த அறுவை சிகிச்சைகள் அவசியமானபோது மட்டுமே செய்யப்பட்டதா என்பதை நாம் ஆராய வேண்டும். உண்மையில், அவசியமில்லாதபோதும், இந்த அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டதாக விசாரணைக் குழுக்கள் கண்டறிந்தால், யார் அதைச் செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்," என்று நாகேஸ்வர ராவ் பிபிசியிடம் கூறினார்.
ஆந்திராவில் உள்ள தனியார் சிறுநீரக மருத்துவர்கள் பலரிடம் கருத்து கேட்க பிபிசி முயன்றது. இருப்பினும் இந்த பிரச்னையைப் பற்றி விவாதிக்க பெரும்பாலான மருத்துவர்கள் தயங்கினார்கள். ஆந்திராவில் உள்ள மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் இந்த பிரச்னை குறித்து பிபிசியிடம் விரிவாகப் பேசினார். தனது பெயரை குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், நாகேஸ்வர ராவ் சொல்வது போல், விருத்தசேதனம் அதிகரிப்பதாக தனக்குத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
"சில குழந்தைகளில், ஆண்குறியின் முன்பக்கத்தில் உள்ள முன்தோல் மூடப்பட்டு, சிறுநீர் செல்லும் பாதை குறுகிவிடும். இது ஃபிமோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இப்படி நிலையில் சிறுநீர் கழிப்பது வலிமிகுந்ததாகிவிடும். சிறுநீர் செல்வது தடைபட்டு அங்கேயே தேங்கி விடுகிறது. இதுவே சிறுநீர் தொற்று ஏற்பட வழிவகுக்கிறது. இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டால், விருத்தசேதனம் செய்வார்கள்," என்று அவர் விளக்கினார்.
பெரியவர்களுக்கு விருத்தசேதனம் செய்வதற்கு நீரிழிவு முக்கிய காரணமாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
"நீரிழிவு நோயாளிகளுக்கு பாலனோபோஸ்டிடிஸ் என்ற பிரச்னை ஏற்படலாம். ஆண்குறியின் முன்புறத்தில் உள்ள சிவப்பு பகுதி வீங்கி வீக்கமடைந்தால், அது பாலனிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. அங்கு தொற்று ஏற்படுகிறது. அதன் மேல் உள்ள தோலிலும் தொற்று ஏற்பட்டால், அது போஸ்ட்ஹைடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டுமே ஒரே நேரத்திலும் ஏற்படலாம். இதுபோன்ற நிலைமைகள் அடிக்கடி ஏற்படுவதால், வலி, விறைப்புத்தன்மை, உடலுறவின் போது வலி, ஆண்குறி விறைப்புத்தன்மையடைந்தால் வலி, வலிமிகுந்த உடலுறவு போன்றவை ஏற்படும். விருத்தசேதனம் செய்து கொண்டால், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் எந்த பிரச்னையும் இருக்காது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்," என்று அவர் விளக்கினார்.
முதியவர்களுக்கும் விருத்தசேதனம் பரிந்துரைக்கப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன எனக் கூறும் அவர், "முதியவர் ஒருவர் போதுமான அளவு சுத்தமாக இல்லாவிட்டால், பிளாங்க்டன் அல்லது ஸ்மெக்மா உள்ளே குவிகிறது. இது வீக்கம் மற்றும் தொற்றுநோய்களை ஏற்படுத்துகிறது. பொதுவாக, 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும் போது விருத்தசேதனம் செய்ய பரிந்துரைக்கிறோம். ஆனால் இவை அரிதானவை," என்று கூறினார்.
விருத்தசேதனம் குறிப்பிட்ட ஓர் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகிறது என்ற கூற்றை பேராசிரியர் நிராகரித்தார்.
"யாரும் அவ்வளவு எளிதில் தங்கள் ஆணுறுப்பில் கத்தியை வைக்க விடமாட்டார்கள். எனவே தேவையில்லாத நிலையிலும் விருத்தசேதனம் செய்யப்படுகிறது என்ற வாதம் சரியானதல்ல. மேலும், விருத்தசேதனம் செய்வதால் மட்டுமே யாரும் இஸ்லாமியராக மாறிவிடமாட்டார்கள்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
விருத்தசேதனம் என்றால் என்ன?
விருத்தசேதனம் என்பது ஆண்குறியில் செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். இந்த நடைமுறையின் ஓர் பகுதியாக, ஆண்குறியின் முன்புறத்தில் இருக்கும் தோல் நீக்கப்படுகிறது. இந்தியாவில், இஸ்லாமிய ஆண்களுக்கு அவர்களின் குழந்தை பருவத்திலேயே விருத்தசேதனம் செய்யப்படுகிறது.
மத பாகுபாடு இல்லாமல், உடல்நலக் காரணங்களுக்காக, அனைத்து மதங்களையும் சேர்ந்த பெரியவர்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் பல இஸ்லாமிய நாடுகளில் மத காரணங்களுக்காக விருத்தசேதனம் செய்து கொண்ட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மத ரீதியான காரணம் இல்லாமல் கூட, அமெரிக்காவில் விருத்தசேதனம் செய்வது அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன.
முஸ்லிம்கள் மற்றும் யூதர்களிடையே கட்டாய நடைமுறையாக உள்ள விருத்தசேதனம், கிறிஸ்தவத்தில் கட்டாயமில்லை என்றாலும் அதை செய்யும் பாரம்பரியம் உள்ளது.
இந்தியாவில் யூத மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், கிறிஸ்தவர்களிடையே அது கட்டாயமில்லை என்பதாலும், பெரும்பாலான மக்கள் விருத்தசேதனம் என்பது இஸ்லாமிய வழக்கமாகவே அறிந்திருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
விருத்தசேதனம் செய்வதன் அடிப்படை
பொதுவாக, ஆண்குறியில் முன்தோல் (foreskin) எனப்படும் மெல்லிய தோல் பகுதி க்ளான்ஸை மூடியிருக்கும். முழு சுரப்பியும் வெளிப்படும் வரை இந்த தோல் அகற்றப்படும். இந்த தோலில் உயவூட்டப்பட்ட சளி உள்ளது.
ஆண்குறியின் நுனியில் உள்ள உருண்டையான, வீங்கிய பகுதியான கிளான்ஸ்-இல் உணர்ச்சி நரம்பு முடிச்சுகள் அதிகளவில் உள்ளன, எனவே இது மிகவும் உணர்திறன் வாய்ந்தது.
தோல் அகற்றப்படும்போது, இதுவரை உட்புறமிருந்த ஆண்குறியின் கிளான்ஸ் பகுதியில், அவர் அணியும் ஆடை உராயத் தொடங்குகிறது.
அதனால்தான் விருத்தசேதனம் செய்த பிறகு சில வாரங்கள் வரை அது மிகுந்த சங்கடத்தைக் கொடுக்கும். ஆண்குறி தூண்டப்படும்போது சிறிது வலியும் ஏற்படலாம்.
இருப்பினும், அதன் பிறகு, மேலே உள்ள தோல் கடினமாவதுடன் உணர்திறனும் குறைகிறது.

பட மூலாதாரம், Getty Images
விருத்தசேதனம் எப்போது செய்ய வேண்டும்?
மதக் காரணங்களைத் தவிர்த்துப் பார்த்தால், விருத்தசேதனம் செய்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
முதலாவதாக அமெரிக்காவில் பின்பற்றப்படும் அணுகுமுறை. அமெரிக்க குழந்தை மருத்துவ அகாடமி-யின் (AAP) படி, குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் இந்த சிகிச்சை செய்யப்பட்டால், அபாயங்களை விட சுகாதார நன்மைகள் அதிகமாக இருக்கும்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், ஆண்குறி புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி போன்ற, பரவக்கூடிய சில பாலியல் நோய்களை சிறப்பாகத் தடுக்கும் என்று அமெரிக்க குழந்தை மருத்துவ அகாடமி கூறுகிறது.
இருப்பினும், விருத்தசேதன விஷயத்தில், ராயல் டச்சு மருத்துவ சங்கம் (RDMA) மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏன் விருத்தசேதனம் செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை RDMA தருகிறது.
"நோய் கட்டுப்பாடு அல்லது சுகாதாரத்திற்கு விருத்தசேதனம் சிறந்தது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே, இது அனைத்து குழந்தைகளுக்கும் செய்யப்படக்கூடாது. மருத்துவ/சிகிச்சை காரணங்களுக்காக தேவைப்பட்டால் மட்டுமே இதைச் செய்ய வேண்டும்," என்று அந்த அமைப்பு கூறுகிறது.
"பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, விருத்தசேதனம் செய்வதால், உடல்நலம் சார்ந்த மற்றும் உளவியல் பிரச்னைகள் சில ஏற்படும் அபாயமும் உள்ளது. அதிகப்படியான ரத்தப்போக்கு, நோய்த்தொற்று மற்றும் பேனிக் அட்டாக் (Panic Attack) எனப்படும் திடீர் பய உணர்வு ஏற்படும் அபாயங்களும் உள்ளன" என்று ராயல் டச்சு மருத்துவ சங்கம் விளக்கியது.
இருப்பினும், ஃபிமோசிஸ், பாராஃபிமோசிஸ் மற்றும் பாலனிடிஸ் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் விருத்தசேதனம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆண்குறியின் நுனியில் உள்ள முன்தோல் மிகவும் சிறியதாக இருந்தால், ஆண்குறியின் நுனியை மூடியிருக்கும் முன்தோலை பின்னால் இழுக்க முடியாத நிலையே ஃபிமோசிஸ் ஆகும். இளம் வயதிலேயே இது கண்டறியப்பட்டால், சில கிரீம்கள் ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கும். விருத்தசேதனம் அவசியமில்லை.
பாராஃபிமோசிஸ் என்றால் ஆண்குறியின் முன்தோல் முற்றிலுமாக பின்வாங்கப்படுவதைக் குறிக்கிறது. அதை மீண்டும் முன்னோக்கி தள்ளுவது மிகவும் கடினமாகிவிடும்.
பாலனிடிஸ் என்பது ஆண்குறியின் கிளான்ஸ் வீக்கமாகும், இது பொதுவாக சுகாதாரத்தை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் நிலையாகும்.
இந்த நிலை ஏற்படாமல் தவிர்க்க, குழந்தைகளுக்கு அவ்வப்போது ஆண்குறியின் முன்தோலைப் பிரித்து சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும் என சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இது தவிர, பெரியவர்களுக்கு சில உடல்நலப் பிரச்னைகள் இருக்கும்போது மருத்துவர்கள் விருத்தசேதனம் செய்ய பரிந்துரைக்கின்றனர். இப்போது, இந்தப் பரிந்துரை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
விருத்தசேதனம் பாலியல் வாழ்க்கையை பாதிக்குமா?
"விருத்தசேதனத்திற்குப் பிறகு, முன்தோல் மெதுவாக அதன் புதிய சூழலுக்கு ஏற்றவாறு மாறுகிறது. இதன் விளைவாக, ஆரம்பக் கட்டத்தில் உணர்திறன் இருக்கலாம். அது சங்கடமாக கூட இருக்கலாம்," என்று ஷாபிரோ கூறினார்.
"விருத்தசேதனம் செய்யப்பட்ட பிறகு ஆண்குறியை மூடியிருக்கும் முன்தோல் விரைவாக வறண்டுவிடும். உணர்திறனில் ஏற்படும் மாற்றங்களையும் நீங்கள் கவனிக்கலாம். ஆண்குறியின் முன்தோலிலேயே நரம்புகள் உள்ளன. முன்தோல் அகற்றப்படும்போது இவையும் அகற்றப்படும்," என்று அவர் கூறினார்.
விருத்தசேதனம் குறித்த பல்வேறு மூடநம்பிக்கைகள் மக்களிடையே உள்ளன. அவற்றை தெளிவாக புரிந்துக் கொள்வது அவசியம்.
விருத்தசேதனத்திற்குப் பிறகு ஆண்குறி நீளமாகவோ அல்லது பெரிதாகவோ மாறாது.
விருத்தசேதனம் செய்துக் கொண்ட ஆண் நீண்ட நேரம் உடலுறவு கொள்ளலாம் என்பதும் மூடநம்பிக்கையே.
விருத்தசேதனத்திற்கு முன்னும் பின்னும் ஆண்குறியின் தூண்டுதல் ஒரே மாதிரியாக இருக்கும்.

பாலியல் ரீதியாக பரவும் நோய்களை விருத்தசேதனம் தடுக்குமா?
விருத்தசேதனம் செய்வது, கோனோரியா, சிபிலிஸ், கிளமிடியா, ஹெர்பெஸ், மனித பாப்பிலோமா வைரஸ் மற்றும் பிறப்புறுப்பு புண்களைத் தடுப்பதில் ஓரளவு பயனுள்ளதாக இருக்கும் என சில நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், இதை திட்டவட்டமாக நிரூபிக்கும் ஆய்வுகள் எதுவும் இல்லை.
"உண்மையில், எச்.ஐ.வி பரவல் மற்றும் விருத்தசேதனத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து நிச்சயமற்ற தன்மை இன்னும் தொடர்கிறது. அமெரிக்காவில், விருத்தசேதனம் செய்யும் போக்கு அதிகரித்துள்ள அதே நேரத்தில் எச்.ஐ.வி விகிதங்களும் அதிகமாக உள்ளன. இருப்பினும், நெதர்லாந்தில் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. விருத்தசேதன விகிதங்கள் குறைவாக உள்ளன, எச்.ஐ.வி பாதிப்புகளும் குறைவாக உள்ளன" என்று ஐரோப்பிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஓரினச்சேர்க்கையாளர்களிடையே எச்.ஐ.வி பரவுவதில், விருத்தசேதனம் செய்வது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்துவதாக மற்றொரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆந்திர மாநில மருத்துவர்கள், தேவையில்லாமல் ஆண்களுக்கு விருத்தசேதனங்களைச் செய்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்கான எந்த புள்ளிவிவரங்களும் கிடைக்கவில்லை.
மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதால், இது குறித்து ஆந்திர மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் எஸ். பாலராஜுவை பிபிசி தொடர்பு கொண்டது. அவரிடம் இருந்து இதுவரை பதிலேதும் வரவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












