இறந்த மகனின் கடனை கட்டச் சொன்ன வங்கி: வீடு, வாகனம், வணிக கடனுக்கு காப்பீடு எடுக்கையில் கவனிக்க வேண்டியவை

கடன் தொகைக்கு காப்பீடு கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்? நீதிமன்றம் அளித்த தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

கடன் தொகைக்கு காப்பீடு எடுத்த நபரின் குடும்பத்தினருக்கு தீர்வு வழங்காமல் மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்குமாறு, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடன் வாங்கியவர் பெற்றிருந்த 34 லட்ச ரூபாய் கடன் நிலுவையை ரத்து செய்யுமாறும் வங்கி நிர்வாகத்துக்கு குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடன் பெறும்போது காப்பீடு பெறுமாறு வங்கிகள் நிர்ப்பந்தம் அளித்தால் நுகர்வோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன?

பின்னணி என்ன?

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பி.எம்.ராமதாஸ் என்பவர் சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இவரது மகன் மகேஷ்குமார் தனியார் வங்கியில் 34 லட்ச ரூபாய்க்கு வணிகக் கடன் பெற்றிருந்தார்.

'தனியார் ஐ.டி நிறுவனத்தில் மாதம் ஒரு லட்ச ரூபாயை அவர் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் என் மகனுக்கு கடன் தொகையை வங்கி வழங்கியது' என, மனுவில் பி.எம்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடன் தொகைக்கு தனியார் காப்பீடு நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட வங்கியின் மூலம் காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. 'குரூப் செக்யூர் மைண்ட்' என்ற பெயரில் இந்தக் காப்பீடு மகேஷ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடன் ஆவணங்களுடன் சேர்த்து அனைத்து காப்பீட்டு படிவங்களிலும் வங்கி நிர்வாகம் கையெழுத்து பெற்றுள்ளதாக வழக்கின் மனுவில் தெரிவித்துள்ள பி.எம்.ராமதாஸ், காப்பீடுக்கான பிரீமியம் தொகை மாதாந்திர தவணையுடன் சேர்த்து பிடிக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அதன்படி, மகேஷ்குமாரின் வங்கிக் கணக்கில் இருந்து மாதந்தோறும் கடன் தொகைக்கான தவணையும் காப்பீட்டிற்கான பிரிமியம் தொகையும் எடுக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால், 'பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் பாலிசி விவரங்கள் எதுவும் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனத்தால் எங்களுக்கு வழங்கப்படவில்லை' என, வழக்கின் மனுவில் பி.எம்.ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மகேஷ்குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் அதே மாதம் அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்த விவரங்களைக் குறிப்பிட்டு 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் பி.எம்.ராமதாஸ் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இதற்கு ஆகஸ்ட் 29 ஆம் தேதி தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பதில் வந்துள்ளது. அதில், 'காப்பீடு காலாவதியாகிவிட்டதால் உங்களின் உரிமை கோரலை (claim application) செயல்படுத்த முடியாது' எனத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கடன் கொடுத்த வங்கியை பி.எம்.ராமதாஸ் அணுகியுள்ளார். 'அவர்கள் எந்தத் தகவலையும் வழங்கவில்லை' என வழக்கின் மனுவில் கூறியுள்ள அவர், 'காப்பீடு தொடர்பான தகவலை சரியான நேரத்தில் அனுப்பத் தவறியதால் பெரும் இழப்பும் மனஉளைச்சலும் ஏற்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.

'காப்பீடு விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது வங்கியின் கடமை. ஆனால், அவ்வாறு செய்வதற்கு தவறிவிட்டது' என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வங்கி நிர்வாகத்துக்கு குறைதீர் ஆணையத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், விசாரணை தேதியில் வங்கித் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. 'எழுத்துப்பூர்வமாக எந்தப் பதிலையும் தாக்கல் செய்யவில்லை' என குறைதீர் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'எங்களுக்கு தொடர்பில்லை' - காப்பீட்டு நிறுவனத்தின் பதில்

அதேநேரம், பி.எம்.ராமதாஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை தனியார் காப்பீட்டு நிறுவனம் முழுமையாக மறுத்தது. குறைதீர் ஆணையத்தில் அவர்கள் அளித்துள்ள பதிலில், 'புகார்தாரருக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை' எனக் கூறியுள்ளது.

'குரூப் செக்யூர் மைண்ட்' என்ற பெயரில் உள்ள காப்பீடு கொள்கை விதிமுறைகளின்படி வங்கி நிர்வாகமே பாலிசிதாரராக இருக்கும் எனவும் வங்கி நிர்வாகமே கடன் வாங்கியவருக்கு காப்பீடு மூலம் பாதுகாப்பை வழங்குவதாகவும் தனியார் காப்பீடு நிறுவனம் தெரிவித்தது.

இறந்த மகேஷ்குமாரிடம் இருந்து 60,381 ரூபாய் பிரீமியத் தொகை பெறப்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிட்டுள்ள தனியார் காப்பீடு நிறுவனம், 'காப்பீடு காலத்திற்கு மட்டுமே இது பொருந்தும். இது காப்பீட்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளது.

இறந்த மகேஷ்குமார் பெற்ற கடனுக்கான காப்பீடு காலம் என்பது 2020 முதல் 2023 வரை மட்டுமே என்று கூறியுள்ள காப்பீடு நிறுவனம், 'காப்பீடு காலாவதியாகிவிட்டதால் உரிமை கோரலை செயல்படுத்துவதில் எங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை' எனத் தெரிவித்துள்ளது.

'எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை'

வழக்கில் வாதங்களைக் கேட்ட குறைதீர் ஆணைய தலைவர் கோபிநாத் மற்றும் ஆணைய உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி அமர்வு, கடந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், 'காப்பீடு ஆவணத்தில் இருந்து வங்கி நிர்வாகம் பாலிசிதாரர் என்பதும் கடன் வாங்கியவர் காப்பீடு செய்யப்பட்டவர் என்பது தெளிவாக தெரிகிறது' எனக் குறைதீர் ஆணையம் கூறியுள்ளது.

'ஆனால், கடன் வாங்கியவருக்கு பாலிசி ஆவணத்தின் நகலை வழங்கியுள்ளதை நிரூபிக்க எந்த ஆதாரமும் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை' எனக் கூறியுள்ள நீதிபதி, 'கடன் வாங்கியவரின் குடும்பத்துக்கு பாலிசி ஆவணம் குறித்த தகவலை தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்துள்ளது போல தெரிகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019ன்படி இதனைப் பெறுவதற்கு நுகர்வோருக்கு உரிமைகள் உள்ளதாகக் கூறியுள்ள குறைதீர் ஆணையம், 'நிபந்தனையுடன் கூடிய காப்பீடு நகலை கடன் வாங்கியவருக்கு வழங்காததன் மூலம் ஐஆர்டிஏ (Insurance Regulatory and Development Authority of India) ஒழுங்குமுறைகள் 2002-ன் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை' எனக் கூறியுள்ளது.

'கடன் வாங்கியவருக்கும் புகார்தாரருக்கும் காப்பீட்டின் நகலை வழங்காததன் மூலம் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், சேவை குறைபாடு இருந்ததற்காக தனியார் வங்கி மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனம் ஆகியோருக்கு எதிரான புகார் ஏற்கப்படுகிறது' எனவும் தீர்ப்பில் குறைதீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடன் தொகைக்கு காப்பீடு கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்? நீதிமன்றம் அளித்த தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காப்பீடு எடுத்தால் அதன் நகலை கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார், வழக்கறிஞர் நடராஜன்

'ரூ.34 லட்சம் கடன் முடித்து வைப்பு'

மேலும், 'சேவை விதிமுறைகளைக் கடைபிடிக்கத் தவறியதுடன் புகாரைக் கையாள்வதில் மிகுந்த அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட இழப்பு மற்றும் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவதற்கு கடமைப்பட்டவர்களாக உள்ளனர்' எனவும் கூறப்பட்டுள்ளது.

இரு நிறுவனங்களுக்கும் தனித்தனியாக பொறுப்புகள் உள்ளதாகக் கூறியுள்ள குறைதீர் ஆணையம், '34 லட்ச ரூபாய் கடன் தொகையின் கணக்கை முடித்து தடையில்லா சான்றிதழை புகார்தாரருக்கு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

'சேவை குறைபாடு, பண இழப்பு, மனஉளைச்சல் மற்றும் துன்பங்களுக்கு இழப்பீடாக 20 ஆயிரம் ரூபாயையும் வழக்கு செலவாக பத்தாயிரம் ரூபாயையும் இரு நிறுவனங்களும் அளிக்க வேண்டும்' எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

'கட்டாயப்படுத்தக் கூடாது'

"கடன் வாங்கும்போது காப்பீடு செய்யுமாறு எந்தவொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. காப்பீடு எடுக்குமாறு கூறலாம். ஆனால் தன்னிடம் மட்டுமே வாங்குமாறு கூறக் கூடாது" என்கிறார், அகில இந்திய இன்ஸ்யூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் ஜி.ஆனந்த்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வங்கியின் கடன் பெறும்போது அந்தப் பணம் கிடைப்பதில் தான் கவனம் செலுத்துகிறோம். இந்த மனநிலையில் உள்ளவர்கள் காப்பீடு விவரங்களை பெரும்பாலும் கவனிப்பது இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"காப்பீடு எடுக்குமாறு வங்கி நிர்வாகம் கூறினால், 'கடன் மட்டும் கொடுங்கள், எந்த நிறுவனத்தில் காப்பீடு எடுக்க வேண்டும்' என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம் என வாடிக்கையாளர்கள் கூற வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.

கடன் தொகைக்கு காப்பீடு கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்? நீதிமன்றம் அளித்த தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "வங்கியின் கடன் பெறும்போது அந்தப் பணம் கிடைப்பதில் தான் கவனம் செலுத்துகிறோம். இந்த மனநிலையில் உள்ளவர்கள் காப்பீடு விவரங்களை பெரும்பாலும் கவனிப்பது இல்லை" என்கிறார் அகில இந்திய இன்ஸ்யூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் ஜி.ஆனந்த்.

காப்பீடு பெறும்போது கவனிக்க வேண்டியது என்ன?

இதே கருத்தை முன்வைக்கும் வழக்கறிஞர் நடராஜன், ''தாங்கள் கூறும் நிறுவனத்தின் காப்பீடு எடுக்குமாறு வாடிக்கையாளர்களை நிர்பந்தம் செய்யக் கூடாது என காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகள் கூறுகின்றன' என்கிறார். இவர் நுகர்வோர் நலன் சார்ந்த வழக்குகளை நடத்தி வருகிறார்.

''இதுபோன்ற சூழல்களைத் தவிர்ப்பதற்கு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்'' எனக் கூறும் அவர், ''உரிமை கோரல் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது தான் பலரும் இதுதொடர்பான விதிகளையே அறிகின்றனர்'' என்கிறார்.

"வீடு, வாகனம், வணிகக்கடன் போன்றவற்றுக்கு காப்பீடு எடுப்பது மிக அவசியமானது" எனக் கூறும் ஜி.ஆனந்த், "கடன் தவணை செலுத்தும் காலத்தில் அந்த நபர் இறந்துவிட்டால் அதற்கான பணத்தை காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்துகின்றன. இதனால், வீடாக இருந்தால் ஜப்தி நடவடிக்கை தவிர்க்கப்படும்" என்கிறார்.

'கடன் வேறு.. காப்பீடு வேறு'

ஒரு சில நேரங்களில் காப்பீட்டு நிறுவனங்களில் உரிமை கோரும்போது (claim) சிக்கல் வருவதாகக் கூறும் ஜி.ஆனந்த், "காப்பீடுகளில் பெரும்பாலும் லாபம் பார்க்கவே நிறுவனங்கள் விரும்புகின்றன. இதன் காரணமாக உரிமை கோரலை நிராகரிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன" என்கிறார்.

"கடன் வேறு.. காப்பீடு வேறு என்ற மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கூறும் ஜி.ஆனந்த், "தற்போதைய நிலையில் நேர்மையான வாடிக்கையாளர்கள் வந்தால் கடன் கொடுப்பதற்கு வங்கிகள் தயாராக உள்ளன" எனவும் குறிப்பிட்டார்.

காப்பீடு எடுத்தால் அதன் நகலை கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார், வழக்கறிஞர் நடராஜன், ''எத்தனை நாள்களுக்குள் உரிமை கோரல் மனுவை சமர்ப்பிக்கிறோம் என்பது முக்கியமானது. கடன் பெற்றவரின் இறப்புச் சான்றிதழ், இறப்புக்கான காரணம் உள்பட அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பிக்க வேண்டும்'' என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு