அமெரிக்கா ஒரு வீரரைக் கூட இழக்காமல் வெனிசுவேலா அதிபர் மதுரோவை சிறைபிடித்தது எப்படி?

அமெரிக்கா - வெனிசுவேலா, நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிப்பு, டிரம்ப்

பட மூலாதாரம், Donald Trump/ Truth Social

    • எழுதியவர், கேரத் எவான்ஸ்
    • இருந்து, வாஷிங்டன்

மாதக்கணக்கில், அமெரிக்க உளவாளிகள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தனர்.

வெனிசுவேலா அரசுக்குள் இருந்தபடியே உளவு சொன்ன ஒருவரையும் (source) உள்ளடக்கிய ஒரு சிறிய குழு, 63 வயதான மதுரோ எங்கு உறங்குகிறார், என்ன சாப்பிடுகிறார், என்ன உடை அணிகிறார் என்பதோடு, உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கூறுவதுபோல், "அவரின் செல்லப்பிராணிகள்" வரையிலும் கண்காணித்து வந்தது.

அதன்பிறகு, டிசம்பர் தொடக்கத்தில், 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டம் இறுதி செய்யப்பட்டது. இது பல மாதங்கள் நீடித்த நுட்பமான திட்டமிடல் மற்றும் ஒத்திகைகளின் விளைவாகும். இந்த ஒத்திகைகளில், அமெரிக்கப் படையினர் (Elite troops), தாங்கள் நுழைய வேண்டிய வழிகளைப் பயிற்சி செய்வதற்காக, மதுரோவின் கராகஸ் பாதுகாப்பு இல்லத்தின் உண்மையான, முழு அளவிலான பிரதியையும் உருவாக்கியிருந்தனர்.

பனிப்போருக்குப் பிறகு இல்லாத வகையில் லத்தீன் அமெரிக்காவில் அசாதாரணமான அமெரிக்க ராணுவத் தலையீட்டிற்கு வழிவகுத்த அந்தத் திட்டம் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. இதுபற்றி, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவோ அல்லது ஆலோசிக்கப்படவோ இல்லை. துல்லியமான விவரங்கள் அனைத்தும் தயாரான நிலையில், உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் தாக்குதலைத் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலைகளுக்காக வெறுமனே காத்திருக்க வேண்டியிருந்தது.

திட்டத்தின் ஆச்சரியக்கூறை (surprise element) அதிகப்படுத்த அவர்கள் விரும்பினார்கள் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். நான்கு நாட்களுக்கு முன்னதாகவே அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்திருந்த போதிலும், சிறந்த வானிலைக்காகவும், மேகமூட்டம் குறைவாக இருப்பதற்காகவும் அவர்கள் காத்திருக்கத் தீர்மானித்ததால், ஒரு தவறான தொடக்கம் (false start) ஏற்பட்டது.

"கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முழுவதும் பல வாரங்களாக, அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் தயாராக இருந்தனர். சரியான நேரத்திற்காகவும், அதிபர் உத்தரவுக்காகவும் அவர்கள் பொறுமையாகக் காத்திருந்தனர்" என்று நாட்டின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ராணுவ அதிகாரியான ஜெனரல் டான் கெய்ன் சனிக்கிழமை காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

'அதிர்ஷ்டமும் தெய்வ ஆசியும்'

பணியைத் தொடங்குவதற்கான உத்தரவு அதிபரிடமிருந்து இறுதியாக வெள்ளிக்கிழமை இரவு 10:46 மணிக்கு (கிழக்கு நேர மண்டலம் Eastern Daylight Time EDT) வந்தது.

"நாங்கள் இதை நான்கு நாட்களுக்கு முன்பு, மூன்று நாட்களுக்கு முன்பு, இரண்டு நாட்களுக்கு முன்பு செய்யவிருந்தோம். பின்னர் திடீரென்று வாய்ப்பு உருவானது. அவர்களைப் போகச் சொன்னோம்" என்று சனிக்கிழமை அதிகாலைத் தாக்குதலுக்குப் பிறகு, ஃபாக்ஸ் & ஃப்ரெண்ட்ஸ் (Fox & Friends) நிகழ்ச்சியில் கூறினார் டிரம்ப்.

"அவர் எங்களுக்கு அதிர்ஷ்டமும் கடவுள் ஆசியும் உடனிருக்கும் என்று கூறினார்" என்று தெரிவித்தார் ஜெனரல் கெய்ன்.

டிரம்பின் உத்தரவு கராகஸில் நள்ளிரவுக்குச் சற்று முன்பு வந்தது. இது இரவின் பெரும்பகுதி இருளில் செயல்பட ராணுவத்திற்கு அவகாசம் அளித்தது.

அதன்பிறகு, வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழியாக இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் நீடித்த அந்தப் பணி, வாஷிங்டனையும் உலகெங்கிலும் பலரையும் திகைக்க வைத்தது. அளவு மற்றும் துல்லியத்தின் அடிப்படையில், இது கிட்டத்தட்ட முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக இருந்தது.

இது பல பிராந்திய சக்திகளிடமிருந்து உடனடி கண்டனங்களைப் பெற்றது. பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, வெனிசுவேலா தலைவரைக் சிறைபிடித்த வன்முறைச் செயல் முழு சர்வதேச சமூகத்திற்கும் மற்றொரு மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார்.

டிரம்ப் வெள்ளை மாளிகையின் சூழல் அறியும் அறையிலிருந்து (Situation Room) இந்த நிகழ்வைப் பின்தொடரவில்லை. அதற்குப் பதிலாக, அவர் புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது மார்-எ-லாகோ கிளப்பில் தனது ஆலோசகர்களால் சூழப்பட்டிருந்தார். அங்கு அவர் சிஐஏ இயக்குநர் ஜான் ரேட்கிளிஃப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் சேர்ந்து ராணுவ நடவடிக்கையை நேரடிலையில் பார்த்தார்.

"பார்க்க நம்ப முடியாத ஒரு விஷயமாக அது இருந்தது" என்று டிரம்ப் சனிக்கிழமை கூறினார். "நடந்ததைப் பார்த்திருந்தால், அதாவது, நான் அதை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பது போலப் பார்த்தேன். நீங்கள் அந்த வேகம், அந்த வன்முறை... ஆகியவற்றைப் பார்த்திருந்தால், அது ஒரு ஆச்சரியமான விஷயம். இந்த வீரர்கள் செய்தது ஒரு அற்புதமான வேலை."

அமெரிக்கா - வெனிசுவேலா, நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிப்பு, டிரம்ப்

பட மூலாதாரம், Donald Trump / TruthSocial

படக்குறிப்பு, டிரம்ப் தனது புளோரிடா பண்ணை வீட்டிலிருந்து நடவடிக்கையை நேரலையில் பார்த்தார்.

கடந்த சில மாதங்களில், அதிபர் டிரம்ப், மதுரோ மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதம் (narco-terrorism) ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா ஆயிரக்கணக்கான படைவீரர்களை அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒரு விமானம் தாங்கிக் கப்பலும் டஜன்கணக்கான போர்க்கப்பல்களும் இணைந்து, அந்த பிராந்தியத்தில் பல தசாப்தங்களில் காணப்படாத அளவிலான மிகப் பெரிய ராணுவ குவிப்பு நடைபெற்றது. மேலும், அந்தப் பிராந்தியத்தின் வழியாக போதைப்பொருள்களை கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட டஜன் கணக்கான சிறிய படகுகளையும் அமெரிக்கா அழித்துள்ளது.

ஆனால், 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' நடவடிக்கையின் முதல் அறிகுறிகள் வானில் தென்பட்டன. அமெரிக்க அதிகாரிகளின் தகவலின்படி, அந்த இரவு முழுவதும் நடந்த நடவடிக்கையின் போது, குண்டுவீசும் விமானங்கள், போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

"இது மிகவும் சிக்கலானது, மிகமிக சிக்கலானது. முழு இயக்கமும், தரையிறக்கங்களும், பயன்படுத்தப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையும்..." என்று ஃபாக்ஸ் செய்திகளுக்கு டிரம்ப் தெரிவித்தார். "எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக, எங்களிடம் ஒரு போர் விமானம் இருந்தது" என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் கராகஸில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், நகரத்தின் மேல் புகை மேகங்கள் எழுந்ததை காண முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.

"நான் மிகப் பெரிய சத்தத்தைக் கேட்டேன். ஒரு பெரும் வெடிப்புச் சத்தம்," என்று செய்தியாளர் அனா வனெஸ்ஸா ஹெரேரோ பிபிசிக்கு கூறினார். "அது அனைத்து ஜன்னல்களையும் அதிரவைத்தது. உடனே, முழு பார்வையையும் மறைத்துவிடும் அளவுக்கு ஒரு பெரிய புகை மேகத்தை நான் பார்த்தேன். நகரம் முழுவதும் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பறந்துகொண்டிருந்தன" என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா - வெனிசுவேலா, நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிப்பு, டிரம்ப்

பட மூலாதாரம், LUIS JAIMES/AFP via Getty Images

வானில் ஏராளமான விமானங்கள் பறப்பதைக் காட்டும் காணொளிகளும், வெடிப்புகளுக்குப் பிந்தைய நிலையை காட்டும் பிற காணொளிகளும் விரைவில் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. அவற்றில் ஒன்றில், குண்டுவெடிப்புகளால் எழுந்ததாகத் தோன்றும் புகை மேகங்கள் மேலெழும்ப, கராகஸின் மேல், தாழ்வான உயரத்தில் ஹெலிகாப்டர்கள் ஒரு அணிவகுப்பாகப் பறந்ததை காண முடிந்தது.

"அதிகாலை சுமார் 1:55 மணியளவில், வெடிப்புச் சத்தம், கராகஸின் மேல் பறந்த விமானங்களின் ஓசையும் கேட்டு நாங்கள் விழித்தோம்" என்று டேனியலா என்பவர் பிபிசிக்கு கூறினார். "அனைத்தும் முழு இருளில் மூழ்கியது. அருகில் குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட வெளிச்சமே ஒரே ஒளியாக இருந்தது".

"அபார்ட்மெண்ட் வாட்ஸ்ஆப் குழுவில் ஒருவருக்கொருவர் செய்தி அனுப்பிக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்பதையே புரியாமல், அந்த சத்தங்களால் அனைவரும் பயந்திருந்தனர்" என்றும் அவர் கூறினார்.

கராகஸின் பல பகுதிகளில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள், தீப்பற்றல்கள் மற்றும் புகை மேகங்களை காட்டும் பல காணொளிகளை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்து, சரியாக எந்த இடங்கள் இலக்காகத் தாக்கப்பட்டன என்பதைக் கண்டறிந்துள்ளது.

இதுவரை, ஜெனரலிசிமோ பிரான்சிஸ்கோ டி மிராண்டா விமானப்படைத் தளம், லா கார்லோட்டா என அறியப்படும் விமானத் தளம், லா குவாய்ரா துறைமுகம் உள்ளிட்ட ஐந்து இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன என்பதை அது உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா - வெனிசுவேலா, நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிப்பு, டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க தாக்குதல்களில் சில வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிற ராணுவ இலக்குகளைக் குறிவைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பணி தொடங்குவதற்கு முன்பு கராகஸில் உள்ள மின்சாரத்தை துண்டிக்க டிரம்ப் பரிந்துரைத்தார். இருப்பினும் அவர் எப்படி என்று குறிப்பிடவில்லை.

"எங்களிடம் உள்ள ஒரு குறிப்பிட்ட நிபுணத்துவம் காரணமாக கராகஸின் விளக்குகள் பெரும்பாலும் அணைக்கப்பட்டன. இது இருட்டாக இருந்தது மற்றும் அது கொடியது" என்று அவர் கூறினார்.

'நாங்கள் வருவது அவர்களுக்குத் தெரியும்'

கராகஸின் பல பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்த வேளையில், அமெரிக்கப் படைகள் நகருக்குள் நுழைந்தன. அதில், அமெரிக்க ராணுவத்தின் மிக உயரிய சிறப்பு நடவடிக்கை அலகான டெல்டா ஃபோர்ஸின் உறுப்பினர்களும் அடங்கியிருந்தனர் என்று, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்-க்கு தகவல் அளித்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் கனரக ஆயுதங்களுடன் இருந்ததோடு, மதுரோவின் பாதுகாப்பு இல்லத்தின் உலோகக் கதவுகளை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்குப் பயன்படுத்துவதற்காக ஒரு ப்ளோடோர்ச்சையும் எடுத்துச் சென்றிருந்தனர்.

ஜெனரல் கெய்னின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:01 மணிக்கு தாக்குதல்தொடங்கிய பிறகு, அந்தப் படையினர் மதுரோ இருந்த இடத்தை அடைந்தனர். கராகஸின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்தப் பாதுகாப்பு இல்லத்தை, கடுமையாக பாதுகாக்கப்பட்ட ராணுவ கோட்டை என்று டிரம்ப் விவரித்தார்.

"அவர்கள் எங்களுக்காகத் தயாரான நிலையில் காத்திருந்தார்கள். நாங்கள் வருவதை அவர்கள் அறிந்திருந்தார்கள்" என்று அவர் கூறினார்.

படைகள் அங்கு வந்தவுடன் எதிர்தாக்குதல் நடந்தது.. ஒரு அமெரிக்க ஹெலிகாப்டர் தாக்கப்பட்டாலும், அதனால் தொடர்ந்து பறக்க முடிந்தது. "மதுரோவின் வளாகத்திற்குள் நுழைந்த படை, வேகம், துல்லியம் மற்றும் ஒழுக்கத்துடன் செயல்பட்டது" என்று ஜெனரல் கெய்ன் தெரிவித்தார்.

"அவர்கள் அப்படியே உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள். உண்மையில் உடைக்க முடியாததாக அமைக்கப்பட்ட இடங்களையும் அவர்கள் உடைத்தனர். இதற்காகவே அமைக்கப்பட்டிருந்த எஃகு கதவுகளைக்கூட" என்று டிரம்ப் கூறினார்.

மதுரோவின் மனைவி சிலியா ஃப்ளோரஸும் பிடிபட்ட இந்த நடவடிக்கை நடைபெற்று கொண்டிருந்த போதுதான், வெளியுறவுத் துறை அமைச்சர் ரூபியோ இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அளிக்கத் தொடங்கினார். இந்த முடிவு, நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

"நான் தெளிவாகச் சொல்கிறேன்: நிக்கோலஸ் மதுரோ ஒரு சட்டப்பூர்வமற்ற சர்வாதிகாரி. ஆனால் நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றியும், அதன் பின்பு என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த திட்டமின்றியும் ராணுவ நடவடிக்கையை தொடங்குவது பொறுப்பற்ற செயல்," என்று செனட்டில் ஜனநாயகக் கட்சித் தலைவராக இருக்கும் சக் ஷூமர் கூறினார்.

முன்கூட்டியே நாடாளுமன்றத்திற்கு விளக்கம் அளித்திருந்தால், அந்த நடவடிக்கை ஆபத்துக்குள்ளாகியிருக்கும் என்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரூபியோ தெரிவித்தார்.

அமெரிக்கா - வெனிசுவேலா, நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிப்பு, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெனிசுவேலாவில் தலைநகர் கராகஸைச் சுற்றியுள்ள பல இடங்களை அமெரிக்கா தாக்கியது.

வெனிசுவேலா அதிபர் மதுரோ தன் வளாகத்திற்குள் அமெரிக்காவின் எலைட் படையினர் பெருமளவில் நுழைந்தபோது, ஒரு பாதுகாப்பு அறைக்குத் தப்பிச் செல்ல முயன்றதாக டிரம்ப் தெரிவித்தார்.

"அவர் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயன்றார். ஆனால் அது பாதுகாப்பான இடமல்ல. ஏனெனில், சுமார் 47 விநாடிகளில் அந்தக் கதவை நாங்கள் வெடிக்கச் செய்திருப்போம்," என்று அவர் கூறினார்.

மேலும், "அவர் கதவு வரை வந்தார். ஆனால் அதை மூட முடியவில்லை. அவ்வளவு வேகமாக அவரைச் சுற்றி நெருங்கிவிட்டார்கள். அதனால் அவர் அந்த அறைக்குள் செல்லவே முடியவில்லை" என்றும் அவர் கூறினார்.

2013-ஆம் ஆண்டு அதிபர் பதவியை ஏற்றுக்கொண்ட மதுரோ, கைது செய்யப்படும் போது எதிர்த்திருந்தால், அமெரிக்கா அவரை கொல்லக்கூடிய நிலையிலிருந்ததா என்ற கேள்விக்கு, "அது நடந்திருக்க வாய்ப்பு இருந்தது" என்று டிரம்ப் பதிலளித்தார்.

அமெரிக்கா தரப்பில் இரண்டு வீரர்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக அவர் கூறினார். ஆனால் எந்த அமெரிக்க வீரரும் உயிரிழக்கவில்லை. வெனிசுவேலா அதிகாரிகள் இதுவரை எந்த உயிரிழப்பையும் உறுதிப்படுத்தவில்லை.

மதுரோவைக் கைது செய்ய வழிவகுக்கும் தகவலைத் தந்தால் 5 கோடி அமெரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் சனிக்கிழமை அதிகாலை உள்ளூர் நேரப்படி 4:20 மணிக்குள், மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் ஹெலிகாப்டர்களில் வெனிசுவேலா எல்லையை விட்டு வெளியேறப்பட்டனர்.

அவர்கள் அமெரிக்க நீதித்துறையின் காவலில், இறுதியாக நியூயார்க் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சரியாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர், மதுரோவை சிறைபிடித்த செய்தியை டிரம்ப் உலகுக்கு அறிவித்தார்.

"மதுரோவும் அவரது மனைவியும் விரைவில் அமெரிக்க நீதியின் முழு வலிமையையும் எதிர்கொள்ளப் போகிறார்கள்" என்று அவர் கூறினார்.

கூடுதல் தகவல்கள்: ரிஸ்டோபல் வாஸ்கெஸ்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு