பாக்யராஜின் 10 முக்கிய படங்கள் - வியந்த விஷயங்களை பகிரும் திரை பிரபலங்கள்

கே பாக்யராஜ், பாக்யராஜ் 50

பட மூலாதாரம், ungalkbhagyaraj/Instagram

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ் சினிமாவின் 'திரைக்கதை மன்னர்' என்ற அடைமொழியைப் பெற்றிருக்கும் இயக்குநர் கே.பாக்யராஜ், சினிமாவில் தனது 50 வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் ஆகிய படங்களில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்ற தொடங்கிய அவர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்டவர்.

சினிமாவில் 50-வது ஆண்டை நிறைவு செய்யும் பாக்யராஜ் குறித்து சக சினிமா கலைஞர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல்களும் அவரின் 10 முக்கிய திரைப்படங்களும் இங்கே தரப்பட்டுள்ளன.

'அந்த 7 நாட்கள்' பற்றி இயக்குநர் பார்த்திபன்

கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்து பின் இயக்குநரானவர் பார்த்திபன்.

பாக்யராஜ் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''அவரைப் பற்றி நீங்கள் கேட்டதும் நான் உடனே பதில் சொல்லாமல் 2 நிமிடம் யோசித்தேன். இதுதான் அவரிடம் முதலில் கற்றுக்கொண்டேன். எதையும் நிதானமாக யோசித்து, சிறப்பாக திட்டமிட்டு தெளிவாக செய்ய வேண்டும் என்பது அவர் பாணி. எல்லா படத்திலும் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். அவர் படங்களில் அது அதிகமாக இருக்கும்." என்றார்.

இயக்குனர் பார்த்திபன்

பட மூலாதாரம், radhakrishnan_parthiban/Instagram

படக்குறிப்பு, இயக்குனர் பார்த்திபன்

"அவர் படங்களில் 'ஒரு கை ஓசை' எனக்கு மிகவும் பிடிக்கும். வாய் பேச முடியாத ஒருவன் பேச வேண்டும் என ஆசைப்படுகிறான். ஆனால், அவனுக்கு பேச்சு வந்தபோது பேச ஆசைப்படவில்லை என கவிதை மாதிரி சொல்லி இருப்பார். பொதுவாக அவர் படங்களில் வசனம் நன்றாக இருக்கும் என சொல்வார்கள். தனது 2வது படமான அந்த படத்திலேயே வசனம் பேசாமல் நடித்திருப்பார்.

மெளன கீதங்கள் திரைப்படத்தில் வரும் அதிகமான ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்கு நான் ரசிகன். அடுத்து அவரின் திரில்லர் படமான 'விடியும் வரை காத்திரு' வித்தியாசமாக இருக்கும்.

எனக்கு அவர் படங்களில் பிடிக்காதது அந்த 7 நாட்கள். அந்த கருத்து எனக்கு பிடிக்காது. இதை அவரிடமே சொல்லியிருக்கிறேன். 'என் காதலி உனக்கு மனைவி ஆகலாம். ஆனால், உங்க மனைவி எனக்கு காதலி ஆக முடியாது' என்ற வசனம் அதில் பிரபலம். அந்த தாலி சென்டிமென்ட் பிடிக்கவில்லை. ஏனெனில், புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் அதே தாலியை வேறு மாதிரி பயன்படுத்தி இருப்பார். தாலி என்பது என்னை பொறுத்தவரையில் ஆதார் அட்டை மாதிரி. அதேமாதிரி முந்தானை முடிச்சு படமும் வழக்கமான படம்தான். டார்லிங் டார்லிங் படத்தின் ஸ்டைல், கிளைமாக்ஸ் பிடிக்கும். தாவணிக் கனவுகள் மிகவும் ஸ்பெஷலான படம், ஏனெனில் அதில்தான் என்னை அவர் அறிமுகப்படுத்தினார். " என்று பார்த்திபன் கூறினார்.

"அவரே ஒரு மேடையில், 'நான் ஜெயித்ததால் பார்த்திபன், பாண்டியராஜன் ஜெயிக்கவில்லை. அவர்களின் உழைப்பு, தனித்தன்மை, சுயமாக சிந்தித்தல் தான் அவர்களின் வெற்றிக்கு காரணம்' என்றார். அதனால்தான் நானும் சுயமாக சிந்தித்தேன். என் படங்கள் அவர் படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும், அதற்கு சுய சிந்தனைதான் காரணம். அவரும் தனது குருநாதர் பாரதிராஜாவின் பாணியில் இருந்து விலகி வித்தியாசமாக, சுயமாக சிந்தித்தார். அப்போதெல்லாம் பாக்யராஜ் சார் பிறந்த நாளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என 6 மாதத்துக்கு முன்பே சிந்திக்க ஆரம்பித்துவிடுவேன். ஒரு தடவை என் அம்மாவுடைய மூக்குத்தியை அடகு வைத்து பரிசு வாங்கிக் கொடுத்தேன். இப்போது, அடகு வைக்கும் நிலையில் நான் இல்லை, அன்பை தவிர." என்றார் பார்த்திபன்.

'இப்போதும் பாலக்காட்டு மாதவானு கூப்பிடுவேன்': நடிகை அம்பிகா

கே.பாக்யராஜின் திரைப்பயணத்தின் அந்த 7 நாட்கள் மிக முக்கியமான படம். அப்படத்தின் கதாநாயகி அம்பிகா, பாக்யராஜ் குறித்து கூறிய வார்த்தைகள்.

"நான் எப்படி அந்த 7 நாட்களை தவிர்த்து பேசுவேன். நான் தமிழில் அறிமுகமான காலத்தில் சகலகலாவல்லவன் படம் புகழ் வாங்கிக்கொடுத்தது. அந்த 7 நாட்கள் படத்தில் நடித்த வசந்தி கதாபாத்திரம் பற்றி இன்னும் பாராட்டுகிறார்கள். அந்த கதாபாத்திரத்தின் தன்மை, நடிப்பு பற்றி வியந்து பேசுகிறார்கள்.

அடிப்படையில் நான் மலையாளி. ஆனால், அந்த படத்தில் பாக்யராஜ் சார் மலையாளியாக நடித்தார். எனக்கு தமிழ் பெண் கதாபாத்திரம். நான் இன்றும் அவரை சந்திக்கும்போது 'பாலக்காட்டு மாதவா' (பாக்யராஜ் நடித்த கதாபாத்திரத்தின் பெயர்) என பாசமாக அழைப்பேன், அவர் என்னை வசந்தி என்பார் வாஞ்சையுடன்.'' என்றார்

அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் அம்பிகா, பாக்யராஜ்

பட மூலாதாரம், Youtube

படக்குறிப்பு, அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் அம்பிகா, பாக்யராஜ்

''அவர் மாதிரியான நகைச்சுவை உணர்வை வேறு யாரிடமும் பார்த்தது இல்லை. அந்த படத்தின் இறுதிக் காட்சியில் வந்த வசனம் தமிழ் திரையுலகில் சாகாவரம் பெற்றவை. அந்த படம் குறித்து மீம்ஸ் இன்றும் சமூக ஊடகங்களில் வந்து கொண்டு இருக்கின்றன.

அந்த படத்தில் அவர் பேசிய வசனங்கள் பிடிக்கும். குறிப்பாக, 'நான் கேரளாக்காரன், அது தமிழ் பொண்ணு, நாங்க லவ் பண்ணி ஓடிப்போனால் அது வேறு பிரச்னையாக மாறிடும்' என ஒரு வசனம் வரும். அதேபோன்று, படத்தில் நான் விஷம் குடித்தவுடன் அவர் பேசும் வசனம், அவர் இசையமைக்கும் காட்சி என, அந்த படம் பற்றி பல நாட்கள் பேசுவேன். எனக்கு அந்த படம் மிகவும் பிடிக்கும்.'' என்றார்.

'ஈகோ பார்க்காமல் நடித்து காண்பிப்பார்' - பாண்டியராஜன்

உங்களுக்கு பிடித்த பாக்யராஜ் படங்கள் எவை என இயக்குநர், நடிகர் பாண்டியராஜனிடம் கேட்டோம். அவர் பகிர்ந்தவை:

"மெளன கீதங்கள் தொடங்கி, டார்லிங் டார்லிங் வரை அவரிடம் பணியாற்றினேன். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள். எல்லாமே அவரிடம் கற்றுக்கொண்டதுதான். குறிப்பாக, எப்படி பேச வேண்டும், மற்றவர்களின் கருத்துகளுக்கு எப்படி மதிப்பு அளிக்க வேண்டும், மற்றவர்கள் நடவடிக்கையை எப்படி கவனிக்க வேண்டும், நாம் பதிலுக்கு எப்படி பேச வேண்டும் என்று அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.

கதை விவாதங்களில் நல்ல காட்சிகள் சொன்னால் அவரே ரசிப்பார், சிரிப்பார், பாராட்டுவார். ஆனால், மறுநாள் அவர் சொன்ன காட்சிக்கு மாற்று காட்சி சொல்வார். முன்பு சொன்னதை விட, அது நன்றாக இருக்கும்.'' என்றார்

இயக்குனர் பாண்டியராஜன்

பட மூலாதாரம், Pandiarajan

படக்குறிப்பு, இயக்குனர் பாண்டியராஜன்

''குறிப்பாக, படப்பிடிப்பு தளத்தில் ஈகோ பார்க்காமல் அனைத்து நடிகர்களுக்கும் நடித்து காண்பிப்பார். சிறிய நடிகர், பெரிய நடிகர் என்றெல்லாம் பார்க்க மாட்டார். அதனால்தான் அவருடைய படங்கள் பேசப்படுகின்றன.

சிறிது நேரம் கிடைத்தால் கூட இரண்டு புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்து விடுவார். அவரின் கற்பனைக்கு, புதுவித சிந்தனைக்கு அந்த வாசிப்பு தான் காரணம்.

ஒருமுறை மேடையில் பேசுவதை மறுமுறை பேச மாட்டார். சினிமாவுக்கு கதாசிரியர் முக்கியமானவர் என நிரூபித்தவர். ஒரு கதாபாத்திரத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்பார்'' என்றார் பாண்டியராஜன்

''எனக்கு பிடித்த படங்களில் 'இன்று போய் நாளை வா'. அப்போது நான் திருமணமாகாத இளைஞனாக இருந்தேன், அதை ரசித்தேன். அடுத்து சுவர் இல்லாத சித்திரங்கள். இப்படியெல்லாம் ஒரு படம் எடுக்க முடியுமா என வியந்துதான், அடுத்த ஆறு மாதத்தில் அவரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அந்த 7 நாட்கள் கண்கலங்க வைத்தது. அதேபோல் சுந்தரகாண்டமும் மிகவும் பிடிக்கும்.''

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'அவ்வளவு புத்தகங்கள் படிப்பார்' - செம்புலி ஜெகன்

இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர், அவருடைய படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர் ராசுக்குட்டி புகழ் செம்புலி ஜெகன்.

"என் குருநாதரிடம் முதலில் கற்றுக்கொண்டது ஒழுக்கம்தான். சினிமாவுக்கு பொறுமை தேவை என்பார். அவரிடம் உதவியாளராக சேர ஏகப்பட்ட பேர் வருவார்கள். அத்தனை பேரையும் சேர்த்துக்கொள்ள மாட்டார். அதற்கு ஏகப்பட்ட பரிசோதனைகளை வைப்பார். ஒரு காட்சியை சொல்ல தெரிகிறதா, சினிமா ஆர்வம் இருக்கிறதா, நேரத்தை சரியாக பயன்படுத்துகிறாரா என பார்ப்பார்.

நான் 3 ஆண்டுகள் தினமும் காத்திருந்துதான் அவரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அவர் காலையில் எழுந்தவுடன் 3, 4 புத்தகங்களை படிக்க தேர்ந்தெடுப்பார். அதை முடிந்தவரை விரைந்து முடித்துவிடுவார். அந்த பழக்கம்தான் அவரின் திறமைக்கு முக்கியமான காரணம்.

மற்ற நண்பர்கள், தன்னை சந்திக்க வருபவர்களிடம் பேசி, பல விஷயங்களை கூச்சப்படாமல் தெரிந்துகொள்வார். ஒரு நல்ல கதைக்கு தேவையான விஷயத்தை, நல்ல காட்சியை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்.

அவரின் சுவர் இல்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, முந்தானை முடிச்சு, மெளன கீதங்கள் மிகவும் பிடிக்கும். ஆராரோ ஆரிராரோ, பவுனுபவுனுதான், அவசர போலீஸ் 100, சுந்தர காண்டம், ராசுக்குட்டி படங்களில் நான் பணியாற்றிறேன். அந்த படங்களும் பிடிக்கும். நான் காட்சி பிடிக்காவிட்டால தைரியமாக சொல்வேன், நிறைய விவாதம் வரும். அவர் அதை ஏற்றுக்கொள்வார், அதுதான் அவரின் பலம்." என்றார் செம்புலி ஜெகன்.

பாக்யராஜின் 10 முக்கிய திரைப்படங்கள்

சுவரில்லாத சித்திரங்கள்

சுதாகர், பாக்யராஜ், சுமதி, கவுண்டமணி நடித்த இந்த படம் காதலை மட்டுமல்ல, அந்த கால இளைஞர்களின் வாழ்க்கை, கனவு, வேலையில்லா திண்டாட்டம், பசி கொடுமை என பல விஷயங்களை வெளிப்படுத்தியிருந்தது. பாக்யராஜ் நடிப்பும், கவுண்டமணியின் நகைச்சுவையும் இன்றும் பேசப்படுகின்றன. கங்கை அமரன் இசையமைப்பில் உருவான 'காதல் வைபோகமே' பாடல் இன்றும் கொண்டாடப்படுகிறது. அதன் உருக்கமான இறுதிக்காட்சி பலரது பாராட்டைப் பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. தையல்காரராக நடித்த கவுண்டமணியின் நகைச்சுவையை அவ்வளவு எளிதில் மறக்க முடியாதது.

முந்தானை முடிச்சு

பாக்யராஜ், ஊர்வசி, தீபா நடித்த கிராமப்புற பின்னணியில் அமைந்த நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட படம். கைக்குழந்தையுடன் இருக்கும் பள்ளி ஆசிரியரை, ஊர்வசி எப்படி திருமணம் செய்கிறார், அதற்கு என்னென்ன பொய்கள் சொல்கிறார் என்ற ரீதியில் கதை நகரும். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இளையராஜா, பாக்யராஜ் கூட்டணியில் உருவான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பிரபலமடைந்தன. இந்த படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில்தான் ஊர்வசி அறிமுகம் ஆனார்.

முந்தானை முடிச்சு

பட மூலாதாரம், Youtube

படக்குறிப்பு, முந்தானை முடிச்சு

அந்த 7 நாட்கள்

மலையாளியான பாலக்காட்டு மாதவனுக்கும், தமிழ் பெண் வசந்திக்கும் காதல். ஆனால், சூழ்நிலை காரணமாக ராஜேஷை மணக்கிறார் வசந்தி. விஷயம் அறிந்த கணவர் அவரின் காதலை சேர்த்து வைக்க நினைக்க, என்ன நடந்தது என்பதுதான் கதை.

பாக்யராஜ் நடிப்பு, அம்பிகாவுடனான காதல் என எல்லாமே படத்தில் சிறப்பாக இருக்கும். இந்த பட சாயலில், இந்த கதையை தழுவி தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவில் பல படங்கள் வந்துள்ளன.

இன்று போய் நாளை வா

காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் நிறைந்த படம்.

3 நண்பர்கள், எதிர் வீட்டு பெண் என சாதாரண பின்னணியில் , மிக இயல்பான எடுத்து இருப்பார் பாக்யராஜ். அந்த பெண்ணை கவர நண்பர்கள் செய்யும் விஷயங்கள், அந்த கிராமத்து பின்னணி, பெண்ணின் வெகுளித்தனம் என படத்தில் பல பிளஸ். ராதிகா நடிப்பும், நகைச்சுவை காட்சிகளும் இன்றும் பேசப்படுகின்றன. இந்த படமும் பிற்காலத்தில் பல கதைகளாக உருவானது.

ஒரு கை ஓசை

பாக்யராஜ் இயக்கிய 2வது படம். வாய்பேச முடியாத இளைஞர் ஒருவர், மருத்துவரிடம் காதலை சொல்லும் கதை. அந்த காலத்தில் டீக்கடைகளில் இருந்த சாதிய ஏற்றத்தாழ்வுகள் என பல விஷயங்களை சொன்ன படம். அப்படி பாதிக்கப்படும் கதாபாத்திரங்களில் சங்கிலி முருகன் வருவார். பாக்யராஜ் படங்களுக்கே உரிய கிளைமாக்ஸ் இதிலும் இடம்பிடித்து, பலரை கவர்ந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். உதிரிப்பூக்கள் அஸ்வினி ஹீரோயினாக நடித்து இருந்தார்.

ஒரு கை ஓசை

பட மூலாதாரம், Youtube

படக்குறிப்பு, ஒரு கை ஓசை

சின்ன வீடு

விருப்பம் இல்லாத திருமணம், உடல்பருமனான மனைவி, மற்றொரு பெண்ணுடன் உறவு என பல விஷயங்களை சொல்லும் படம். பாக்யராஜ் மனைவியாக கல்பனா நடித்து இருந்தார். பாக்யராஜ் அம்மாவாக வரும் கோவை சரளா நடிப்பு, கல்பனாவின் வெகுளித்தனம் படத்துக்கு பலமாக இருந்தது.

மெளனகீதங்கள்

ஒரே அலுவலகத்தில் வேலை, எதிரெதிர்வீடு, ஆனால், பிரிந்திருக்கும் கணவன்-மனைவி என்ற வித்தியாசமான கரு. பாக்யராஜ் நடிப்பு மட்டுமல்ல, சரிதாவின் கோபம், வைராக்கியமும், இவருக்கும் இடையேயான சண்டையும் படத்தின் முக்கிய அம்சங்கள். கங்கை அமரன் இசையில் 'மூக்குத்திப் பூமேலே', 'மாசமோ மார்கழி மாசம்', 'டாடி டாடி' பாடல்கள் பிரபலமடைந்தன. பாக்யராஜுக்கு மகனாக வரும் சிறுவனின் நடிப்பும் பேசப்பட்டது.

சுந்தரகாண்டம்

தான் படித்த பள்ளியிலேயே தமிழ் ஆசிரியராக வரும் பாக்யராஜை, பள்ளி மாணவி சிந்துஜா காதலிக்கிறார். அது தவறு என சொல்லி, பானுப்பிரியாவை மணக்கிறார் பாக்யராஜ். மீண்டும் அவர்கள் வாழ்வில் சிந்துஜா வர என்ன நடக்கிறது என்பது தான் கதை. படத்தில் நகைச்சுவையும் கதைக்கு பலம்.

டார்லிங் டார்லிங் டார்லிங்

சிறுவயதில் தொழிலதிபர் மகள் பூர்ணிமாவை காதலிப்பார் பாக்யராஜ். அவர் படித்து விட்டு பெரியவர் ஆகி வர, பாக்யராஜ் என்ன செய்கிறார், அவர் நிலை என்ன ஆனது என்பது கதை. படத்தின் இறுதிக்காட்சி யாரும் எதிர் பாராதது. அதே படத்தில் இடம் பெற்ற அழகிய விழிகளில் பாடல், பூர்ணிமாவின் நடனம், யதார்த்தமான வசனங்கள் படத்தை வெற்றி பெற வைத்தன.

தூறல் நின்னு போச்சு

பாக்யராஜ் , சுலோக்சனா, நம்பியார் நடிப்பில் உருவான கிராமத்து பின்னணியிலான படம். நம்பியாரை வேறு மாதிரி காண்பித்து இருப்பார் பாக்யராஜ். அவரின் நடிப்பும், என் சோக கதை கேளு பாடலுக்கு ஆடும் அழகும் சிறப்பாக அமைந்தன. தங்கச்சங்கிலி, ஏரிக்கரை பூங்காற்றே பாடல்கள் ஹிட்டானது. செந்தாமரை வில்லத்தனம் பேசப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு