வெனிசுவேலா குழப்பம் சீனாவுக்கு கூறும் செய்தி - தைவானில் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லாரா பிக்கர்
- பதவி, சீன செய்தியாளர்
சீனா பல ஆண்டு காலமாக வளர்த்தெடுத்த ஒரு உறவை, டொனால்ட் டிரம்ப் வெறும் சில மணிநேரங்களில் தலைகீழாக மாற்றிவிட்டார்.
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான், சீனாவின் மூத்த தூதர்களுடனான சந்திப்பில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை "ஒரு மூத்த சகோதரர்" என்றும், "உலகிற்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியை வழங்கும் தலைவர்." என்றும் அவர் புகழ்ந்து கொண்டிருந்தார்.
எண்ணெய் வளம் மிக்க வெனிசுவேலாவில் சீனா பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது.
தென் அமெரிக்காவில் சீனாவின் நெருங்கிய கூட்டாளிகளில் வெனிசுவேலாவும் ஒன்று.
இரு நாடுகளுக்கும் இடையே தற்போது அமலில் இருக்கும் 600 ஒப்பந்தங்களில் சிலவற்றை, கோட் சூட் அணிந்த நபர்கள் புன்னகையுடன் ஆய்வு செய்யும் காட்சிகளை சீன அரசு ஊடகங்கள் ஒளிபரப்பின.
ஆனால், மதுரோவின் அடுத்த புகைப்படம் ஒரு அமெரிக்கப் போர்க்கப்பலில், கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில், சாம்பல் நிற உடையில் எடுக்கப்பட்டிருந்தது.
ஒரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிராக அமெரிக்கா எடுத்த இந்த நடவடிக்கையை சீனா உட்பட உலகின் பல நாடுகள் கண்டித்தன.
அமெரிக்கா "உலக நீதிபதி" போலச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய சீனா, "அனைத்து நாடுகளின் இறையாண்மையும் பாதுகாப்பும் சர்வதேச சட்டத்தின் கீழ் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்." என்று வலியுறுத்தியது.
இந்தக் கடுமையான வார்த்தைகளுக்கு அப்பால், தென் அமெரிக்காவில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், டிரம்புடன் ஏற்கனவே சிக்கலான உறவை நிர்வகிக்கவும், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வல்லரசுப் போட்டி புதியதும் முற்றிலும் எதிர்பாராத திருப்பத்தை எடுக்கும் நிலையில், தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளை திட்டமிடவும் கவனமாகக் கணக்கிடும்.
பலர் இதை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியாளர்களுக்கு ஒரு வாய்ப்பாகக் காண்கிறார்கள்.
ஆனால், பல ஆண்டு காலமாக சீனா பின்பற்ற முயன்ற சர்வதேச விதிமுறைகளை டிரம்ப் தகர்த்தெறிந்த பிறகு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை சீனா ஆராய்ந்து வரும் நிலையில், அங்கு அபாயம், உறுதியின்மை மற்றும் விரக்தியும் உள்ளது.
நீண்ட காலத் திட்டங்களை வகுப்பதில் ஆர்வம் காட்டும் சீனா, குழப்பங்களை விரும்புவதில்லை. ஆனால் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அத்தகைய குழப்பங்களையே சீனா தொடர்ந்து எதிர்கொள்கிறது.
முன்கூட்டியே திட்டமிட்டு வர்த்தகப் போரைச் சமாளித்த ஷி ஜின்பிங், சீனத் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை அமெரிக்காவும் உலக நாடுகளும் எவ்வளவு தூரம் சார்ந்துள்ளன என்பதை நிரூபித்துவிட்டதாக நம்புவார்.
ஆனால் இப்போது சீனா ஒரு புதிய சவாலை எதிர்கொள்கிறது.
வெனிசுவேலா எண்ணெயை குறிவைத்து டிரம்ப் மேற்கொள்ளும் அரசியல் நகர்வு, அமெரிக்காவின் நோக்கங்கள் குறித்து சீனாவுக்கிருந்த ஆழ்ந்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியிருக்கலாம்.
சீனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா எவ்வளவு தூரம் செல்லத் தயாராக உள்ளது? என்ற கேள்வியை இது மீண்டும் முன்வைக்கிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று என்பிசி ஊடகத்திடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இது குறித்துப் பேசுகையில், "இது மேற்கு அரைக்கோளம். இங்கு தான் நாங்கள் வாழ்கிறோம். அமெரிக்காவின் எதிரிகளுக்கோ, போட்டியாளர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ இந்த மேற்கு அரைக்கோளம் ஒரு செயல்பாட்டுத் தளமாக இருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்று தெரிவித்தார்.
எங்களது ஆதிக்கத்தின் கீழ் உள்ள பகுதியில் இருந்து வெளியேறுங்கள் என்ற அந்த மறைக்கப்படாத செய்தி சீனாவுக்கானது.

பட மூலாதாரம், Getty Images
சீனா இதனை கேட்க வாய்ப்பில்லை. ஆனால், அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கும்.
சீனா தனது பிரிந்து சென்ற மாகாணமாகக் கருதும், தன்னாட்சி பெற்ற தீவான தைவானிலும் இது போன்ற ஒரு நடவடிக்கையை எடுக்க முடியுமா என்பதைக் கண்டறியவே சீனா காத்திருப்பதாகச் சிலர் கருதுகின்றனர்.
தைவான் ஒரு நாள் சீனாவுடன் "மீண்டும் இணைக்கப்படும்" என்று ஷி ஜின்பிங் உறுதி அளித்துள்ளார், மேலும் இதை அடைவதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியதையும் அவர் நிராகரிக்கவில்லை.
இதனால் சீன சமூக ஊடகங்களில் உள்ள சில தேசியவாதிகள் ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள்.
"அமெரிக்காவால் காரகாஸில் (வெனிசுவேலா தலைநகர்) தன்னிச்சையாகச் செயல்பட முடியுமென்றால், தைவான் அதிபரைக் பிடிப்பதிலிருந்து செய்வதிலிருந்து சீனாவைத் தடுப்பது எது?" என்பது தான் அந்தக் கேள்வி.
முதலாவதாக, இந்த இரண்டு சூழல்களையும் சீனா ஒன்றாகப் பார்க்காது.
ஏனெனில் அது தைவானைத் தனது உள்நாட்டு விஷயமாகக் கருதுகிறதே தவிர, சர்வதேச ஒழுங்குமுறைக்கு உட்பட்ட ஒன்றாகக் கருதவில்லை.
ஆனால் அதைவிட முக்கியமானது, ஷி ஜின்பிங் அந்தத் தீவின் மீது படையெடுக்கத் தீர்மானித்தால், அது அமெரிக்கா ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக இருக்காது என்கிறார் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலைச் (சி.எஃப்.ஆர்) சேர்ந்த டேவிட் சாக்ஸ்.
"ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான இழப்போடு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை," சீனாவிடம் கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அந்த நாள் வரும் வரை, தைவான் மக்களைத் தனது பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வரும் நோக்கத்தோடு, அவர்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் உத்தியையே சீனா தொடரும். வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் இந்த நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது."
மாறாக, இந்தத் தாக்குதல்கள் சீனாவுக்குத் தேவையில்லாத மற்றும் அது விரும்பாத ஒரு சவால்.
இது உலகளாவிய தெற்கு நாடுகளை தன் பக்கம் ஈர்க்கும் சீனாவின் நீண்டகாலத் திட்டத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
சீனாவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையிலான உறவு மிகவும் எளிமையானது. சீனாவிற்கு எண்ணெய் தேவைப்பட்டது. வெனிசுவேலாவிற்குப் பணம் தேவைப்பட்டது.
2000 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில், ரயில்வே, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்க வெனிசுவேலாவிற்கு சீனா 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வழங்கியது.
இதற்குப் பதிலாக, அதன் செழிப்பான பொருளாதாரத்திற்குத் தேவையான எண்ணெயை சீனா வெனிசுவேலாவிடமிருந்து பெற்றுக்கொண்டது.
கடந்த ஆண்டில் மட்டும் வெனிசுவேலாவின் 80% எண்ணெய் சீனாவிற்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், இது சீனாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 4% மட்டுமே. எனவே, காரகாஸில் சீனாவின் நிதி அபாயங்களைப் பொறுத்தவரை, "யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம்" என்கிறார் 'தி சீனா-குளோபல் சவுத்' திட்டத்தின் முதன்மை ஆசிரியர் எரிக் ஓலண்டர்.
"சிஎன்பிசி மற்றும் சினோபெக் போன்ற சீன நிறுவனங்கள் அங்குள்ள மிகப்பெரிய முதலீட்டாளர்கள். அமெரிக்காவின் வழிகாட்டுதலின் பேரில் அந்தச் சொத்துக்கள் வெனிசுவேலாவால் தேசியமயமாக்கப்படலாம் அல்லது அங்கிருக்கும் குழப்பமான சூழலில் அவை ஓரங்கட்டப்படலாம் என்ற அபாயம் உள்ளது." என்றார் எரிக் ஓலண்டர்.
மேலும், வெனிசுவேலா சீனக் கடன் வழங்குநர்களுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் நிலுவைத் தொகையை வழங்க வேண்டியுள்ளது. ஆனால், தற்போதைய நிலையில் எந்த முதலீடுகளுக்கு ஆபத்து உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பதால் நிதானம் தேவை என்றும் ஓலண்டர் கூறுகிறார்.
இருப்பினும், இந்தச் சூழல் எதிர்கால முதலீட்டாளர்களை எச்சரிக்கக்கூடும்.
"சீன நிறுவனங்கள் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன், அமெரிக்கத் தலையீட்டின் அபாயம் மற்றும் அதன் எல்லை குறித்து முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டும்," என்று ரென்மின் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பள்ளியைச் சேர்ந்த குய் ஷௌஜுன் சீன அரசு ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அந்த மென்மையான வர்த்தக உடன்படிக்கையைச் சீர்குலைக்க சீனா விரும்பாது.
அதே சமயம் லத்தீன் அமெரிக்காவில் தனது செல்வாக்கை இழக்கவும் அது விரும்பவில்லை.
குறிப்பாக டிரம்ப் போன்ற கணிக்க முடியாத ஒரு நபருடன் இந்தச் சமநிலையைப் பேணுவது கடினமாக இருக்கும்.
தென் அமெரிக்கா முழுவதும் உள்ள பிற நாடுகள், "தேவையில்லாமல் அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்துவிடுவோமோ" என்ற அச்சத்தில் பெரிய சீன முதலீடுகளைப் பற்றி கவலைப்படத் தொடங்குவதுதான் சீனாவிற்கான உண்மையான கவலை" என்று ஓலண்டர் கூறுகிறார்.
"இந்தப் பிராந்தியம் சீனாவிற்கு உணவு, எரிசக்தி மற்றும் இயற்கை வளங்களின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இப்பிராந்தியத்துடனான இருவழி வர்த்தகம் இப்போது அரை டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது."
பனாமா கால்வாய் தொடர்பான அனைத்து சீனத் துறைமுகப் பங்குகள் மற்றும் முதலீடுகளை பனாமா அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்கா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
இது "நிச்சயமாக சீனாவிற்கு கவலை அளிக்கும் விஷயம்" என்றும் அவர் கூறுகிறார்.
எனவே, அமெரிக்காவின் செல்வாக்கு மிகுதியாக இருக்கும் பகுதியில் சீனா வெற்றி பெற வேண்டுமென்றால், நேரடி மோதல் அல்லாமல் வேறு வழிகளைப் பயன்படுத்த வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
தென் அமெரிக்க நாடுகளைத் தன் பக்கம் ஈர்ப்பதில் சீனா மிகுந்த பொறுமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி வருகிறது.
"ஒன்றிணைந்த எதிர்காலத்துடன் கூடிய சமூகத்தை" உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளின் கூட்டமைப்பாக குளோபல் சவுத் அமைந்துள்ளது. இந்நாடுகள், "ஒருதலைப்பட்ச அச்சுறுத்தலுக்கு எதிராக" நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
மேற்கத்திய நாடுகள் மற்றும் குறிப்பாக டிரம்பின் தலைமையிலான அமெரிக்கா மீது அதிருப்தியில் உள்ள அரசாங்கங்களிடம் சீனாவின் இந்தச் செய்தி பலத்த வரவேற்பைப் பெறுகிறது. சீனா தனது கூட்டாளிகளிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதில் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருக்கிறது .
அதாவது, அவர்கள் "ஒரே சீனா" கொள்கையை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் தைவானை சீனாவின் ஒரு "ஒருங்கிணைந்த பகுதியாகக்" கருத வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளில், சீனாவை அங்கீகரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளை ஒத்துழைக்கச் செய்வதில் சீனா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
கோஸ்டா ரிகா, பனாமா, டொமினிகன் குடியரசு, எல் சால்வடோர், நிகராகுவா மற்றும் ஹொண்டுராஸ் ஆகியவை, 19 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதார நாடான சீனா முன்வைத்த உத்தி சார்ந்த கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இணங்கியுள்ளன.

இதற்கு நேர்மாறாக, அமெரிக்காவுடனான உறவு என்பது எந்த நேரத்திலும் மாறக்கூடியது என்பதை டிரம்ப் நிரூபித்துள்ளார்.
இது சீனாவிற்குச் சாதகமாக அமையக்கூடும். ஏனெனில் முன் எப்போதையும் விட இப்போது ஷி ஜின்பிங்கை ஒரு நிலையான தலைவராக உலகிற்கு முன்னிறுத்த சீனா முயல்கிறது.
"வெனிசுவேலாவின் சூழல் எளிதில் குழப்பமடையக்கூடும் என்பதால் இது மிகவும் முக்கியமானது" என்று ஓலண்டர் கூறுகிறார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், "மேலும், இராக் கற்றுக்கொடுத்த பாடத்தை மறந்துவிடக்கூடாது. இராக்கின் எண்ணெய் வளத்தைக் கொண்டே அந்நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைக்கலாம் என்று அமெரிக்கா அப்போது கூறியது. ஆனால் அது நடக்கவில்லை. இன்று இராக்கின் கச்சா எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாகச் சீனா உள்ளது. அதே போன்ற ஒரு சூழல் வெனிசுவேலாவிலும் எளிதாக நடக்கலாம்." என்று விவரித்தார்.
தென் அமெரிக்காவில் சீனாவின் செல்வாக்கை முறியடிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள சீன எதிர்ப்பாளர்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவை வலியுறுத்தி வந்தனர். அமெரிக்கா இப்போது தனது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் ஒவ்வொன்றும் பெரும் ஆபத்து கொண்ட நகர்வாகவே உள்ளது. ஆனால் பொதுவாகவே சீனா இத்தகைய நிலையை அறவே வெறுக்கக்கூடிய நாடு.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












