மயானத்துக்கு வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' என கொதிக்கும் மக்கள் - ஈரோட்டில் என்ன பிரச்னை?

மயானத்துக்கு கம்பி வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' எனக் கொதிக்கும் மக்கள் - தாளவாடியில் என்ன பிரச்னை?
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

"சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மயானத்தைப் பயன்படுத்தி வருகிறோம். தற்போது வக்ஃப் நிலம் எனக் கூறி வேலி போட்டுவிட்டனர். ஊரில் யாரும் இறந்தால் புதைப்பதற்குக்கூட மாற்று இடம் இல்லை" எனக் கூறுகிறார், ஈரோடு மாவட்டம் தாளவாடியை சேர்ந்த ரோகித்.

தாளவாடியில் பனகஹள்ளி, பாளையம் ஆகிய இரு கிராமங்களுக்குப் பொதுவாக இருந்த மயானத்தை வக்ஃப் நிலமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கிராம மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆனால், ஆவணங்களை முழுமையாக பரிசீலித்த பிறகே வக்ஃப் வாரியத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டதாக, பிபிசி தமிழிடம் தாளவாடி வட்டாட்சியர் தெரிவித்தார்.

மயான நிலத்தை முன்வைத்து அங்கு நடக்கும் சர்ச்சை என்ன?

மயானத்துக்கு கம்பி வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' எனக் கொதிக்கும் மக்கள் - தாளவாடியில் என்ன பிரச்னை?

9 ஏக்கரில் மயானம்... கம்பி வேலி

தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள பனகஹள்ளி, பாளையம் கிராமங்களில் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

"இரு கிராமங்களுக்கும் நடுவில் 9.35 ஏக்கர் பரப்பளவில் மயானம் உள்ளது. இதில், சுமார் 3 ஏக்கர் நிலத்தைக் கடந்த 30 ஆண்டுகளாக அடக்கம் செய்யும் இடமாக முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்தனர்" எனக் கூறுகிறார், பனகஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரோகித்.

கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே மயானம் அமைந்துள்ள இடத்தை வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வேலைகளை அதிகாரிகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு இரு கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். "எங்களிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'இது அரசு புறம்போக்கு நிலம்தான்' எனக் கூறினர். இதனால் போராட்டத்தில் ஈடுபடாமல் கலைந்து சென்றோம்" எனக் கூறுகிறார், ரோகித்.

ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் (டிசம்பர் 11) மயானத்தின் அருகில் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு மயானம் முழுவதையும் கம்பி வேலி போட்டு அடைத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மயானத்துக்கு கம்பி வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' எனக் கொதிக்கும் மக்கள் - தாளவாடியில் என்ன பிரச்னை?

'பொதுப் பாதையையும் அடைத்துவிட்டனர்'

இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.

அந்த இடத்தில், '99/2 என்ற சர்வே எண்ணில் உள்ள கபரஸ்தான், ஈத்கா ஆகியவை பனகஹள்ளி அஹ்லே சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் வக்ஃபுக்கு சொந்தமானது' எனக் கூறப்பட்டுள்ளது.

"வேலி போடும்போது ஊர் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையையும் அடைத்துவிட்டனர். எந்தவித எல்லைக் குறிப்பும் பரப்பளவு விவரமும் இல்லாமல் வக்ஃப் நிலமாக அறிவித்துவிட்டனர்" எனக் கூறுகிறார், பனகஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரவி.

மயானத்துக்கு வேலி போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 12ஆம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் இரு கிராம மக்களும் இணைந்து மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

மயானம் மற்றும் பொதுப் பாதையை மீண்டும் பயன்படுத்துவதற்கு உத்தரவிடுமாறு மனுவில் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். "ஆனால், எங்கள் கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை" எனக் கூறுகிறார் ரவி.

இதன் பிறகு மயானம் மற்றும் பொதுப் பாதையை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி பசவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மயானத்துக்கு கம்பி வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' எனக் கொதிக்கும் மக்கள் - தாளவாடியில் என்ன பிரச்னை?
படக்குறிப்பு, ஜனவரி 22 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்ஃப் வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அளிக்கும் விளக்கத்தின் மூலம் இந்த விவகாரம் முடிவுக்கு வருமா என்பது தெரியவரும்.

'ஆவணமே இல்லாமல் உரிமை கோரும் வக்ஃப்'

"கடந்த 1800ஆம் ஆண்டு முதலே இந்த நிலத்தை மயானமாகப் பயன்படுத்தி வருகிறோம். சர்வே எண் 99/2 என்பது அரசு நிலமாக உள்ளது. தற்போது எந்தவித ஆவணமும் இல்லாமல் வக்ஃப் வாரியம் உரிமை கோருகிறது" என்று வழக்கின் மனுவில் பசவராஜ் கூறியுள்ளார்.

"வருவாய்த் துறை அதிகாரிகளிடம் நாங்கள் அளித்த மனுவின் மீது முறையாக எந்தவித விசாரணையும் நடத்தாமல் போலீஸ் துணையுடன் வேலி அமைத்துவிட்டனர்" எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மனு மீது மாவட்ட ஆட்சியர், வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி, "இதற்கிடையில் கிராமத்தில் யாராவது இறந்தால் தாளவாடி தாசில்தாருக்கு தெரிவிக்க வேண்டும்" என உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும், "தாசில்தார் நேரில் சென்று உடலை தகனம் செய்வதற்கான இடத்தை அடையாளம் காண வேண்டும். அடையாளம் காணப்பட்ட இடங்களில் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டு வழக்கை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, இரு கிராம மக்களுக்கும் வேறு இடத்தில் மயானத்துக்கான நிலத்தை ஒதுக்கும் நடவடிக்கையில் வருவாய்த்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ஆனால், "அவர்கள் ஒதுக்கவிருந்த இடம், ஊருக்கு வெளியில் வனப்பகுதியின் அருகில் இருந்தது. அதை ஏற்க மறுத்துவிட்டோம்" என்கிறார், ரோகித்.

"முன்னோர்கள் புதைக்கப்பட்ட இடத்தைத் தவிர வேறு எங்கே நிலம் கொடுத்தாலும் ஏற்க முடியாது எனக் கூறிவிட்டோம். இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வதில் ஊர் மக்களும் உறுதியாக உள்ளனர்" எனவும் அவர் தெரிவித்தார்.

மயானத்துக்கு கம்பி வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' எனக் கொதிக்கும் மக்கள் - தாளவாடியில் என்ன பிரச்னை?
படக்குறிப்பு, "அவர்கள் ஒதுக்கவிருந்த இடம், ஊருக்கு வெளியில் வனப்பகுதியின் அருகில் இருந்தது. அதை ஏற்க மறுத்துவிட்டோம்" என்கிறார் ரோகித்

'மக்களைத் தூண்டிவிடுகின்றனர்'

கிராம மக்களின் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் நவாஸ்கனியிடம் பேசியபோது, "அலுவல் கூட்டங்களில் இருப்பதால் தற்போது பேச இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார்.

பனகஹள்ளி சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தாளவாடி ஒன்றிய தலைவர் முஜிப்கான், சில விவரங்களைத் தெரிவித்தார்.

"கடந்த 1956ஆம் ஆண்டில் இந்த நிலம் வக்ஃப் வாரியத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது. வக்ஃப் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்" என்கிறார்.

"கிராம மக்களைப் போராடுவதற்கு சிலர் தூண்டுவிடுகின்றனர். மயானம் அமைந்துள்ள இடத்தின் அருகில் அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அது பறிபோவதால் மக்களை திசை திருப்பிப் போராட வைக்கின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், "இது தவறான குற்றச்சாட்டு" என்கிறார், பனகஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரோகித். "அரசுக்குச் சொந்தமான நிலத்தை வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளனர். எங்களிடம் அரசு நிலம் என்பதற்கான ஆவணங்கள் உள்ளன" என்கிறார்.

மயானத்துக்கு கம்பி வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' எனக் கொதிக்கும் மக்கள் - தாளவாடியில் என்ன பிரச்னை?

'பரிசீலித்த பிறகே முடிவு' - தாளவாடி வட்டாட்சியர்

சம்பந்தப்பட்ட மயானம் வக்ஃப் சொத்துப் பட்டியலில் உள்ளதாக வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியதாகக் கூறுகிறார், தாளவாடி வட்டாட்சியர் மாரிமுத்து.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வக்ஃப் வாரிய வட்டாட்சியர், வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் வந்து கம்பி வேலி அமைத்து தங்களின் சொத்தை பாதுகாத்துள்ளனர்" எனவும் குறிப்பிட்டார்.

"வக்ஃப் சொத்துப் பட்டியலில் 99/2 என்ற சர்வே எண் குறிப்பிடப்பட்டுள்ளது" எனக் கூறிய அவர், "சுமார் 9 ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு அவ்வளவு எளிதாக கொடுத்துவிட முடியாது" என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"தாளவாடி வட்டாட்சியரோ, காவல்துறையோ தன்னிச்சையாக முடிவெடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அது காலியான இடமாக இருந்து வந்துள்ளது. அதில் இஸ்லாமிய மக்களை அடக்கம் செய்து வந்துள்ளனர்" எனவும் அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நிலத்தை பனகஹள்ளி சுன்னத் ஜமாத் பராமரித்து வருவதாகக் கூறிய வட்டாட்சியர் மாரிமுத்து, "அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு வக்ஃப் திருத்த சட்டத்தை கொண்டுவந்த நிலையில், தமிழ்நாடு அரசு இன்னும் அதை அமல்படுத்தவில்லை.

ஜனவரி 22 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்ஃப் வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அளிக்கும் விளக்கத்தின் மூலம் இந்த விவகாரம் முடிவுக்கு வருமா என்பது தெரிய வரும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு