செவிலியராவது எப்படி? - உலக அளவில் செவிலியர்களுக்கு இருக்கும் தேவை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரியங்கா ஜா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
டெல்லியை சேர்ந்த சுவாதி சிறுவயதில் தன்னுடைய அத்தை வெள்ளை சீருடை அணிந்து மருத்துவமனைக்கு செல்வதை பார்க்கும்போது, தானும் வளர்ந்து இதேபோன்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைத்தார்.
அவரால் மருத்துவராக முடியவில்லை. மாறாக எந்தவொரு மருத்துவமனையோ மருத்துவரோ அல்லது அறுவை சிகிச்சை அரங்கமோ இவரின்றி இயங்க முடியாத ஒரு துறையை தேர்ந்தெடுத்தார், அதுதான் செவிலியர் பணி.
தற்போது பன்னாட்டு ஐ.டி. நிறுவனத்தின் கிளீனிக்கில் சுவாதி பணிபுரிந்துவருகிறார்.
இந்தியாவில் தற்போது சுமார் 39 லட்சம் செவிலியர்கள் உள்ளனர். இது மிகவும் பெரிய எண்ணிக்கையாக தோன்றலாம், ஆனால் சுமார் 140 கோடி மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் சிறிதே.
புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரும் நாராயணா ஹெல்த்தின் நிறுவனருமான தேவி பிரசாத் ஷெட்டி கூறுகையில், "அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒவ்வொரு மருத்துவருக்கும் நான்கு முதல் ஐந்து செவிலியர்கள் இருப்பார்கள். இந்தியாவில் இந்த நிலையை அடைய இங்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் கூடுதலாக தேவை" என்றார்.
செவிலியர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பா அல்லது எதிர்காலத்திற்கான வாய்ப்பா? 12ம் வகுப்பு முடித்தபிறகு இந்த துறையில் நுழைவது எப்படி? வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி? அதைத்தான் "கரியர் கனெக்ட்"டில் விவாதிக்க உள்ளோம்.
செவிலியர் படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் செவிலியர் படிப்பை இந்திய செவிலியர் கவுன்சில் (Indian Nursing Council - INC)) கண்காணிக்கிறது. இது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.
பி.எஸ்சி நர்சிங் படிப்பை தாண்டி, இந்தியா ஜிஎன்எம் என்பது புகழ்பெற்ற செவிலியர் படிப்பாக உள்ளது. அதாவது, பொது நர்சிங் மற்றும் மகப்பேறு உதவி (General Nursing and Midwifery).
இதுதவிர, ஏஎன்எம் துணை செவிலியர் மற்றும் மகப்பேறு உதவி (Auxiliary Nursing and Midwifery) என்ற படிப்பு உள்ளது. ஆனால், இது அடிப்படை சுகாதார உதவி திறன்களை கற்றுக்கொள்வதற்கு மட்டுமே.
டெல்லி, எய்ம்ஸில் செவிலியர் அதிகாரியாக உள்ள கனிஷ்கா யாதவ் கூறுகையில், "ஏஎன்எம் என்பது குறுகிய கால டிப்ளமோ படிப்பாக உள்ளது. தாய் மற்றும் குழந்தை சுகாதாரம், தடுப்பூசி, அடிப்படை சிகிச்சை ஆகியவற்றில் இது கவனம் செலுத்துகிறது, மேலும் கிராமப்புற அல்லது சமூக சுகாதார சேவைகளில் பணிபுரிய இது உதவுகிறது." என்றார்.
அவர் கூறுகையில், "மற்றொருபுறம், ஜிஎன்எம் அல்லது பி.எஸ்சி நர்சிங் ஆகியவை நீண்ட மற்றும் விரிவான படிப்பாக உள்ளது. ஜிஎன்எம் மூன்றாண்டு படிப்பாகும் மற்றும் பி.எஸ்சி நான்காண்டு படிப்பாகும். இரு படிப்புகளிலும் படிப்பு முடித்தபின்னர் தொழிற்பயிற்சி (internships) உள்ளது. எனவே, இந்த படிப்புகளை படிப்பவர்கள் முழு தயாரிப்புகளுடன் பணிக்கு வருகின்றனர்." என்றார்.
ஐஎன்சி-யில் உள்ள தகவல்களின்படி, ஏஎன்எம் படிப்பதற்கு 12ம் வகுப்பில் எந்த பிரிவில் வேண்டுமானாலும் படித்திருக்கலாம். ஆனால், ஜிஎன்எம் படிக்க 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் குறைந்தது 40% பெற்று தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
இந்த படிப்பை படிப்பதற்கான குறைந்தபட்ச வயது 17, அதிகபட்ச வயது 35. மேலும், மாணவர்கள் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.
பி.எஸ்சி நர்சிங் படிப்பதற்கான வயது வரம்பும் இதுதான்.
மேலும், 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலத்தை (Core /Elective) தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும், மேலும் குறைந்தது 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கனிஷ்கா யாதவ் கூறுகையில், "அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் நீட் தேர்வு வாயிலாக செவிலியர் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. எனினும், மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இதற்காக தனியே நுழைவுத்தேர்வுகள் உள்ளன. அரசு கல்லூரிகளில் ஆண்டு கட்டணம் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை உள்ளது, தனியார் கல்லூரிகளில் அதற்கான கட்டணம் வேறுபடுகிறது.
நர்சிங் சிறப்பான துறையா?

பட மூலாதாரம், Getty Images
சில தினங்களுக்கு முன்பு, இந்தியாவில் சுகாதார பணியாளர்கள் குறித்த சமீபத்திய தரவுகளை இந்திய அரசு வெளியிட்டது. அதில், இந்தியாவில் ஒவ்வொரு ஆயிரம் நோயாளிகளுக்கும் சுமார் இரண்டு செவிலியர்களே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவிலியர் சார்ந்த படிப்புகளை நாட்டில் உள்ள 5,310 கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன, அவற்றில் 806 நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாகும்.
ஒவ்வொரு ஆண்டும் 3.82 லட்சம் செவிலியர் மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.
டெல்லி எய்ம்ஸ், வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் செவிலியர் கல்லூரி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் நிறுவனம், லக்னௌவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER), டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையின் செவிலியர் கல்லூரி ஆகியவை செவிலியர் படிப்புகளுக்கான மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் கல்வி நிறுவனங்களாக கருதப்படுகின்றன.
இந்தியாவில் தற்போது சுமார் 1,20,000 பி.எஸ்சி நர்சிங் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளதாக, அரசு புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. இதுதவிர, ஜிஎன்எம், எம்.எஸ்சி நர்சிங் மற்றும் பிஹெச்டி படிப்புகளும் உள்ளன. எனினும், மற்ற துறைகளில் தோல்வி காரணமாகவே மாணவர்கள் பெரும்பாலும் செவிலியர் படிப்பை தேர்ந்தெடுப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, எம்பிபிஎஸ் அல்லது பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புக்கான சேர்க்கைக்கு இடம் கிடைக்காதவர்களே செவிலியர் படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர்.
இப்படிப்புக்கு சிறந்த வாய்ப்புகள் இருப்பதாக கூறும் கனிஷ்கா யாதவ், "ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் தனியார் துறைகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாகின்றன. ஆனால், தற்போது வரை செவிலியரின் பணிகள் குறைவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கொரோனாவுக்குப் பிறகு இந்த சூழல் மாறினாலும், செவிலியர் படிப்பு என்பது குறைவானது அல்ல என மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவமனை, மருத்துவ இல்லம் (nursing home) அல்லது எந்தவொரு சுகாதார அமைப்பும் செவிலியர் இல்லாமல் ஒருநாளைக்கு இயங்க முடியுமா?" என அவர் கூறுகிறார்.
அவர் கூறுகையில், "இந்த படிப்புக்கான போட்டி ஒப்பீட்டளவில் குறைவு என்பதாலேயே இதற்கான விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அதாவது, ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் வந்தால், செவிலியர் காலி பணியிடங்களுக்கு இத்தகைய போட்டி இருக்காது." என்றார்.

என்னென்ன திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
ஏஎன்எம், ஜிஎன்எம் அல்லது பி.எஸ்சி நர்சிங் படிக்க வேண்டும் என நீங்கள் நினைத்திருந்தால், சில திறன்களை நீங்கள் இப்போதே வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சுவாதி கூறுகையில், "தொடர்பியல் தான் மிக முக்கியமான விஷயம். அதாவது, ஒரு நோயாளி அல்லது மருத்துவரிடம் தெளிவாக பேச வேண்டும். பரிவுடன் இருக்க வேண்டும், அதன்மூலம் நோயாளியின் வலியை புரிந்துகொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும், ஏனெனில் பல மணிநேரம் பணி செய்ய வேண்டியிருக்கும், மேலும், பல்வேறு மனநிலையை கொண்டவர்களுடன் பணி செய்ய வேண்டியிருக்கும். தலைமைத்துவத்துடன் இருக்க வேண்டும், ஏனெனில் சூழல் திடீரென மாறும்போது, உடனடியாக முடிவுகள் எடுக்க வேண்டும்." என்றார்.
வருங்கால வாய்ப்புகள் குறித்து கனிஷ்கா யாதவ் கூறுகையில், "பி.எஸ்சி படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கும் செல்ல முடியும். தற்போது பல மாணவர்கள் எம்.எஸ்சி நர்சிங், பிஹெச்டி படிப்புகளையும் படிக்கின்றனர். அப்படியான சூழலில், பி.எஸ்சி படித்தவர்கள், பெரிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வேலை வாய்ப்புகளை பெற முடியும்." என்றார்.
இந்த துறையில் நாம் எங்கு பணிபுரிகிறோம் என்பதை பொறுத்து சம்பளம் மாறுபடும் என்றார்.
கனிஷ்கா யாதவ் கூறுகையில், "ஒருவருக்கு மத்திய அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்தால் ஆரம்ப வருமானம் ரூ.80,000 ஆக இருக்கலாம். மாநில அரசு மருத்துவமனைகள் என்றால் அங்கு குறைவாக இருக்கலாம், ஏனெனில் அங்கு படிகள் (allowances) குறைவாக இருக்கும். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவமனையின் அளவைப் பொறுத்து மாறுபடும். எனினும், பொதுவாக ரூ. 25,000-30,000 வரை ஆரம்பத்தில் கிடைக்கும்." என்றார்.
சுமார் 6,50,000 இந்திய செவிலியர்கள் மற்ற நாடுகளில் பணிபுரிவதாக அவர் விளக்குகிறார். இதற்கு படிப்பை முடித்தபிறகு, எந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என விரும்புகின்றனரோ, அந்த நாடுகளில் அவசியமான தேர்வுகளை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் அங்கு சென்று வேலை பார்க்க முடியும். இதுதவிர, கிளீனிக்குகள், பள்ளிகள், ராணுவம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இஸ்ரோவிலும் செவிலியர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் எங்கு படிக்கலாம்?
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் ரவி சீதாராமன், "தமிழ்நாட்டில் டிப்ளமோ நர்சிங் படிப்புகளை பல்வேறு தனியார் கல்லூரிகளில் படிக்க முடியும். கிட்டத்தட்ட அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் டிப்ளமோ நர்சிங் படிக்க முடியும். ஆனால், பி.எஸ்சி, எம்.எஸ்சி நர்சிங் படிப்புகளை குறிப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே படிக்க முடியும்" என்றார்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் செவிலியராக பணிபுரிவதற்கு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் (MRB - medical recruitment board) நடத்தும் தேர்வை எழுத வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












