மெக்சிகோ: போதைப்பொருள் கும்பல் தலைவர் கொல்லப்பட்டதால் வன்முறை - விமானங்கள் ரத்து

எல் மெஞ்சோ, மெக்சிகோ, அமெரிக்கா, பிரிட்டன், விமானங்கள் ரத்து

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, எல் மெஞ்சோவை பிடிப்பதற்கான தகவலை வழங்குபவர்களுக்கு அமெரிக்க வெளியுறவு துறை 15 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக அறிவித்திருந்தது.
    • எழுதியவர், ஒட்டிலி மிட்செல்
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மெக்சிகோவில் மிகவும் தேடப்பட்ட நபரான போதைப்பொருள் கும்பல் தலைவர் "எல் மெஞ்சோ", கைது நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். இந்த நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறையும் ஈடுபட்டிருந்தது. அவர் கொல்லப்பட்டதையடுத்து, மெக்சிகோவில் பரவலாக வன்முறை வெடித்துள்ளது.

மெக்சிகோவில் மிகவும் அஞ்சப்படும் ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் (CJNG) எனப்படும் போதைப்பொருள் கும்பலின் தலைவர் "எல் மெஞ்சோ" என அறியப்படும் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டஸ். ஞாயிற்றுக்கிழமை அவருடைய ஆதரவாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையிலான மோதலில் படுகாயமடைந்த "எல் மெஞ்சோ" உயிரிழந்தார்.

மெக்சிகோவின் மத்திய-மேற்கு ஜலிஸ்கோ மாநிலத்தில்(state) உள்ள தபல்பா நகரத்தில் நடைபெற்ற நடவடிக்கையின்போது ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் (CJNG) உறுப்பினர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதில் ராணுவத்தை சேர்ந்த மூன்று பேர் காயமடைந்ததாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சரவை தெரிவித்துள்ளது.

"எல் மெஞ்சோ" கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அந்த போதைப்பொருள் கடத்த கும்பல் பல இடங்களில் சாலைகளை மறித்ததுடன், வாகனங்களையும் எரித்தது. இந்த வன்முறை பிற மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஜலிஸ்கோ மற்றும் மற்ற பகுதிகளில் தெருக்களில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் வலம் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபிஃபா உலகக் கோப்பை நடக்கும் நகரங்களில் ஒன்றான குவாடாலாஜரா உட்பட பல நகரங்களில் இருந்து புகை கிளம்பியதை நேரில் கண்டவர்கள் வீடியோக்களாக எடுத்துள்ளனர்.

ஜலிஸ்கோ ஆளுநர் பாப்லோ லெமுஸ் நவரோ பொது போக்குவரத்து நிறுத்தம், பெருந்திரளானோர் கூடும் வகையிலான நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி வகுப்புகளை ரத்து செய்வதற்கான உத்தரவை (code red) வெளியிட்டுள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய சுற்றுலா பயணிகள், ஜலிஸ்கோவில் உள்ள ரிசார்ட்டுகளின் நகரமான புவெர்டோ வல்லார்டா (Puerto Vallarta) "போர் மண்டலமாக" காட்சியளிப்பதாக தெரிவித்தனர்.

இந்த வன்முறையின் போது நாடு முழுவதும் 250 இடங்களில் சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததாக பிபிசியின் அமெரிக்க கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வன்முறையில் ஈடுப்பட்டதாக 11 பேரும் சூறையாடல் மற்றும் கொள்ளை குற்றச்சாட்டின் கீழ் 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது.

வன்முறையின் போது கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் சுமார் 20 வங்கி கிளைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.

எல் மெஞ்சோ, மெக்சிகோ, அமெரிக்கா, பிரிட்டன், விமானங்கள் ரத்து

பட மூலாதாரம், Shutterstock

படக்குறிப்பு, புவெர்டோ வல்லார்டா கடற்கரையில் புகை மூட்டங்கள் எழுந்தன.

வன்முறைக்கு எதிர்வினையாற்றுவது தொடர்பாக மாநில (state) மற்றும் பெடரல் அதிகாரிகள் இடையே "முழு ஒத்துழைபபு" இருப்பதாக மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பௌம் தெரிவித்துள்ளார். மக்கள் "அமைதி காத்து, விழிப்புடன் இருக்குமாறும்" அவர் வலியுறுத்தியுள்ளார்.

"நாட்டின் பல பகுதிகளில் அனைத்தும் வழக்கம் போலவே செயல்படுவதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.

ஏர் கனடா, யுனைடட் ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் ஜலிஸ்கோவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளன.

ஜலிஸ்கோ, தமாலிபாஸ் மற்றும் மிசோகன், குவெர்ரெரோ மற்றும் நுவெ லியோனின் சில பகுதிகளில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அதேபோன்று, ஜலிஸ்கோவில் "தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவங்கள்" நடந்திருப்பதாக தெரிவித்துள்ள பிரிட்டன் அரசாங்கம், "மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரையை பின்பற்ற வேண்டும் எனவும் தனது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்க ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், "ஃபென்டனைலை நம் நாட்டுக்குள் கடத்தி வருபவர்களில் முக்கிய நபரான எல் மெஞ்சோ மெக்சிகோ மற்றும் அமெரிக்க அரசாங்கத்திற்கு முக்கிய இலக்காக இருந்தார்" என தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின்போது போதைப்பொருள் கும்பலை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உளவுத்தகவலை வழங்கியுள்ளது.

எல் மெஞ்சோ, மெக்சிகோ, அமெரிக்கா, பிரிட்டன், விமானங்கள் ரத்து
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

59 வயதான காவல்துறை முன்னாள் அதிகாரியான எல் மெஞ்சோ, அதிகளவிலான கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஃபென்டனைல் ஆகியவற்றை கடத்தும் குற்றப் பின்னணி கொண்ட பெரிய கும்பலை நடத்திவந்தார்.

எல் மெஞ்சோவை பிடிப்பதற்கான தகவலை வழங்குபவர்களுக்கு அமெரிக்க வெளியுறவு துறை 15 மில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்திருந்தது.

நாட்டின் சிறப்புப் படையினரால் இந்த நடவடிக்கை "திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதாக" மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு