ஸொமாட்டோ நிறுவனர் முகத்தில் இருக்கும் அந்த சாதனம் என்ன? அது என்ன செய்கிறது?

பட மூலாதாரம், @deepigoyal/X and YT/rajshamami
- எழுதியவர், சரண்ஜித் கவுர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஸொமாட்டோ நிறுவனரும் சிஇஓ-வுமான தீபிந்தர் கோயல் சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் போது, தனது முகத்தின் இடது பக்கத்தில் ஒரு சிறிய சாதனத்தைப் பொருத்தியிருந்ததைப் பார்க்க முடிந்தது. இது பலரது மனதில் அந்தச் சாதனம் என்ன, அதை உருவாக்கியதன் நோக்கம் என்ன மற்றும் அது எப்படிச் செயல்படுகிறது என்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
இந்த 'டெம்பிள்' சாதனம் பற்றி கோயல் கூறியது என்ன மற்றும் இது குறித்து நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் கூறுவது என்ன என்பதை அறிய நாங்கள் முயன்றோம்.
ஜனவரி 3-ஆம் தேதி வெளியான ஒரு பாட்காஸ்ட்டில், தீபிந்தர் கோயல் இந்தச் சாதனம் ஒரு ஸ்டிக்கர் போன்றது என்றும், இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் கண்காணிக்கிறது என்றும் கூறுவதைக் காண முடிகிறது. இந்தச் சாதனத்தின் பின்னணியில் உள்ள முக்கிய யோசனை, கோயல் "புவிஈர்ப்பு முதுமை கருதுகோள்" (Gravity Aging Hypothesis) என்று பெயரிட்ட ஒன்றிலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது.
"நான் எனக்காக ஒரு உடல்நலத் தகுதி குழுவை உருவாக்கி, எனது மூளையின் ரத்த ஓட்டத்தைக் கண்காணிக்க விரும்புவதாகக் கூறினேன். நாங்கள் ஒரு சாதனத்தைத் தயாரித்தோம், அதன் மூன்றாம் தரப்பு சரிபார்ப்புகளும் நடந்து வருகின்றன. முதலில் நாங்கள் சற்று பெரிய சாதனத்தைத் தயாரித்தோம், அது இப்போது சிறியதாக்கப்பட்டுள்ளது, மேலும் அதை இன்னும் சிறப்பாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதன் மதிப்பை உணர்ந்தவர்களுக்காக இத்தகைய தயாரிப்பை உருவாக்கலாம் என்று நினைத்தேன்." என கோயல் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
'டெம்பிள்' எனப்படும் இந்தச் சாதனம் என்ன?

பட மூலாதாரம், deepigoyal/instagram
சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது இந்தச் சாதனம் ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் பிட்னஸ் பேண்டுகளுக்கு மாறாக முகத்தில் அணியப்பட்டிருந்தது. தீபிந்தரின் கூற்றுப்படி, ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதன் மூலம், இந்தச் சாதனம் காலப்போக்கில் மூளையின் செயல்பாடு குறித்த தகவல்களை வழங்குகிறது.
அவர் நவம்பர் 20, 2025 அன்று தனது இன்ஸ்டாகிராமில், 'கன்டினியூ' என்பது ஒரு ஆராய்ச்சித் திட்டம் என்றும், 'புவிஈர்ப்பு முதுமை கருதுகோள்' என்பது வெறும் செயல்பாட்டு மாதிரி மட்டுமே என்றும் எழுதியிருந்தார். இந்தப் பயணத்தின் போது தற்செயலாக ஒரு புதிய மூளை ஓட்டக் கண்காணிப்புச் சாதனத்தை நாங்கள் உருவாக்கிவிட்டோம் என்றார்.
அவரது கூற்றுப்படி, "சுமார் ஒரு வருடமாக இந்தச் சாதனம் ஒரு பரிசோதனை ரீதியான, தொடர்ச்சியான மூளை ரத்த ஓட்டத்தை அளவிடும் கருவியாக மட்டுமே இருந்தது; இதை நாங்கள் எங்கள் மீதும் ஒரு சிறிய குழுவின் மீதும் பயன்படுத்தினோம். இது நூற்றுக்கணக்கான எம்ஆர்ஐ மற்றும் டாப்ளர் ஸ்கேன்களுடன் ஒப்பிடப்பட்டுத் தரம் சரிபார்க்கப்பட்டது."
மேலும் "நாங்கள் இந்தச் சாதனத்தை ஒரு தயாரிப்பு யோசனையாக உருவாக்கத் தொடங்கவில்லை. இதை ஒரு தயாரிப்பாக மாற்றுவதும் அதற்கு 'டெம்பிள்' என்று பெயரிட்டதும் பின்னரே நடந்தது." என்றார்.
இந்தச் சாதனத்தை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன?
எம்ஆர்ஐ போன்ற ரத்த ஓட்டத்தை அளவிடும் பிற சாதனங்கள் அளவில் பெரியவை என்பதால், தாங்கள் ஒரு சிறிய சாதனத்தைத் தயாரித்திருப்பதாக தீபிந்தர் கோயல் கூறுகிறார்.
இந்தச் சாதனத்தின் தேவை குறித்து கூறுகையில், "ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் செயல்பாடுகளை நீங்கள் செய்தால், நீங்கள் நன்றாக உணர்வீர்கள். இதனுடன் சேர்த்து, எந்த வகையான நடத்தை முறைகள் உங்களை நன்றாக உணரவைக்கின்றன மற்றும் எவை மோசமாக உணரவைக்கின்றன என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்." எனத் தெரிவித்தார்.

தீபிந்தரின் கூற்றுக்கள் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
லூதியானா சிஎம்சி-யில் நரம்பியல் பேராசிரியராக உள்ள மருத்துவர் ஜெயராஜ் டி பாண்டியன் கருத்துப்படி, தீபிந்தர் குறிப்பிடும் சாதனம் ஒரு 'ஓட்ட உணரி'; இத்தகைய சாதனங்கள் ஒன்றும் புதியவை அல்ல. ஏற்கனவே ஆக்டிகிராபி (தூக்கத்தின் போது உடல் செயல்பாடுகளைக் கண்காணிக்க அணியக்கூடிய உணரி சாதனம்) போன்ற சாதனங்கள் உடல் செயல்பாடுகளை அளவிடப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
"ஆனால் இவ்வாறு அணியப்படும் சாதனம், நேரடியாக மூளை ரத்த ஓட்டத்தை அளவிடுவதில்லை."
மூளை ரத்த ஓட்டத்தை அளவிட மருத்துவத் துறையில் எம்ஆர் ஆஞ்சியோகிராபி எம்ஆர்ஐ, பெட் ஸ்கேன் மற்றும் இன்னும் பல தொழில்நுட்பங்கள் உள்ளதாக மருத்துவர் பாண்டியன் கூறுகிறார்.
மருத்துவர் பாண்டியன் கருத்துப்படி, மூளையின் சில நோய்களைக் கண்டறிய 'ட்ரான்ஸ்கிரேனியல் டாப்ளர் அல்ட்ராசவுண்ட்' பரிசோதனையும் செய்யப்படுகிறது.
மூளையின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ளச் சிலர் இத்தகைய தொழில்நுட்பங்களை ஆராய்ந்து வருகின்றனர், ஆனால் இந்தத் தொழில்நுட்பங்கள் இதுவரை முழுமையாக நிரூபிக்கப்படவோ அல்லது அங்கீகரிக்கப்படவோ இல்லை என்று அவர் மேலும் கூறுகிறார்.
மூளை ரத்த ஓட்டம் எப்போது பாதிக்கப்படுகிறது ?

பட மூலாதாரம், Getty Images
மூளை ரத்த ஓட்டம் ஏதேனும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர் பாண்டியன் கூறுகிறார். மூளை நரம்புகளில் ஏதேனும் அடைப்பு இருந்தால் ரத்த ஓட்டம் குறையக்கூடும்.
மூளை ரத்த ஓட்டத்தில் ஏதேனும் தடையோ அல்லது பாதிப்போ ஏற்பட்டால் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படலாம். உதாரணமாக நினைவாற்றல் குறைதல், செயல்பாடுகளில் மந்தநிலை ஏற்படுதல், சிந்திக்கும் திறன் குறைதல் போன்றவை ஏற்படலாம் என்று அவர் விளக்குகிறார்.
புவிஈர்ப்பு முதுமை கருதுகோளில் ஏதேனும் உண்மை உள்ளதா?

பட மூலாதாரம், @deepigoyal
இந்தச் சாதனத்தின் பின்னணியில் உள்ள முக்கிய யோசனையாக "புவிஈர்ப்பு முதுமை கருதுகோள்" என்பதை கோயல் குறிப்பிட்டுள்ளார். இப்போது கேள்வி என்னவென்றால், இந்த புவிஈர்ப்பு முதுமை கருதுகோள் என்றால் என்ன?
தீபிந்தர் தனது விஞ்ஞானிகள் குழு புவிஈர்ப்பு முதுமை கருதுகோள் கோட்பாடு பற்றிய தகவல்களைச் சேகரித்துள்ளதாக ஏற்கனவே கூறியுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுதிர் குமார் கருத்துப்படி,"அந்த கோட்பாட்டின்படி, ஒரு நபர் நிற்கும்போது அல்லது உட்கார்ந்திருக்கும்போது, இதயம் மூளைக்கு ரத்தத்தை அனுப்ப புவிஈர்ப்பு விசைக்கு எதிராகச் செயல்பட வேண்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் காலப்போக்கில் மூளையை அடையும் ரத்தத்தின் அளவு குறைகிறது, இது விரைவான முதுமைக்குக் காரணமாக இருக்கலாம்."
இந்தக் கோட்பாடு குறித்து இதுவரை எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லை என்று மருத்துவர் சுதிர் குமார் கூறுகிறார். புவிஈர்ப்பு முதுமை கருதுகோள் என்பது ஒரு புதிய கருதுகோள், இது குறித்து தற்போதைய நிலையில் எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவர் பாண்டியனும் நம்புகிறார்.
"நமது இதயத்தில் அனைத்து வகையான நிலைகளிலும் - நாம் நின்றாலும், உட்கார்ந்திருந்தாலும் அல்லது ஓடிக்கொண்டிருந்தாலும் - மூளைக்கு ரத்த விநியோகத்தை உறுதி செய்யும் பொறிமுறைகள் உள்ளன. எனவே எந்த வயதிலும், குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருந்தால், மூளைக்குச் சரியான அளவில் ரத்தம் சென்றுகொண்டே இருக்கும்," என சமூக வலைதளப் பதிவு ஒன்றில் மருத்துவர் சுதிர் குமார் விளக்குகிறார்.
"இதய நோய் போன்ற ஏதேனும் நோய் ஒருவருக்கு இருந்தால், இதயத்தால் சரியாக ரத்தத்தை 'பம்ப்' செய்ய முடியாது; அல்லது ரத்த அழுத்தம் அல்லது பக்கவாதம் இருந்தால் சிக்கல் ஏற்படலாம். ஆனால் இந்த அனைத்து நிலைகளிலும் நோயாளிக்குத் தலைச்சுற்றல், பலவீனம் போன்ற சில அறிகுறிகள் தோன்றும்; அத்தகைய நிலையில் மருத்துவ ஆலோசனையின் மூலம் காரணங்களைக் கண்டறியலாம்."
எப்போதும் மூளை ரத்த ஓட்டத்தை அளவிட்டுக்கொண்டே இருப்பது நல்லதா?

பட மூலாதாரம், Getty Images
எப்போதும் மருத்துவ ஆலோசனையின் படியே மூளை ரத்த ஓட்டத்தை அளவிட வேண்டும் என்று மருத்துவர் ஜெயராஜ் டி பாண்டியன் கூறுகிறார்.
தீபிந்தர் குறிப்பிடும் சாதனம் அனைத்து அளவுகோல்களிலும் தேறிய பிறகு பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்துவிட்டால், அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியுமா? என்று மருத்துவர் சுதிர் குமார் ஒரு கேள்வியை எழுப்புகிறார்.
"மிகக் குறைவான மக்களுக்கே தொடர்ச்சியான கண்காணிப்பு தேவைப்படுகிறது. இவ்வாறாகத் தொடர்ந்து கண்காணிப்பதில் எதிர்மறையான விளைவுகளும் ஏற்படக்கூடும். தரவுகளில் ஏற்படும் மாற்றங்கள் பல சந்தர்ப்பங்களில் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உருவாக்கக்கூடும்," என அவர் மேலும் விளக்கினார்.
டெம்பிள் போன்ற சாதனங்களின் தேவை குறித்துப் பேசுகையில், மூளை ரத்த ஓட்டத்தை அளவிடும் பல முறைகள் ஏற்கனவே நம்மிடம் உள்ளதாக மருத்துவர் குமார் கூறுகிறார். ஆரோக்கியமான ஒருவருக்கு மூளை ரத்த ஓட்டத்தை அளவிட வேண்டிய அவசியம் இல்லை, ஏதேனும் அறிகுறிகள் தென்படும் போது மட்டுமே அதை அளவிட வேண்டிய தேவை ஏற்படுகிறது.
இத்தகைய மருத்துவக் கருவிகளைச் சந்தைக்குக் கொண்டு வர விரும்பினால், அதற்கு ஒழுங்குமுறை அனுமதிகள் தேவைப்படும் என்றும், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம்அனுமதி பெற வேண்டும் என்றும் மருத்துவர் பாண்டியன் கூறுகிறார்.
விமர்சனங்களுக்கு தீபிந்தர் அளித்த பதில் என்ன?

பட மூலாதாரம், deepigoyal/instagram
சிறிய சாதனத்தை அணிந்தது மற்றும் புவிஈர்ப்பு முதுமை கருதுகோள் பற்றிப் பேசிய பிறகு, சமூக வலைதளங்களில் சில மருத்துவர்களால் அவரது இந்த வாதங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இது குறித்து கோயல் கூறுகையில், "இந்தக் கருதுகோள் தவறாகவோ அல்லது சரியாகவோ நிரூபிக்கப்படலாம், ஆனால் இது புதிய விவாதங்களை நிச்சயமாக உருவாக்கும். இதன் மூலம் மூளை, முதுமை மற்றும் பல விஷயங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள முடியும்," என்று கூறினார்.
தான் அறிவியல் பின்னணியைக் கொண்டவர் அல்ல என்பதால், இது குறித்து உலகளாவிய ஆராய்ச்சியை கோருவதற்காகவே இந்தக் கருதுகோள் பற்றி விவாதிப்பதாக அவர் கூறுகிறார்.
"விமர்சகர்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்கச் சுதந்திரம் உண்டு, ஆனால் நிகழ்வுகளின் உண்மையான வரிசை இதுதான். எங்களிடம் இங்கே மறைப்பதற்கு எதுவும் இல்லை," என இந்த விவகாரத்தில் தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












