'பராசக்தி' படத்தில் வரும் மூன்று முக்கிய சம்பவங்கள் உண்மையில் எப்படி நடந்தன?

பராசக்தி, தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு

பட மூலாதாரம், X/Dawn Pictures

இன்று (ஜனவரி 10) வெளியாகியுள்ள 'பராசக்தி' திரைப்படம் 1965ஆம் ஆண்டின் மொழிப் போரை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

மொழிப் போரின்போது நடந்த பல முக்கிய சம்பவங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. அந்தச் சம்பவங்கள் உண்மையில் எப்படி நடந்தன?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்து வெளியாகியுள்ளது 'பராசக்தி' திரைப்படம். 1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்புப் போரில் சகோதரனை இழந்த நாயகன், போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது, அவருக்கு ஏற்படும் காதல், நாயகனை குறிவைத்து துரத்தும் உளவுத் துறை அதிகாரி என படம் நகர்கிறது.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரின்போது தமிழ்நாட்டில் நடந்த பல நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் நகர்கிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் ராஜேந்திரன் துப்பாக்கிச் சூட்டில் இறப்பது, மதுரையில் காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்படுவது, இந்திரா காந்தியை போராட்டக்காரர்கள் சந்திப்பது ஆகிய நிகழ்வுகள் போராட்டத்தின் முக்கியப் புள்ளிகளாகக் காட்டப்படுகின்றன.

ஒரு வரலாற்று நிகழ்வை திரைப்படமாக எடுக்கும்போது, உண்மைச் சம்பவங்கள் அவற்றின் சரியான முக்கியத்துவத்துடன் இடம் பெறுவது மிகக் கடினம். அதே பாணியில்தான் இந்தப் படமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று நிகழ்வுகளும் உண்மையில் எப்படி நடந்தன?

1. மதுரையில் காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்ட நிகழ்வு

'பராசக்தி' படத்தில் ஒரு கட்சி அலுவலகம் முன்பாக கலவரம் நடப்பதைப் போலக் காட்டப்படுகிறது. உண்மையில் இந்த நிகழ்வு மதுரையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக நடந்த ஒரு நிகழ்வு.

கடந்த 1965-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இந்தித் திணிப்பை எதிர்த்து, அந்த நாளை துக்க தினமாகக் கடைபிடிக்க மாணவர்கள் முடிவு செய்திருந்தனர். அன்று காலையில் மதுரையில் இருந்த தியாகராஜர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இந்திக்கு எதிராக கோஷமிட்டபடி ஊர்வலமாகச் சென்று ராஜாஜி பூங்காவை அடைந்தனர்.

அப்போது அக்கல்லூரியின் மாணவர் தலைவர்களாக இருந்த கே. காளிமுத்துவும் நா. காமராசனும் வெற்றி பெறும் வரை போராடப் போவதாகக் கூறி அரசமைப்புச் சட்டத்திற்குத் தீ வைத்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கைக்குப் பிறகு, அங்கிருந்த மாணவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு மதுரை நகருக்குள் இருந்த திலகர் திடலை வந்தடைந்தனர்.

அதே நேரத்தில் மதுரையின் பிற கல்லூரிகளான மதுரை கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, செந்தமிழ் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களும் திலகர் திடலில் கூடியிருந்தனர். சில மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.

பராசக்தி, தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு

பட மூலாதாரம், Aazhi Publications/A Ramasamy

இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதைத் தனது 'இந்தியாவில் மொழிகளின் சுதந்திரத்திற்கான போராட்டம் (Struggle for Freedom of Languages in India)' என்ற நூலில் விரிவாக விவரிக்கிறார் அ. ராமசாமி.

"மாணவர்கள் திலகர் திடலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். நான்கு மாசி வீதிகளையும் சுற்றி வருவதுதான் அவர்களது திட்டம். இந்த ஊர்வலம் மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்புக்கு வந்தபோது பிரச்னை தொடங்கியது. அந்த நேரத்தில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த இருவரை ஏற்றிக்கொண்டு ஒரு ஜீப் அந்த ஊர்வலத்திற்கு அருகில் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் ஊர்வலக்காரர்களைத் திட்டத் தொடங்கினர். மாணவர்கள் இதற்குப் பதிலடி கொடுத்ததையடுத்து, இது மோதலாக மாறியது.

இதையடுத்து அந்த ஜீப் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டு வடக்கு மாசி வீதியிலிருந்த மதுரை நகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பாக வந்து நின்றது. ஜீப்பில் இருந்தவர்கள் இறங்கி காங்கிரஸ் அலுவலகத்திற்குள் ஓடிவிட்டனர். அந்த நேரத்தில் அந்த அலுவலகம் இருந்த தெருவைக் கடந்து சென்று கொண்டிருந்த மாணவர்கள் காங்கிரஸ் அலுவலகம் முன்பாகக் கூடி, கத்த ஆரம்பித்தனர். காங்கிரஸ்காரர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் வார்த்தைப் பிரயோகங்கள் வலுத்தன" என்று அ. ராமசாமி எழுதியுள்ளார்.

மேலும், "அந்த நேரத்தில் அரிவாள், வேல் கம்புகளோடு வந்த சிலர் மாணவர்களைத் தாக்கினர். அதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரவியது. அதே நேரத்தில் மேலும் சிலர் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்து மாணவர்களைத் தாக்க முயன்றதும், அங்கிருந்து மாணவர்கள் ஓட ஆரம்பித்தனர். காவல்துறை தாக்க ஆரம்பித்துவிட்டது என்று கருதி ஓடத் தொடங்கிய மாணவர்கள், பிறகுதான் நடந்ததை உணர்ந்தனர். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் திரண்டு காங்கிரஸ் அலுவலகத்தை நோக்கி வந்தனர்.

அப்போது காங்கிரஸ் அலுவலகம் முன்பாக நின்று கொண்டிருந்த காவல்துறையினரைப் பார்த்து, தங்களைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டுமென மாணவர்கள் கத்தினர். சிறிது நேரத்தில் காவல்துறை மாணவர்களைத் தாக்கிய இருவரைக் கைது செய்தது. ஆனால், மாணவர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. அடுத்த நாள் குடியரசு தினம் என்பதால் அலுவலகம் முன்பாக பந்தல் ஒன்று போடப்பட்டிருந்தது. அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகப் பந்தல் கீழே சரிந்தது. அந்தப் பந்தல் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அதேநேரத்தில் அலுவலகத்திற்கு பக்கத்தில் இருந்த வீட்டின் மாடியில் ஏறிய மாணவர்கள், காங்கிரஸ் அலுவலகத்திற்குள் குதித்தனர். அலுவலகத்தின் மீதிருந்த காங்கிரஸ் கொடியை இறக்கிவிட்டு, கறுப்புக் கொடியை ஏற்றினர். பிறகு தாக்குதல்காரர்கள் ஏறிவந்த ஜீப்புக்கும் தீ வைக்கப்பட்டது" என்றும் அவர் தனது நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வின்போது அந்த இடத்தில் தான் இருந்ததாகக் கூறும் அ.ராமசாமி, "அங்கிருந்து மாணவர்கள் கலைய ஆரம்பித்த நேரத்தில், அந்த இடத்திற்கு மாவட்டத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எம்.ஆர் சுப்பராமன் வந்தார். மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையிடம் அவர் வலியுறுத்தினார்.

இதையடுத்து தடியடி நடத்திய காவல்துறை, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியது. இதனால், அங்கிருந்து கலைந்து ஓடிய மாணவர்கள் செல்லும் வழியெல்லாம் கண்ணில் தென்பட்ட இந்தியில் எழுதப்பட்ட பெயர்ப் பலகைகளைத் தாக்கினர். நகர் முழுவதும் இந்தி பெயர்கொண்ட பலகைகள் தாக்கப்பட்டன. திண்டுக்கல் சாலையில் ஒரு லாரி தீ வைத்து கொளுத்தப்பட்டது," என்கிறார்.

பராசக்தி, தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த டி.என். சேஷன் (கோப்புப் படம்)

அந்த நேரத்தில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக டி.என். சேஷன் இருந்தார். அவரைப் பற்றி கே. கோவிந்தன் குட்டி எழுதிய 'சேஷன்: ஆன் இன்டிமேட் ஸ்டோரி (Seshan: An intimate story)' என்ற நூலில் இந்தச் சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. அந்த நூல், இந்தச் சம்பவத்தை வேறு பார்வையில் முன்வைக்கிறது.

"(மீனாட்சி) அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள ஒரு குறுகிய தெருவில், இந்தி எதிர்ப்பாளர்கள் ஊர்வலம் ஒன்றை நடத்திச் சென்றபோது நிலைமை விபரீதமாகத் தொடங்கியது. அந்தத் தெருவின் கடைக்கோடியில் ஒரு பாழடைந்த கட்டடத்தில் உள்ளூர் காங்கிரஸ் அலுவலகம் அமைந்திருந்தது.

அந்த ஊர்வலம் காங்கிரஸ் அலுவலகத்தின் முன்னால் சிறிது நேரம் நின்று, மிக மோசமான முழக்கங்களை எழுப்பியது. அப்போது கூட்டத்தில் இருந்து அரிவாள் ஏந்தியவர்கள் வெளியில் வந்தனர். அந்தப் புனிதமான மண்ணில் ரத்தம் சிந்தியது" என்றது அந்த நூல்.

இந்தச் சம்பவத்தை அடுத்து நகரில் அடுத்த ஏழு நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் முடிவில் ஒன்பது மாணவர்களும் எட்டு காவல்துறையினரும் காயமடைந்திருந்தனர். இந்தச் சம்பவம் 1965ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது.

2. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் சுட்டுக் கொலை

'பராசக்தி' திரைப்படத்தில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் காட்சிகள், அவர்கள் கைது செய்யப்படுவது, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் காட்சிகள் ஆகியவை விரிவாகவே இடம்பெற்றுள்ளன.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்தான் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு இது.

கடந்த 1965ஆம் ஆண்டின் குடியரசு தின நிகழ்வுகளை அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் புறக்கணித்தனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பல இடங்களில் கறுப்புக் கொடிகளை ஏற்றினர். மதுரையில் 'கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும்' இரண்டு மாணவர்களுக்காக சிலர் ஊர்வலம் சென்றனர்.

மதுரையில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து வேறு சிலர் ஊர்வலம் சென்றனர். இந்த இரு ஊர்வலங்களும் சிதம்பரம் நகருக்குள் நுழைவதற்கு முன்பாக ரயில்வே கிராஸிங்கிற்கு அருகில் நிறுத்தப்பட்டன. அன்று குடியரசு தினம் என்பதால் இதுபோன்ற ஊர்வலங்களுக்கு அனுமதிக்க முடியாது என்றும் அடுத்த நாள் இந்த ஊர்வலத்தை நடத்தலாம் என்றும் காவல்துறை கூறியதால் மாணவர்கள் தங்கள் விடுதிகளுக்குத் திரும்பினர்.

அடுத்த நாள் காலையில் சுமார் 350 மாணவர்கள் திரண்டு ஊர்வலமாகப் புறப்பட்டனர். முந்தைய தினத்தைப் போலவே, ரயில்வே கிராஸிங்கிற்கு அருகில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிதம்பரம் நகரில் 144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பதால் அவர்கள் ஊர்லத்தை அனுமதிக்க முடியாது என்றது காவல்துறை.

இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் சாலையிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்திக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இருந்தபோதும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான பழனிவேலு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.

மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்ட செய்தியைக் கேட்டதும் விடுதிகளில் இருந்த மற்ற மாணவர்களும் திரண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். கிட்டத்தட்ட 3,000 பேர் அங்கே கூடிவிட்டனர். தங்களை ஊர்வலம் செல்ல அனுமதிக்கும்படி அவர்கள் வலியுறுத்தினர். இந்திக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

பராசக்தி, தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு

பட மூலாதாரம், DMK

படக்குறிப்பு, கோப்புப் படம்

அந்த நேரத்தில், அங்கிருந்த மாணவர் ஒருவரை காவலர் ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார். இதனால், மாணவர்கள் காவல்துறைக்கு எதிராக கோஷமிட ஆரம்பித்தனர். காவல்துறை தடியடி நடத்தியது. இதற்குப் பிறகு மோதல் தீவிரமடைந்தது. மாணவர்களும் அருகிலிருந்த கட்டைகளை எடுத்து காவலர்களைத் தாக்க ஆரம்பித்தனர். இந்த நிகழ்வுகள் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் நீண்டன.

முடிவில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். மிகவும் மோசமாகக் காயமடைந்த ராஜேந்திரன் தரையில் விழுந்தார். அவருக்கு உயிர் இருந்தது. அதைப் பார்த்த ஒரு மாணவர் தனது சட்டையை ராஜேந்திரனின் காயத்தில் கட்டிவிட்டு, அவரை அழைத்துச் செல்ல வழிவிடுமாறு காவலர்களைப் பார்த்துக் கத்தினார்.

ஆனால், காவல்துறை ரைஃபிள்களை உயர்த்தி எச்சரித்ததாகத் தனது 'இந்தியாவில் மொழிகளின் சுதந்திரத்திற்கான போராட்டம்' நூலில் குறிப்பிடுகிறார் அ. ராமசாமி.

"காவல்துறையும் ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. சிவகங்கையைச் சேர்ந்த 18 வயது மாணவர் எம். ராஜேந்திரன் மற்ற மாணவர்கள் கண் முன்பாகவே உயிரிழந்தார். இவர் இளமறிவியல் கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர் அவர். இவருடைய தந்தையும் ஒரு காவலர். "

"இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக பதிவாளரின் இல்லத்தைச் சூறையாடி, அதிலிருந்த பொருட்களுக்குத் தீ வைத்தனர். பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்த காவல்துறை அங்கிருந்த மாணவர்களைத் தாக்கியது. மாணவர்கள் அங்கிருந்து அரைகுறை ஆடைகளோடு தப்பிச் சென்றனர். இதற்குப் பிறகு பல்கலைக் கழகமும் விடுதியும் காலவரையின்றி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பியதும்தான் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது."

இந்த நிகழ்வில் 25 மாணவர்கள் காயமடைந்தனர். 20 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர்.

3. தமிழ்நாட்டிற்கு வந்த இந்திரா காந்தி

பராசக்தி, தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

'பராசக்தி' திரைப்படத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தபோது, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி தமிழ்நாட்டிற்கு வந்து மாணவர்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதாகவும் அதையொட்டியே, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இந்தி தொடர்பான நேருவின் வாக்குறுதியை உறுதிப்படுத்த, போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும் காட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தபோது, தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசன் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இது அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய பிரதமர், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பிப்ரவரி மாத பிற்பகுதியில் முதலமைச்சர்கள் மாநாட்டை நடத்த முடிவு செய்தார்.

இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி தமிழ்நாட்டிற்கு வந்தார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திரா காந்தி, மொழிப் பிரச்னையில் வாக்குறுதிகள் காப்பாற்றப்படுவதை உறுதிசெய்ய இந்தி பேசாத மாநிலங்கள் தங்களை நம்பலாம் என்று தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, மூத்த தலைவர் காமராஜர், முதலமைச்சர் எம். பக்தவத்சலம், டிடி கிருஷ்ணமாச்சாரி ஆகியோருடன் இந்தப் பிரச்னை குறித்து விவாதித்தார் இந்திரா காந்தி. அடுத்த நாள் சத்யமூர்த்தி பவனுக்கு சென்ற அவர், அங்கு காமராஜர், பக்தவத்சலம், ஆர். வெங்கட்ராமன், கக்கன், காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"பெரும்பாலானவர்கள் மொழிப் பிரச்னையில் இந்தி பேசாத மாநிலங்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் சட்டரீதியான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்" என்கிறார் அ. ராமசாமி.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திரா காந்தி, டெல்லியில் பிப்ரவரி பிற்பகுதியில் நடக்கும் முதலமைச்சர்கள் மாநாட்டில் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு எட்டப்படும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சென்னையில் மேற்கொண்ட சந்திப்புகளில் தான் அறிந்து கொண்டவற்றை விவரித்தார் இந்திரா காந்தி. இதற்குப் பிறகு, நேருவின் வாக்குறுதிகளையும் உள்ளடக்கும் வகையில் 1963ஆம் ஆண்டின் அலுவல் மொழிகள் சட்டத்தைத் திருத்தலாமா என்பது குறித்தும் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

திரைப்படத்தில் மாணவர்களைப் பெரும் எண்ணிக்கையில் இந்திரா காந்தி சந்தித்ததாகக் காட்டப்பட்டாலும் அது தொடர்பான பதிவுகள் ஏதும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த நூல்களில் இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு