ஜிம்பாப்வேவுக்கு எதிராக 'அதிரடி' வெற்றி - இந்தியாவின் முக்கிய கவலைகள் தீர்ந்ததா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே ஒரு அணி எடுக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது.
இந்தத் தோல்வியின் காரணமாக ஜிம்பாப்வே அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதேசமயம், தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இன்றைய போட்டிகளில் இந்தியா வெற்றியும் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியும் சந்தித்திருப்பதால், இவ்விரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
கடந்த சில போட்டிகளாக இந்திய அணிக்கு சிக்கலாக இருந்த ஒரு சில விஷயங்கள் இந்தப் போட்டியில் பிரச்னையில்லாமல் சென்றிருக்கின்றன.
தொடக்க ஜோடியின் செயல்பாடு, அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோரின் ஃபார்ம் குறித்து நிறைய விவாதங்கள் ஏற்பட்டுவந்த நிலையில், இந்தப் போட்டியில் இவை அனைத்துமே இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கின்றன. அதேசமயம், ஒரு சில பிரச்னைகள் இன்னும் நீடிக்கவே செய்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்குக் கிடைத்த நல்ல தொடக்கம்
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு கடந்த சில போட்டிகளாகக் கிடைக்காத நல்ல தொடக்கம் இந்தப் போட்டியில் கிடைத்தது. ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் சஞ்சு சாம்சன். அப்போது தொடங்கிய அதிரடி கடைசி வரை நிற்கவேயில்லை.
முதலிரு ஓவர்களிலும் சாம்சன் தலா 1 சிக்ஸர் அடித்திருக்க, மூன்றாவது ஓவரில் அபிஷேக் ஷர்மா தன் அதிரடியைத் தொடங்கினார். முதல் மூன்று ஓவர்களிலேயே 46 ரன்கள் எடுத்தது இந்திய அணி.
நல்ல தொடக்கம் கண்டிருந்த சாம்சன் நான்காவது ஓவரில் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து முசர்பானி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 24 ரன்கள் எடுத்தார்.
முதல் விக்கெட்டுக்கு சாம்சன் - அபிஷேக் ஜோடி 48 ரன்கள் எடுத்தது. இந்த 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய தொடக்க ஜோடியின் சிறந்த செயல்பாடு இதுதான். அதுமட்டுமல்லாமல், கடந்த 3 போட்டிகளாக இந்திய அணியின் ஓர் ஓப்பனர் டக் அவுட் ஆகிக்கொண்டிருந்ததும் இந்தப் போட்டியோடு முடிவுக்கு வந்தது.
அடுத்து களமிறங்கிய இஷன் கிஷன் அதே அதிரடி பாணியைத் தொடர்ந்தார். பவர்பிளே முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. கடந்த சில போட்டிகளில் பவர்பிளேவுக்குப் பிறகு இந்திய அணி ரன் ரேட்டை சீராக தக்கவைக்க சிரமப்பட்டது. ஆனால், இந்தப் போட்டியில் பவர்பிளேவுக்குப் பின்பும் சராசரியாக ஓவருக்கு 10 ரன்கள் எடுத்துக்கொண்டே இருந்தது இந்தியா.
தொடர்ச்சியாக இந்த உலகக் கோப்பையில் ரன் எடுக்க தடுமாறிய அபிஷேக் ஷர்மா இந்தப் போட்டியில் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். அபிஷேக் 55 ரன்கள், இஷான் கிஷன் 38 ரன்கள் என நல்ல பங்களிப்பைக் கொடுத்து வெளியேறினர்.

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்த அதிரடி
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவோ அவர்கள் அனைவரை விடவும் அதிரடி காட்டினார். அவர் 13 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரது ஸ்டிரைக் ரேட் 253.84.
கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா இருவரும் இன்னும் வேகமாக ஆடினார்கள். பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக பறக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 256 ரன்கள் எடுத்தது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணி எடுக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். அதிகபட்சமாக 2007 உலகக் கோப்பையில் இலங்கை அணி கென்யாவுக்கு எதிராக 260 ரன்கள் எடுத்தது.
ஜிம்பாப்வே அணி அவர்களின் முந்தைய சூப்பர் 8 போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 254 ரன்கள் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பெரிய, மெதுவான ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்ட ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் சோபிக்கத் தவறியிருக்கிறார்கள்.
இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 50 ரன்களுடனும் (23 பந்துகள்), திலக் வர்மா 44 (16 பந்துகள்) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த உலகக் கோப்பையில் திலக் வர்மாவின் ஸ்டிரைக் ரேட் மீது நிறைய விமர்சனங்கள் இருந்த நிலையில், இந்தப் போட்டியில் அவர் 275 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார்.
இந்த இன்னிங்ஸில் இந்திய அணி 17 சிக்ஸர்கள் அடித்தது. ஒரு டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் இந்திய அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுதான். இந்தப் போட்டியில் பேட்டிங் செய்த 6 இந்திய பேட்டர்களுமே குறைந்தபட்சம் 1 சிக்ஸராவது அடித்தனர்.
பென்னட் - ஜிம்பாப்வேவின் நம்பிக்கை

பட மூலாதாரம், Getty Images
மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த ஜிம்பாப்வே அணி மிகவும் பொறுமையாகவே தங்கள் இன்னிங்ஸை தொடங்கியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரும் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீச, முதல் 4 ஓவர்களில் ஜிம்பாப்வே 25 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவர்பிளேவில் விக்கெட் இழக்காமல் 44 ரன்கள் எடுத்தது அந்த அணி.
பவர்பிளே முடிந்த இரண்டாவது பந்தில் ஜிம்பாப்வே அணியின் முதல் விக்கெட்டை (மருமானி) வீழ்த்தினார் இந்திய துணைக் கேப்டன் அக்சர் பட்டேல். அடுத்து வந்த மேயர்ஸ் 6, சிகந்தர் ராஸா 31, பர்ல் டக், முன்யோங்கா 11, முசெகிவா 7 என அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. இருந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் பிரயன் பென்னட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சரியான பந்துகளைத் தேர்வு செய்து அவர் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்தார். ஆன் சைட், ஆஃப் சைட், ஸ்கொயர் என அனைத்து பக்கமும் அடித்தார். அனைத்து வகையான ஷாட்களும் அடித்தார். அனைத்து பௌலர்களையும் அடித்தார். பும்ராவின் பந்துவீச்சில் கூட அவர் 2 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடித்தார்.
இந்தப் போட்டியில் நன்றாக 'பேக் ஃபூட்' வைத்து பெரிய ஷாட்கள் அடித்தார் பென்னட். இந்த உலகக் கோப்பையில் இந்தப் போட்டிக்கு முன்பு அவர் 2 அரைசதங்கள் அடித்திருந்தார். சுமார் 180 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், ஒரு சிக்ஸர் கூட அவர் அடிக்கவில்லை. ஆனால், இந்தப் போட்டியிலேயே அவர் 6 சிக்ஸர்கள் அடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 59 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.
ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
அசத்தலாகப் பந்துவீசிய அர்ஷ்தீப்

பட மூலாதாரம், Getty Images
இந்திய பந்துவீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அவர் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பைகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராகவும் மாறியிருக்கிறார் அவர்.
இதுவரை டி20 உலகக் கோப்பையில் அவர் 35 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். அதற்கடுத்த இடத்தில் இருக்கும் பும்ரா 33 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
இந்தப் போட்டிக்குப் பிறகு ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் அர்ஷ்தீப் சிங் பற்றிப் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர் பாபா அபரஜித், "அர்ஷ்தீப் சிங் இரண்டு பக்கமும் பந்தை ஸ்விங் செய்கிறார். அது எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக அமைந்துவிடாது. அவர் மணிக்கட்டு இரு பக்கமும் சிறப்பாக நகர்கிறது." என்று கூறினார்.
அதே நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜி, இந்தியாவின் ஆறாவது பௌலர் பிரச்னை இன்னும் நீடிப்பதாகக் கூறினார்.
கடந்த போட்டியில் ஷிவம் துபே 2 ஓவர்கள் பந்துவீசி 32 ரன்கள் கொடுத்திருந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2 ஓவர்களில் அவர் 46 ரன்கள் கொடுத்தார். அதில் 2 நோ பால்கள் வேறு வீசினார். இது இந்தியா கவனிக்கவேண்டிய விஷயம் என்று பாலாஜி தெரிவித்தார்.

அரையிறுதி வாய்ப்பில் யார்?
ஜிம்பாப்வே தோல்வி அடைந்ததால், இந்தப் பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இலங்கையில் தோல்வியே சந்திக்காமல் தங்கள் குரூப்பில் முதலிடம் பிடித்த ஜிம்பாப்வே அணி, இந்தியாவில் அடுத்தடுத்து போட்டிகளில் படுதோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இந்தப் போட்டியில் இந்தியா வென்ற காரணத்தால், இந்தியாவுக்கும் வெஸ்ட் இண்டீஸுக்கும் எதிராக ஞாயிற்றுக்கிழமை நடக்கும் சூப்பர் 8 போட்டி நாக் அவுட் போட்டி போல் ஆகிவிடும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
ஒருவேளை இந்தப் போட்டி நடக்காமல் போனால், இந்தியாவை விட சிறப்பான ரன்ரேட் வைத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












