வெஸ்ட் இண்டீஸை எளிதாக வீழ்த்திய தென்னாப்பிரிக்கா - இனி இந்தியாவுக்கு என்ன வாய்ப்பு?

தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை நெருங்கியிருக்கிறது அந்த அணி.

இந்த உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் சந்திக்கும் முதல் தோல்வி இது.

தென்னாப்பிரிக்க அணி தாங்கள் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி தென்னாப்பிரிக்காதான்.

தென்னாப்பிரிக்காவின் இந்த வெற்றி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீதான நெருக்கடியை அதிகரித்திருக்கிறது.

சிறப்பாக செயல்பட்ட தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள்

ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா.

வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக போட்டியைத் தொடங்கினாலும், மூன்றாவது ஓவரில் அந்த அணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ ரபாடா. அடுத்த ஓவரில் லுங்கி எங்கிடி தன் பங்கிற்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்த, 4 ஓவர்கள் முடிவில் 43/4 என வெஸ்ட் இண்டீஸ் கடும் நெருக்கடிக்கு உள்ளானது.

அதன்பிறகும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பெரிய ஷாட்கள் ஆட நினைத்து தொடர்ச்சியாக தங்கள் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தனர். 10.2 ஓவர்களில் அந்த அணி 83/7 என்ற கட்டத்தை அடைந்தது.

எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டன், ரொமாரியோ ஷெபர்ட் இருவரும் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து ஓரளவு அதிரடியும் காட்டினார்கள். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது.

ரொமாரியோ ஷெபர்ட், 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹோல்டர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது.

தென்னாப்பிரிக்க அணி தரப்பில் எங்கிடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரபாடா, கார்பின் பாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

தென்னாப்பிரிக்க பேட்டர்களின் ஆதிக்கம்

தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களைப் போல் அந்த அணியின் பேட்டர்களுமே இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

கேப்டன் எய்டன் மார்க்ரம் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். குவின்டன் டி காக் அவருக்கு பக்க பலமாக ஆட, பவர்பிளேவில் அந்த அணி விக்கெட்டே இழக்காமல் 69 ரன்கள் எடுத்தது.

47 ரன் எடுத்த டி காக், ராஸ்டன் சேஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றிய ஒரே விக்கெட் அதுதான். அடுத்து வந்த ரயன் ரிக்கில்டனும் அந்த அதிரடியைத் தொடர்ந்தார். அவர் 45 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

27 பந்துகளில் அரைசதம் கடந்த மார்க்ரம், ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் இந்த இன்னிங்ஸுக்காக ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

அரையிறுதிக்குள் நுழைய யாருக்கு வாய்ப்பு?

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்குள் நுழைய நல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே தோல்வி அடைந்தால், அது தென்னப்பிரிக்கா அரையிறுதிக்குள் நுழைவதை உறுதி செய்யும்.

அதேசமயம் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்துவதன் மூலம், இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டி ஒரு நாக் அவுட் ஆட்டமாக மாறிவிடும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பைப் பெறும்.

இந்தியா ரன்ரேட் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டியதாக இருக்காது. வெற்றி பெற்றாலே அரையிறுதிக்குள் சென்றுவிடலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு