உலகில் அதிக எண்ணெய் உற்பத்தி செய்தும் அமெரிக்காவுக்கு ஏன் இன்னும் எண்ணெய் தேவை?

பட மூலாதாரம், Getty Images
உலகின் மற்ற எந்த நாட்டை விடவும் அதிக அளவிலான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வது அமெரிக்காதான்.
அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கா ஒரு நாளைக்கு 13.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை விற்பனை செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி எண்ணெயைப் பற்றி பேசுகிறார். ஆனால் அவர் அமெரிக்க எண்ணெயைப் பற்றி மட்டும் பேசுவதில்லை.
இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவே இவ்வளவு பெரிய அளவில் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் போது, அதற்கு ஏன் இன்னும் கூடுதல் எண்ணெய் தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவிற்கு அதிக எண்ணெய் தேவைப்படுவது ஏன்?
அமெரிக்கா தனது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயை நம்பி செயல்பட முடியாதா?
எண்ணெய் வணிகத்துடன் வெனிசுவேலா எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது?
உண்மையில் இதற்கான காரணம் கச்சா எண்ணெயின் வகையை அடிப்படையாகக் கொண்டது.
பூமியிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் அதன் அடர்த்தி, சல்பர் அளவு மற்றும் பாயும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு தரங்களாகப் பிரிக்கப்படுகிறது.
பரந்த அளவில் பார்த்தால், கச்சா எண்ணெய் இரண்டு வகைப்படும்:
1. இலகுரக கச்சா எண்ணெய்
2. கனரக கச்சா எண்ணெய்
"உலகில் 160-க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் வகைகள் உள்ளன. உலகெங்கிலும் உள்ள வெவ்வேறு சுத்திகரிப்பு நிலையங்கள் வெவ்வேறு தரத்திலான கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கின்றன," என்று எரிசக்தி ஆய்வாளர் கௌரவ் சர்மா விளக்குகிறார்.
கனரக எண்ணெயை விட இலகுரக கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பது எளிது. சுத்திகரிப்புக்குப் பிறகு, இது பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் ஜெட் எரிபொருள் (விமான எரிபொருள்) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
கனரக எண்ணெய் கப்பல்களுக்கான எரிபொருள், சாலை அமைக்கும் பொருட்கள் மற்றும் லிப் பாம் போன்ற பல பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
இலகுரக கச்சா எண்ணெய் கனரக எண்ணெயை விட அதிக மதிப்புடையது, எனவே அதன் விலையும் அதிகம்.
2025-ல், அமெரிக்கா ஒரு நாளைக்கு 13.4 மில்லியன் பேரல் எண்ணெயை விற்பனை செய்தது.
அதே சமயம், பிற நாடுகளிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 2 மில்லியன் பேரல் எண்ணெயை வாங்கியது.
இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா தான் உற்பத்தி செய்யும் எண்ணெயை ஏன் தனக்காக வைத்துக் கொள்வதில்லை என்ற கேள்வி இங்கே எழுகிறது.
இதற்கெல்லாம் காரணம் இலகுரக மற்றும் கனரக எண்ணெய் விவகாரம்தான்.
அமெரிக்க பெட்ரோலிய இன்ஸ்டிடியூட்டின் தகவல்படி, அமெரிக்காவின் எண்ணெய் 80 சதவீதம் இலகுரக வகையைச் சேர்ந்தது.
ஆனால், அமெரிக்காவின் பெரும்பாலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கனரக எண்ணெயைச் சுத்திகரிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
20-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான எண்ணெய் லத்தீன் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கனரக கச்சா எண்ணெய் ஆகும்.
பின்னர் 2000-களின் முற்பகுதியில், அமெரிக்க எண்ணெய் உற்பத்தியில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததால், 'ஷேல்' பாறைகளிலிருந்து இலகுரக கச்சா எண்ணெயை அதிக அளவில் பிரித்தெடுப்பது சாத்தியமானது.
இப்போது அமெரிக்கா எடுக்கும் கச்சா எண்ணெய் வகைக்கும், அதன் சுத்திகரிப்பு நிலையங்கள் கையாளும் கச்சா எண்ணெய் வகைக்கும் இடையே ஒரு பொருத்தமின்மை உள்ளது.
அதாவது, அமெரிக்கா பெரும்பாலும் இலகுரக எண்ணெயை எடுக்கிறது, ஆனால் கனரக எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறனை கொண்டுள்ளது.
"ஒருமுறை ஒரு சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுவிட்டால், அதை மாற்றுவது மிகவும் கடினம். அதற்கு கோடிக்கணக்கான டாலர்கள் முதலீடு தேவைப்படும்," என்று கௌரவ் சர்மா கூறுகிறார்.
அதே நேரத்தில், கனரக எண்ணெயை விட இலகுரக எண்ணெயின் விலை அதிகம் என்பதால், அமெரிக்கா தனது இலகுரக எண்ணெயை அதிக விலைக்கு விற்றுவிட்டு, கனரக எண்ணெயை மலிவான விலைக்கு வாங்குகிறது.

பட மூலாதாரம், Getty Images
எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்க-வெனிசுவேலா உறவுகள்
வெனிசுவேலா, செளதி அரேபியா, இரான், கனடா, இராக், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளன.
இதில் பல நாடுகள் கனரக கச்சா எண்ணெயை எடுப்பதில் பெயர் பெற்றவை.
இந்த பட்டியலில் உள்ள மூன்று நாடுகளான வெனிசுவேலா, இரான் மற்றும் ரஷ்யா ஆகியவை தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ளன.
இருப்பினும், வெனிசுவேலாவிலிருந்து சில எண்ணெய் விநியோகங்கள் தொடர்ந்து அமெரிக்காவை சென்றடைகின்றன. ஏனெனில், வெனிசுவேலாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அந்நாட்டின் எண்ணெய் தொழில்துறையை கட்டமைப்பதில் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பங்கு வகித்தன.
20-ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதி வரை, அமெரிக்கா அங்கிருந்து கனரக கச்சா எண்ணெயை எடுத்து வந்தது.
நவர்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் கார்மென் பீட்ரிஸ் பெர்னாண்டஸ் இதுகுறித்துக் கூறுகையில், "மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போலன்றி, வெனிசுவேலா 1976-ல் எண்ணெய் தொழிலை தேசியமயமாக்கிய போதும் அமெரிக்காவுடன் நல்ல உறவைப் பேணி வந்தது. ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அந்த உறவு எப்போதும் சீராக இருந்தது," என்கிறார்.
1999-ஆம் ஆண்டு சோசலிசத் தலைவர் ஹியூகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்தபோது இந்த உறவில் மாற்றம் ஏற்பட்டது.
குறிப்பாக, எண்ணெய் துறையின் மீதான அரசாங்க கட்டுப்பாட்டை அவர் வலுப்படுத்தினார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் லத்தீன் அமெரிக்க ஆய்வக மையத்தைச் சேர்ந்த முனைவர் கிரேஸ் லிவிங்ஸ்டோன் இதுகுறித்துக் கூறுகையில், "வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் மீது அவர் கடுமையான நிபந்தனைகளை விதித்தார். இது அமெரிக்க அரசுக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கும் பிடிக்கவில்லை," என்கிறார்.
2013-ல் ஹியூகோ சாவேஸ் மறைந்த பிறகு, நிக்கோலஸ் மதுரோ வெனிசுவேலாவின் அதிபரானார். அவர் சாவேஸின் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றினார்.
2019-ஆம் ஆண்டில், உலக வங்கி தீர்ப்பாயம் வெனிசுவேலா அரசாங்கத்தை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை. இதைக் குறிப்பிட்டு, அமெரிக்காவின் எண்ணெயை வெனிசுவேலா திருடிவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்.
எனினும், வெனிசுலா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
2025-ன் பிற்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைமை மேலும் மோசமடைந்தது.
அமெரிக்க ராணுவம் எண்ணெய் டேங்கர்களைக் கைப்பற்றியதுடன், வெனிசுவேலா துறைமுகங்களையும் முற்றுகையிட்டது.
போதைப்பொருள் கடத்தப்படுவதை ஒடுக்குவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா வெனிசுவேலாவின் எண்ணெய் விவகாரத்தில் தலையிடுமா?
ஜனவரி 3, 2026 அன்று, அமெரிக்க ராணுவம் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது.
போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பான விசாரணையை எதிர்கொள்வதற்காக அவர்கள் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு டிரம்ப் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களை அங்கு பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ய நாங்கள் அனுப்புவோம். அங்கிருந்து ஈட்டப்படும் பணம் அங்கேயே பயன்படுத்தப்படும், அதன் மூலம் வெனிசுவேலா மக்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள்," என்றார்.
கடந்த பல ஆண்டுகாலமாக, வெனிசுவேலா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள் ரஷ்யா, இரான் மற்றும் முக்கியமாக சீனா ஆகிய நாடுகளுக்கு அங்கு இடமளித்தன.
கிரேஸ் லிவிங்ஸ்டோன் கூறுகையில், "வெனிசுவேலாவுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளுக்கும் சீனா ஒரு மிக முக்கியமான வர்த்தகக் கூட்டாளியாக மாறியுள்ளது. குறிப்பாக, அது எண்ணெய் மற்றும் பிற இயற்கை வளங்களை பெரிய அளவில் வாங்குகிறது" என்கிறார்.
வெனிசுவேலாவின் எண்ணெயில் சுமார் 90 சதவீதத்தை சீனா வாங்கி வந்தது.
இதைத் தடுப்பதே டிரம்ப் நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தது.
"நாங்கள் அங்கு பாதுகாப்பை விரும்புகிறோம். உலகெங்கிலும் உள்ள நமது எதிரிகளுக்கு அடைக்கலம் தராத அண்டை நாடுகளையே நாம் விரும்புகிறோம்" என்று அவர் கூறியிருந்தார்.

வெனிசுவேலாவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு (சுமார் 303 பில்லியன் பேரல்கள்) உள்ளது.
இருப்பினும், வெனிசுவேலா ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பேரல்களுக்கும் குறைவான எண்ணெயையே ஏற்றுமதி செய்கிறது.
இதற்குக் காரணம் பொருளாதாரத் தடைகள், பல ஆண்டுகாலமாக நிலவும் நிதிப்பற்றாக்குறை மற்றும் மோசமான நிர்வாகம் ஆகும்.
கௌரவ் சர்மா கூறுகையில், "பல இடங்களில் உள்கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க வேண்டியிருக்கும். வெனிசுவேலா கச்சா எண்ணெய் விநியோகம் போதுமான அளவில் தொடங்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகலாம்" என்கிறார்.
"கடந்த நூற்றாண்டில், எண்ணெய் தொழில் பல நாடுகளுக்கு மகத்தான செல்வத்தை ஈட்டித் தந்துள்ளது. இது பல நாடுகளின் தலையெழுத்தையே ஒரே இரவில் மாற்றியமைத்த பல டிரில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்துறையாகும்"என்கிறார் கௌரவ் சர்மா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












