இரானில் கொந்தளிப்பான சூழல்: டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவின் திட்டத்திற்கு மேலும் சிக்கல்

பட மூலாதாரம், Public domain
- எழுதியவர், பிபிசி மானிட்டரிங் குழு
- பதவி,
இரானில் பரவலாக நடந்து வரும் போராட்டங்கள், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை குறித்து இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றன.
இது இந்தியாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சாபஹார் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத் திட்டங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இந்தியா தனது நீண்டகால அணுகுமுறைக்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதும் சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக சுமார் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
சாபஹார் துறைமுகம், சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத் திட்டத்திலும் ஒரு முக்கியமான மையமாக உள்ளது. இந்தப் போக்குவரத்து வலையமைப்பு, சூயஸ் கால்வாயை சார்ந்திருப்பதைக் குறைத்து, இந்தியாவை ரஷ்யா மற்றும் ஐரோப்பாவுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், இரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பது குறித்த டொனால்ட் டிரம்ப் அரசின் ஜனவரி 12-ஆம் தேதி அறிவிப்பால் இந்தியாவும் பாதிக்கப்படும் என்றும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இரானில் நிலவும் கொந்தளிப்பான சூழல் – சிக்கலில் இந்தியாவின் திட்டம்
இரானில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையும், அமெரிக்க ராணுவ தலையீட்டிற்கான சாத்தியக்கூறுகளும், அந்நாட்டில் இந்தியாவின் முக்கிய முதலீடுகளைத் தீவிரமான அபாயத்தில் ஆழ்த்தியுள்ளதாக இந்தியாவின் பிரதான ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவுக்கு நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், இரானுடன் வர்த்தகத்தைத் தொடரும் நாடுகளின் இறக்குமதிகள் மீது 25% வரியை விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஜனவரி 12-ஆம் தேதியன்று அறிவித்தது.
கடந்த 2024-25 நிதியாண்டில், இரு தரப்புக்கும் இடையிலான வருடாந்திர வர்த்தகத்தின் மதிப்பு 1.68 பில்லியன் டாலராக இருந்தது. 1.24 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதிகளுடன் இந்தியா வர்த்தக உபரியைப் பெற்றது.
பாகிஸ்தான் வழியாக வர்த்தகம் செய்யாமல், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, ரஷ்யா, ஐரோப்பாவை அடைவதற்கான இந்தியாவின் திட்டத்திற்கு முக்கியமானதாக இரானின் சாபஹார் துறைமுகம் உள்ளது. அதை மேம்படுத்துவதில் இந்தியா சுமார் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பட மூலாதாரம், AFP via Getty Images
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து இந்தியாவின் மும்பை துறைமுகத்திற்கு சரக்குகளைக் கொண்டு செல்வதற்குத் தேவைப்படும் கால அளவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் லட்சியமிக்க திட்டமான, சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத் திட்டத்தின் முக்கியப் பகுதியாக இந்தத் துறைமுகம் உள்ளது.
சூயஸ் கால்வாய் வழியாகச் செல்ல 40 நாட்கள் ஆகும் நிலையில், இந்தப் பொருளாதார வழித்தடத் திட்டம் அந்தக் கால அளவை 25 நாட்களாகக் குறைக்கும்.
சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகளில், இரான் மீதான அமெரிக்க தடைகளில் இருந்து இந்தியா விலக்கு பெற்று வந்தது. அந்த விலக்கு ஏப்ரல் மாதம் காலாவதியாக உள்ளது.
ஜனவரி 15-16 தேதிகளில் திட்டமிடப்பட்ட இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் இந்திய பயணத்தின்போது, சாபஹார் துறைமுகம் ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருக்கவிருந்தது.
இருப்பினும், இரானில் நிலவும் சூழ்நிலை காரணமாக அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, இந்தியாவின் முன்னணி நிதி நாளிதழான 'தி எகனாமிக் டைம்ஸ்' ஜனவரி 12-ஆம் தேதியன்று வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
நிச்சயமற்ற நிலையில் சாபஹார் துறைமுகம், பொருளாதார வழித்தடத் திட்டம்
இரானில் நிலவும் சூழ்நிலை இந்தியாவின் பொருளாதார நலன்களில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது குறித்து இந்திய அரசு எந்த அதிகாரபூர்வ கருத்தையும் தெரிவிக்காத நிலையில், பல்வேறு முக்கிய ஊடகங்கள் கவலை தெரிவித்துள்ளன.
சாபஹார் துறைமுகம், வடக்கு-தெற்கு பொருளாதார வழித்தடத் திட்டம் ஆகியவற்றை "வர்த்தகம், தளவாடங்கள், பிராந்திய செல்வாக்கிற்கான இந்தியாவின் உயிர்நாடிகள்" என்று வர்ணித்த பிரபல வெளியுறவுத் துறை பத்திரிகையாளர் கீதா மோகன், இந்தியா டுடே தொலைக்காட்சியில், இரான் ஒரு நிலையற்ற சூழலில் இருப்பதால் இந்தத் திட்டங்கள் "அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக" தெரிவித்தார்.

பட மூலாதாரம், Indiaportsgloballimited
மேலும் அவர், "அரசியல் அமைதியின்மை காரணமாக ஏற்படும் தாமதங்கள் இந்தத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தி, செலவுகளை அதிகரித்து, இந்தியாவின் பிராந்திய செல்வாக்கிற்கு ஆபத்தை உண்டாக்கும்," என்று கூறினார்.
இந்தி நாளிதழான நவ்ரத் டைம்ஸின் இணையதளத்தில் வெளியான ஒரு செய்தி, அடையாளம் தெரியாத இந்திய உளவுத் துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, இரானில் நடந்து வரும் பெரிய அளவிலான வன்முறை "சாபஹார் துறைமுகத்தில் இந்தியாவின் நீண்டகால மூலோபாய முதலீட்டை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது," எனக் கூறியுள்ளது.
இந்த அமைதியின்மை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சாபஹார் துறைமுகத்தில், பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகளின் தொடர்ச்சி குறித்து இந்தியாவில் கவலைகள் எழுந்துள்ளதாகவும் அந்தச் செய்தி மேலும் கூறுகிறது.
இரானில் ஸ்திரத்தன்மை என்பது "இந்தியாவின் மூலோபாய, வர்த்தக நலன்களுடன் நேரடியாகத் தொடர்புடையது" என்று கூறியுள்ள பிசினஸ் டுடே இணையதளத்தின் ஒரு கட்டுரை, இந்த நிகழ்வுகள் "சாபஹாரில் செயல்பாடுகளின் வேகத்தைக் குறைக்கலாம், சர்வதேச வடக்கு-தெற்கு பொருளாதார வழித்தடம் வழியாக சரக்குப் போக்குவரத்தைச் சீர்குலைக்கலாம். மேலும் யுரேசியா முழுவதும் இந்தியாவின் பரந்த ஈடுபாட்டைச் சிக்கலாக்கலாம்," என்று தெரிவித்தது.
தி ஸ்டேட்ஸ்மேன் நாளிதழின் இணையதளத்தில் ஜனவரி 10ஆம் தேதியன்று வெளியான ஒரு கட்டுரை, அடையாளம் குறிப்பிடப்படாத இந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, "இந்த அமைதியின்மை துறைமுகத்திற்கு உடனடியான நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. ஆனால், போராட்டங்கள் தீவிரமடைந்தாலோ அல்லது ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தாலோ, செயல்பாடுகளின் தொடர்ச்சிக்கு ஆபத்து ஏற்படும், தாமதங்கள் நீடிக்கக்கூடும்." என்று அவர்கள் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.
வர்த்தக இணைப்பை வழங்குவதோடு மட்டுமின்றி, சாபஹார் துறைமுகம் பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் உள்ள சீனாவின் இருப்புக்கு இந்தியாவின் ஒரு பதிலடியாகவும் உள்ளதாக அந்தக் கட்டுரை கூறுகிறது. சாபஹார், அரபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் உள்ள சீனாவின் கடற்படை நடவடிக்கைகளைக் கண்காணிக்க இந்தியாவுக்கு உதவுவதாகவும் அந்தக் கட்டுரை கூறுகிறது.

பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images
டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவின் திட்டத்திற்கு மேலும் சிக்கல்
இரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் ஜனவரி 12-ஆம் தேதியன்று அறிவித்த 25% வரி விதிப்பு, இந்தியாவுக்கு நிலைமையை மேலும் சிக்கலாக்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியாவை "கடுமையாக" பாதிக்கும் என்று வலியுறுத்திய இந்தியா டுடே செய்தி இணையதளத்தின் ஒரு கட்டுரை, உலகில் எங்கெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ அங்கெல்லாம் "டிரம்ப் இந்தியாவை குறிவைக்க ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து விடுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி 13-ஆம் தேதி என்டிடிவி செய்தித் தொலைக்காட்சியில் ஒரு செய்தியாளர், இந்தியா மீது டிரம்ப் ஏற்கெனவே விதித்திருந்த 50% வரிக்கு மேல் விதிக்கப்பட்ட இந்தப் புதிய 25% வரி, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளுக்கு "ஒரு பெரிய அடியாக" இருக்கும் என்று கூறினார்.
ஆங்கில நாளிதழான 'தி இந்து'வின் இணையதளத்தில் ஜனவரி 13-ஆம் தேதி வெளியான ஒரு கட்டுரை, இரானுடனான இந்தியாவின் வர்த்தக அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், இந்தப் புதிய அமெரிக்க வரி விதிப்பு இந்தியா மீது குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று கூறியது.
ஆனால், அரிசி, தேநீர், பழங்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் போன்ற சில துறைகளை இது "தற்காலிகமாக பாதிக்கக்கூடும்" என்பதையும் அந்தக் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கு சாபஹார் துறைமுகம் எவ்வளவு முக்கியமானது?
சர்வதேச வடக்கு–தெற்கு போக்குவரத்து வழித்தடத்திற்கு இரானின் சாபஹார் துறைமுகம் மிகவும் முக்கியமானது. இந்த வழித்தடம், இந்தியாவுக்கு ஐரோப்பாவை எளிதில் அடைய உதவுவதுடன், இரான் மற்றும் ரஷ்யாவுக்கும் பலனளிக்கிறது.
இந்தத் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியாவும் இரானும் 2003-இல் ஒப்பந்தம் செய்தன. பின்னர் 2016-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி இரானுக்கு பயணம் செய்தபோது, அந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டில், முதல் முறையாக, ஆப்கானிஸ்தானில் இருந்து பொருட்கள் பாகிஸ்தானைத் தவிர்த்து, சாபஹார் துறைமுகத்தின் வழியாக இந்தியாவுக்கு வந்தன.
ஆனால், டெல்லியில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் இந்தியா–ஐரோப்பா–மத்திய கிழக்கு வர்த்தக வழித்தட ஒப்பந்தம் எட்டப்பட்டபோது, அந்தப் புதிய வழித்தடம் உருவானால் சாபஹார் துறைமுகத்தின் முக்கியத்துவம் குறையும், மேலும் இது இரானுக்கு அவமானமாகும் எனக் கூறப்பட்டது.
இருப்பினும், பின்னர் இந்தியா–இரான் இடையே சாபஹார் துறைமுகம் குறித்த முக்கியமான ஒப்பந்தம் எட்டப்பட்டதால், அதன் முக்கியத்துவம் குறையவில்லை என்று கருதப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












