ரஷ்யா குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பற்றி ஜெர்மனி, போலந்து தலைவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஜனவரி 12ஆம் தேதியன்று ஆமதாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெர்மன் அதிபரும் பிரதமர் மோதியும் கலந்துகொண்டனர். அதேபோல, போலந்து வெளியுறவு அமைச்சரும் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இதன் மூலம் உலக நாடுகள் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பதற்கான சில முக்கிய சமிக்ஞைகள் கிடைத்துள்ளன.
ஏப்ரல் 2022இல் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் '2+2' பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டன் சென்றிருந்தனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் நடைபெற்ற அந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது ஒரு செய்தியாளர், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்து ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், "ரஷ்யாவில் இருந்து எரிசக்தி இறக்குமதி செய்வதைப் பற்றிப் பேசும்போது, உங்கள் கவனம் ஐரோப்பாவின் மீது இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
எங்களது எரிசக்தி பாதுகாப்புக்காக ரஷ்யாவிடம் இருந்து ஓரளவு எரிசக்தி பொருட்களை வாங்குகிறோம். ஆனால் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, எங்களது ஒரு மாதம் முழுவதுமான மொத்த கொள்முதல்கள் ஐரோப்பா ஒரேயொரு நாளின் மதியத்தில் செய்யும் அளவைவிட அதிகமாக இருக்காது என்று நினைக்கிறேன். எனவே, நீங்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்றார்.
ஜெய்சங்கரின் இந்த வீடியோ இந்தியாவில் மிகவும் வைரலானது. இந்தியா முதன்முறையாக மேற்கத்திய நாடுகளுக்கு அவர்களது பாணியிலேயே பதிலடி கொடுக்கிறது என்று மக்கள் பாராட்டினர்.
ஜெய்சங்கரின் தற்போதைய நிதானமான அணுகுமுறை
ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் (2026இல்) நிலைமை பெரிதும் மாறியுள்ளது. டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ளார். தற்போது ஜெய்சங்கர் அமெரிக்கா குறித்த விவகாரங்களில் மிகவும் எச்சரிக்கையாகவே பேசுகிறார்.
உதாரணமாக, இந்த மாதம் ஜனவரி 7ஆம் நாளன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளின் அரசியல் கூட்டமைப்பான 'வைமார் டிரையாங்கிள்' கூட்டத்தில் பங்கேற்க பாரிஸ் சென்றிருந்தார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய போலந்து வெளியுறவு அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, "இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துள்ளது எனக்கு திருப்தி அளிக்கிறது. ஏனெனில் அந்த வருமானம் புதினின் போர் இயந்திரத்திற்கு எரிபொருளாக உதவியது" என்று குறிப்பிட்டார்.
போலந்து அமைச்சர் இப்படிக் கூறும்போது ஜெய்சங்கர் அங்கேயே இருந்தார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து வருவதில் தாம் திருப்தி அடைவதாக ஐரோப்பிய அமைச்சர், இந்திய வெளியுறவு அமைச்சரின் முன்னிலையில் கூறும் நிலையில் பல கேள்விகள் எழுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
கேள்விகள் மற்றும் அரசியல் விமர்சனங்கள்
இத்தகைய சூழ்நிலையில், ஐரோப்பாவை திருப்திப்படுத்துவதற்காக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைக்கிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. போலந்து அமைச்சர் சிகோர்ஸ்கி பேசிய பிறகு உரையாற்றிய ஜெய்சங்கர், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது என்ற கூற்றை மறுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மற்றொரு முக்கியமான விஷயம் என்னவெனில், 2022 ஏப்ரலில் ஜோ பைடன் நிர்வாகத்தின்போது வாஷிங்டனில் காட்டிய அதே ஆக்ரோஷமான அல்லது உறுதியான அணுகுமுறையை தற்போது ஜெய்சங்கர் வெளிப்படுத்தவில்லை.
இது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், இது மோதி அரசின் மூலோபாய சுயாட்சி என்பது இதுதானா என்று கேட்கிறது. காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் போலந்து அமைச்சரின் வீடியோவை பகிர்ந்து பின்வருமாறு பதிவிட்டுள்ளது:
"இந்த அறிக்கையானது, டிரம்பை திருப்திப்படுத்த ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை மோதி நிறுத்திவிட்டார் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இப்போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா வெள்ளை மாளிகையில் இருந்து தீர்மானிக்கிறது."
பிரதமர் மோதி முன்னிலையில் ஜெர்மன் அதிபர் கூறியது என்ன?
போலந்து வெளியுறவு அமைச்சர் மட்டுமல்ல, இந்த வாரம் குஜராத்திற்கு வருகை தந்திருந்த ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் பேசியதையும் குறிப்பிட்டுக் கூறலாம். ஜனவரி 12 அன்று பிரதமர் நரேந்திர மோதியுடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிபர் மெர்ஸ் இவ்வாறு கூறினார்:
"பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை ஜெர்மனி மேலும் ஆழப்படுத்த விரும்புகிறது. இதன் மூலம் நாம் இருவருமே பலமடைவோம். அதே நேரத்தில், இது ரஷ்யாவை இந்தியா சார்ந்து இருப்பதையும் குறைக்கும்."
ஜெர்மன் அதிபரின் இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த தி இந்து நாளிதழின் ராஜ்ஜீய விவகாரங்கள் பிரிவு ஆசிரியர் சுஹாசினி ஹைதர், "இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் முன்னிலையில், ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவை இந்தியா குறைப்பதாக போலந்து அமைச்சர் கூறுகிறார்.
அதேபோல, பிரதமர் மோதியின் அருகில் நின்றுகொண்டு, பாதுகாப்புத் துறையில் ரஷ்யா மீதான இந்தியாவின் சார்பு குறையும் என ஜெர்மன் அதிபர் கூறுகிறார். இது போன்ற அறிக்கைகளுக்கு இந்திய அரசு பதிலேதும் சொல்லாமல் இருப்பது, இதுபோன்ற அறிக்கைகளுக்கு அரசாங்கத்தின் மறைமுக ஒப்புதலைக் குறிக்கிறதா?" என்று பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சுஹாசினி ஹைதரின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ரஷ்யாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் கன்வல் சிபல், "போலந்து வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவை தொடர்ந்து சீண்டி வருகிறார். உண்மை என்னவெனில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது.
தாங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்க தடைகள் குறித்த அச்சம் ஒரு முக்கியக் காரணம். டிரம்ப் கணிக்க முடியாதவராக இருக்கிறார். அதே வேளையில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும்போது, தள்ளுபடி தொடர்பான காரணிகளும் இதில் பங்கு வகிக்கலாம்" என்று கூறியுள்ளார்.
மேலும், "இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. நமது முடிவுகள் சந்தை நிலவரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பின் அடிப்படையிலேயே இருக்கும். ஜெர்மன் அதிபர் மெர்ஸ் தனது வரம்புகளைத் தாண்டிப் பேசுகிறார். அவரும் ரஷ்யாவை சீண்டுபவராக மாறிவிட்டார்.
இந்தியாவுடனான ஜெர்மனியின் பாதுகாப்பு ஒத்துழைப்பு, ரஷ்யா மீதான இந்தியாவின் சார்பைக் குறைக்க உதவும் என்ற செய்தியை அவர் தனது நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க முயன்றார். சமீபத்தில் புதினுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பும், ரஷ்யாவுடனான இந்தியாவின் நெருக்கமான உறவுமே அவரது மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்திய வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரி, மெர்ஸ் குறிப்பிட்ட அந்த ரஷ்ய கோணத்தை நிராகரித்துள்ளார்," என்று கன்வல் சிபல் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மௌனம் சம்மதத்திற்கான அடையாளமா?
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வுகளுக்கான பேராசிரியர் அர்ச்சனா உபாத்யாய் கூறுகையில், "ஜெய்சங்கர் போலந்து வெளியுறவு அமைச்சருக்குப் பதில் ஏதும் கூறவில்லை என்பது உண்மைதான். ஆனால் தற்போது இந்தியாவின் நலனுக்கு அதுவே சரியானது. பதிலடி கொடுப்பது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல எனும்போது, இந்தியா அமைதி காப்பதில் தவறில்லை.
அது எப்போதும் தனது நலனை முன்னிறுத்தியே செயல்படும். டிரம்ப் ஏற்கெனவே கூறியுள்ளபடி, அவரை அவரது மனசாட்சியும் அறிவும் மட்டுமே கட்டுப்படுத்தும் என்ற சூழலில், இந்தியா அமைதி காப்பது புத்திசாலித்தனமானது. பைடன் காலத்துடன் டிரம்பின் இரண்டாவது காலத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் பல முரண்பாடுகள் இருக்கும்" என்று தெரிவித்தார்.
ரஷ்யா மீதான பாதுகாப்பு சார்பைக் குறைப்பது குறித்த ஜெர்மன் அதிபரின் கருத்து பற்றி இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம் கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்:
"பாதுகாப்பு விநியோகம் குறித்த எங்களது அணுகுமுறை முற்றிலும் தேசிய நலன்களுக்கானது. இதில் பல காரணிகள் உள்ளன, இது எந்த வகையிலும் கருத்தியல் சார்ந்தது அல்ல. இது முற்றிலும் நாட்டின் நலன்களின் அடிப்படையிலேயே இயக்கப்படுகிறது."
"எனவே, ஒரு நாட்டிலிருந்து வரும் பொருட்களை மற்றொரு நாட்டிலிருந்து வரும் பொருட்களுடன் தொடர்புடையவை என்று நான் கூறமாட்டேன். எந்த நேரத்திலும் நமது தேவைகளைத் தீர்மானிக்க எங்களிடம் ஒரு செயல்முறை உள்ளது. நாம் உள்நாட்டில் தயாரிக்க முடியாத பொருட்களை வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டியிருந்தால், உலகிலேயே மிகவும் வசதியாக எங்கிருந்து பெற முடியுமோ அங்கிருந்து பெறுகிறோம்."
ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறைந்து வருகிறது. ரஷ்யாவை இந்தியா பாதுகாப்பு ரீதியாகச் சார்ந்திருப்பதும் முன்பு போலப் பெரியதாக இல்லை. அத்தகைய சூழ்நிலையில், இந்தியா-ரஷ்யா உறவுகளில் எது பங்கு வகிக்கும் என்ற கேள்வி எழுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவுக்கு மாற்று இல்லை
இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் பாதுகாப்புத் துறை நிபுணர் ராகுல் பேடி, "இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவை பூஜ்ஜியமாகக்கூட குறைக்கலாம், அது எதிர்காலத்தில் நடக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் பாதுகாப்புத் துறையில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தியா ரஷ்யாவையே சார்ந்து இருக்கும்.
எரிசக்தி தேவைகளுக்குப் பல மாற்று வழிகள் உள்ளன. ஆனால் பாதுகாப்புத் தேவைகளுக்கு தற்போது ரஷ்யா தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை. இந்தியாவின் 60% பாதுகாப்புத் தளவாடங்கள் ரஷ்ய தயாரிப்புகள், சாதாரண துப்பாக்கிகள்கூட ரஷ்ய உதவியுடன்தான் தயாரிக்கப்படுகின்றன."
மேலும், "இந்தியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை யார் தருவார்கள்? இதுவரை பயன்பாட்டிற்கு வந்துள்ள இந்தியாவின் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களிலும் ரஷ்யாவின் பங்கு உள்ளது. அணுசக்தி தடுப்பு நடவடிக்கைகளுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மிக முக்கியமானவை. தொழில்நுட்பத்தை மாற்ற ரஷ்யாவை தவிர வேறு யாரும் தயாராக இல்லை.
ஜெர்மனியால் ரஷ்யாவை மாற்றீடு செய்ய முடியாது. இந்திய விமானப் படையின் முதுகெலும்பான சுகோய் விமானங்கள் ரஷ்யாவுடையவை. இந்திய ராணுவத்தின் பீரங்கிகளும் ரஷ்ய தயாரிப்புகளே. அவற்றை மாற்றியமைக்க வேண்டுமானால், அதற்கே 25 ஆண்டுகள் ஆகும்" என்று அவர் கூறுகிறார்.
ஸ்வீடன் நாட்டின் ஆய்வு நிறுவனமான சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகள்படி, இந்தியாவின் பாதுகாப்பு இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு குறைந்து வருகிறது. 2020–24ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 36 சதவிகிதமாக இருந்தது. இது 2015–19இல் 55 சதவிகிதமாகவும், 2010–14இல் 72 சதவிகிதமாகவும் இருந்தது.
இருந்தபோதிலும், பாகிஸ்தானுடனான ஐந்து நாள் மோதலில் பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை, S-400 ஆகியவை முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறும் ராகுல் பேடி, இந்தியாவின் பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்ட இது போதுமானது என்று கூறுகிறார்.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் ஏற்றுமதியை இந்தியா பூஜ்ஜியமாக குறைத்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அப்படியே இருக்கும் என்று பேராசிரியர் அர்ச்சனா உபாத்யாய் நம்புகிறார்.
"இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு வாங்குபவர் மற்றும் விற்பனையாளர் இடையே மட்டுமல்ல. இரு நாடுகளும் இணைந்து தயாரிப்புகளை மேற்கொள்கின்றன. இந்தியாவுக்கு தொழில்நுட்பத்தை மாற்றிக் கொடுக்கும் ஒரே நாடு ரஷ்யாதான். இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளின் மரபு ஒரு சுமை அல்ல. அதேபோல் இந்தியாவின் மீதுள்ள சர்வதேச அழுத்தங்களை ரஷ்யாவும் புரிந்து வைத்துள்ளது," என்று பேராசிரியர் அர்ச்சனா உபாத்யாய் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
சிக்கல் எங்கே உள்ளது?
ரஷ்யாவுடனான உறவை எந்த அளவுக்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை இந்தியாதான் தீர்மானிக்க வேண்டும் என ரஷ்யா கூறிவிட்டது.
கடந்த மாதம் டிசம்பர் 2ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் வருகைக்கு முன்னதாக, "இந்தியா எந்த அளவுக்கு ஒத்துழைக்க முன்வருகிறதோ, அந்த அளவுக்கு நாங்களும் தயாராக இருக்கிறோம். இந்தியா எவ்வளவு தூரம் உறவை பலப்படுத்துகிறதோ, அதற்கு ஈடாக நாங்களும் ஒத்துழைக்க முழு மனதுடன் இருக்கிறோம்" என்று ரஷ்யா தெரிவித்திருந்தது.
ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "ரஷ்யா, இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் தற்போது 68 பில்லியன் டாலராக உள்ளது. இது 2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கிறோம்," என்றார்.
ஆனால், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தினால், ரஷ்யாவின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போக வாய்ப்புள்ளது.
கடந்த 2021 டிசம்பரில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கு முன்பு, சிந்தனைக் குழுவான கார்னகி மாஸ்கோ மையத்தின் இயக்குநர் டிமிட்ரி டிரெனின், மாஸ்கோ டைம்ஸில் இவ்வாறு எழுதியிருந்தார்: "ஒரு புவிசார் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், அணுசக்தி முதல் விண்வெளி, ஆர்க்டிக் பகுதி மற்றும் ஆயுத மேம்பாடு வரை உற்பத்தியைத் தனித்தனியாகக் கணக்கிட வேண்டிய அவசியமில்லை.
இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையில் பல துறைகளில் ஒத்துழைப்பு இருந்தாலும், இந்தியா-ரஷ்யா உறவின் மிகப்பெரிய பலவீனம் அவற்றின் வரையறுக்கப்பட்ட மற்றும் தேக்கமடைந்த வர்த்தகமே ஆகும். அமெரிக்கா மற்றும் சீனாவுடன்கூட இந்தியாவின் வர்த்தகம் 100 பில்லியன் டாலரை கடந்துவிட்டது. ஆனால் ரஷ்யாவுடனான வர்த்தகம் 10 பில்லியன் டாலர் அளவிலேயே தேக்கமடைந்துள்ளது."

இதற்கான காரணத்தை விளக்கும் டிரெனின், "இந்தியாவின் பொருளாதாரத்தில் சுமார் 85% இப்போது தனியார் வசம் உள்ளது. ஆனால் ரஷ்யா-இந்தியா பொருளாதார உறவு இப்போதும் அரசு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களையே நம்பியுள்ளது."
கடந்த 1991இல் சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு, இந்தியாவின் முதல் மூன்று வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்றாக இருந்த ரஷ்யா, தற்போது 20 முதல் 25வது இடத்திற்கு இடையில் உள்ளது.
ரஷ்யா, இந்தியா இடையிலான வர்த்தகம், யுக்ரேன் போருக்கு முன்பு 2021இல் 13 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2024-25இல் 68 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியே மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தினால், வர்த்தகம் மீண்டும் போருக்கு முந்தைய நிலைக்குச் செல்லக்கூடும். மேலும், இந்த வர்த்தகம் மிகவும் ஒருதலைப்பட்சமானது: இந்தியா ரஷ்யாவுக்கு செய்த ஏற்றுமதி 4.88 பில்லியன் டாலர் என்றால், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து செய்த இறக்குமதி 63.84 பில்லியன் டாலர்.
இந்தியா-ரஷ்யா உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு அமெரிக்க அழுத்தம் மட்டுமின்றி, சீனாவும் முக்கியக் காரணியாக உள்ளது. சீனா, ரஷ்யா இடையே ஆழமான நம்பிக்கை நிலவும் அதேநேரத்தில், இந்தியா, சீனா இடையே ஆழமான அவநம்பிக்கை நிலவுகிறது.
சீனாவால் இந்தியாவுக்கு பிரச்னை ஏற்பட்டால், ரஷ்யா இந்தியாவுக்கு உதவுவது கடினமாக இருக்கும். அதிகரித்து வரும் உலகளாவிய சூழலில் மூலோபாய கூட்டாண்மையை விரிவுபடுத்துவதும் பரஸ்பர நம்பிக்கையைப் பேணுவதும் ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு உள்ள முக்கிய சவாலாகும்.
இந்த ஆண்டு, இந்தியா பிரிக்ஸ் அமைப்புக்கு தலைமையை வகிக்கிறது. பிரிக்ஸ் உறுப்பினராக உள்ள இரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றி அமெரிக்கா பேசி வருகிறது. இந்தப் பிரச்னை பிரிக்ஸ் அமைப்புக்குள் எழுப்பப்படும்.
மேலும், பிரிக்ஸ் அமைப்பை மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஓர் அமைப்பாக மாறுவதைத் தடுப்பதில் இந்தியா சிரமங்களை எதிர்கொள்ளும். அமெரிக்காவுக்கு எதிராகக் கடுமையான தீர்மானத்தைக் கொண்டு வர ரஷ்யா விரும்பும், ஆனால் இந்தியா அதை விரும்பாது.
அதிபர் டிரம்ப் ஏற்கெனவே பிரிக்ஸ் நாடுகளைப் பலமுறை எச்சரித்துள்ளார். இத்தகைய சூழலில், ரஷ்யாவுடனான உறவையும் அமெரிக்காவுடனான இணக்கத்தையும் சமநிலைப்படுத்துவது இந்தியாவுக்கு கடினமாக இருக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












