75 நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா முக்கிய முடிவு – பாகிஸ்தானும் சேர்க்கப்பட்டதால் விவாதம்

அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை காலவரையற்ற முறையில் நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் அறிவிப்பால் பல நாடுகள் ஆச்சரியமடைந்துள்ளன.

அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை காலவரையற்ற முறையில் நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவு 2026, ஜனவரி 21 முதல் அமலுக்கு வருகிறது. இது அமெரிக்காவிற்குள் சட்டபூர்வமாக நுழைவதற்கான வழிகளை மேலும் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தடையின் கீழ் வரும் தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது.

சமீப காலங்களில் விசா கட்டுப்பாடுகள் தொடர்பாக அமெரிக்கா எடுத்துள்ள மிகக் கடுமையான நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது.

விசா அமைப்பில் நடக்கும் "துஷ்பிரயோகத்தை முடிவுக்குக் கொண்டுவர" அரசாங்கம் விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தடை பட்டியலில் முதற்கட்டமாக சேர்க்கப்பட்ட 19 நாடுகளை சேர்ந்தவர்களுக்குப் புகலிடம், குடியுரிமை செயல்முறை மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

''அமெரிக்காவுக்கு சுமையாக மாறக்கூடியவர்களையும், அமெரிக்க மக்களின் தாராள மனப்பான்மையை தவறாகப் பயன்படுத்தக்கூடியவர்களையும் குடியேற்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்ய, வெளியுறவுத்துறை தன்னிடம் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தும்''என்று வெளியுறவுத்துறையின் முதன்மைத் துணை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார்.

நலத்திட்டங்கள் மற்றும் பொது உதவித் திட்டங்களின் மீது சார்ந்திருக்கக்கூடிய வெளிநாட்டு குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், இது குறித்து ஆரய்வதற்காக விசா செயல்முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிகாட் தெரிவித்துள்ளார்.

அதிகரித்த நாடுகளின் பட்டியல்

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், சோமாலியா, ரஷ்யா மற்றும் இரான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கான விசா நடைமுறைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக ஃபாக்ஸ் நியூஸில் வந்த செய்தியைப் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார்.

குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களின் குடியேற்ற விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தடையானது குடியேற்றம் அல்லாத, அதாவது தற்காலிக சுற்றுலா அல்லது வணிக விசாக்களுக்குப் பொருந்தாது.

சமீபத்திய மாதங்களில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று டிரம்ப் நிர்வாகம் கருதும் நாடுகள் மீதான கட்டுப்பாடுகளை வெளியுறவுத்துறை அதிகரித்துள்ளது. இதில் ரஷ்யா, இரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகள் அடங்கும்.

கடந்த நவம்பர் மாதம் வாஷிங்டன் டி.சி.யில், ஆப்கானிஸ்தான் குடியேறி ஒருவர் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் இருவரைச் சுட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, 19 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான விசா நடைமுறையை டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியது.

டிசம்பரில், பயணத் தடை மேலும் ஐந்து நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இதில், பாலஸ்தீன அதிகார சபை வழங்கிய ஆவணங்களில் பயணம் செய்வோரும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குவைத் மற்றும் தாய்லாந்தின் பெயர்கள் இடம்பெற்று இருப்பது குறித்தும் ஆச்சரியம் வெளிப்படுத்தப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குவைத் மற்றும் தாய்லாந்தின் பெயர்கள் இடம்பெற்று இருப்பது குறித்தும் ஆச்சரியம் வெளிப்படுத்தப்படுகிறது.

பாகிஸ்தான் பற்றி விவாதம்

தெற்காசிய நாடுகளில் இந்தப் பட்டியலில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது.

சமீபகாலமாக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு கணிசமாக மேம்பட்டுள்ளது. பாகிஸ்தான், அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப்பை பரிந்துரைத்திருந்தது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்பைச் சந்தித்தனர்.

அப்போது வெள்ளை மாளிகையில் ஜெனரல் முனீரை வரவேற்ற டிரம்ப், பாகிஸ்தானில் முதலீடு செய்வது குறித்தும் பேசியிருந்தார்.

இஸ்லாமாபாத் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IPRI) நிர்வாக இயக்குனர் ஹுசைன் நதீம், பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் நீண்ட காலம் இருக்காது என்று கருதுகிறார்.

"பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் நீண்ட காலம் நீடிக்காது. இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டு மாற்றப்பட வாய்ப்புள்ளது. இது இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் பாகிஸ்தான் இப்போதும் அமெரிக்காவின் மிகவும் பிரச்னைக்குரிய மற்றும் எதிரி நாடுகளின் வரிசையிலேயே வைக்கப்பட்டுள்ளது. மேலும், டிரம்பின் "தட்டிக்கொடுத்தல்" மற்றும் "புகழ்ச்சியான வார்த்தைகளை" ஒரு பெரிய உத்தி ரீதியான வெற்றியாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சி தவறாகக் கருதியது எவ்வளவு அப்பாவித்தனமானது என்பதையும் இது காட்டுகிறது" என்று நதீம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தெற்காசியாவின் அரசியலை உன்னிப்பாகக் கவனிக்கும் ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன், "டிரம்ப் நிர்வாகம் விசா நடைமுறைகளை நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படும் 75 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. சமீபத்தில் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட இணக்கமான சூழல் கூட இந்த முடிவிலிருந்து பாகிஸ்தானைக் காப்பாற்றவில்லை. இந்தப் பட்டியலில் வங்கதேசம் , பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளும் அடங்கும் " என்று பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை மீண்டும் சீர்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குகல்மேன் குறிப்பிட்டிருந்தார்.

"தூதராகப் பொறுப்பேற்றது முதல், செர்ஜியோ கோர் இந்திய-அமெரிக்க உறவுகளை மீட்டெடுப்பதற்கான தனது விருப்பத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். டிரம்பின் நிர்வாகத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கைக் கருத்தில் கொண்டால், இது இரு நாடுகளின் கூட்டாண்மைக்கு ஒரு சாதகமான அறிகுறியாகும். இருப்பினும், இந்திய அரசின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் மீண்டும் பெறுவது ஒரு நீண்ட மற்றும் கடினமான செயல்முறையாக இருக்கும்," என்று குகல்மேன் பதிவிட்டுள்ளார்.

சமீபகாலமாக அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே அதிகரித்து வரும் நெருக்கம், இந்தியாவிற்கு எதிரான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதை வேறுவிதமாக பகுப்பாய்வு செய்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமீபத்திய மாதங்களில், பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவுகள் மீண்டும் இணக்கமாவதைப் போல் தோன்றியது.

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழின் கட்டுரையாளர் சதானந்த் துமே, இந்தப் பட்டியலில் உள்ள சில நாடுகளின் பெயர்களைக் கண்டு வியப்படைந்துள்ளார்.

"அமெரிக்க வெளியுறவுத்துறையின் தற்காலிக விசா தடைப் பட்டியலில் குவைத், தாய்லாந்து, பிரேசில் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் இடம்பெற்றிருப்பதை கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். இவை ஒப்பீட்டளவில் வளமான நாடுகளாகக் கருதப்படுபவை. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் இருப்பது ஆச்சரியமல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் - டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

குடியேற்ற விசா நிறுத்தப்பட்ட நாடுகள் எவை?

  • ஆப்கானிஸ்தான்
  • அல்பேனியா
  • அல்ஜீரியா
  • ஆன்டிகுவா மற்றும் பார்புடா
  • ஆர்மீனியா
  • அஜர்பைஜான்
  • பஹாமாஸ்
  • வங்கதேசம்
  • பார்படாஸ்
  • பெலாரூஸ்
  • பெலிஸ்
  • பூட்டான்
  • போஸ்னியா
  • பிரேசில்
  • மியான்மர்
  • கம்போடியா
  • கேமரூன்
  • கேப் வெர்டே
  • கொலம்பியா
  • கோட் டி'ஐவரி
  • கியூபா
  • காங்கோ ஜனநாயக குடியரசு
  • டொமினிகா
  • எகிப்து
  • எரித்திரியா
  • எத்தியோப்பியா
  • ஃபிஜி
  • காம்பியா
  • ஜார்ஜியா
  • கானா
  • கிரெனடா
  • குவாத்தமாலா
  • கினி
  • ஹைதி
  • இரான்
  • இராக்
  • ஜமைக்கா
  • ஜோர்டான்
  • கஜகஸ்தான்
  • கொசோவோ
  • குவைத்
  • கிர்கிஸ்தான்
  • லாவோஸ்
  • லெபனான்
  • லைபீரியா
  • லிபியா
  • மாசிடோனியா
  • மால்டோவா
  • மங்கோலியா
  • மான்டனீக்ரோ
  • மொராக்கோ
  • நேபாளம்
  • நிகரகுவா
  • நைஜீரியா
  • பாகிஸ்தான்
  • காங்கோ குடியரசு
  • ரஷ்யா
  • ருவாண்டா
  • செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
  • செயிண்ட் லூசியா
  • செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
  • செனகல்
  • சியரா லியோன்
  • சோமாலியா
  • தெற்கு சூடான்
  • சூடான்
  • சிரியா
  • தான்சானியா
  • தாய்லாந்து
  • டோகோ
  • துனிசியா
  • உகாண்டா
  • உருகுவே
  • உஸ்பெகிஸ்தான்
  • ஏமன்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு